சிங்கப்பூரில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தர் தமிழர் தலைவர் ஆசிரியர் டாக்டர் கி.வீரமணிக்கு விருந்தோம்பல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 31, 2023

சிங்கப்பூரில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தர் தமிழர் தலைவர் ஆசிரியர் டாக்டர் கி.வீரமணிக்கு விருந்தோம்பல்

 உறவு என்றால் எனக்கு கொள்கை உறவுதான் முதலில் முக்கியம்

மலேசியா, ஜூலை 31 மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு சிங்கப்பூர் வழியாக சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி  அவர்களுக்கு “விருந்தோம்பல்” நிகழ்வு சிங்கப்பூரில் கடந்த 19 ஜூலை 2023 அன்று மாலை சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் உள்ள ஆனந்த பவன் உணவகத்தில் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சிங்கப்பூரில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

நிகழ்ச்சியை நெறிப்படுத்தி நடத்திய பெரியார் சமூக சேவை மன்றத்தின் செயலாளர் தமிழ்ச்செல்வி அனைவரையும் வரவேற்று உரையாற்றுகையில்.. இந்த நிகழ்ச்சி மிக மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட  நிகழ்ச்சி - அதுவும் வார வேலை நாளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், ஆசிரியர் அய்யாவை சந்தித்து உரையாட அழைத்த அனைவரும்  இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றுகூறி, வரவேற்புடன் நன்றியும் கூறினார். மேலும் மலேசியாவில் நடைபெற உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர்  கலந்து கொண்டு உரையாற்ற உள்ள தகவல்களை எடுத்துக் கூறி வந்திருந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம்

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஆலோசகர் புதுமைத்தேனி மா. அன்பழகன், ஆசிரியர்  அவர்கள் சிங்கப்பூர் வரும் பொழுதெல்லாம் நாங்கள் தொடர்ந்து சந்திப்போம் அதனால் இது எங்களுக்கு ஒரு புதிய சந்திப்பு அல்ல. முதலில் நாங்கள் இந்த சந்திப்பை மைக் மேடையில்லாமல் ஒரு 20 அல்லது 30 பேர் ஒன்றாக வட்டமாக அமர்ந்து அய்யாவிடம் உரையாடு வோம் என்று முடிவு செய்தோம் ஆனால் அனைவரையும்  அழைக்க எல்லோரும் வருகிறோம் என்று சொன்னவுடன், ஒரு பெரிய நிகழ்வாக கலந்துரையாடலாக நடத்தினால் தான் சிறப்பாக இருக்கும் என்று ஏற்பாடு செய்தோம். ஆசிரியர் அவர்கள் பொதுவாக வெளி நாடுகளில் பேசும் போது அந்த நாட்டின் சட்டத்திற்கு ஏற்ப அரசியல் மதம் பற்றி பேசமாட்டார். அதேபோல்தான் இந்த கலந்துரையாடலிலும் உள்நாட்டு அரசியல், வெளிநாட்டு அரசியல், மதம் போன்றவற்றை இந்த நாட்டு சட்டத்திற்கு ஏற்ப தவிர்க்க விரும்புகிறார். எனக்கு இடப்பட்ட பணி என்னவென்றால்  சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு, மன்றம் 2005 இல் தொடங்கி அதனைத் தொடர்ந்து மிக வெற்றி கரமாகவும் சிறப்பாகவும் வீ.கலைச்செல்வம் தலைமையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் அவர்களுடைய உடல்நிலை கருதியும், பணிச்சுமை கருதியும் மன்றத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல அடுத்த தலைமுறைக்கு ஒரு புதிய செயலவையை உருவாக்கி கொடுத்துள்ளார்கள். அதனை அறிவிக்கின்ற பணி தான் என்னுடைய பணி அதன்படி சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் புதிய பொறுப்பாளர்கள்:

மதியுரைஞர்: வீ.கலைச்செல்வம்

ஆலோசகர்கள்: பேராசிரியர் சுப. திண்ணப்பன், புதுமைத் தேனீ மா.அன்பழகன்

மூத்த விரிவுரையாளர். ச.ரத்தினக்குமார்

தலைவர்:   க. பூபாலன்

செயலாளர்:  தமிழ்ச்செல்வி ராஜராஜன் 

பொருளாளர்:  க. பழனிவேலு 

மன்றத்தின் தணிக்கையாளர்: நா.மாறன்

செயலவை உறுப்பினர்கள்: மதியரசன், ராஜராஜன், கவிதா மாறன்,  சவுந்தர்  ஆகியோர் செயல்பட உள்ளார்கள். இந்த புதிய செயலவை சிறப்பாக செயல்பட வேண்டும் அதற்கு உங்களுடைய ஆதரவுகள் தேவை - புதிய செயலவைக்கு பாராட்டுக்கள் நன்றி என்று கூறி உரையை முடித்தார்.

