அக்கம் பக்கம் அக்கப்போரு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 8, 2023

அக்கம் பக்கம் அக்கப்போரு!

கலைஞரின் பராசக்தி படத்தில் வரும் நீதிமன்றக் காட்சியும் அதன் வசனங்களும் புகழ் பெற்றவை. “பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக!” என்று அதில் ஒரு வரி வரும். பக்தி புதிதாக ஒன்னும் பகல் வேஷமாகல. ஆல்வேஸ் அது வேஷக்காரர் களின் கை முதல் தான். அந்த வேஷங்களிலேயே உச்சமான வேசம் என்பது வடநாட்டில் கங்கைக் கரைகளிலே வாழும் ஸ்பெஷல் சாமியார்களின் வேசம். அதற்கு காஸ்டியூம் எல்லாம் கிடையாது. திறந்த மேனி - பிறந்தமேனி தான். மேக்கப் போட பேஸ், லிப் ஸ்டிக், ரோஸ் பவுடர் எல்லாம் தேவை இல்லை. சாம்பல் தான்! முடி முதல் அடி வரை அள்ளிப் பூசிக் கொண்டு கிளம்பிவிட்டால் அதற்குக் கிடைக்கும் வரவேற்பும் மரியாதையும் அலாதி தான். தமிழ்நாட்டில் வரும்போது தவிர, பெரும்பாலும் அவர்களுக்கு எதிர்ப்பு எங்கும் இருப்பதில்லை. சில நேரங்களில் கண்களில் தட்டுப்படாமல் தமிழ்நாட்டுக் குள்ளும் நுழைந்துவிடுவதுண்டு.

அப்படியொரு நிர்வாணச் சாமியார் தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலுக்குள் உலாவிக் கொண் டிருந்திருக்கிறார். ராஜபாளையம் முதன்மைச் சாலை யில் இருந்த நகைக்கடை ஒன்றில் புகுந்தவர், “ஆசீர் வதிக்கக் கடவுள் என்னை அனுப்பியிருக்கிறார்” என்று சொல்லி கையை உயர்த்தியிருக்கிறார். ஆசி கொடுக்கத்தான் கையை உயர்த்தினார் போலும் என்று கருதிய கடை உரிமையாளர் தலையைக் குனிந்து பவ்யமாய் நிற்க, கடையில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த கனமான செயின் ஒன்றைக் காட்டி “அதை கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடு” என்று கேட்டிருக்கிறார் சாமியார்!

அதிர்ந்து போன கடைக்காரர், “அய்யோ சாமி, அது கொஞ்சம் காஸ்ட்லி! நான் உங்களுக்கு ஒரு பவுன்ல செயின் போடுறேன்”னு சொல்லிப் பார்த்திருக் கிறார். ஆனால் முற்றும் துறந்த ‘திறந்த’ சாமியாரோ, “ம்ஹூம்... எனக்கு அதுதான் வேண்டும்” என்று அடம் பிடித்தாராம். அதற்குள் கடைக்குள்ளும் கூட்டம் கூடிவிட, ஒரு வழியாக ஒரு பவுன் தங்கச் சங்கிலியையும், வழிச் செலவாகக் கணிசமாக ஒரு தொகையையும் கொடுத்து, அனுப்பி வைத்தாராம் கடைக்காரர். சிரிப்பாக இருக்கலாம். ஆனால், அதை விட நமக்கு அசிங்கமாக அல்லவா இருக்கிறது. ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.45,500 நேற்றைய நில வரப்படி! எவ்வளவு சாதாராணமாக பகல் கொள்ளை அடிச்சிட்டுப் போயிட்டான் அந்த அம்மணச் சாமி!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்துவாரில் ஆசிர மம் வைத்திருப்பதாகச் சொல்லிக் கொண்ட மஹந்த் அசோக் கிரி என்ற அந்தச் சாமியார், 30 நாட்கள் தமிழ்நாட்டுக்கு யாத்திரை வந்திருக்கிறாராம்! ஒரு மணி நேரத்திற்குள்ளாக 50000-க்குக் குறையாமல் கொள்ளை அடித்திருக்கும் இந்தச் சாமியார் தமிழ் நாட்டில் வசூலைக் கண்டு 30 நாட்களில் திரும்பிப் போவார் என்றா நினைக்கிறீர்கள்! ஓர் ஊடகத்தில் வந்துட்டதால் இந்தச் செய்தி அம்பலமாகியிருக்கு! இன்னும் எவ்வளவு கொள்ளையோ? எவ்வளவு வசூலோ? பக்தி பகல் வேஷம் மட்டுமில்லை... பகல் கொள்ளைக்கான லைசன்சும் கூட!

பக்தி என்பதற்கு முட்டாள்தனம், பேராசை, தன் னலம், சுரண்டல் என்பதைத் தவிர வேறு சொற்கள் தமிழில் இல்லவேயில்லை. இந்த குணங்க ளெல்லாம் மனிதனுக் குக் கூடாது என்று தான் சொல்ல வேண்டும் என்று தந்தை பெரியார் (விடுதலை, 17.11.1958) சொன்னதில கொஞ்சமாவது தப்பிருக்கா?

- குப்பைக் கோழியார்


No comments:

Post a Comment