அமெரிக்க மண்ணில் தமிழ் உணர்வு
இமையம்
எழுத்தாளர்;
‘பெத்தவன்' உள்ளிட்ட
நாவல்களின் ஆசிரியர்.
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையான ‘ஃபெட்னா’வின் (திமீஜிழிகி) 36ஆவது ஆண்டு விழா, கலிஃபோர்னியா மாநிலம் சாக்ரமன்டோ நகரில் ஜூன் 30, ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அமெரிக்காவில் 70-க்கும் அதிகமான தமிழ்ச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் கூட்டமைப்பான ஃபெட்னா, ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு மாநிலத் தலைநகரில் விழாவைக் கொண்டாடிவருகிறது.
வியக்கவைத்த தமிழர்கள்
சமீபத்தில் நடந்த மூன்று நாள் விழாவில், அய்ந்து வெவ்வேறு விதமான நிகழ்வுகளில் பங்கேற்றுப் பேசுவதற்கான வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது. பொது அரங்கம், கலை அரங்கம், பட்டிமன்றம், நடனம், கலை நிகழ்ச்சிகள், இசை, தொழில் முனைவோர் மாநாடு என்று ஒரே நேரத்தில் பல அரங்குகளில் பல நிகழ்வுகள் நடைபெற்றன. மூன்று நாள் விழாவில் பார்வையாளர்கள், பங்கேற்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், தன்னார்வலர்கள் என்று பெரும் கூட்டம். நிகழ்ச்சிகள் நேர்த்தி யாகவும் சிறப்பாகவும் ஒருங்கிணைக்கப்பட்டன. அமெரிக்கத் தமிழர்களின் கூட்டுழைப்பு அபாரமானது. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவர், பால சுவாமிநாதன், ஜான் பிரிட்டோ, அசோகன் போன்றவர்களோடு சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கும் பாண்டியன், சுந்தர பாண்டியன், நியூ ஜெர்ஸி பாலா, இளமாறன், கோசல், சிகாகோ சரவண குமார், மருத்துவர் சோம.இளங்கோவன், நியூ யார்க் கதிர்வேல் குமாரராஜா, டெக்ஸ்சாஸ் பாண்டி போன்ற பல புதிய நண்பர்களைப் பெற முடிந்தது.
விழாவில் என்னை மிகவும் வியப்படையவைத்த விஷயம், பல மாநிலங்களிலிருந்து தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்ததுதான். அமெரிக்கத் தமிழர்கள் ஃபெட்னா விழாவுக்குக் குடும்பத்தோடு வருவது இயல்பானது என்று பலரும் சொன்னார்கள். அமெரிக்காவில் தெலுங்கர்களும் குஜராத்திகளும் கூட்டம் நடத்து கிறார்கள். எனினும், அவர்களின் கூடுகை என்பது பெரும்பாலும் வியாபாரம், பொருளாதாரம் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. ஆனால், தமிழர்கள் ஃபெட்னா விழாவில் மொழியின் பெருமையைப் பேசுவதற்காகக்கூடுகிறார்கள். பொதுவாகவே, தமிழர்களுக்குமொழி மீதான பற்றும், பெருமிதமும் எப்போதும் இருந்துவந்திருக்கிறது. அந்த உணர்வை அமெரிக்கத் தமிழர்களிடம் அதிகமாகக் காண முடிந்தது. “விமானத்தை விட்டு அமெரிக்காவில் இறங்கியதும் தமிழ்நாட்டின் மீதும் தமிழ் மொழியின் மீதும் தானாகவே பற்று வந்துவிடுகிறது" என்று பலரும் சொன்னார்கள்.
விழாவுக்கு வந்திருந்த ஒவ்வொருவருடைய மனதிலும் பேச்சிலும் செயலிலும் தமிழ் மொழியை, அதன் இலக்கியப் பெருமையை, பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாப்பது, அடுத்த தலை முறையினருக்குக் கடத்துவது மட்டுமே லட்சியம் என்பது தெளிவாகவே வெளிப்பட்டது.
