["அருட்பெருஞ்சோதி தனிப் பெரும் கருணை" என்று மூட உருவச் சடங்கு ஆத்மார்த்தத்தின் ஆணி வேரை வெட்டி வீழ்த்திய வள்ளலாரை 'சனாதனத்தின் உச்சம்' என்று ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸின் ஆசிரமக் கூடாரமாக்கியுள்ள ஆர்.என். இரவி கூறியுள்ளார்.
காலம் கருதி கருத்தால் செயல்படும் நமது தமிழர் தலைவர் ஆசிரியர் "வடலூரில் வள்ளலார்" விழா என்ற அறிவிப்பைக் கொடுத்தார். யார் இந்த வள்ளலார்? எதற்காக இந்த விழா? உள்ளே காணுங்கள்]
'வடலூர் வள்ளலார்' என்றால் பெரிய கடவுள் பக்தர், நம்பிக்கைவாதி புராணப் புழுதிக் காட்டில் குளித்துக் கிடந்தவர் இதிகாசச் சேற்றில் இன்பச் சுற்றுலா நடத்தியவர்.
வேத சாத்திரக் குப்பைகளில் விளையாடி மகிழ்ந்தவர் என்ற ஒரு நினைப்பு பொதுவாக மக்கள் மத்தியில் மண்டிக் கிடந்ததுண்டு. அதனை அடிகளாரே ஒப்புக் கொள்கிறார்.
அதே அடிகளார் அனுபவக் கடலில் மூழ்கி முத்தெடுத்தும், 'பிரத்தியட்சமாக நாட்டில் நடக்கும் நாசகார வேட்டைகளைக் கண்டும், அய்யோ இவ்வளவுக் காலத்தை இழிச் சகதியில் புரண்டு கிடந்தோமே, பார்ப் பனீயத்தின் பாம்பாட்டத்தைப் பார்த்து ருசித்துக் கிடந் தோமே' என்று விலாவில் வேல் பாய்ந்ததெனத் துடித்து பிற்காலத்தில் இதோ எழுதுகிறார்.
"நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது. இவ்வளவு என்று அளவு சொல்ல முடியாது. நான் பாடிய முதலாவது திருமுறையில் நன்றாகத் தெரியும் - ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் அப்போது இருந்ததென்றால் அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது. இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதனால், ஆண்டவன் என்னை ஏறாத நிலை மேல் ஏற்றியிருக்கிறார்" என்று இறை நம்பிக்கை இருந்தாலும் இந்த ஆரிய கழிசடை கசமாலங்களில் கழித்த காலத்தை எண்ணிக் கண் கலங்குகின்றார் - மனம் பதைக்கின்றோர்-
இதோ அடிகளார் வரிந்து கட்டுகிறார் படியுங்கள்.
"வேதநெறி ஆகமத்தின் நெறிபவுராணங்கள்
விளம்பு நெறி இதிகாசம் விதித்த நெறி முழுதும்
ஓதுகின்ற சூது அனைத்தும் உளவனைத்தும் காட்டி
கலையுரைத்த கற்பனையே
நிலையெனக்கொண்டாடும்
கண் மூடி வழக்கமெலாம் மண் மூடிப்போக
அச்சா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
இச்சாதி, சமய , விகற்பங்கள் எல்லாம் தவிர்த்தே
எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல்
சாதி, குலம், சமயமெலாம் தவிர்த்து எனை
தனித்த திரு அமுதளித்த தலைமைப் பொருளே
நால் வருணம் ஆச்சிரமம் ஆசாரம் முதலா
நவின்ற கலைச் சரித மெலாம் பிள்ளை விளையாட்டே
சாதி சமயங்களிலே விதி பல வகுத்த
சாத்திரக் குப்பைகள் எலாம் பாத்திரம் அன்று எனவே
சாதி மதம் சமயமெனும் சங்கடம் விட்டு அறியேன்
சாத்திரச் சேறாடுகின்ற சஞ்சலம் விட்ட றியேன்
இயல் வேதாகமங்கள் புராணங்கள் இதிகாசம்
இவை முதலா இந்திர ஜாலம் கடையா யுரைப்பார்
மயலொரு நூல் மாத்திரந்தான் ஜாலமென அறிந்தார்
மகனே நீ நூலனைத்தும் ஜாலமென அறிக!!
சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி
நேத்திரங்கள் போல் காட்ட நேராவே
...
பாலும் நீரும் போலும்
பார்ப்பன சிநேகம்
...
மதமென்று சமயமென்றும் சாத்திரங்கள் என்றும்
மன்னுகின்றதேவர் என்றும் மற்றவர்கள் வாழும்,
பதமென்று பதமடைந்த பத்தர் அனுபவிக்கும்
பட்ட அனுபவங்கள் என்றும் பற்பலவா விரித்த
விதமொன்றும் தெரியாதே மயங்கினேன்
...
