மன்னார்குடியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 13, 2023

மன்னார்குடியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

 ‘‘அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படும் ஆளுநரே வெளியேறு!'' என்ற மக்கள் இயக்கத்தைத் தொடங்குவோம்!

மன்னார்குடி, ஜூலை 13 அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும், தமிழ்நாடு ஆட்சியின் செயல்பாடு களுக்குக் குந்தகம், முட்டுக்கட்டை போடும் வகையிலும் நாளும் செயல்பட்டுவரும் ''தமிழ்நாடு ஆளுநரே வெளியேறு!'' என்ற மக்கள் இயக்கப் போராட்டத்தைத் தொடங்குவோம் என்று எச்சரித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (12.7.2023) மன்னார்குடிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவரது பேட்டி வருமாறு:

ஆளுநர், முழுக்க முழுக்க ஒரு தேர்ந்த 

ஆர்.எஸ்.எஸ். அரசியல்வாதியாகவே...

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி என்கிற உயர்ஜாதி மனப்பான்மை கொண்ட பார்ப்பனர் ஆளுநருடைய பணிகளுக்கு மாறாக, அவர் ஆற்றவேண்டிய கடமைகளைப்பற்றி மறந்துவிட்டு, முழுக்க முழுக்க ஒரு தேர்ந்த ஆர்.எஸ்.எஸ். அரசியல்வாதியாகவே, பதவியேற்ற நாள்முதல் இந்த நாள்வரை நடந்துகொண்டு வருகிறார் என்பது தமிழ்நாடும், உலகமும் அறிந்த ஒரு மாபெரும் உண்மையாகும்.

தமிழ்நாட்டு மக்களுடைய நல்வாழ்விற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டு மக்களுடைய நல்வாழ்விற்கு எதிராகவே அவர் செயல்பட்டு வருகிறார். தி.மு.க. ஆட்சியை நடத்தவிடாமல் குறுக்குசால் ஓட்டவேண்டும்; ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்தவேண்டும் என்ற மனப் பான்மையிலேயே பல்வேறு பணிகளை அரசிற்கு எதிராக நடத்தி வருகிறார்.

சட்டமன்றத்தில் மரபுகளை மீறி, பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் பெயர்களை உச்சரிக்க மறுத்தார். அவர் தயாரித்த உரையல்ல - அமைச்சரவை தயாரித்த உரையே அது! அரசமைப்புச் சட்டப் படியல்லாது. அதையே மாற்றிப் படிக்கிறார் ஆளுநர்.

வள்ளலார் சனாதனத்தின் உச்சம் என்று சொல்லுகிறார்!

எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களைப்போல, சட்ட மன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்கிறார். சம்பந்தா சம்பந்தமில்லாமல் வடலூர் வள்ளலாரைப்பற்றி, வள்ள லார் சனாதனத்தின் உச்சம் என்று சொல்லி, மக்கள் எதிர்ப்பைத் தேடுகிறார்.

இப்படியெல்லாம் இருக்கக்கூடிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மேலும் மேலும் கூத்தடித்துக் கொண்டு, அமைச்சர் செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக, முதலமைச்சருக்குள்ள அதிகாரவரம் பிற்கு உட்பட்டு, நியமனம் செய்த நேரத்தில், 'அவரை நான் டிஸ்மிஸ் செய்கிறேன்' என்று இரவு 7 மணிக்கு ஆளுநர் உத்தரவு போட்டு, இரவு 11 மணிக்கு அதனைத் திரும்பப் பெற்றார்; அதுவும் டில்லியிலிருந்து அவரை இடித்துக் கூறிய பிறகு இதனை செய்தார். ''குதிரைக்கு முன்னால் வண்டியைக் கட்டுவதா? வண்டிக்கு முன் னால் குதிரையைக் கட்டுவதா?'' என்று தெரியாமல், இப்பொழுது நான் சட்ட ஆலோசனை செய்கிறேன் என்றெல்லாம் சொல்கிறார்.

கல்வி நிலையங்களில் வரம்புமீறி நடந்துகாட்டுகிறார்

13மசோதாக்களை அவர் ஒப்புதல் தராமல்கிடப் பில் போட்டு வைத்திருக்கிறார். பல்கலைக் கழகங் களுக்கு வேந்தர் என்ற முறையில், அவர் தேவையில்லாமல், ஒரு  ex-offcio அமைப்பை - அது தந்திருக்கிறது என்பதற்காக, அவர் கூத்தடிப்பதைக் கண்டு, சட்ட மன்றமே - மக்கள் பிரதிநிதிகளே சேர்ந்து, அந்த அதி காரத்தை அவரிடமிருந்து எடுத்துவிட வேண்டும் - பல மாநிலங்களில் குஜராத், அரியானா போன்ற மாநிலங்களில், வேந்தர் என்பவர் ஆளுநர் அல்ல என்று இருப்பதை எடுத்துக்காட்டி, ஒரு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர். அந்த மசோதாவிற்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்து, தன்னுடைய விருப்பப்படி, பல்கலைக் கழகத் துணைவேந்தர் நியமனம் சட்டத்தை மீறி இருக்கவேண் டும் என்று, பாரதியார் பல்கலைக் கழகம் போன்ற கல்வி நிலையங்களில் வரம்பு மீறி நடந்து காட்டுகிறார்.

குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராக நடந்துகொள்கிறார். இப்படியெல்லாம் நடந்துகொள் ளுகின்ற ஆளுநர் - வெளியேற்றப்படவேண்டும் - அவர் பதவியை விட்டு நீக்கப்படவேண்டும் என் பதற் காக - முறைப்படி நம்முடைய 'திராவிட மாடல்' ஆட்சி யின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தெளிவாக குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதி யிருக்கிறார். 

ஆளுநருக்கு எதிராக, மக்கள் எதிர்ப்பு என்பது நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கிறது.

நாடு தழுவிய அளவில்  ''ஆளுநரே வெளியேறு!'' மக்கள் இயக்கம்!

எனவேதான், ''ஆளுநரே வெளியேறு!'' -''Quit Tamilnadu'' என்ற ஒரு பெரிய இயக்கத்தை அனைத்து மக்களையும், அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து நாம் நடத்தவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருக்கின்றோம். மற்ற இயக்கத்தவர்கள், ஒத்தக் கருத்துள்ளவர்களையெல்லாம் இணைத்து, விரைவில் நாடு தழுவிய மக்கள் அதிகாரமாக, மக்கள் இயக்கமாக அதனை நடத்துவோம்.

காரணம், நம்முடைய அரசமைப்புச் சட்டம் பாது காக்கப்படவேண்டும்; தி.மு.க. ஆட்சி பாதுகாக்கப்பட வேண்டும் - அது செயல்படவேண்டும் என்று சொல் வதைவிட, அரசமைப்புச் சட்ட அடிப்படை பாதுகாக்கப்படவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமானது.

ஆளுநர் எடுத்த பதவிப் பிரமாணம் என்பது மிகவும் முக்கியமானது; ஜனநாயகம் பாதுகாக்கப்படவேண்டும்; மாநிலஉரிமைகள்பாதுகாக்கப்படவேண்டும்என்கிற அடிப்படைக்கு மாறாக, ஓர் எதேச்சதிகார மனப் பான்மையைக் கண்டு நாடே திகைக்கின்றது. இது வரை எந்த ஆளுநரும் இப்படி விசித்திரமான ஒரு நிலைப்பாட்டைத் தொடர்ந்து செய்துகொண் டிருப்பதாகத் தெரியவில்லை. அவர் போட்ட ஆணையை, அவரே சில மணிநேரத்தில் தடை செய்யக்கூடிய அளவிற்கு, அவருடைய தெளிவின்மை, அவருடைய அரசமைப்புச் சட்ட 'சூன்ய கருத்து' தெளிவாகிறது.

மக்களின் அதிகாரம்தான் இறுதியானது!

ஆகவேதான், இதுவரையில் ஆளுநருக்கு எதிராக நடைபெற்ற இயக்கத்தைக் காட்டிலும், ''தமிழ்நாட்டிலிருந்து ஆளுநரே வெளியேறு!'' -  ''Quit Tamilnadu''  என்று சொல்லக்கூடிய ஒரு மிகப்பெரிய இயக்கத்தை - மக்கள் இயக்கத்தைத் தொடங்கவேண்டும். காரணம், இந்திய அரசமைப்புச் சட்டத்தில்,  தெளிவாக  ''We the People''  என்றுதான் இருக்கிறது.

அதிகாரம் குடியரசுத் தலைவரிடமோ, பிரதமரிடமோ அல்லது முதலமைச்சரிடமோ இருந்தாலும், இறுதியான உண்மையான அதிகாரம் மக்களிடத்தில்தான் இருக்கிறது என்பதற்காக, ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கட்ட திராவிடர் கழகம் திட்டமிட்டு இருக்கிறது. எல்லோரையும் இணைத்து ஆலோசனை செய்து, ஒரு முடிவிற்கு வந்த பிறகு, இந்த இயக்கத்தை நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய அளவிற்கு அறவழியில் நடத்தவிருக்கிறோம்..

ஒருங்கிணைக்கும் பணியை திராவிடர் கழகம் மட்டும்தான் செய்கிறதா?

செய்தியாளர்:  ''Quit Tamilnadu''என்ற ஓர் இயக்கத்தைத் திராவிடர் கழகம் ஒருங்கிணைக்கும் என்று சொல்கிறீர்களே, அதை நீங்கள் மட்டும்தான் செய்யவிருக்கிறீர்களா?

