வீழட்டும் கருணையிலா பாசிச பா.ஜ.க. ஆட்சி! விரையட்டும் வெற்றி ‘இந்தியா' கூட்டணிக்கு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 28, 2023

வீழட்டும் கருணையிலா பாசிச பா.ஜ.க. ஆட்சி! விரையட்டும் வெற்றி ‘இந்தியா' கூட்டணிக்கு!

 ‘‘நாங்கள் திராவிடத்தின் வாரிசுகள் - நீங்கள் கோட்சேவின் வாரிசுகள் என்று அறிவிக்கத் தயாரா?'' என்ற முதலமைச்சரின் கேள்விக்கு பி.ஜே.பி. பதில் அளிக்குமா?

மேடைப் பிரச்சாரம் - தெருமுனைப் பிரச்சாரம் - சமூக வலைதளப் பிரச்சாரம் எங்கெங்கும் பிரச்சாரப் புயல் சுழன்றடிக்கட்டும்!

திராவிடத்துக்கும் - கோட்சேவின் வாரிசுகளுக்கு மிடையே நடைபெறும் போராட்டத்தில் ஒரு முக்கிய கட்டம் 2024 மக்களவைத் தேர்தல். பா.ஜ.க. என்னும் கருணையிலா பாசிச ஆட்சியை வீழ்த்திட, பிரச்சாரங்கள் பலவகைகளிலும் சுழன்றடிக்கட்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

திராவிடத்தின் வாரிசுகள் நாங்கள் - நீங்கள் கோட்சேவின் வாரிசுகளா? - முதலமைச்சர்

‘‘ஆரியத்தை வீழ்த்த வந்த திராவிடத்தின் வாரிசுகள் நாங்கள்! கோட்சேவின் வாரிசுகள்தான் நீங்கள்!!''

‘‘நான் இன்னும் சொல்கிறேன், இது வாரிசுகளுக்கான கட்சிதான்.''

‘‘ஆமாம், வாரிசுகளுக்கான கட்சிதான். ஆரியத்தை வீழ்த்த வந்த திராவிடத்தின் வாரிசுகள் நாங்கள்! தந்தை பெரியாரின் வாரிசுகள்! பேரறிஞர் அண்ணாவின் வாரிசுகள்! தமிழினத் தலைவர் கலைஞரின் வாரிசுகள் நாங்கள்! இதனைத் தைரியமாக - பெருமையோடு என் னால் சொல்ல முடியும்.''

‘‘பா.ஜ.க. யாருடைய வாரிசு? நான் கேட்கிறேன். கோட்சேவின் வாரிசுகள்தான் நீங்கள் என்று உங்களால் தைரியமாகச் சொல்ல முடியுமா? சொல்வதற்கான தைரியம் உங்களுக்கு உண்டா?''

- திராவிடர் இயக்கத்தின் தீரர் கோட்டையாம் திருச்சியில் - திராவிட முன்னேற்றக் கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் 26.7.2023 அன்று முழங்கியிருக்கிறார் நமது ஆற்றல்மிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!

‘திராவிட மாடல்' ஆட்சி அவரது சீரிய செயலாற்றல் மூலம் திக்கெட்டும் போற்றும் அதன் சாதனைகள்மூலம் திறன்மிகு ஆட்சியாக மக்களுக்குப் பயன்படுகிறது!

அறிஞர் அண்ணா பிறந்த நாளாம் செப்டம்பர் 15 ஆம் தேதிமுதல், கலைஞர் நூற்றாண்டையொட்டி குடும்பத் தலைவி மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்ற புதியதோர் திட்டம் தொடங்கப்படவும், அதனால் ஒரு கோடி தாய்மார்கள் பயன்பெற்று மகிழப் போகிறார்கள்!

அய்.என்.டி.அய்.ஏ. கூட்டணி 

‘திராவிட மாடல்' அடிப்படையில்!