மதத்திலே அபிமானங்கொண்டு உழல்வேன்
வாட்டமே செயு கூட்டத்தில் பயில்வேன்
சாதியே மதமே வாழ்க்கையே யென
வாரிக் கொண்டலைந்தேன்
...
கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக்
கூட்டமும், அக்கூட்டத்தே கூவுகின்ற கலையும்,
கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல்கதியும்
காட்சிகளும் காட்சி தரும் கடவுளரும் எல்லாம்
- பிள்ளை விளையாட்டே!
...
நலிதரு சிறிய தெய்வமென்று அய்யோ
நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பலிதரு ஆடு பன்றிகுக் குடங்கள்
பலிக்கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே
புந்திநொந் துளநடுக் குற்றேன்
கலியுறு சிறிய தெய்வவெங் கோயில்
கண்ட காலத்திலும் பயந்தேன்
...
தெய்வங்கள் பலபல சிந்தை செய்வாரும்
சேர்கதி பலபல செப்பு கின்றாரும்
பொய் வந்த கலை பல புகன்றிடுவாரும்
பொய்ச் சமயாதியை மெச்சு கின்றாரும்
மெய் வந்த திருவருள் விளக்கம் மொன்றில்லார்
மேல் வினைவு அறிகிலார் வீண் கழிக்கின்றார்
...
சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணே அழிதல் அழகலவே
(அருட்பா)
வடலூரார் பாடுகிறாரா - அல்லது ஈரோட்டார் பேசு கின்றாரா? என்று சில இடங்களில் திகைத்து நிற்க நேரிடும்.
எதிர் காலம் எப்படி இருக்கும் என்று வடலூரார் கடைசிக் காலத்தில் கோடிட்டுக் காட்டிய வசனங்கள் மிக மிக முக்கியமானவை.
"இது வரையில் சர்ம சித்தருடைய காலம் அதனால் சமயங்களும், மதங்களும் பரவியிருந்தன. இப்போது வரப் போகிறது ஞான சித்தருடைய காலம். இனி சாதி, சமய முதலான ஆசாரங்களெல்லாம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான ஆசாரம் ஒன்றே விளங்கும். சமய மதங்களில் சொல்லுகிற கர்த்தாக்கள், மூர்த்திகள், ஈசுவரன், பிரமம், சிவன் முதலிய தத்துவங்கள் காலப் பிராமண பரியந்தம் இருப்பதேயொழிய அதற்கு மேலிராது" (அருட்பா) என்கிறார்அடிகளார்.
எதிர்காலத்தில் ஞான சித்தருடைய காலம் என்கிறாரே - அது ஈரோட்டாரைக் குறிக்கும் தொனியாக அல்லவா புலப்படுகிறது!
இதுகுறித்து "வடலூரும் ஈரோடும்" எனும் நூலில் திருக்குறள் முனிசாமி இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"ஆரிய மதப் பித்தலாட்டங்களும், ஆவணத் திமிர் பிடித்த சாதிக் கும்பல்களும் மலிந்து வேரூன்றி விட்ட இந்த நாட்டில் கைகண்ட மருந்து பெரியார் கொடுக்கும் புரட்சி மனப்பான்மையேயாகும் என்பதை யாரும் அறிவார். வடலூரார் இக்கொடுமைகளைக் கண்டு அழுது அழுது கண்ணீர் வடித்தார் - மனம் கசிந்தார் - விசனப் பட்டார் - சாதி மதப் பேய்கள் ஓடுவதைக் காணோம் - "கடைவிரித்தோம் கொள் வாரில்லை" என்றும் கூறி விட்டார். அடிகளார் நெஞ்சு நெக்குருக உருகிப் பாடினார். அவைகளைச் செய் முறையில் இந்நாட்டில் நிறுத்திக் காட்ட முனைந்து நிற்பவர் ஈரோட்டு பெரியார் ஒருவரேயன்றி, அருட்பாப் புத்தகங்களைப் பாராயணம் பண்ணிக் கொண்டு சாதுகளாய் இருக்கும் கூட்டம் அல்ல என்று வெளிப்படையாக் கூறுவோர்" என்று திருக்குறள் முனுசாமி அவர்கள் எழுதுவதை ஊன்றிப் பார்ப்போம்!
வடலூரில் வரும் 7ஆம் தேதி மாலை நடக்கவிருக்கும் வள்ளலார் விழா விடியலை ஏற்படுத்தும்; பக்திக்குள்ளும் படபடக்கும் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் உணர்வைத் தூக்கிப் பிடிக்கும்!
வாருங்கள் தோழர்களே! உண்மை வள்ளலாரைக் காணுங்கள் நாட்டோரே!
கவிஞர் கலி. பூங்குன்றன்
No comments:
Post a Comment