தமிழர் தலைவர்: திராவிடர் கழகத்திற்கு ஒரு தனித்தன்மை உண்டு. தேர்தலில் நிற்காத அமைப்பு திராவிடர் கழகம்.

மதச்சார்பற்ற கூட்டணியைப் பொறுத்தவரையில், மற்றவர்களையெல்லாம் ஒருங்கிணைக்கக் கூடிய பணியை நாங்கள் செய்கிறோம்.

ஏனென்றால், எத்தனை இடங்கள் எங்களுக்கு என்று நாங்கள் கேட்கக்கூடியவர்கள் அல்ல; எல்லா இடங்களும் எங்கள் இடம் என்று கருதக்கூடியவர்கள் நாங்கள்.

எல்லோரையும் இணைக்கும் பணியை நாங்கள் மகிழ்ச்சியோடு செய்கிறோம்!

ஆகவே, எல்லோரையும் இணைக்கும் பணியை மகிழ்ச்சியோடு செய்கிறோம். அரசு, அவர்களுடைய பணியை முறைப்படி செய்வார்கள்.

சட்டப் போராட்டத்தை தொடங்கி நடத்தவேண்டும். உச்சநீதிமன்றத்தில் தெளிவாக பல விஷயங்கள்பற்றி ஜனநாயகத்தைக் காப்பாற்றக்கூடிய பல தீர்ப்புகள்மூலம், வெள்ளிக்கீற்றைக் காட்டுகிறது.

அண்மையில்கூட ஒன்றிய அரசு, அமலாக்கத் துறையில் ஒருவருக்கு பதவி நீடிப்புக் கொடுத்தது; அந்த பதவி நீடிப்பு செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தீர்ப்பிற்குப் பிறகு, உள்துறை அமைச்சர் என்ன சொல்கிறார் என்றால், ''எங்களுக்கு நபர் முக்கியமல்ல'' என்று சொல்கிறார்.

நபர் முக்கியமல்ல என்றால், இத்தனை முறை ஏன் அவருக்குப் பதவி நீடிப்பு செய்யவேண்டும்?

அதேபோன்று தேர்தல் ஆணைய உறுப்பினர் பிரச்சினையிலும் இப்படி ஒரு வழக்கு வந்து, 7 முறை பதவி நீடிப்புக் கொடுத்தனர்; 8 ஆவது முறையாக பதவி நீடிப்பு கொடுப்பது என்ன நியாயம்? என்று கேட்டு, அந்த வழக்கும் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று, சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு வந்தது.

ஆகவே, எது எதுவெல்லாம் சுதந்திரமான அமைப்பு களாக இருக்கவேண்டுமோ, அந்த சுதந்திரங்கள் பறிக்கப்படுகின்றன ஒன்றிய அரசால். ஆகவே, சட்டப் போராட்டம் என்பதும் இன்றியமையாததாகும்.

திராவிடர் கழக இளைஞரணி சார்பில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம்!

அதற்கடுத்து மிக முக்கியமான ஒரு பிரச்சினை வருகிற 14 ஆம் தேதியன்று திராவிடர் கழக இளை ஞரணி மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்த விருக்கிறது.

எதற்காக இந்தப் போராட்டம் என்றால், தமிழ்நாட் டில் இருக்கின்ற வங்கிகள் - பொதுத் துறை நிறுவனங் களாகும் - தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளில், தமிழ் மொழியே தெரியாமல் இருக்கக்கூடிய வேற்று மாநிலத் தவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டு வங்கிகளில் பணியாற்றுவோருக்கு தமிழ் மொழி தெரிந்திருந்தால், நடைமுறைக்கு வசதி யாக இருக்கும். கிராமப் பகுதிகளில் விவசாயிகள் எல்லாம் வங்கிக் கணக்குகளைத் தொடங்கவேண்டும் என்று சொல்லிவிட்டு, தமிழே தெரியாதவர்களை வங்கி யில் அதிகாரிகளாக நியமிக்கிறார்கள்.

தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கக் கூடிய ஒன்று!

போட்டித் தேர்வுகள் நடத்தும்பொழுது, தமிழ் மொழி தெரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை என்று விதிகளில் குறிப்பிட்டு இருப்பது, தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கக் கூடிய ஒன்றாகும்.

ஆகவேதான், வருகிற 14 ஆம் தேதியன்று, திராவிடர் கழக இளைஞரணி சார்பில், தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருக்கின்றோம்.

