கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 24, 2023

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தருமபுரி, ஜூலை 24- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (24.7.2023) தருமபுரி  மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை  தொடங்கி வைத்தார். மேலும், விண்ணப்பங் களைப் பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, விண்ணப் பம் செய்ய வந்த மகளிருடன் கலந்துரையாடினார். 

நிதிநிலை அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் பற்றிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் 2023-2024ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “மகளிருக்குச் சொத்துரிமையும், உள்ளாட்சி அமைப்புகளில் தனி இடஒதுக்கீடு அளித்தது முதல், தற்போது கட்டணமில்லாப் பேருந்து பயணம் வழங்கியது வரை, மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் இவ்வரசு செயல்பட்டு வருகிறது. அந்த வரிசையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், தாய் தமிழ்நாட்டின் தலைமகன் - பேரறிஞர் பெருமகன் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்படும். தமிழ்நாட்டு மகளிரின் சமூக பொருளாதார வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்திற்காக, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று அறிவிக்கப்பட்டது.

மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் அவர்களின் விளக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 27.3.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அளித்த விளக்கத்தில், “மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்” இரண்டு நோக்கங்களைக் கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதாகும்.  

மகளிரின் சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்பது, தேவைப்படும் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள் என பல்வேறு வகைகளில் தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பைத் தொடர்ந்து வழங்கி வரும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள் என்றும், இந்த மகத்தான ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் அமைந்திடும் என்றும் அறிவித்தார். 

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

பெண்களுக்கு சொத்துரிமையும், உள்ளாட்சி அமைப்புகளிலும் இடஒதுக்கீடும் வழங்கி பெண் ணுரிமை காத்திட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பெயரால் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்று இத்திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைச் சீரிய முறையில் செயல்படுத்திட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஒவ்வொரு துறைகளின் பங்களிப்பு குறித்தும், மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்புகள் குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 7.7.2023 அன்று அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசுத் துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், சமுதாயத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களாகிய சாலையோரங்களில் குடியிருப்போர், பழங்குடியினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதர ஆதரவற்றோர் இந்தத் திட்டத்தில் பயன் அடைவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும். அவர் களிடம் குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற தரவுகள் இல்லையென்றாலும் கூட, அவற்றைப் பெறுவதற்கு உரிய வழிவகை செய்து, இந்த மகளிர் உதவித் தொகை அவர்களுக்குக் கிடைப்பதற்கு உதவி புரிய வேண்டும் என்று தெரிவித்ததோடு, எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டுவிடக் கூடாது என்று அறிவுறுத்தினார். 

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடையோர் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர். குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர். ஒவ்வொரு தகுதிவாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத்தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில் குடும்பத்தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார். குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப் பிடப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத்தலைவரின் மனைவி குடும்பத்தலைவியாகக் கருதப்படுவார். குடும்ப அட்டையில் ஆண் குடும்பத்தலைவரின் மனை வியின் பெயர் ஏதேனும் காரணத்தினால் இல்லாத பட்சத்தில், குடும்பத்திலுள்ள குடும்பத்தலைவியாக இதர பெண்களில் ஒருவர் கருதப்படுவார். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட  21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இத்திட்டத்தின்கீழ் பயன்பெற, ஒரு நபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம்.

மேலும், திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர்.

பொருளாதாரத் தகுதிகள்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கும் குடும்பங்களின் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும்,  அய்ந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்திருக்க வேண்டும், வீட்டு உபயோகத்துக்கு ஆண்டிற்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தி இருக்க வேண்டும். 

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்தும் முறை

இத்திட்டத்திற்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடை அமைந்திருக்கும் விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பொது விநியோக நியாய விலைக் கடை பணியாளரும் தங்களது பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு ஒவ்வொரு தெருவாரியாக நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பத்தினை வீடுக ளுக்குச் சென்று வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் விண்ணப்பங்களில் டோக்கன் எண், பயனாளிகள் முகாமிற்கு வருகை புரிய வேண்டிய தேதி மற்றும் நேரம் குறிப்பிட்டு வழங்கப்படும்.

அக்குறிப்பிட்ட நாளில் முகாமிற்கு வருகை தரும் விண்ணப்பதாரர்களால் வழங்கப்படும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இதற்கெனத் தமிழ்நாடு மின்ஆளுமை முகமையால் உருவாக்கப்பட்டுள்ள கைப்பேசி செயலி வழியாக நேரடியாக பதிவு செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் முகாமிற்கு வரும்பொழுது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், மின்வாரிய கட்டண இரசீது ஆகியவற்றை அசலாக சரிபார்த்தலுக்கு கொண்டு வர வேண்டும். 

விண்ணப்பங்கள் பதிவு செய்தவுடன் விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டதற்கான தகவல் விண்ணப்பதார ருக்கு கைப்பேசி வழியாக குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். பதிவு செய்யப்பட்ட அனைத்து விண் ணப்பங்களும் மின்னணு முறையில் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டவுடன் அது தொடர்பான தகவல் விண்ணப்பதாரருக்கு அனுப்பி வைக்கப்படும். திட்டம் தொடங்கப்பட்டவுடன் தகுதி யான விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் பலனாக அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 

தருமபுரியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாம் தொடங்கி வைத்தல்

தருமபுரி  மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின்  விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமினை  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் (24.7.2023) தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அவ்விண்ணப்பங்களைப் பயோ-மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, விண்ணப்பம் செய்ய வந்த மகளிருடன், அவர்கள் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்து, கலந்துரையாடினார். பின்னர், அங்கு நடைபெற்ற மக்களைத் தேடி மருத்துவம் முகாமினை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பம் பெறும் முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற் கட்டமாக 24.07.2023 முதல் 4.08.2023 வரை நல்லம்பள்ளி, கடத்தூர், காரிமங்கலம், மொரப்பூர் மற்றும் பாலக்கோடு ஆகிய வட்டாரங்களில் உள்ள 494 நியாய விலைக்கடைகளை உள்ளடக்கிய 2,21,484 குடும்ப அட்டைதாரர்களுக்குச் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. 

இரண்டாவது கட்டமாக 5.8.2023 முதல் 16.8.2023 வரை தருமபுரி, ஏரியூர், அரூர், பென்னாகரம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரங்களில் உள்ள 554 நியாய விலைக்கடைகளை உள்ளடக்கிய 2,47,111 குடும்ப அட்டைதாரர்களுக்குச் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. 

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ். செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.க. மணி, எஸ்.பி. வெங்கடேஸ்வரன், இரா. ராஜேந்திரன், மேனாள் அமைச்சர் பி. பழனியப்பன்,  வளர்ச்சி ஆணையர்  முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர்-1 

நா. முருகானந்தம், தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி. சாந்தி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment