பொது சிவில் சட்டம் முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் எதிர்ப்பு, சீக்கியர்கள் போர்க்கொடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 8, 2023

பொது சிவில் சட்டம் முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் எதிர்ப்பு, சீக்கியர்கள் போர்க்கொடி

புதுடில்லி, ஜூலை 8- ஒன்றிய அரசு அமலாக்க முயற்சிக்கும் பொது சிவில் சட்டத்திற்கு அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் (ஏஅய்எம்பிஎல்பி) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மற்றொரு சிறுபான் மையினரான சீக்கியர்களும் ஒன்றிய அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள் ளனர்.

ஒன்றியத்தில் தலைமை ஏற்று ஆட்சி செய்யும் பாஜகவின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக மீதம் இருப்பது பொது சிவில் சட்டம். இதை நிறைவேற்றி அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலில் அரசியல் லாபம் பெற முயற்சிக்கப்படுகிறது. இதற்கு சிறுபான்மையினரும், பெரும் பான்மையான எதிர்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

பொது சிவில் சட்டம் அமலாக்க வேண்டி தேசிய சட்ட ஆணையம் சார்பில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்துக்கள் கேட்டு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்த கால அவகாசம் போதாது எனவும் இதை மேலும் ஆறு மாத காலம் நீட்டிக்க வேண்டும் என்றும் ஏஅய்எம்பிஎல்பி சட்ட ஆணையத்திடம் கோரியிருந்தது. இச்சூழலில் திடீர் என ஏஅய்எம்பிஎல்பி நிர்வாகிகள் 5.7.2023 அன்று உத்தரப்பிரதேசம் லக்னோவில் கூடி ஆலோசித்தனர்.

இதில், எடுத்த முடிவின்படி பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய சட்ட ஆணையத்திற்கு ஏஅய்எம்பிஎல்பி கடிதம் எழுதியுள்ளது.

சுமார் 3 மணி நேரம் நடந்த ஆலோசனைக்கு பின் தேசிய சட்ட ஆணையத்திற்கு எழுதப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: ''நாட்டின் பெரும்பான்மை சமுதாய மானது சிறுபான்மையினரின் தனிச்சட்டம், மதச் சுதந்திரம் மற்றும் தனி உரிமை ஆகியவற்றில் தலையிடுவது ஒழுக்கமாகாது. பொது சிவில் சட்டம் மீது கருத்து கேட்டு சட்ட ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு தெளிவு இன்றி மேலோட்டமாக உள்ளது. சட்டத் திற்கு உட்பட்டதை பிரச்சினை யாக்கி தம் அரசியலுக்கு ஆதாயம் தேட ஒன்றிய அரசு முயல்கிறது. கடந்த 21 ஆவது சட்ட ஆணையம், பொது சிவில் சட்டமானது அவசிய மானதல்ல, உகந்ததும் அல்ல எனத் தீர்மானித்திருந்தது. இந்த நிலையில், மிகக்குறைந்த அவகாசம் அளித்து பொது சிவில் சட்டத்தை அமலாக் கும் முயற்சி என்பது உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது. முஸ்லிம்களின் தனிப்பட்ட உறவுகளுக்கு வழிகாட்டியாக அவர்களது தனிச் சட்டம் உள்ளது.

இது நம் புனிதக் குர்ஆன் மற்றும் இஸ்லாமியச் சட்டங்கள் கொண்ட ஒரு அடையாளமாக விளங்குகிறது. நம் நாட்டின் அரசமைப்பு சட்டத் தில் அளிக்கப்பட்ட அனுமதியின் படி பின்பற்றும் தம் அடையாளத்தை முஸ்லிம்கள் இழக்கத் தயாராக இல்லை. பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டில் தேசிய பாதுகாப்பு, மதநல்லிணக்கம், சகோதரத்துவம் போன்றவற்றை பேண சிறுபான்மையினர் மற்றும் பழங்குடிகளுக்கு அவர்களது தனிச்சட்டங்கள் உதவு கின்றன. எனவே, பொது சிவில் சட்டம் நம் நாட்டிற்கு தேவையில்லாத ஒன்று." இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீக்கியர்கள் போர்க்கொடி

இதனிடையே, பொது சிவில் சட்டம் மீதான அறிவிப்பின் துவக் கத்திலேயே சீக்கியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இவர் களது ஒரு அரசியல் கட்சியான சிரோமணி அகாலி தளம் நிர்வா கிகள், டில்லியில் கூடி ஆலோசித் தனர். இதன் முடிவுகளின்படி, பொது சிவில் சட்டம் நாட்டை இரண்டாகப் பிளந்து விடும் எனக் கூறி ஒன்றிய அரசை எச்சரித் துள்ளனர்.

இது குறித்து எஸ்ஏடியின் தலைவரான பரம்ஜித்சிங் சர்னா கூறும்போது, ''சீக்கிய சமுதாயத் திற்கு எதிரானது என்பதால் பொது சிவில் சட்டத்தை ஏற்க முடியாது. இது, சிறுபான்மையினரை பெரும் பான்மையினரான இந்துக்களுடன் ஒருங்கிணைக்கும் முயற்சி. இதை அமலாக்க முயன்றால் நம் நாட்டின் மதநல்லிணக்கம் மற்றும் ஒற்று மைக்கு கேடு ஏற்படும். இதுபோன்ற சட்டத்தை முதலில் இந்துக்கள் இடையே அரசு அமலாக்க வேண்டும். ஏனெனில், இந்துக்களின் அனைத்து பிரிவுகளுக்கும் ஒரே வகையான சட்டம் கிடையாது. சீக்கியம் என்பது தனி மதம். அதற்கு வேதங்களின் நம்பிக்கை கொண்ட இந்துக்களுடன் எந்த சம்பந்தமும் இல்லை. இதனால் அதை அமலாக்க முயற்சித்தால் ஒன்றிய அரசு கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.'' எனத் தெரிவித்தார்.

இப்பிரச்சினையில் எஸ்ஏடி, இதர சிறுபான்மை சமூகத்துடன் இணைந்து ஆலோசனை செய்ய உள்ளது. இச்சட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி அளித்துள்ள ஆதரவு குறித்த கேள்விக்கு எஸ்ஏடி தலைவர்கள், ''அது பாஜகவின் பி பிரிவு'' எனப் பதிலளித்தனர். இந்த பதிலால், ஆம் ஆத்மி கட்சி ஆளும் பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான், பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறத் துவங்கி உள்ளார்.


No comments:

Post a Comment