இவ்வார்ப்பாட்டத்தில் ஒத்தக் கருத்துள்ளவர்களும் கலந்துகொள்ளவேண்டும். ஏனென்றால், இது ஒரு கட்சி சார்பான பிரச்சினையல்ல; இது தமிழ்நாட்டு இளைஞர்களுடைய உரிமைப் பிரச்சினையாகும். ஆகவே, இவ்வார்ப்பாட்டத்தில் எல்லோரும் கலந்து கொள்ளவேண்டிய வாய்ப்பைப் பெறவேண்டும்.

ஆளுநர்களைச் சந்தித்து புகார் மனு கொடுப்பது என்பது வழமையான ஒன்றுதான்!

செய்தியாளர்: ''முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவ ராக இருந்த பொழுது, அமைச்சர் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்று ஆளுநரிடம் மனு கொடுத்தார். ஆனால், இப்பொழுது செந்தில்பாலாஜி பிரச்சினையில், ஆளுநருக்கு அந்த அதிகாரம் இல்லை என்று சொல்கிறார்?'' என்று கூறப்படுகிறதே?

தமிழர் தலைவர்: அப்பொழுதிருந்த ஆளுநர்கள் முறையாக நடந்தார்கள். மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல, ஜெயலலிதாவாக இருந்தாலும், கலைஞராக இருந் தாலும் ஆளுநர்களை சந்தித்துப் புகார் மனு கொடுத் திருக்கிறார்கள்.

அவர்கள், அவர்களுடைய வரம்புக்குட்பட்டு நடந்தார்கள்.

ஆளுநர் அலுவலகத்திற்கே மரியாதையைக் குறைத்து, அப்பதவிக்கே இழுக்கைத் தேடித் தருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

ஆனால், இப்பொழுதிருக்கும் ஆளுநர், ஊழலை ஒழிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, அ.தி.மு.க. மேனாள் அமைச்சர்களாக இருந்தவர்கள்மீது - ஊழல் செய்தவர்கள்மீது வழக்கு தொடுப்பதற்கு அனுமதி கேட்டு அனுப்பிய கோப்புகளை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார். 

அப்படி கிடப்பில் போட்டு வைத்தது மட்டுமல்ல, ''இப்படிப்பட்ட கோப்புகளே எங்களிடம் வரவில்லை'' என்றும் சொன்னார்கள்.

இதற்கு மறுப்புத் தெரிவித்த சட்ட அமைச்சர் ரகுபதி அவர்கள், கோப்புகள் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்களைக் காட்டியதிலிருந்தே, ஆளுநர் தன்னு டைய கடமையைத் துறந்தார் என்பதைவிட, பொய் சொல்வதில் அவர் வல்லவராக இருக்கிறார் என்பது - அந்த அலுவலகத்திற்கே மரியாதையைக் குறைத்து, ஆளுநர் பதவிக்கே இழுக்கைத் தேடித் தருவதாகவும் இருக்கிறது.

திராவிடர் கழகத்தின் கருத்து எல்லோரிடமும் பரவி வருகிறது!

செய்தியாளர்: தாய்க்கழகமான உங்கள் இயக்கத்தை நோக்கி இளைஞர்கள் வருகிறார்களோ இல்லையோ, ஆனால், உங்கள் கருத்து எல்லோரிடமும் பரவி வருகிறது. ''மாமன்னன்'' போன்ற திரைப்படங்களை எடுத்துக்கொண்டால், பெரியார், அம்பேத்கர் என்று பேசப்படுகிறது; இன்றைய இளைஞர்கள் எல்லாவித தொழில்நுட்பங்களைக் கையாளத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் எல்லாவற்றிலும் ஊடுருவி யிருக்கிறார்கள்; இப்படி இருக்கும்பொழுது, அந்தக் கருத்தை எப்படி எதிர்கொள்வீர்கள்? 

தமிழர் தலைவர்: கேள்வியும் நானே, பதிலே நானும் என்பதுபோல, உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது.

அரசியல் ரீதியாக ''ஆயாராம் - காயாராம்'' போன்று கட்சி மாறுவது, அணி மாறுவது, விலைக்கு வாங்குவது என்பது புதிதாக நடைபெறுவது அல்ல. 

இப்பொழுது ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., என்ன செய்கிறது என்றால், குறிப்பாக மோடியும், அமித் ஷாவும் மிக முக்கியமாகக் கையாள்கிற முறை என்ன வென்றால், எதிர்க்கட்சியினர் வெற்றி பெற்று வந்தாலும் பரவாயில்லை; அதற்குப் பிறகு அவர்களை நாம் விலைக்கு வாங்கிவிடலாம்; கட்சியை உடைக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் அவர்களுடைய எண்ணம் பலித்ததா, கடந்த இரண்டு ஆண்டுகளில்? தமிழ்நாட்டில் பொது ஒழுக்கம் இருக்கிறது. காரணம் என்னவென்றால், ஜெயலலிதா அம்மையார் இறந்த பிறகு, பழனிசாமி முதலமைச்சராக வந்தபொழுது, எதிர்க்கட்சித் தலை வராக இருந்த மு.க.ஸ்டாலினிடம், ''ஆட்சியைப் பிடிப்பதற்கு நீங்கள் முயற்சி செய்யலாமே?''  என்று சொன்னபொழுது, அதை அவர் விரும்பவில்லை.

