ஒன்றிய அரசின் நீதி, நியாயம் இதுதான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 18, 2023

ஒன்றிய அரசின் நீதி, நியாயம் இதுதான்!

குட்கா வழக்கு: மேனாள் அமைச்சர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு இன்னும் அனுமதி தரவில்லை

சென்னை,ஜூலை18- தடை செய்யப் பட்ட குட்காவை தமிழ்நாட்டில் விற்க முறைகேடாக அனுமதி அளித்த குற்றச் சாட்டில் பதிவான வழக்கு விசார ணைக்கு அனுமதி மற்றும் குற்றப் பத்திரிகை தாக்கல் தொடர்பாக அனு மதி கடிதம் கிடைக்கவில்லை என சிபிஅய் 11ஆவது முறையாக சென்னை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் குட்கா பொருட் களின் விற்பனை, கிடங்குகளில் வைப் பது உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கபட்டது. ஆனால் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்படுவ தாகவும், இதனால் வரி ஏய்ப்பு நடை பெறுவதாக கிடைத்தத் தகவலின் படி கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விநியோகம் செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக் கப்பட்டதாக ஒரு டைரியையும் பறி முதல் செய்தனர். 

இந்த டைரியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய அப்போதைய தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் ஒன்றிய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்ட தாக தெரிகிறது.

அந்த சர்ச்சையில் அப்போதைய தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மேனாள் வணிக வரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா, மேனாள் தமிழ்நாடு காவல்துறை இயக் குநர் டி.கே.ராஜேந்திரன், சென்னை மேனாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ், அரசு அதிகாரிகள் பழனி, செந் தில் வேலவன் உள்ளிட்ட ஒன்றிய, மாநில அரசு உயரதிகாரிகள், காவல் துறை உயரதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டது.

இந்நிலையில் இந்த குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப் பட்ட  வழக்கை விசாரித்த  உயர்நீதி மன்றம் வழக்கு விசாரணையை சிபிஅய்-க்கு மாற்றி உத்தரவிட்டது. பின்னர் வழக்கு பதிவு செய்த சிபிஅய் கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், ஒன்றிய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேரை கைது செய்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் டில்லி சிபிஅய் காவலர்கள் சென்னை சிபிஅய் நீதிமன்றத்தில் கடந்த 2021 ஆண்டு குற் றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 

அதில் கைது செய்யப்பட்டுள்ள மாதவ ராவ் உள்ளிட்ட 6  பெயர்கள் மட்டுமே இடம் பெற்றதாக சிபிஅய் தரப்பில் தெரிவிக்கபட்டது.

மேனாள் அமைச்சர்கள் மற்றும் காவல்துறை இயக்குநர் உள்ளிட்ட ஒன்றிய, மாநில அரசு உயர் அதிகாரிகள் என வேறு யாருடைய பெயர்களும் அந்த குற்றப்பத்திரிகையில் இடம் பெறவில்லை.

இதனிடையே மேனாள் அமைச்சர் கள் பி.வி.ரமணா, சி.விஜய பாஸ்கர், மேனாள் காவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன், சென்னை மேனாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மாநில அரசு அதிகரிகள் உள்ளிட்ட 11 பேர்க்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்செய்ய தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு (2022) ஜூலை 19ஆம் தேதி அனுமதி வழங்கியது. 

இதனையடுத்து 11 பேருக்கு எதிராக டில்லி சிபிஅய் தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை கடந்த நவம்பர் மாதம் சென்னை சிபிஅய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 

அந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருப்பதால், அதனை திருத்தம் செய்து வழக்கில் உள்ள சாட்சிகள் குறித்த விபரங்கள் மற்றும் அவர்களின் வாக்கு மூலம் குறித்த விபரங்களையும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதி ரான ஒன்றிய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணை அனுமதி தொடர்பான விபரங்களை இணைத் தும், கூடுதல் குற்றப் பத்திரிகையில் உள்ள தவறுகளை திருத்தம் செய்து முழுமையாக தாக்கல் செய்ய விசா ரணை அதிகாரிக்கு உத்தரவிட்ட சிபிஅய் நீதிமன்றம், கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஅய்க்கு திரும்ப அளித்தது.

இந்நிலையில் இந்த வழக்கு  நேற்று (17.7.2023) சென்னை சிபிஅய் நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் விசார ணைக்கு வந்தது.  

அப்போது நீதிபதி வழக்கின் அனுமதி மற்றும் குற்றப் பத்திரிகை தயாராகிவிட்டதா என சிபிஅய் காவல்துறையிடம் கேள்வி எழுப் பினார்.

சிபிஅய் தரப்பில், இன்னும் ஒன்றிய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

ஒன்றிய அரசின் அனுமதி கிடைக்க வில்லை என்று காரணத்தை கூறி கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் இன்றைய விசாரணை வரை 11 முறை (டிசம்பர் 15, ஜனவரி 10, பிப்ரவரி 6,17, மார்ச் 20, ஏப்ரல் 18,25 மே 11 ஜூன் 3, 26) வழக்கு விசாரணையை சிபிஅய் தள்ளிவைத்துள்ளது.

No comments:

Post a Comment