ஒன்றிய அரசு வங்கி கிளார்க் பதவி நியமனங்களில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பறி போகும் வேலை வாய்ப்புகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 5, 2023

ஒன்றிய அரசு வங்கி கிளார்க் பதவி நியமனங்களில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பறி போகும் வேலை வாய்ப்புகள்

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு டைமையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் கிளார்க் பணிகளுக்கு, அந்தந்த மாநில மொழிகளை படிக்க, எழுத, பேச வேண்டும் என்பது கட்டாய மாகவும் இருந்தது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில், அரசு வங்கிகளில் கிளார்க் பணிகளில் தமிழ் நாட்டவர்க்கே இதுவரை வாய்ப்புகள் இருந்தது.

இந்நிலையில், வங்கி தேர்வு நடத்தும் வங்கிப் பணியாளர் தேர்வு கழகம் (IBPS) கடந்த சில ஆண்டு களாக வெளியிடப்படும் விளம்பரத்தில், மாநில மொழிகளில் தேர்ச்சி என்பது கட்டாயம் இல்லை; அது ஒரு முன்னுரிமை மட்டுமே (Not mandatory; it is preferable) என்று விளம்பரப்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக வேறு மாநிலங்களில் உள்ளோர் தமிழ் நாட்டில் தேர்வு எழுதி, கிளார்க் பணிகளிலும் சேரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெளிமாநிலத்தவர் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது.

தற்போது 2022-23 ஆண்டுக்கான கிளார்க் பதவி நியமனங்களுக்கு தேர்வுகள் நடைபெற்று 288 பேர் கிளார்க் பதவிகளில் நியமிக்கப்பட உள்ளனர்.

விவரம்:

1. யூனியன் பாங்க் ஆப் இந்தியா : 87

2. கனரா வங்கி : 100

3. பாங்க் ஆப் இந்தியா :   17

4. சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா : 66

5. யூகோ வங்கி :   16

6. பஞ்சாப் & சிந்த் வங்கி :    2

மொத்தம் : 288

ஆறு அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் 

288 பேர் கிளார்க்குகளாக பணி நியமனம் செய்யப்பட் டுள்ளனர். இதில் இந்த ஆண்டும் வெளி மாநிலத் தவர்கள், தமிழ் மொழி தெரியாதவர்கள் பணியில் சேர உள்ளனர் என்பதாக தகவல்கள் வருகின்றன.

தொடர்ந்து 2017 முதல் இதே போன்று வெளி மாநிலத்தவர், கிளார்க் பதவிகளுக்கு விண்ணப்பித்து, தமிழ் தெரியாமல் வேலை பார்க்கின்றனர். சென்ற ஆண்டு ஏறத்தாழ 400 வெளி மாநிலத்தவர் இவ்வாறு வங்கிகளில் பணியில் சேர்ந்துள்ளனர்.

வங்கிகளில் கிளார்க் பணி புரிவோர் வாடிக்கை யாளரிடம் நேரடி தொடர்புடையவர்கள். குறிப்பாக கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் இவர்களின் சேவை மாநில மொழியில் இருப்பது அவசியம்.

ஆனால், வங்கிப் பணியாளர் தேர்வு கழகம் (தனியார் நிறுவனம்) நடத்தும் தேர்வு மூலமாக தமிழ் தெரியாதவர்கள், பெரும்பாலும் ஒடிசா, கேரளம் ஆகிய மாநிலங்களில் இருந்து கிளார்க் பணியில் சேரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இவர்கள் அனை வருக்கும் தமிழ் மொழி பேச, எழுத, படிக்கத் தெரியாது.

ஆகவே, இவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக் கப்பட வேண்டும்; வங்கி பணியாளர் தேர்வு கழகம் நடத்திய தேர்வின் மூலம் தேர்வு பெற்ற, தமிழ் மொழி தெரிந்தவர்களுக்கே பணி வழங்கப்பட வேண்டும் என்று முந்தைய ஆண்டில் எமது அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு எழுதிய கடிதங் களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஒன்றிய அரசின் நிதித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி, மாநில மொழி கட் டாயம் என வலியுறுத்துகிறது. ஆனால் பொதுத்துறை வங்கிகள், அதற்கு நேர் மாறாக செயல்படுகின்றன.

ஒன்றிய அரசின் நிதித்துறையில் ஒரு அங்கமாக இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் நேஷனல் இன்ஸூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்ஸூரன்ஸ், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் போன்ற அரசு காப்பீட்டு நிறுவனங்களில், கிளார்க் பணிகளில் சேருவதற்கு, அந்தந்த மாநில மொழிகளில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்ற விதி முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆனால், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் மட்டும் குறிப்பாக கிளார்க் பணிகளுக்கு, இந்த விதி தளர்த்தப்பட்டதால், மொழி தெரியாதவர்களும், கிளார்க் பணிக்கு சேரும் நிலை ஏற்பட்டு, தமிழ்நாட் டைச் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

வங்கி தேர்வு நடத்தும் நிறுவனம் கிளார்க் பணிக்கு, மாநில மொழி அறிவு கட்டாயம் என ஏற்கெனவே இருந்த விதியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதே நிரந்தர தீர்வாக அமையும்.

இப்பிரச்சினை குறித்து, ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் மற்றும் வங்கித் துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திட தாங்கள் ஆவன செய்திட வேண்டுகிறோம்.

எமது கூட்டமைப்பின் சார்பில் ஒன்றிய நிதி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தின் நகலை இத்துடன் இணைத்துள்ளோம்.

- கோ.கருணாநிதி, 

திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர்

பொதுச் செயலாளர்

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் 

ஊழியர்கள் நலக் கூட்டமைப்பு

தமிழ்நாடு நிதி அமைச்சர் எஸ்.எஸ். தங்கம் தென்னரசு அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதம் இது.


No comments:

Post a Comment