''தேர்தலில் மக்கள் வாக்களித்து நாம் ஆட்சிக்கு வரவேண்டுமே தவிர, குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க முயல்வது முறையானதல்ல'' என்றார் அவர்.

பொது ஒழுக்கச் சிதைவு!

ஏனென்றால், தமிழ்நாட்டில் பொது ஒழுக்கச் சிதை வைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஓர் அரசியல் பண்பாடு திராவிட இயக்கத்தினால் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ஒரு காலத்தில் மாணிக்கவேலர் கட்சி மாறியபொழுது, ''மக்கள் துரோகி மாணிக்கவேலர்'' என்று சொல்லப்பட்டார்.

எங்கள் இயக்கத்தில் இளைஞர்கள் இருக்கிறார்களா? இல்லையா? என்கிற சந்தேகத்துடன் கேட்டீர்கள்; 14 ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தைப் பாருங்கள், உங்கள் சந்தேகத்திற்குப் பதில் கிடைக்கும்.

எங்கள் இயக்கம் என்பது பத்தியம் உள்ள இயக்கம்; நாட்டில் விஞ்ஞானிகள், இராணுவ வீரர்கள், காவல்துறை எப்படி குறைவாக உள்ளனரோ அது போலத்தான்.

காரியங்கள் செய்வது எண்ணிக்கையைப் பொருத்ததல்ல; உறுதியைப் பொருத்தது!

ஏனென்றால், எதை வேண்டுமானாலும் செய்து கொண்டு எங்கள் இயக்கத்தில் இருக்கலாம் என்று இருக்க முடியாது. கட்டுப்பாடு உள்ள இயக்கம் இது. கட்டுப்பாடு உள்ளவர்கள்தான் எங்கள் இயக்கத்தில் இருப்பார்கள்.

காரியங்கள் செய்வது எண்ணிக்கையைப் பொருத்த தல்ல; அவர்களுடைய உறுதியைப் பொருத்தது; அவர் களுடைய தெளிவைப் பொருத்தது; அவர் களுடைய துணிவைப் பொருத்தது.

ஆகவேதான், நீங்கள் நம்பிக்கையை இழப்பது போன்று, நான் நம்பிக்கையை இழக்கவில்லை. புதிய நம்பிக்கையை நாங்கள் பெறுகிறோம்; இளைஞர்களை, அழைக்கிறோம்; எங்கள் இயக்கத்தை நோக்கி ஏராள மான இளைஞர்கள் வருகிறார்கள்.

கொள்கைப் பத்தியத்தை அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள்!

எங்களுடைய இயக்கம் ஒன்றுதான், இளைஞர் களுக்குத் தருவதற்கு சிறைச்சாலை இருக்கிறதே தவிர, காட்டுவதற்கு சிறைச்சாலை இருக்கிறதே தவிர, வேறெதுவும் இல்லை; போவதற்கு சட்டப்பேரவை இருக்கிறது என்று சொல்கிற இயக்கமல்ல.  அப்படி இருந்தும் இந்த இயக்கத்தை நோக்கி இளைஞர்கள் வருகிறார்கள் என்று சொன்னால், இந்தக் கொள்கைப் பத்தியத்தை அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள் என்று அர்த்தம்.

ஆகவேதான், நம்பிக்கையோடு நாங்கள் எங்கள் லட்சியத்தை நோக்கி பயணிக்கிறோம். இன்னொன் றையும் நீங்கள் எங்கள்மீது நம்பிக்கை வைத்து சொல்லியிருக்கிறீர்கள்.

பெரியார் என்பது சமூக விஞ்ஞானம்!

பெரியார் உலக மயமாகிறார் - எல்லா இடங்களுக் கும் பெரியார் போகிறார் என்றால், பெரியார் என்கிற தத்துவம் அதுதான். பெரியார் என்பது சமூக விஞ்ஞானம்.

விஞ்ஞானத்தை யாராலும் தடுக்க முடியாது. செல்போன் வாங்குங்கள் என்று யாரும் விளம்பரப் படுத்துவதில்லை; தானாகவே அது எல்லோரையும் வாங்க வைக்கிறது.

பெரியார் என்பது சமூக விஞ்ஞானம் - சமூக விஞ்ஞானத்தைப் பரப்புகின்ற பணியைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கின்றோம்.

