‘திராவிட மாடல்' அரசை வீழ்த்திவிடலாம் என்ற வீண்கனவு காணவேண்டாம் - இது பெரியார்பூமி - திராவிட மண்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 31, 2023

‘திராவிட மாடல்' அரசை வீழ்த்திவிடலாம் என்ற வீண்கனவு காணவேண்டாம் - இது பெரியார்பூமி - திராவிட மண்!

 சமூகநீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகத்திற்கு விடை கொடுத்து அனுப்பியதுதான் இன்றைய பி.ஜே.பி. தலைமையிலான ஒன்றிய அரசு!

சமூகநீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகம், பாலியல் நீதிகளுக்கு விடை கொடுத்தனுப்பும் ஆட்சிதான் இன்றைக்கு பி.ஜே.பி. தலைமையிலான ஒன்றிய அரசு. ‘திராவிட மாடல்' அரசை வீழ்த்தலாம் என்று யாரும் கனவு காணவேண்டாம்; காரணம், இது பெரியார் பூமி - திராவிட மண் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

வருகிற 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மீண்டும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.  - பிரதமர் மோடியின் ஆட்சி மூன்றாவது முறையும் வெற்றி பெற்றால், தங் களது காவிக் கொள்கையையும்  எதேச்சதிகார ஹிந்துத் துவாவையும் பச்சையாக அமல்படுத்தும் ஆட்சியாகவும் - ஹிந்துராஷ்டிரம் என்று வெளிப்படையாக அறிவித்து, மதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகள், சமூகநீதி, பாலியல் நீதி - இவற்றிற்கு விடை கொடுத்தனுப்பும் ஆட்சியாகவும் - ‘இனி தேர்தலே கிடையாது' என்று சொல்லாமற்சொல்லும் ஆட்சியாகவுமே அமையும் என் பதை நாட்டின் பெரும் பகுதியினர் உணர்ந்துவிட்டனர்.

ஒன்றிய பி.ஜே.பி. அரசின் 

அதிகார துஷ்பிரயோகம்!

மக்கள் இவ்வாட்சியை வீட்டிற்கு அனுப்பிட ஆயத்த மாகிவிட்டார்கள் என்பது வெளிப்படையாக, வெளிச் சத்துடன் தெரியத் தொடங்கிவிட்டது!

அதிகார துஷ்பிரயோகத்தையும், பணத்தையே நம்பி வாரி வாரி இறைத்தும், ஊடகங்களை மிரட்டியும் அல்லது தாஜா செய்தும் சென்ற  தேர்தலில் தங்களுக்குக் கிடைத்த ‘புல்டோசர்' மெஜாரிட்டியையும் பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் விவாதங்களே இன்றி, பட்ஜெட் போன்றவைகூட நிறைவேற்றப்படும் வேதனை!

கடந்த 4 ஆண்டுகளாக மக்களவையில் அவை துணைத் தலைவரே இல்லாமல் - தேர்வு செய்யப்படாமல் - எதிர்க்கட்சிக்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்ற நோக்கத்தினாலேயே, அப்பதவி காலியாகவே வைக்கப் பட்டு நடைபெறும் ‘‘விசித்திர பார்லிமெண்டரி ஜன நாயகம்!''  பிரதமர் மோடி போன்ற முக்கிய பொறுப் பாளர்கள் மணிப்பூர் 3 மாதங்களாக பற்றி எரியும் நிலை யிலும் வாய் திறவாத மவுனத்தின் உச்சத்தில் நின்று ஆட்சி நடத்தும் உலகம் காணாத புதுமை! இப்படிப்பட்ட கட்சி தென்மாநிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு விட்டது!

வட மாநிலங்களிலும், கிழக்கு, மேற்கு மாநிலங் களிலும்கூட இந்த ஆர்.எஸ்.எஸ். காவி ஆட்சியை அகற்றிட ஆயத்தமாகிவிட்டார்கள்!

தானாக முன்வந்து உச்சநீதிமன்றத்தின் கருத்து!

மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கட்டுக்கடங்காத கலவரம் பற்றிய பிரதமரின் செயல்பாடு மனிதாபிமானத்தையே வெளியேற்றிய வேதனையான செயற்பாடு அல்லவா?

உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து மணிப்பூர் கலவரம்பற்றி விசாரணை செய்ய முன்வந்திருப்பது எதைக் காட்டுகிறது?

பிரதமர் மோடி தலைமையில் நாடெங்கும் பா.ஜ.க. ஆட்சி உண்மையான மக்களாட்சியாக நடைபெறுகிறதா? இத்தனை மாதங்கள் மணிப்பூரில் கலவரம் தொடருவது, பாலியல் கொடுமை நடைபெறுவது, துகிலுரித்த துச்சாதனன் கதைபோல நிகழ்வுகள் நடைபெறுவது கண்டு வெட்கித் தலைகுனியும் நிலையல்லவா ஏற்பட்டுள்ளது - இது தேசிய அவமானம் அல்லவா?

இந்து ஏட்டின் தலையங்கம்

இன்றைய ‘ஹிந்து' ஆங்கில நாளேட்டின் (31.7.2023) தலையங்கத்தில், வடமாநிலங்களில் ‘பசுக்காவலர்' குழுக்கள் என்ற பெயரில் காவிகள் கூட்டமாகி, பல மனித உயிர்களைக் கொல்வதுபற்றியும் - பா.ஜ.க. ஆளும் பல மாநிலங்கள்  - குறிப்பாக வட மாநிலங்களில் உள்ள கொடுமைகளை உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டி யுள்ளதுபற்றி விளக்கி எழுதியதோடு, தமிழ்நாட்டில் வரலாற்று ரீதியாக மதச்சார்பற்ற, பகுத்தறிவு இயக்கங்கள் மிகவும் கவனத்துடன் செயல்படுவதால், பா.ஜ.க. ஆளும் வடமாநிலங்களில் நடைபெறும் வன்முறை வெறி யாட்டங்களுக்கு, பசுக்காவலர்கள் கூட்டம் கூட்டமாக கூடி, மனிதர்களை அடித்துக் கொல்லுதல் ஆகியவற்றிற்கு இடமில்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது!

2018 இல் உச்சநீதிமன்றம் ஆணை வழங்கியது (தீர்ப்பின்மூலம்) எவ்வளவு சரியானது என்பதும், அவை பின்பற்றப்படவில்லை என்பதும்கூட அத்தலையங்கத் தில் இடம்பெற்றுள்ள கருத்தாகும்!

The Court is right in issuing orders to agencies of the state in holding them to account for the non-implementation of the guidelines in the 2018 judgment. However, it requires no less than concerted civil society action to tackle the menace of mob violence and “vigilantism” by sensitising people towards fraternal relations with other communities and avoiding typecasting them as the “other”. In Tamil Nadu, for example, where, historically, secular and rational movements were active, such incidents are rare.

தமிழ்நாடு தப்பியிருப்பதற்குக் காரணம் ‘திராவிட மாடல்' ஆட்சி அல்லவா?

திராவிட மண்ணின் தனிச்சிறப்பு!

முன்பு பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நாடு முழுவதும் கொலை மற்றும் உயிர்ச் சேதம். 

ரத்த ஆறு ஓடாத ஒரே மாநிலம் அமைதிப் பூங்காவான தமிழ்நாடுதான். 

அதற்குக் காரணம், தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கம் என்ற மனிதநேய இயக்கமும்தான் என்று அன்று ஏடுகள் (‘இந்தியன் எக்ஸ்பிரஸ்') சாட்சியம் கூறினவே!

இத்தகைய  சிறப்புடன் தொடரும் ‘திராவிட மாடல்' ஆட்சியை அகற்றிட வீண் கனவு காணும் அரசியல் புண்ணாக்குகளின் உளறல்களை, ஆளுநரின் அபத்த பிரச்சாரங்களை, ஊடகங்களின் ஜால்ராக்களை ஒரு போதும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்கமாட்டார்கள்!

வித்தைகளால் ஏமாற்றப்பட முடியாத வித்தக மனிதர்கள் - இந்த பெரியார் பூமியாம் - திராவிட மண்ணில் உண்டு.

எனவே, எதிர்ப்புகளும், அவதூறுகளும் நமது கொள்கைப் பயிர்களுக்கான உரங்களாகி, பயிர் வெற்றியுடன் செழித்து வளருவது உறுதி! உறுதியிலும் உறுதி!!


கி.வீரமணி 

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

31.7.2023


No comments:

Post a Comment