மத்தியப் பிரதேச மாநிலம், சித்ஹி மாவட்டத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியின தொழிலாளி ஒருவரை தாக்கி அவரை அவதூறாகப் பேசி அவர் மீது ஒரு நபர் சிறுநீர் கழித்திருக்கிறார்.
இந்த கொடூர நிகழ்வு தொடர்பான காணொலி சமூகவலை தளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பழங்குடியின தொழிலாளர் மீது சிறுநீர் கழித்த நபர் அதேபகுதியை சேர்ந்த பிரவேஷ் சுக்லா என்பதை அறிந்தனர். அவர் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டு தோற்றவர், தற்போது அவர் அப்பகுதி பாஜக முக்கிய பிரமுகராக உலா வருகிறார்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த நிகழ்வு நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர் பாஜக மேனாள் சட்டமன்ற உறுப்பினர் என்பதாலும், தற்போது பாஜக சட்டமன்ற உறுப்பினராக உள்ளவரின் மக்கள் தொடர்புத்துறைப் பொறுப்பாளராகப் பதவியில் உள்ளவர் என்பதாலும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் பயத்தில் காவல்துறையில் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். காணொலி வைரலான நிலையில் தற்போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தக் காட்சிப் பதிவை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, கண்டனம் தெரிவித்துள்ளார். "பழங்குடியினர் நலன் குறித்து பொய் பேசும் பாஜக தலைவர், பழங்குடியின ஏழை மீது இப்படி சிறுநீர் கழிக்கிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல்" என அவர் அப்பதிவில் கூறியுள்ளார்.
மேலும், அவர் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானி டமும் கேள்வி எழுப்பியுள்ளார். "இது தான் பழங்குடியினர் மீதான உங்கள் அன்பா? இதைக் காட்டு தர்பார் என்றுதான் அழைக்கவேண்டும். ஏன் அந்த பாஜக தலைவரை கைது செய்யவில்லை" என கேள்வி எழுப்பியிருந்தார். இதேபோல் பிரவேஷ் சுக்லா பாஜக தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுடன் இருந்த ஒளிப்படங்களை மற்றொரு டுவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார்.
இந்த விவகாரம் மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கவனத்துக்குச் சென்ற நிலையில், பிரச்சினை பெரும் அளவு வெடித்துக் கிளம்பிய சூழலில் வேறு வழியின்றி இந்தச் சம்பவத்துக்கு காரணமான குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்நிலையில், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் பிரவேஷ் சுக்லாவை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்து இது தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகடு தத்தம்!
"குற்றம் சாட்டப்பட்ட நபர் சமூகத்தில் பல நன்மைகளைச் செய்துள்ளார், அவர் இவ்வாறு செய்ய வாய்ப்பில்லை" என்று பாதிக்கப்பட்ட நபரை மிரட்டி பத்திரத்தில் கையொப்பமிடச் செய்து அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: "குற்றம் சாட்டப் பட்ட பாஜக பிரமுகர் (பர்வேஷ் சுக்லா) அரசியலில் வளர்ச்சி பெறுவதை விரும்பாத ஆதர்ஸ் மற்றும் அவரது நண்பர்கள் என்னிடம் வந்து பிரவேஷ் சுக்லா குறித்து ஒரு காட்சிப் பதிவைத் தயாரித்திருக்கிறோம். உன்னிடம் காவல்துறை வந்து கேட்டால் 'ஆமாம்' என்று கூறி, பிரவேஷ் சுக்லா மீது வன்கொடுமை வழக்குப் பதிவு செய்! என்று கூறி எனக்குப் பணம் கொடுத்தனர். இந்த நிலையில் நான் உண்மையை உணர்ந்து பிரவேஷ் சுக்லா போன்ற நல்லது செய்யும் நபருக்குத் துரோகம் இழைக்கக் கூடாது என்று எண்ணி இந்தப் பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்கிறேன்" என்று எழுதப்பட்டுள்ளது.
பிஜேபி என்பது எவ்வளவுக் கீழ்த்தரமானது - அவர்கள் பேசும் தார்மீகம் என்பது ஊரை ஏமாற்றக் கூடியது - வஞ்சகத் தன்மை கொண்டது என்பது புரிகிறதா? இத்தகைய கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரலாமா? சிந்திப்பீர்!
குறிப்பு: சம்பந்தப்பட்ட படங்களை பக்கத்தில் காண்க!
No comments:
Post a Comment