அதனுடைய ஒரு பகுதியாக, அவ்வப்பொழுது அரசியல் பணிகள், ஜனநாயகப் பாதுகாப்பு, மாநில உரிமைகளைப் பாதுகாக்கின்ற பணிகளை செய்து கொண்டிருக்கின்றோம்.

பிரதமர் மோடியை ஒரு கலக்குக் கலக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் பாட்னா கூட்டம்!

செய்தியாளர்: பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் நடைபெறுவதாக சொல்லியி ருக்கிறார்களே, அதுபற்றி தங்கள் கருத்து என்ன?

தமிழர் தலைவர்: எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. அந்தக் கூட்டமே பிரதமர் மோடியை ஒரு கலக்குக் கலக்கியதினால்தான்,  மத்தியப் பிரதேசத்திற்குச் சென்று தி.மு.க.வைப்பற்றி பேசுகிறார். ஊழல் செய்தவர்களை விடமாட்டோம் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

அதற்கு திக்விஜய்சிங் மிக அருமையாக பதில் சொல்லியிருக்கிறார், ''ஊழல் செய்தவர்கள் யாரையும் விட மாட்டோம் என்று கூச்சலிட்டார் பிரதமர் மோடி. அவர் சொன்னதுபோலவே, யாரையும் விடவில்லை, அனைவரையும் பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார்'' என்று சொன்னார்.

எதிர்க்கட்சித் தலைவர்களின் பாட்னா கூட்டமே, பிரதமர் மோடிக்கு ஒரு கலக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறது.

இப்பொழுது கருநாடக மாநிலம் பெங்களூருவில் இரண்டாவது கூட்டம் நடைபெறப் போகிறது என்றவுடன், அதை எப்படியாவது தடுக்கவேண்டும் என்கிற முறையில் ஈடுபடுகிறார்கள்.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பொது எதிரியை மய்யப்படுத்தக் கூடிய ஒன்று!

மேகதாது பிரச்சினையைக் குறிப்பிட்டு, பெங்களூரு வில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் முக..ஸ்டாலின் பங்கேற்கலாமா? என்று கேள்வியெழுப்புகிறார்கள்.

நீண்ட நாள்களுக்கு முன்பாக நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் அவர்கள் சொல்லியிருக்கிறார்,

''உரிமைக்குக் குரல் கொடுப்போம் -

உறவுக்குக் கைகொடுப்போம்!''

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பொது எதிரியை மய்யப் படுத்தக் கூடிய ஒன்று - பொது எதிரி  யாரென்றால், ஜனநாயகத்தை அழிக்கின்ற, எதேச்சதிகாரத்தை செய்யக்கூடிய பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.

அந்தப் பொது எதிரியை மய்யப்படுத்தித்தான், இப்பொழுது அத்தனை எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒன்று சேருகிறார்கள். இது தீயணைப்புப் பணியை செய்வது போன்றதாகும்.

மக்கள் பா.ஜ.க.வை வீட்டுக்கு அனுப்பும் 

முடிவோடு இருக்கிறார்கள்!

இரண்டாவது கட்டத்தை நோக்கி வரும்பொழுது, பொது எதிரி யார்? அதற்கு என்ன நிலை எடுக்க வேண்டும்? என்கிற அளவிற்கு முடிவு காண கூடு கிறார்கள். நிறைய திட்டங்கள் அந்தக் கூட்டத்தில்  முடிவு செய்யப்படும். 

முதல் கூட்டத்தைப் பார்த்தே அவர்கள் அச்சப் பட்டுள்ளநிலையில்,இரண்டாவது கூட்டம்நடை பெறாமல் செய்வதற்கு, அந்தக் கட்சிகளை உடைக்க வேண்டும்; பலகீனத்தை உண்டுபண்ணி, அதன்மூலமாக ஒருவிதமான சங்கடங்களை உருவாக்கவேண்டும்; நம்பிக்கையின்மையை தோற்றுவிக்கவேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டி மக்கள் பா.ஜ.க.வை வீட்டுக்கு அனுப்பும் மு டிவோடு இருக்கிறார்கள்.

இதேபோன்றுதான், கருநாடக மாநிலத்தில் நடை பெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிகாரத்தின் உச்சத் திற்குப் போனார்கள்; அதற்குத்தான் மக்கள் கடும் விலையைக் கொடுத்தார்கள். மக்கள் அதிகாரம் என்பதுதான் இறுதியானது.

எனவே, மக்கள் வெளிப்படையாக பேசிக் கொண் டிருப்பவர்கள் அல்ல; அமைதியாக இருப்பார்கள்; அமைதிப் புரட்சியை செய்யவேண்டிய நேரத்தில் செய்வார்கள். அதற்குரிய வேகமான திட்டங்கள்தான் இப்பொழுது உருவாகி வருகின்றன.

