“காமராசர் முதலமைச்சராக இருந்தபோது. தந்தை பெரியார் அவர்கள் பிறந்த நாளையொட்டி ‘ஆனந்தவிகடன்’ ஏடு ஒரு தலையங்கம் தீட்டியது. அதில் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ள மாபெரும் கல்வி வளர்ச்சிக்கு தந்தை பெரியார்தான் காரணம் என்று எழுதப்பட்டிருந்தது. அதற்கு அடுத்த வாரமே வாசகர் ஒருவர் ‘ஆனந்த விகடன்’ ஏட்டுக்கு ஒரு கடிதம் எழுதினார். காமராசர்தான் இத்தனைப் பள்ளிகளையும் திறந்தார்; அவர்தானே முதலமைச்சராக இருக்கிறார். பெரியார்தான் பதவியில் இல்லையே, நீங்கள் பெரியார்தான் இவைகளுக்கு எல்லாம் காரணம் என்று எழுதியிருப்பது எப்படிச் சரியாகும் என்று அந்த வாசகர் எழுதியிருந்தார். ‘ஆனந்த விகடன்’ ஏட்டில் அந்தக் கடிதத்தைப் பிரசுரித்து, அதற்குக் கீழே ஆசிரியர் குறிப்பு என்று ஒரு குறிப்பை வெளியிட்டிருந்தார்கள். அதில் “நாங்கள் எழுதிய கருத்து சரியானது என்றுதான் இப்போதும் நினைக்கிறோம்.
தமிழ்நாட்டில் கல்லூரிகளை, பள்ளிகளை வைத்தவர் காமராசர்தான்; ஆனால் இவைகளுக்குக் “காரணம் பெரியார்: காரியம் காமராசர்’’ என்று ‘ஆனந்தவிகடன்’ ஆசிரியர் பதில் அளித்திருந்தார்.
இந்த நாட்டிலே கல்வி என்பது, மிகப்பெரிய சமுதாயத்துக்கு மறுக்கப்பட்டதாக இருந்தது. அதை எல்லா சமுதாயத்தினருக்கும் பொதுவாக்க வேண்டும் என்று தந்தை பெரியார் போராடியபோது இடையிலே ஒரு தடை ஏற்பட்டது. இடையில் ஆட்சிக்கு வந்த ஒரு பெரியவர் தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிலையங்கள் பலவற்றை மூடிவிட்டு குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தபோது தந்தை பெரியார் அதை மிகக் கடுமையாக எதிர்த்தார்.
அந்தத் திட்டம் தொடர்ந்திருக்குமானால். இன்று நம்மவர்கள் இந்தச் சட்டக் கல்லூரிக்குள் இவ்வளவு பேர் வந்திருக்க முடியாது. குலக்கல்விக்கு தந்தை பெரியார் அவர்கள் காட்டிய எதிர்ப்பு. அரசியல் மாற்றத்தையே உண்டாக்கியது. அந்த நேரத்தில் துணிந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்குமாறு காமராசரை பெரியார் கேட்டுக் கொண்டார். காமராசர் பொறுப்பை ஏற்று, குலக்கல்வித் திட்டத்தை ஒழித்ததோடு மட்டுமல்ல - கல்வி வெள்ளத்தை மேலும் பாயச் செய்தார்!
காமராசரை, பெரியார். “தமிழகத்தின் கல்வி வள்ளல்” என்றார். இந்த நாட்டில் படிப்பு பெருகியிருக்கிறது என்றால் அது படிக்காத இருபெரும் தலைவர்கள் பெரியார், காமராசர் ஆகியோரால்தான்! என்று எடுத்துக்கூறி என்னுரையை நிறைவு செய்தேன். நிகழ்ச்சியில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். பொதுமக்கள், கழக உடன்பிறப்புகள், தோழியர், தோழர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
குறிப்பு: தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதியுள்ள
“அய்யாவின் அடிச்சுவட்டில்” (பாகம் 5, பக்கம் 36,-37)
No comments:
Post a Comment