சொன்னதைச் செய்யும் அரசு மட்டுமல்ல, இந்த அரசு கூடுதலாக - சொல்லாததையும் செய்யும் அரசு தி.மு.க. அரசு - அது ‘திராவிட ஆட்சி'யின் மாட்சி! இத்தகு சாதனைகளை வெகுமக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்திடுவது திராவிடர் இயக்கங்களான தி.க., தி.மு.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகள், இயக்கங்களின் கடமை மட்டுமல்ல; கொள்கைக் கூட்டணியாக - இந்தியாவிற்கே இதோ இந்த ‘இந்தியா' கூட்டணி பதவிக் கூட்டணி அல்ல; கொள்கை லட்சியக் கூட்டணியாக கடந்த 18 ஆண்டு களாக எதிர்க்கட்சி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி யாகத் தொடரும் அத்துணை கட்சிகளின் முக்கிய கடமையும் ஆகும்!

‘I-N-D-I-A' (Indian National Developmental Inclusive Alliance)  ‘இந்தியா' என்ற ஒரு புதிய பெயர் பெற்ற 26 கட்சிகளின் கூட்டணியாக அது பெருவளர்ச்சி பெற்று ‘திராவிட மாடல்'  அடித்தளத்திலேயே பயணிக் கத் தொடங்கியுள்ளது நமக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்துள்ளது!

தி.மு.க. தோழர்கள் 

செய்யவேண்டியது என்ன?

மற்றொரு முக்கியமான கருத்தினை தி.மு.க. வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அன்புக்கட்டளை யாக அவர்களுக்குக் கூறியுள்ளார் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் நமது முதலமைச்சர் அவர்கள்!

‘‘இப்படி கோடிக்கணக்கானோர் - இலட்சக்கணக் கானோர் பயன்பெறும் திட்டங்களை நிறைவேற்றி, இன்றைக்கு வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் அரசுதான் நம்முடைய ‘திராவிட மாடல்' அரசு. இந்தத் திட்டங்களை எல்லாம் மக்களிடம் எடுத்துச் செல்லும் பரப்புரையாளர்களாக நீங்கள் செயல்பட வேண்டும்.

நமக்கு எதிராக அவதூறுகளையும், பொய்ச்செய்தி களையும் பரப்பிட ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது. பொய்களுக்கு ஆயுள் மிகக் குறைவு.  அவர்கள் பொய்களைச் சொல்லிக் கொண்டிருக்கட்டும். நாம் திரும்பத் திரும்ப நம் அரசின் திட்டங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கலாம். நம்முடைய அரசு கொண்டு வந்திருக்கும் நலத்திட்டங்கள் குறித்து வாக்காளர்களிடம் விளக்கிச் சொல்லுங்கள். இதன் மூலமாக எதிரிகள் பரப்பும் அவதூறுகள் எல்லாம் சுக்குநூறாக நொறுங்கிப் போய்விடும்'' என்று பேசியிருக்கிறார் முதலமைச்சர்.

இதனை இடையறாது செய்யவேண்டிய இன்றியமை யாத கடமை ஒவ்வொரு தோழருக்கும், தொண்டருக்கும் உண்டு!

பிரச்சாரம் அடைமழையாகப் பெய்து - பருவம் பாராது பிரச்சாரச் சூறாவளி சுழன்றடித்தால், கொள்கை எதிரிகள் கூண்டோடு காணாமற்போய்விடுவர்!

வீழட்டும் கருணையிலா 

பாசிச பா.ஜ.க. ஆட்சி!

2024 தேர்தலை முன்கூட்டியே நடத்திட மோடியின் ஆர்.எஸ்.எஸ். அரசு திட்டமிடக்கூடும்; என்றாலும், எப்போதும் தயார் நிலையில் நமது செயல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும்.

1. மேடைப் பிரச்சாரம்

2. தெருமுனைப் பிரச்சாரம்

3. திண்ணைப் பிரச்சாரம்

4. சமூகவலைதளப் பதிலடி பிரச்சாரம்

5. கலைத்துறை மூலமும் பிரச்சாரம்

இப்படி பலப் பல பிரச்சாரங்களைத் தொய்வின்றித் தொடருவீர்!

தேர்தலில் வீழட்டும் கருணையிலா பாசிச பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். ஆட்சி!

வெற்றி மக்களுக்கே! ஜனநாயகத்திற்கே!!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

28.7.2023


No comments:

Post a Comment