பெரியார் பன்னாட்டு அமைப்பினர்
ஃபெட்னா விழாவில் மட்டுமல்ல, சிகாகோ தமிழ்ச் சங்க, நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்க, திணை அமெரிக்கா, வாசிங்டன் டி.சி. தமிழ்ச் சங்க நிர்வாகிகள், பெரியார் பன்னாட்டு அமைப்பினர், நியூ யார்க் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் என்று எல்லாருமே அன்பால் நிறைத்தனர். எல்லாருடைய நோக்கமும் தமிழை, அதன் பெருமையைப் பேசுவதாக மட்டுமே இருந்தது. தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் ஒரு தமிழரை வரவேற்பதில், உபசரிப்பதில், கொண்டாடுவதில் பலரிடம் போட்டியைக் காண முடிந்தது. எனக்குக் கிடைத்த அன்பு, வரவேற்பு, மதிப்பு என்பது எனக்கானது அல்ல, தமிழ் மொழிக்கானது, அதன் இலக்கியச் செழுமைக்கானது. தமிழன் என்ற அடையாளத்துக்கானது.
ஃபெட்னா விழாவிலும் சரி, சிகாகோ, நியூ ஜெர்ஸி, வாசிங்டன் டி.சி., நியூ யார்க்கில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்புகளிலும் சரி, நான் கண்ட உண்மை: தமிழர்கள் தமிழ் மொழியைப் பெரிய 'பொக்கிஷ'மாகக் கொண்டாடுகிறார்கள். உலகில் வேறு எந்த மொழிக்காரர்களிடமும் இந்த மாதிரியான உணர்வு மேலோங்கி இருக்கிறதா என்று தெரியவில்லை. தமிழ்ச்செல்வம், தமிழ்ச்செல்வன், தமிழ்ச்செல்வி என்று பெயர் வைத்துக்கொள்கிற மரபு வேறு இனத்தவரிடம் இருக்குமா என்பதும் சந்தேகமே. சான்பிரான்சிஸ்கோவிலிருந்து சாக்ரமன்டோவுக்கு என்னை அழைத்துச் சென்றவரின் காரின் பின்னால் 'தமிழன்டா' என்று எழுதப்பட்டிருந்தது.
மொழி வளர்ச்சிக்கு
மொழியை, பண்பாட்டை, கலாச்சாரத்தைக் காப்பதற்கான ஒரே வழி புதிய நூல்களை எழுதுவதும் படிப்பதும்தான். எந்த மொழியில் அதிகமாக இலக்கிய நூல்கள் எழுதப்படுகின்றனவோ, படிக்கப்படு கின்றனவோ அந்த மொழிதான் நிலைத்திருக்கும். மொழியை வளர்ப்பதற்கான, வளப்படுத்துவதற்கான ஒரே வழி தரமான இலக்கிய நூல்களை எழுதுவதும், எழுதப்பட்ட நூல்களைப் படிப்பதும், படிக்க வைப்பதும்தான்.
புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் புதிய சொற்களை உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன. தமிழ் மொழி என்ன ஆகுமோ என்ற கவலை யாருக்கும் தேவையில்லாதது. தமிழ் மொழி காலத்துக்கு ஏற்றவாறு உருமாறிவந்திருக்கிறது. எத்தனை படையெடுப்புகள் நடந்திருக்கின்றன, எத்தனை மொழிக் கலப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. எத்தனையோ சவால்களைத் தாங்கிக்கொண்டு தமிழ் நிலைத்திருக்கிறது, நீடித்திருக்கிறது. காரணம், தமிழ் மொழி இன்றும் மக்கள் பேசும் மொழியாக இருக்கிறது, இலக்கிய மொழியாக இருக்கிறது.
சினிமாக்காரர்களுக்கும், பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கும் பிரபலங்களுக்கும் தருகிற முன்னுரிமையை எழுத்தாளர்களுக்குத் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு ஃபெட்னா மீதும் இருக்கிறது. வெகு மக்களுடைய ரசனையை ஒரு அமைப்பு கவனத்தில் கொள்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு அமைப்பு பலதரப்பட்ட மக்களின் கருத்துக்கும் ரசனைக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டியிருக்கிறது. எல்லாவற்றையும் தாண்டி, அமெரிக்கத் தமிழர்கள் தமிழுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என அத்தனை ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஒவ்வொரு ஃபெட்னா விழாவும் தமிழ் மொழியை வளர்க்கிறதா இல்லையா என்பது தெரியாது. ஆனால், தமிழ் உணர்வை நிச்சயம் வளர்க்கிறது!
நன்றி: "இந்து தமிழ் திசை", 27.7.2023
No comments:
Post a Comment