திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை
‘தமிழ்நாட்டின் ரட்சகர்' - ‘பச்சைத் தமிழர் காமராசர்' என்று மனமுவந்து காமராசரை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பாராட்டினார். அவருக்கு 121 ஆவது பிறந்த நாள் (ஜூலை 15, 2023) இன்று!
குலதர்மக் கல்வி என்ற ஆச்சாரியார் திட்டத்தை ஒழித்து, நாடெலாம் கல்வி நீரோடை பாய வைத்த ‘காரியமானார்' காமராசர். (‘காரணம்' பெரியார் என்ற நிலையில்!)
அவரது இந்த அறிவு பரப்பிய தொண்டறத்தை வரும் இளையதலைமுறை அறியவேண்டும்; போற்றிக் கொண்டாட வேண்டும் என்பதற்காக நூற்றாண்டு விழா நாயகரான நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர் ‘‘காமராசர் பிறந்த நாள் விழாவை கல்வித் திருநாள்'' என்று கொண் டாடப்படவேண்டுமென்ற ஒரு தனிச் சட்டம் (வெறும் அரசு ஆணையல்ல) கொண்டு வந்து, கட்சி பேத தடைச் சுவர்களை உடைத்து, தரணி மகிழச் செய்தார்!
இன்று ‘திராவிட மாடல்' ஆட்சியின் மாட்சி உலகெங்கும் ஒளிவீசுவதற்கு, தேசிய இயக்கத்திலிருந்தாலும், ‘‘திராவிட'' உணர்வுகளைப் பிரதிபலித்து, ‘அனைவருக்கும் அனைத்தும்' என்ற சமூகநீதிக் கொடியை தாமும் பறக்கவிட்டு சாதனைச் சரித்திரம் படைத்த, காமராசர் ஒவ்வொரு பிள்ளையின் கல்வி ஒலி - ஒளியிலும் வாழுகிறார்! வரலாறு படைக்கிறார்; திருப்பங்களை உருவாக்கி திசையெட்டும் புகழ்மணக்க வித் திட்டார். விளைச்சல் கண்டு அவரை வாழ்த்து கிறோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
15.7.2023
No comments:
Post a Comment