மணிப்பூர் நிகழ்வுகளுக்குப் பிறகும் நாட்டை ஆள பி.ஜே.பி.,க்குத் தகுதி உண்டா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 21, 2023

மணிப்பூர் நிகழ்வுகளுக்குப் பிறகும் நாட்டை ஆள பி.ஜே.பி.,க்குத் தகுதி உண்டா?

நாகரிகம் - ஜனநாயகம்- மதச்சார்பின்மை - சமூகநீதி பேணும் மக்களே, வாக்குச் சீட்டால் பாடம் கற்பிப்பீர்!

மணிப்பூரில் கடந்த 80 நாள்களாக மக்கள் வேட்டை யாடப்பட்டும் ஒன்றிய அரசோ, மாநில அரசோ பாராமுகம்  மட்டுமல்லாமல், துணைபோகும் நிலையைக் கண்ட பிறகும், நாகரிகம், ஜனநாயகம், மனித உரிமைகளில் நாட்டம் கொண்ட மக்கள் இந்த ஆட்சியை அனுமதிக்கலாமா? நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் வாக்குச் சீட்டால் பாடம் கற்பிப்பீர் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

இந்தியாவில்தான் இருக்கிறோமா?

நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா அல்லது காட்டுமிராண்டி விலங்குகள் உலவும் காட்டில்தான் வாழ்கிறோமா என்ற வினாவை இந்திய மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் நடக்கும் நிகழ்வுகள் நிர்வாண மாகத் தெரிவிக்கின்றன.

கடந்த 80 நாள்களாக அம்மாநிலத்தில் சிறுபான்மை பழங்குடி மக்கள் குறி வைத்துத் தாக்கப்படுகின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பி.ஜே.பி. ஆட்சி இதற்குத் தூண்டுகோலாகவும், துணை போவதாகவும் இருக்கிறது என்று பாதிக்கப்பட்ட மக்களும், அனைத்துக் கட்சியினரும் ஒரே குரலில் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த ஒன்பது ஆண்டுகாலமாக சிறுபான்மை சமூக மக்களும், எஸ்.சி., எஸ்.டி.,  என்று கூறப்படும் ஒடுக்கப் பட்ட மக்களும் படும் அவதிக்கும், உயிர்ப் பலிக்கும் அளவேயில்லை.

ஒடுக்கப்பட்டோர் படுகொலைகள்!

பசுவதைத் தடுப்பு என்ற பெயரால் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் கொல்லப்பட்டது கொஞ்சமா நஞ்சமா? மீசை வைத்திருந்தார், குதிரைமேல் வந்தார், திரு விழாவை வேடிக்கை பார்க்க வந்தார் என்றெல்லாம் கூடக் குற்றஞ்சாட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் அடித்துக் கொல்லப்படவில்லையா? இதன் பின்னணியில் சங் பரிவார்கள் இல்லையா?

இவற்றிற்கெல்லாம் உச்சக்கட்ட சாட்சியாக மணிப்பூர் கொழுந்துவிட்டு எரிகிறது.

சமூகநீதியைக் கவனிக்கவேண்டாமா?

மைதேயி சமூகத்தவர்களை பழங்குடியினர் பட்டிய லில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து குகி பழங்குடி மக்கள் மே 3 ஆம் தேதி பேரணி நடத்தினார்கள். இதன் பின்னணியில் உள்ள சமூகநீதியை நியாயக் கண்கொண்டு பார்க்க வேண்டாமா? 

வந்தேறிகள் என்று வெறியைக் கிளப்புவதா?

பெரும்பான்மை மக்களாக இருக்கக்கூடிய மைதேயி சமூகத்தைச் சார்ந்தவர்கள் சிறுபான்மையாக இருக்கக் கூடிய பழங்குடியினரை வீடு புகுந்து தாக்கியும், படுகொலை செய்தும், வீடுகளை இடித்தும், தீ வைத்தும் கோர தாண்டவம் ஆடியுள்ளனர். வந்தேறிகள் என்று வெறியைத் தூண்டுகிறார்கள்.

ஒன்றியத்திலும், மாநிலத்திலும் இரட்டை என்ஜின் ஆட்சியின் (பிரதமர் திருவாய் மலர்ந்த பி.ஜே.பி. ஆட்சி) யோக்கியதை இதுதானா?

80 நாள்கள் இந்தக் கொடூரம் நடந்தும், பிரதமராக இருக்கக் கூடியவர் தலையிடவில்லை - திருவாய் மலர வில்லை. இராணுவத்தை அனுப்பி கட்டுக்குள் கொண்டுவரவில்லை என்றால், நாகரிகமான நாட்டில் தான் வாழ்கிறோமா? நாகரிகமான ஆட்சிதான் நம்மை ஆளுகிறதா என்ற கேள்விதான் எழுகிறது.

மே 4 ஆம் தேதி நடந்த கொடுமை குறித்து காவல் துறை நடவடிக்கை எடுக்காததால், மே 14 ஆம் தேதி ஒன்றிய அரசுக்கும், தேசிய மகளிர் உரிமை ஆணையத் திற்கும் புகார் அளிக்கப்பட்டும், முதல் 15 நாள்கள் காவல் நிலையங்களில், முதல் தகவல் அறிக் கைகூட (எஃப்.அய்.ஆர்.) பதிவு செய்யப்படவில்லை என்பது எத்தகைய கொடூரம்! நிர்வாகச் சீர்கேடு!!

மணிப்பூர் கலவரம் உலக அரங்கில் இந்தியாவைத் தலைக்குனிய செய்துவிட்டது.

நாட்டையே உலுக்கிய வீடியோ!

எந்த அளவுக்குப் போயிருக்கிறது என்பதற்கு 19.7.2023 அன்று வெளிவந்த வீடியோ காட்சி நாட்டையே உலுக்கிவிட்டது.

மணிப்பூரில் வெறிபிடித்த ஒரு கும்பலால் இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிகழ்வு அது. பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் காலிகளிடம் எங்களைப் பிடித்துக் கொடுத்தவர்கள் காவல்துறையினர்தான் என்று கண்ணீரும், கம்பலையு மாகக் கூறியிருப்பது நம் உயிர் ஓட்டத்தையே உறைய வைக்கிறது. உச்சநீதிமன்றமும் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் விவாதிக்கவேண்டாமா?

நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதம் நடத்தவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தால், அதற்கு அனுமதி மறுப்பாம் - நாடாளுமன்றம் ஒத்தி வைப்பாம்! இது என்ன ஜனநாயகம்?

வாக்காளர்களே உங்கள் கடமை என்ன?

நெஞ்சம் பொறுப்பதில்லையே - இனியும் ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சி தொடர - மீண்டும் அதிகாரத்தில் அமர கிஞ்சிற்றும் உரிமை இல்லை - தகுதியில்லை.

நாகரிகமும், மனித உரிமையும், ஜனநாயகமும், மதச்சார்பின்மையும், சமூகநீதியும் உயிர்ப் பிழைக்க ‘‘இந்திய'' மக்களே ஒரே குரலில் எழுவீர்! வாக்குச் சீட்டால் பாசிசத்திற்கு மரணவோலை எழுதுவீர்! எழுதுவீர்!!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

21.7.2023


No comments:

Post a Comment