நம்முடைய 'திராவிட மாடல்' ஆட்சியின் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திராவிட மாடலின் கருத்தை வெளிப்படையாக சொன்ன நேரத்தில், அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

''யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட -  

யார் வரக்கூடாது என்பது மிக முக்கியம்!''

''எது நம்மைப் பிரிக்கிறதோ, அதை அலட்சியப் படுத்துவோம்''  ''எது நம்மை இணைக்கிறதோ, அதை அகலப்படுத்துவோம்'' என்கிற தந்தை பெரியாரின் தத்துவத்தை சொன்னதோடு, மிக அருமையான கருத்தை முன்வைத்திருக்கிறார்.

''யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட -  யார் வரக்கூடாது என்பது மிக முக்கியம்'' என்று சொல்லியிருக்கிறார்.

அந்த அடிப்படையில் செல்கிறபொழுது, உரிய பலனை நிச்சயமாகத் தரும். 

5 ஆண்டுகளுக்குப் பிறகு கேளுங்கள்!

செய்தியாளர்: தி.மு.க. கொடுத்த தேர்தல் வாக் குறுதியில், அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று உள்ளது. ஆனால், இதுவரையில் அதை நடைமுறைக்குக் கொண்டு வரவில்லையே?

தமிழர் தலைவர்: தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இன்னும் 3 ஆண்டுகள் இருக்கின்றன. 5 ஆண்டுகள் வரை தி.மு.க. கொடுத்த தேர்தல் வாக்குறுதிக்கு ஆயுள் உண்டு. அப்படி செய்யவில்லை என்றால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கேள்வியை கேளுங்கள்.

ஏனென்றால், நிதிநிலை இன்னும் சரியாகவில்லை என்று முதலமைச்சர் வெளிப்படையாக சொல்லி யிருக்கிறார். இருக்கின்ற நிதியிலேயே, கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். 

ஆகவே, சட்டியில் இருப்பதை அகலப்படுத்திக் கொண்டு பிறகு அகப்பையில் எடுக்கக்கூடிய வாய்ப் பைப் பெறுவார்.

காவிரி தண்ணீரைப் பெற்றுத் தருவதற்கு காவிரி நதிநீர் ஆணையம் இருக்கிறது!

செய்தியாளர்: கருநாடக மாநிலத்தில் ஆளுகின்ற கட்சி தி.மு.க.வின் தோழமைக் கட்சிதான். சட்டப்படி கொடுக்கவேண்டிய காவிரி தண்ணீரை கொடுக்க மறுக்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ தோழமை உணர்வோடு பேசி இப்பிரச்சினையை தீர்க்கலாமே?

தமிழர் தலைவர்: இப்போது போய் பேசினால் என்னாகும்? என்றால், அதை திசை திருப்பி விடு வார்கள். தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் மாண்பு மிகு துரைமுருகன் அவர்கள் டில்லிக்குச் சென்று, ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்துப் பேசியது மட்டுமல்லாமல், அடுத்த கட்டமாக, சகோதரர் களிடையே சண்டை வராது என்று சொல்லியிருக்கிறார்.

ஆகவேதான், எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்று வரும்பொழுது, இப்பொழுது முன்னுரிமை கொடுக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், வரு கின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்தான்.

ஆகவே, அதற்குரிய முன்னுரிமையோடு, நம்மு டைய உறவு, உரிமை இந்த இரண்டையும் இணைத்துத் தெளிவாக நாங்கள் இருப்போம் என்று உறுதியாக முதலமைச்சர் முக..ஸ்டாலின்  சொல்லியிருக்கிறார்.

இப்பொழுது தவறான ஒரு கருத்து பரப்பப்படுகிறது. தண்ணீர் கொடுக்கமாட்டோம் என்று சொல்லியுள்ளாரே, கருநாடக துணை முதலமைச்சர் சிவகுமார் என்று சொல்கிறார்கள்.

தண்ணீர் கொடுப்பதற்கு அவர் யார்? காவிரி நதிநீர் ஆணையம் வருவதற்கு முன், தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்று அவர்கள் சொன்னதில் அர்த்தம் இருக்கும்.

ஆனால், இப்பொழுது தண்ணீரைப் பெற்றுக் கொடுப்பதற்கு காவிரி நதிநீர் ஆணையம் இருக் கிறது. அந்த ஆணையம்தான் அந்தப் பணியை செய்யவேண்டும். அதில் ஏதாவது குறைபாடு இருந்தால், உச்சநீதிமன்றத்தை நாடலாம்.

தனிப்பட்ட அமைச்சருக்கோ, துணை முதலமைச்சருக்கோ, முதலமைச்சருக்கோ அந்த உரிமை இல்லை.

தமிழ்நாடு அரசே சட்டப் பிரச்சினையை மேற்கொள்ளும்பொழுது நாங்கள் தனியே மேற்கொள்வது சரியாகாது!

செய்தியாளர்: திராவிடர் கழகத்தின் சார்பாக, தமிழ்நாடு ஆளுநரை வெளியேற்ற சட்டப் பிரச் சினையை மேற்கொள்வோம் என்று சொல்லியிருக் கிறீர்களே?

தமிழர் தலைவர்: உங்கள் தகவலுக்காக சொல்கி றோம். நாங்கள் எல்லோரும் தயாராக இருந்த சூழலில், தமிழ்நாடு அரசே அப்படியொரு திட்டத்தில் இருக்கிறது என்று செய்திகள் வெளிவந்தன.

தமிழ்நாடு அரசே தயாராக இருக்கும்பொழுது, தனியே வழக்கை நாம் தொடர்ந்து, அதில் ஒரு சிக்கலை உண்டாக்கக்கூடாது.

ஏனென்றால், ஆளுநரால், நேரிடையாக பாதிக்கப் பட்டவர்கள் அவர்கள்தான். 13 மசோதாக்கள் கிடப்பில் இருக்கின்றன.

திராவிடர் கழகம் மட்டுமல்ல, எல்லா கட்சிகளும் தயாராக இருக்கின்றன. அதை அரசு செய்யக்கூடிய அளவில் இருப்பதினால்தான், நாங்கள் அதை செய்யவில்லை.

உச்சநீதிமன்றத்தினுடைய முன்னுதாரணங்கள் - சில வழக்குகளின் தீர்ப்புகளும்கூட இதற்கு சாதகமாகத்தான் இருக்கின்றன. சட்டத்திலும் இடம் இருக்கிறது.

சட்டத்தில், ஆளுநரின் வேலை அம்சங்களைப் பற்றித்தான் நீதிமன்றத்திற்குப் போக முடியாதே தவிர, ஆளுநர், தன்னுடைய ஆளுமையின்கீழ் நடத்துகின்ற தவறுகளைச் சுட்டிக்காட்டி, அதனால், நம்முடைய உரிமைகள் பாதிக்கப்படுகிறது என்று சொல்லுகின்ற நேரத்தில், அந்த உரிமையை வலியுறுத்திட, அரசமைப் புச் சட்டப்படி, ரிட் மனு போடுவதற்கு நமக்கு அதிகாரம் இருக்கிறது.

இதில் அரசாங்கமே முன்வரக்கூடிய கட்டாயம் இருப்பதினால், நாங்கள் தனித்தனியாக அந்த முயற்சி களை செய்தால், அது பெரிய பலன் தரக்கூடியது என்றாலும், அதன்மூலமாக நமக்கு விளம்பரம் என்கிற அளவிற்கு வந்துவிடும்.

''கத்திரிக்காய் முற்றினால் கடைவீதிக்கு வரும்'' - தீர்ப்பு வரும்!

செய்தியாளர்: செந்தில்பாலாஜி வழக்கு குறித்து உங்கள் கருத்து?

தமிழர் தலைவர்:  அமலாக்கத் துறையைப் பொறுத்தவரையில், இன்றைக்குக்கூட தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்; கபில்சிபல்  வாதம் செய்திருக் கிறார்.

இரண்டொரு நாளில் முடிவு வரும்; பிறகு உச்சநீதிமன்றத்திற்குச் செல்லும். அமலாக்கத் துறையைப் பொறுத்தவரையில், பல இடங்களில் அவர்களுக்குப் பின்னடைவுதான் ஏற்பட்டு இருக்கிறது.

அமலாக்கத் துறை அதிகாரி பதவி நீடிப்புப் பிரச்சினையில் மட்டுமல்ல; அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கைப் பொறுத்தவரையில், அவர்கள் என்னென்ன கோரிக்கைகளை வைத்தார்கள்? உச்சநீதிமன்றத்திற்குப் போனார்கள்; ஆனால், அங்கே உயர்நீதிமன்றத்திற்கே போங்கள் என்று அனுப்பி வைத்தார்கள்.

ஆக, உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட கருத்தை சொல்லியிருப்பதே, அமலாக்கத் துறைக்கு ஏற்பட்ட ஒரு பின்னடைவுதான்.

அதோடு, இன்றைக்கும் தெளிவாக மூத்த வழக் குரைஞர் கபில்சிபல், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் வாதங்களை எடுத்து வைத்துள்ளனர்.

அமலாக்கத் துறை சார்பாக, துஷார் மேத்தா வாதாடி யுள்ளார்.

வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், அதுபற்றி கருத்து சொல்வது முறையாகாது. 

கொஞ்ச நாள் பொறுத்திருந்தால், ''கத்திரிக்காய் முற்றினால் கடைவீதிக்கு வரும்'' - தீர்ப்பு வரும்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  செய்தி யாளர்களிடம் கூறினார்

No comments:

Post a Comment