கருப்புச் சட்டை அணிந்த எம்.பி.க்கள் போர்க் குரல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 28, 2023

கருப்புச் சட்டை அணிந்த எம்.பி.க்கள் போர்க் குரல்!

மணிப்பூரில் தொடர்ந்து வரும் வன்முறைக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்ததாக கூறப்படும் நிலையில் அங்கு நடைபெற்ற வன்முறை தொடர்பாக வெளியான காட்சிப் பதிவுகள் அம்மாநிலத்தில் இனப்படுகொலை நடைபெறுவதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

மே 4ஆம் தேதி தலைநகர் இம்பால் அருகே இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச்சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த வன்முறை கும்பல் குறித்த காட்சிப் பதிவு சில  நாட்களுக்கு முன்பு வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சுரசாந்த்பூர் மாவட்டத்தில் உள்ள லாம்ஜா கிராமத்தில் உள்ள குக்கி பழங்குடியினர் மீது தாக்குதல் நடத்திய மெய்தித் தீவிரவாதிகள் டேவிட் தேய்க் என்ற இளைஞரின் தலையைத் துண்டித்து கொடூரமாகக் கொலை செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

ஜூலை 2ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான காட்சிப் பதிவு வெளியாகி மக்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த பழங்குடி இன அமைப்பைச் சேர்ந்த ஒருவர், “டேவிட் தேய்க் படுகொலை செய்யப்பட்ட ஜூலை 2ஆம் தேதிக்கு முந்தைய நாள் இரவு லாம்ஜா கிராமத்தை மெய்தித் தீவிரவாதிகள் சூழ்ந்துகொண்டு தாக்கிய நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அங்கிருந்த பெண்கள் மற்றும் முதியவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த மெய்தித் தீவிரவாதிகள் இளைஞர்களை குறிவைத்து தாக்கத் தொடங்கினர், அப்போது தனியாக சிக்கிய மணிப்பூர் மாநில பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரின் பாதுகாவலரான டேவிட் தேய்க் என்ற இளைஞரை பிடித்து அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி எரித்த பின்பும் தங்கள் ஆத்திரம் தீராததை அடுத்து, அவரது தலையை மூங்கில் கொம்பில் செருகி வைத்து சென்றனர். இது தொடர்பாக காவல்துறையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்ற போதும் இதுவரை இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

ஜூலை 19 அன்று வெளியான காட்சிப் பதிவுகளோடு பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் முடிந்துவிடவில்லை. இதேபோன்று மேலும் பல கும்பல்  பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள்  நடந்திருப்பது, தற்போது ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்து  கொண்டிருக்கின்றன. தங்கள் மக்கள் சந்தித்த இழப்புகள் குறித்து, குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்கள், ஊடகங்களுக்கு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், “கடந்த மூன்று மாதங்களில் நடந்த  வன்முறையில் எங்கள் சமூகத்தைச்  சேர்ந்த 114 பேர் கொல்லப்பட்டி ருக்கிறார்கள். அதேபோல காட்சிப் பதிவுகளில் இருந்த பெண்களை தவிர்த்து, மேலும் இரண்டு பெண்கள் இம்பாலில் கும்பலால் பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். லாங்கோல், நகாரியன் பகுதியில் நர்சிங் மாணவிகள் பாலி யல் வன்கொடுமை செய்யப்பட்டு  அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இம்பாலில் தாய் - மகன்  எரித்துக் கொலை செய்யப்பட்டனர். இம்பாலின் மய்யப் பகுதியில் மன நலம் குன்றிய குக்கி இனப் பெண்  கொடூரமாக கொலை செய்யப்பட்டார். எனவே இந்தச் சம்பவங்கள் குறித்த விரிவான விசாரணை நடத்த இந்த வழக்குகளை சிபிஅய் வசம் ஒப்படைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.  இவை தொடர்பாக மேலும் பல  சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளி யாகி மேலும், மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

முறையே, 20 மற்றும் 40 வயது டைய 2 பழங்குடியின பெண்கள்  நிர்வாணமாக இழுத்துச் செல்லப்  பட்டு, கும்பல் வல்லுறவுக்கு உள் ளாக்கப்பட்ட அதே நாளிலேயே, காங்போக்பி மாவட்டத்தை சேர்ந்த 21 மற்றும் 24 வயதுடைய மேலும் 2 பெண்கள் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தலைநகர் இம்பாலில் வாடகை  வீட்டில் ஒன்றாகத் தங்கி அருகில் கொனுங் மாமாங் பகுதியில் உள்ள கார்களைச் சுத்தம் செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். மே 5  அன்று மாலை இந்தப் பெண்களில்  ஒருவரின் தாய், தனது மகளின் அலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது போனில் மணிப்பூரி மொழியில் பேசிய வேறொரு பெண் மிரட்டி இணைப்பை துண்டித்துள்ளார். அதன்பின் உறவினர் மூலமாகத்தான் அந்த தாய்க்கு தனது மகளுக்கு நேர்ந்த கொடூரம் தெரிய வந்துள்ளது. 

சம்பவத்தன்று ஆண்கள், பெண்கள் அடங்கிய கும்பல் ஒன்று 2 இளம்  பெண்கள் தங்கியிருந்த பகுதிக்கு  வந்துள்ளது. குக்கி இனத்தைச்  சேர்ந்த பெண்கள் எங்கிருக்கிறார்கள் என அப் பகுதியினரிடம் விசாரித்து, 2 பெண்களையும் தரதரவென  இழுத்துச் சென்றுள்ளனர். அங்குள்ள தொழிற்சாலைக்குள் பெண்களை அழைத்துச் சென்று கதவை மூடி, அவர்களை நிர்வாணமாக்கி கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளனர். அந்த பெண்கள்  சத்தம் போடக் கூடாது என்று  வாயைத் துணிகளால் அடைத்துள்ளனர். சுமார் மூன்றரை மணி  நேர கொடூரத்திற்குப் பிறகு, அந்த  இளம்பெண்கள் உயிரற்ற உடல்களாக வெளியே வீசப்பட்டுள்ளனர். அவர்களின் ஆடைகள் கிழிந்தும், தலைமுடி கொடூரமாகப் பிடுங்கப்பட்டும், உடல் முழுவதும் ரத்த வெள்ளமாய் காட்சியளித்துள்ளது. அவர்களை கொடூரமாகத் தாக்கியும் எரித்தும் படு கொலை செய்துள்ளனர். இங்கு நடந்த கொடூரத்தை கடையில் பணி புரியும் ஊழியர் ஒருவர்  செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் மேலும் எழுதவே கை நடுங்குகிறது. நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தும், பிரதமர் அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வில்லை.  அதனால் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து நாடாளுமன்றத்திற்குச் சென்று போர் முழக்கம் செய்துள்ளனர்.  

ஆம் கருப்பு என்பது போராட்டத்தின் சின்னம் - அடையாளம்! புரிந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment