தமிழ் தெரியாதவர்களும் அகில இந்தியத் தேர்வு எழுதலாம் என்ற முடிவுக்கு முடிவுகட்ட சூளுரை ஏற்போம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 18, 2023

தமிழ் தெரியாதவர்களும் அகில இந்தியத் தேர்வு எழுதலாம் என்ற முடிவுக்கு முடிவுகட்ட சூளுரை ஏற்போம்!

 4 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அறிஞர் அண்ணாவால் ‘‘தமிழ்நாடு'' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாள் (ஜூலை 18) இந்நாள்!

41938 ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது ‘‘தமிழ்நாடு தமிழர்க்கே!'' என்ற முழக்கமிட்டவர் தந்தை பெரியார்!

476 நாள்கள் பட்டினிப் போராட்டம் நடத்தி உயிர்நீத்தவர் சங்கரலிங்கனார்!

குழந்தைகளுக்கும் -வணிக நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர் சூட்டுவோம்!

உயர்நீதிமன்றத்திலும் தமிழில் வழக்காடும் உரிமை தேவை!

மதராஸ் ஸ்டேட் என்பதை ‘‘தமிழ்நாடு'' என்று அதிகாரப் பூர்வமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்நாளில் (1967) தமிழ் புறக்கணிக்கப்பட்டு இருக்கும் இடங்களில் எல்லாம் தமிழுக்குரிய இடத்தைக் கொண்டு வருவதற்கு இந்நாளில் சூளுரை மேற்கொள்வோம் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

‘மெட்ராஸ் மாகாணம்' என தென்னிந்திய பல பகுதிகள் ஒருங்கே இருந்ததே பிற்காலத்தில் மொழிவாரி மாநிலங்கள் ஆக தெலுங்கு, கன்னடம், மலையாளம்  என பிரிந்தது. 

மாநிலங்கள் பிரிந்த  நவம்பர் ஒன்றாம் தேதி ஏதோ ஒன்றியத்தில் இருந்து விடுபட்ட நாளாக கொண்டாடப் படுகிறதே தவிர, அதில்  மொழி, கலாச்சாரப் பிரதிபலிப்பு  தமிழ் நாட்டில் இல்லை.

கன்னடர்கள் அவர்களுக்கென்று ஒரு கொடியை உருவாக்கி கொண்டாடுகின்றனர். ஆனால், ‘மெட்ராஸ் ஸ்டேட்' என்ற பெயரில் நம் தமிழ்  பண்பாடு, மொழிப் பற்று எங்கே  உள்ளது?

அவரவர் மாநிலங்களுக்கு அவரவர் விரும்பிய பெயர்கள் சூட்டப்பட்டன. தமிழ்நாட்டிற்கு ‘மதராஸ்' என்ற பெயரே நீடித்தது. ‘மதராஸ் மாகாணம்' என்னும் பெயரை ‘தமிழ்நாடு' என்று மாற்ற வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதற் காக சங்கரலிங்கனார் அவர்கள் தொடர்ந்து 76 நாள்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர் நீத்தார். இவரது மறைவிற்குப் பின்னர் ‘தமிழ்நாடு' என்று நம் மாநிலத்திற்கு பெயர் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

1938 ஆம் ஆண்டிலேயே ‘‘தமிழ்நாடு, தமிழருக்கே'' என்று குரல் கொடுத்தவர் தந்தை பெரியார்!

1957ஆம் ஆண்டு திமுக முதன் முதலில் சட்ட மன்றத்திற்குள் அடியெடுத்து வைக்கும் பொழுதே ‘மதராஸ்' என்னும் பெயரை மாற்றி ‘தமிழ்நாடு' என்று நம் மாநிலத்திற்குப் பெயர் வைக்க வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தது‌‌. ஆனால், பெரும் பான்மையான ஆதரவு இல்லாத காரணத்தால் அந்தத் தீர்மானம் தோல்வியடைந்தது. அதன்பின் பலர் முயற்சித்தும் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. 1967 இல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அறிஞர் அண்ணா அவர்கள்  ஜூலை மாதம் 18 ஆம் தேதி அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இந்த தீர்மானத்தை நிறைவேற்றினார். ‘தமிழ்நாடு' என்று முதலமைச்சர் அறிஞர் அண்ணா முன்மொழிய, உறுப்பினர்கள் அனைவரும் ‘‘வாழ்க, வாழ்க'' என்று வாழ்த்துரைத்தனர். அதன் பின் 1968 ஜனவரி 14ஆம் தேதி அன்று அதிகாரப் பூர்வமாக மதராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தற்போதைய தமிழ்நாட்டின் நிலப்பரப்பு தான் 1956 நவம்பர் ஒன்றாம் தேதி மதராஸ் மாநிலமாக நமக்கு பிரிக்கப்பட்டது ‌‌அது தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது 1967 ஜூலை 18ஆம் தேதி ஆகும். இதில் பல கட்சி தலைவர்களுக்கு இடையே இருந்த முரண்பாடுகள் மற்றும் சர்ச்சைகளுக்கு பின் தற்போதைய திமுக ஆட்சியில் அமைந்த அரசு ஜூலை 18ஆம் தேதியே தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது.

தமிழ்நாடு என்னும் பெயர் எளிதில் கிடைத்து விடவில்லை பல தலைவர்களின் போராட்டங்களுக்குப் பிறகும் உயிர் தியாகங்களுக்குப் பிறகும் தான் நம் மாநிலத்திற்கு கிடைத்துள்ளது.

மதராஸ் மாகாணம் பெயர் மாற்றம் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் காரசாரமாக நடந்தது. ‘‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்'' என்ற தொல்காப்பிய வாசகத்தையும், ‘‘இமிழ்கடல் வேலியை தமிழ்நாடாக்கின'' என்ற இளங்கோவடிகளின் சிலப்பதி காரத்தையும் சுட்டிக்காட்டிப் பேசிய அண்ணாவின் பேச்சால் திருப்தி அடையாத சிலர்; ‘‘தமிழ்நாடு என பெயரிடுவதால் என்ன லாபத்தை அடையப் போகிறீர்கள்'' என்ற கேள்வியை எழுப்பினர். ‘‘பார்லி மெண்ட்டை லோக்சபா என்றும்; கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸை ராஜ்ய சபா என்றும் மாற்றியதால், நீங்கள் என்ன லாபத்தை அடைந்துவிட்டீர்கள்'' என்ற கேள்வி மூலம் தன் பதிலடியை அழுத்தமாக பதிவு செய்தார் அறிஞர் அண்ணா. இருப்பினும் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு இருந்த பெரும் பலத்தால் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பூபேஷ் குப்தா கொண்டுவந்த தனிநபர் மசோதா தோற்கடிக்கப்பட்டது. 

இந்நிலையில் 1967ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அண்ணா தலைமையிலான திமுக அரசால் மதராஸ் ஸ்டேட் என்ற பெயர் தமிழ்நாடு என என்று மாற்றம் செய்யப்பட்டது.  1968 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசின் பெயர் மாற்ற சட்டமுன்வடிவு நாடாளு மன்றத்தால் ஏற்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்காக போராடிய தலைவர்களின் வரலாறு முழுமையாக இளைய தலைமுறைக்கு போய்ச் சேரவில்லை என்ற விமர்சனங்களும் இதுவரை வைக் கப்பட்டே வருகின்றன. சுதந்திரத்திற்கு பிறகு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னரும் மதராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்ற 12 ஆண்டுகால பெரும் போராட்டம் தேவைப்பட்டுள்ளது.

இன்னும் சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மெட்ராஸ் அய்கோர்ட் என்பதை தமிழ்நாடு உயர்நீதி மன்றம் என்பதற்குக்கூட ஒன்றிய அரசு ஒப்பம் அளிக்க வில்லை.

தமிழ் தெரியாதவர்களும் அகில இந்திய தேர்வு எழுதலாம் என்ற கொடுமை நிலவுகிறது. இதற்கெல்லாம் முடிவு கட்ட தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்ட இந்த வரலாற்றுப் பொன்னாளில் சூளுரை மேற்கொள்வோம்!

மிக முக்கியமாக குழந்தைகளுக்கும், வணிக நிறு வனங்களுக்கும் தமிழில் பெயரை சூட்ட உறுதியாக முடிவு எடுக்கவேண்டியது மிகவும் அவசியம் என்பதை இந்நாளில் வலியுறுத்துகிறோம்.


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

18.7.2023


No comments:

Post a Comment