கவிஞர் கலி.பூங்குன்றன்
அந்த நாள் 7.11.1966, அப்பொழுது காமராசர் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் - டில்லியில் தங்கியிருந்தார்.
சமதர்ம சங்கநாதத்தை காமராசர் முழங்கிக் கொண்டிருந்த கால கட்டம் அது.
பசுவதைத் தடுப்புச் சட்டத்தைக் கோரினர் இந்துமத வெறியர்கள் - சங்கராச்சாரியார்கள். அதற்கு அரசு இணங்காத நிலையில் அந்த வெறியர்களின் குறி காமராசர் பக்கம் திரும்பியது.
ஆர்.எஸ்.எஸ். குண்டர்களும், திரிசூலம் ஏந்திய நிர்வாணச் சாமியார்களும், சாதுக்களும், சங்கராச்சாரிகளும் தடிகள், கடப்பாரைகள், தீப்பந்தம், பெட்ரோல் சகிதமாகக் காமராசர் தங்கியிருந்த வீட்டுக்குள் புகுந்தனர், தீ வைத்தனர். பணியாளர் உதவி காரணமாக அன்று காமராசர் உயிர் தப்பினார்.
இதனை தந்தை பெரியார், திராவிடர் கழகம் மிகப் பெரிய சமூகப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டனர்.
"காமராசரைக் கொல்ல ஏற்பாடு செய்யப்பட்ட முயற்சியை ஒரு சமுதாயப் புரட்சிப் போராட்டத்தின் விளைவு என்று தான் மக்கள் கருத வேண்டும்" என்று கருத்துத் தெரிவித்தார் தந்தை பெரியார்''
"காமராஜர் கொலை முயற்சி என்பது மதத்தைப் பற்றிய கவலையைக் கொண்டதாக இல்லாமல், ஒரு சமுதாயத்தின் உயர்வை, உயர் வாழ்வை, அடிப்படையாகக் கொண்டதாகும். உலகில் மற்ற மதக்காரர்களுக்கு ஏற்படும் மதவெறி எல்லாம் தங்கள் மதப் பெருமைக்குக் கேடு வருகின்றதே. குறைவு வருகின்றதே என்கின்ற கவலையைப் பொறுத்ததாகத்தான் இருந்து வந்து இருக்கிறது.
இந்து மதம் சம்பந்தமான மதவெறி, அதிலும் மேல் ஜாதிக்காரர்களாக வாழும் பார்ப்பனர்களுக்கு ஏற்படும் மதவெறி, தங்களின் உயர் வாழ்வுக்குக் கேடு வந்துவிடுமே என்கின்ற சுயநலத்தின்மீது ஏற்படும் வெறிதான். அதுதான் முரட்டுவெறியாகத் தோன்றி விடுகிறது" (காமராசர் கொலை முயற்சி சரித்திரம் என்ற நூலுக்கு அளிக்கப்பட்ட முன்னுரையில்)
பார்ப்பன இந்துமதத்தின் தன்மை பற்றிய ஒரு தத்துவ தரிசனத்தையே இதன் மூலம் தந்தார் பெரியார்.
நாடெங்கும் கண்டனக் கூட்டங்கள், ஊர்வலங்களைக் கழகத்தின் சார்பில் நடத்தச் செய்தார்கள்.' தந்தை பெரியார் அவர்களே முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று எழுச்சி உரை ஆற்றினார்கள்.
"கத்தியை எடுப்போம்! காமராசரைக் காப்போம்!" "கத்தியை எடுப்போம் - சமதர்மம் காப்போம்!” என்கிற முழக்கங்கள் தமிழ் மண்ணின் உணர்ச்சிக் குரல்களாகப் பீறிட்டன.
காமராசர் கொலை முயற்சியின் பின்னணியில் உள்ள சக்திகளை அம்பலப்படுத்தும் வண்ணம், ஏடுகளில் வந்த ஆதாரப்பூர்வமான ஆவணங்களையும், ஒளிப் படங்களையும், தகவல்களையும், தலையங்கங்களையும் திரட்டி "காமராஜர் கொலை முயற்சி சரித்திரம்” என்கிற நூலாக வெளிவரச் செய்தார். 'விடுதலை' ஆசிரியர், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்கள் அதனைச் சிறப்பாக தொகுத்து வெளியிட்டார்.
கழகத்தின் இத்தகைய வெகு மக்கள் எழுச்சி நடவடிக்கைக்குப் பின்னர்தான் வெறியர்கள் அடங்கினார்கள்.
காமராசர் உண்மையான மனிதர் - மக்கள் தலைவர் - பெருவாரியான மக்களின் உரிமைக்காவலர் - சமதர்மச் சீலர் - உண்மையான மதச் சார்பின்மையின் நேசர் என்பதற்குச் சரியான சான்று, இந்துமத வெறியர்கள் அவரின் உயிருக்குக் குறி வைத்ததன் மூலம் வெளிப்பட்டது.
தந்தை பெரியாரின் கணிப்புப்படி பார்ப்பனர்கள் தங்களின் மதக் கோட்பாட்டின்படிதான் காமராசரைக் கொல்ல முயற்சித்தனர்.
"வர்ணாசிரமப்படி நடக்கவில்லை யானால் பிராமணர்கள் ஆயுதம் எடுத்து யுத்தம் செய்ய வேண்டும்" என்கிறது மனுதர்மம். (மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 348).
இதனைத்தான் நவயுக மனுநீதிக் காவலர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி யாரும் பச்சையாகக் கூறினார்.
'தருமம் கெட்டுப் போனால் அதர்மத்தி னாலாவது அதைத் தடுக்க முயலுவது ஒரு தருமமாகும் (15.2.1964 அன்று சென்னை கோகலே மண்டபத்தில் ராஜாஜி பேசியது - சுதேசமித்திரன் 16.2.1984)
நாட்டில் நடப்பது இனப் போராட்டமே - குலதர்மத்துக்கும் மனித தர்மத்துக்கும் நடக்கும் போராட்டமே என்பார் தந்தை பெரியார்.
இன்றுகூட இந்தியாவில் ஹிந்துத்துவா ஆட்சி என்கிற ஒரு கூட்டம்; அதற்கு இன்னொரு பெயர் மனுதர்ம ஆட்சி என்பதாகும்.
இதனைத் தகர்த்து மனிதத் தர்ம ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதுதான் கழகத்தின் நிலை!
கழகத்தின் இந்த அணுகுமுறையைச் சரியான கோணத்தில் காணும் எவரும் கழகத்தின் நடத்தையில் குறை காணார்!
காமராசரின் நூற்றாண்டு விழாவின் போது காமராசர் ஏன் எதிர்க்கப்பட்டார் - ஏன் அவரின் -உயிருக்குக் குறி வைக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொண்டால், இன்றைக்கு நடக்கும் நாட்டு நடப்பு, அரசியல் போக்கு எல்லாவற்றிற்குமே விடை கிடைக்கும்!.
No comments:
Post a Comment