உழவர்களுக்கு பா.ஜ.க. அரசு எதிரி - தி.மு.க. அரசோ நண்பன்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 9, 2023

உழவர்களுக்கு பா.ஜ.க. அரசு எதிரி - தி.மு.க. அரசோ நண்பன்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (8.7.2023) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மய்யத்தில் நடைபெற்ற வேளாண் வணிகத் திருவிழாவில், 2022-2023 ஆம் ஆண்டில் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிக்கான விருதினை கடலூர் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த விவசாயி ம.இராமகிருஷ்ணன் அவர்களுக்கு விருதும், இரண்டு இலட்சம் ரூபாய்க்கான பரிசுத் தொகையும் வழங்கினார். இவ்விழாவில், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், சட்டத் துறை அமைச்சர் எஸ்.இரகுபதி, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர் எஸ். சுதர்சனம், சர்க்கரைத் துறை ஆணையர் சி. விஜயராஜ் குமார்,  வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சி. சமயமூர்த்தி,  வேளாண்மை - உழவர் நலத்துறை சிறப்புச் செயலாளர் டாக்டர் ஆர். நந்தகோபால் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை, ஜூலை 9 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (8.7.2023) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மய்யத்தில் வேளாண் வணிகத் திருவிழா 2023-அய் தொடங்கி வைத்தார். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் உழவர் உற் பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கினார்.

தொடர்ந்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, பார்வை யிட்டார். வேளாண் வணிகத் திருவிழாவில் 176 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 86 அரங்குகளில் 188 உழவர் உற்பத்தியாளர் நிறு வனங்களின் விளைபொருட்களும், 90 அரங்குகளில் வேளாண்மை சார்ந்த பல்வேறு துறைகள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், நபார்டு வங்கி, தொழில் முனைவோர்கள், பிற மாநிலங்களில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தனியார் நிறு வனங்கள், ஏற்றுமதியாளர்கள், வங்கிகள் போன்ற பல்வேறு அமைப்புகள் சார்ந்த கண்காட்சிகளும் அமைக் கப்பட்டுள்ளன.

விருதுகள் வழங்கல்

இவ்வரங்குகளில் சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பனை சார்ந்த பொருட்கள், நறுமணப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், பூக்கள், சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டப்பட்ட தின்பண்டங்கள், உடனடியாக சமைக்கும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல் வேறு முக்கிய விளைபொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. ஆளுமை யில் சிறந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கான விருதினை புதுக்கோட்டை இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும், ஈரோடு-கழனி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும், "வர்த்தகத்தில் சிறந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கான விருது" கடலூர் மாவட்டம், மங்களூரு தானியப் பயிர்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும், சேலம்-வீரபாண்டி களஞ்சிய ஜீவிதம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும், தூத்துக்குடி பயறு உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டது.

பாசனப் பரப்பு 

அதிகமாக்கவேண்டும்

தொடர்ந்து, 2022-2023 ஆம் ஆண்டில் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் கடலூர் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணனுக்கு விருதும், 2 லட்சம் ரூபாய்க்கான பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய தாவது: 

பாசனப் பரப்பு அதிகமாக வேண்டும். அதன் மூலமாக உற்பத்திப் பெருக வேண்டும். உற்பத்தியான பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவேண்டும். உரிய விலையின் பயன்கள் உழவர்களுக்கு கிடைக்க வேண்டும். தரமான வேளாண் பொருட்கள் மக்களுக்கு உரிய விலையில் கிடைக்கவேண்டும். ஏற்றுமதி பெருகவேண்டும். இத்தகைய வேளாண் புரட்சியை நாம் நடத்தி வருகிறோம். அதற்காக எத்தனையோ திட்டங்களை நாம் தீட்டித் தந்திருக்கிறோம். இன்னும் பல திட்டங்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். வேளாண்மையில், நவீன தொழில் நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட வேண்டும். இரண்டு ஆண்டு களாக நல்ல மழை பெய்து வருகிறது. தண்ணீர் பிரச்சினை இல்லை. வேளாண் பணியாளர்கள் கிடைக் கிறார்கள். இவை அனைத்தையும் உழவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பருவநிலை மாற்றம் மற்றும் உணவுத் தேவை அதிகரிப்பு ஆகிய இரண்டையும் சமாளிக்கும் வகையில் நம்முடைய வேளாண் முயற்சிகள் அமைய வேண்டும்.

பயிர் பாசன முறையை கண்காணித்தல்

துல்லியமான வேளாண்மை முறைகளைக் கடைப் பிடிக்க வேண்டும். ஸ்மார்ட் போனைப் பயன்படுத்திப் பயிர் பாசன முறையைக் கண்காணித்தல், ஆளில்லா விமானங்களை பயன்படுத்துதல் ஆகியவை எல்லாம் இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வேளாண் துறையில் உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று சொல்லும்போது, உழவர்களுக்கு தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டும். அதிகாரிகளுக்கு வேளாண்மை தெரிந்திருக்க வேண்டும். இவை இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்டால், வேளாண்மை என்பது வர்த்தகத் தொழிலாக மாறும். அதற்கு இது போன்ற கண்காட்சிகள் அடித்தளம் அமைக்கும். இதுபோன்ற கண்காட்சிகளை தொடர்ந்து நடத்துங்கள். வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் இதுபோன்ற கண்காட்சிகளால் விளைபொருட்களுக்கு அதிக சந்தை வாய்ப்பு கிடைக்கும் என்பதில் அய்யமில்லை. இப்படி, வேளாண் பெருங்குடி மக்களின் நலன் போற்றும் அரசாக நம்முடைய அரசு இருந்து வருகிறது. ஆனால் உழவர்களுக்கு எதிராக 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்து அவர்களை மாதக் கணக்கில் தகிக்கும் வெயிலிலும், நடுங்கும் குளிரிலும், தலைநகரில் போராட வைத்தது ஒன்றிய பாஜக அரசு. பல நூறு பேர் உயிரிழந்த பின்னும், அவர்களின் உறுதி குறையாத தைக் கண்ட பின்னர்தான், அவர்கள் பின் வாங்கினார்கள். இதுதான் உழவர் விரோத ஒன்றிய பா.ஜ.க. அரசு. ஆனால், தி.மு.க. அரசு எப்பொழுதும் உழவர்களின் நண்பனாக இருக்கும்.

வேளாண் அறிவு

அதனால்தான் முத்தமிழறிஞர் கலைஞர் 2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், ஒரே கையெழுத்தில், 7000 கோடி ரூபாய் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்தார். நம்முடைய தலைவர் கலைஞர் வழியில் நடக்கும் நம்முடைய அரசு ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில், நமது அரசும் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான இலவச மின் இணைப்புக்களை உழவர் களுக்கு வழங்கி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. இவைற்றையெல்லாம் வேளாண் பெருங்குடி மக்களும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில், இந்த மண்ணையும், மக்களையும் காப்பதற்கான கடமை அவர்களுக்குக் காத்திருக்கிறது. அதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. வேளாண் அறிவு என்பதை உழவர்கள் மட்டுமல்ல, அனைத்து மக்களும் பெற்றாக வேண்டும். 

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.





No comments:

Post a Comment