அடுத்து பேசிய மன்றத்தின் தலைவர் க.பூபாலன் அவர்கள் தன்னுடைய உரையில் வந்திருந்த அனைவருக்கும் நன்றி! உங்கள் வருகை தான் எங்களை உற்சாகப்படுத்துகிறது. காரணம் கரோனா முடிவுற்ற பின்பு  எங்களுடைய நேரடி நிகழ்வு என்பது இந்த நிகழ்வு தான். இந்த ஆண்டு மேலும் இரண்டு நிகழ்வுகளை நாங்கள் நடத்த உள்ளோம். 

பெரியாருக்கும் சிங்கப்பூருக்கும் உள்ள தொடர்பு

இங்கு மன்றத்தின் புதிய செயலவையை பற்றி சொன்னார்கள்.  இந்த மாற்றத்தை முதலில் கலைச்செல்வம்   சொல்லும் போது நாங்கள் மறுத்துவிட்டோம். ஆனால்  2005-இல் தொடங்கிய மன்றம் தொடர்ச்சியாக செயல்பட வேண்டும், என்னுடைய உடல்நிலை கருதியோ அல்லது பணிச் சுமையின் காரணமாகவோ மன்றத்தின் செயல்பாடு தடைப்படக்கூடாது.. நீங்கள் அனைவரும் முன்னெடுத்து செயல்படுங்கள்; நான் எப்போதும் போல் தொடர்ந்து ஆதரவளிப்பேன் என்று கூறினார். அதன் அடிப்படையில் நாங்கள் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டோம்.  பெரியாருக்கும் சிங்கப்பூருக்கும் உள்ள தொடர்பு என்பது சிங்கப்பூர் தனி நாடாக பிரிவதற்கு முன் மலேயா காலத்திலிருந்து உள்ளது. அப்போதிலிருந்து சிங்கப்பூரில் தமிழ் சமூகத்திற்கு பெரியார் குடும்பங்களின் பங்களிப்பு தொடர்ந்து இருந்து வந்துள்ளது. அந்த வகையில் சொற்கொண்டல் பெரியார் தொண்டர் முருகு.சீனிவாசன்  அவர்களின் மருமகன்தான் வீ.கலைச்செல்வம் சிங்கப்பூரின் மறைந்த நாகரத்தினம்  அவர்களின் மகன் தான் திரு. நா.மாறன். மறைந்த சு.தே மூர்த்தி அய்யா அவர்களின் மகன் தான்  மதியரசன்.  இங்கு   சுசீலா மூர்த்தி அவர்களும் உள்ளார்  என்று குறிப்பிட்டு நினைவுக்கூர்ந்து,   வீ.கலைச்செல்வம் அவர்களுக்கு நன்றி கூறி பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டு,  தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களை  வீ.கலைச் செல்வம் அவர் களுக்கு சிறப்புச் செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொண்டார்.

நம் உயர்வுக்கு காரணம் பெரியார்

அடுத்து பேசிய மன்றத்தின் மதியுரைஞர் வீ.கலைச் செல்வம், புதிய செயலவை சிறப்பாக செயல்படும் என்று நம்பிக்கை இருக்கிறது.  2005-இல் இந்த மன்றத்தை முறையாக பதிவு செய்தோம். அப்போது என்னிடம்  நிறைய கேள்விகளெல்லாம் அங்கு உள்ள அலுவலர்கள் கேட்டார்கள். அதெற்கெல்லாம் பதில் சொல்லி பிறகு அவர்கள் பெரியார் பெயரில் மன்றத்தை பதிவு செய்ய ஒப்புதல் கொடுத்தார்கள். 

பெரியார் ஒரு பெரிய மனிதநேய சிந்தனையாளர் ஆனால், அவரை எல்லரும் கடவுள் மறுப்பாளர் என்றுதான் சொல்கிறார்கள். எனக்கு பெரியாரை தெரியவந்தது என் மாமனார் சொற்கொண்டல் பெரியார் தொண்டர்  முருகு.சீனிவாசன் மூலமாகத்தான்.  பெரியார் இல்லையென்றால் நாம் யாரும் மேடைமீது ஏறி பேசி இருக்க முடியாது. பெரியார் தான் நம் உயர்வுக்கு காரணம் என்று கூறினார். புதிய செயலவைக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் சொன்னது போல் நாங்கள் முன்னாடியும் பின்னாடியும் புதிய செயலவைக்கு ஆதரவாக இருப்போம் என்று கூறினார்.   

தொண்டு செய்து பழுத்த பழம்;

தூய தாடி மார்பில் விழும்;

மண்டைச் சுரப்பை உலகு தொழும்;

மனக் குகையில் சிறுத்தை எழும்:

அவர்தாம் பெரியார்! வாழ்க பெரியார்! என்று கூறி புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரிகளுடன் உரையை நிறைவு செய்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களின் உரை:

மிகுந்த மகிழ்ச்சியோடும் மனநெகழ்ச்சியோடும் உங்களை எல்லாம் சந்திக்க கூடிய இந்த அரிய வாய்ப்பை ஏற்பாடு செய்து தந்த பெரியார் சமூக சேவை மன்றத்தின் மதியுரைஞர்கள், மேனாள், இந்நாள் தலைவர்கள் மற்றும் அனைத்து அமைப்புகளை சார்ந்த தலைவர்கள், இந்த குறுகிய காலத்தில் சிங்கப்பூரில் உள்ள அமைப்புகளின் தலைவர்களை எல்லாம் சந்திக்கக் கூடிய இந்த அற்புதமான சந்திப்பை ஏற்பாடு செய்த உங்கள் அத்துணை பேருக்கும் எல்லையற்ற நன்றியை நான் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கு சிங்கப்பூருக்கு நான் வருவதே ஓய்வுக்காக என்று நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை, ஏனென்றால் நான் பெரியார் தொண்டன். “ஓய்வு என்பதே துருப்பிடித்த வேலை” என்று பெரியார் சொல்வார். ஆகவே, நாம் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது ஒரு பணியில் இருந்து இன்னொரு பணிக்கு மாறுவதே ஓய்வெடுப்பது தான்.  இது ஒரு எதிர்பாராத நிகழ்ச்சி - நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

 அங்கு தமிழ்நாட்டில் அய்யா பிச்சினிக்காடு இளங்கோ அவர்களுக்கு ஒரு சிறப்புச் செய்தோம். அப்போது அவரிடம் மலேசியா உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு பற்றி பேசிக் கொண்டிருந்த போது சொன்னார். 'சிங்கப்பூரிலிருந்து பேராளர்களும் வருகிறோம்' என்று சொன்னார்

தமிழ் உணர்வு படைத்தவர்கள்

சிங்கப்பூரிலிருந்து பேராளர்கள் வருவது என்பது செய்தி அல்ல! வரவில்லை என்று சொன்னால்தான் செய்தி! அந்த அளவுக்கு தமிழ் உணர்வு படைத்தவர்கள் இங்கு இருக்கிறார்கள். அந்த மாநாட்டில்தான் எல்லோரையும் நான் சந்திப்பேன் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்திலே, இங்கு இந்த சந்திப்பு நிகழ்வை ஏற்பாடு செய்து நீங்கள் 15 நிமிடம் பேசுங்கள் அதன்பிறகு “கேள்வி பதில்” உரையாடல் என்று சொன்னார்கள் - அது பெரிய மகிழ்ச்சி. 

அதோடு மட்டுமல்ல, நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை  - பெரியார் சமூக சேவை மன்றத்தின் புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு - 18 ஆண்டுகள் நம்முடைய கலைச்செல்வம் இருந்துள்ளார். 

நண்பர்கள் ஏற்கெனவே சொல்லி விட்டார்கள் தந்தை பெரியார் இரண்டு முறை மலேயா வந்துள்ளார்கள், 1929-இல் முதல் முறை வந்தபோது இருந்த தலைமுறை இப்போது இல்லை.  இரண்டாவது முறையாக 1954-1955இல் இங்கு வந்த போது பெரிய அளவுக்கு வரவேற்பு கொடுத்தார்கள், அன்றைக்கு இளைஞர்களாக இருந்தவர்கள் எல்லாம் வயது முதிர்ந்தவர்களாகி அவர்கள் காலத்திற்குப் பிறகு எங்ககளைப் போல் உள்ளவர்கள் சந்திக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டு அதற்கடுத்து பாரம்பரியமாக தொடர்ந்து இருக்கிறார்கள்,  இதில் அரசியல் கிடையாது, மதங்கள் எதுவும் கிடையாது, "யாதும் ஊரே யாவரும் கேளிர்" இதுதான் நம்முடைய பண்பாடு - வேற எந்த உணர்வும் கிடையாது. மனிதர்கள், மனிதம், நட்புறவு அதுதான் முக்கியம் . 

"அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே" என்று சொன்னார் வள்ளலார்.  "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" என்று சொன்னார் வள்ளுவர். 

எல்லா தலைமுறையும் பார்க்கக் கூடிய வாய்ப்பு

நாட்டால் நாம் வேறுபட்டவர்களாக இருக்கலாம். ஆனால் நம் வீட்டால் ஒன்றுபட்டவர்கள், பண்பாட்டு அடிப்படையில் நாம் ஒன்றுபட்ட ஒரு குடும்பம்.  அதிலேயும் எனக்கு ஒவ்வொரு குடும்பத்தினரையும் தெரியும். மூன்றாவது தலைமுறையை நான்காவது தலைமுறையை பார்க்கக்கூடிய அளவிற்கு வாய்ப்பு எனக்கு கிடைத்து இருக்கிறது. 2ஜி தாண்டி 3ஜி தாண்டி 4ஜி வரைக்கும் வரக்கூடிய அளவுக்கு எல்லாத் தலைமுறையையும் பார்க்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில்  முருக. சீனிவாசன் அவர்கள், சிங்கப்பூர் நாகரத்தினம் அவர்கள் அதைவிட முக்கியம் நம்முடைய மூர்த்தி அவர்கள் அந்தத் தலைமுறையில் திருமதி மூர்த்தி தான் இருக்காங்க. இப்படி எல்லா தலைமுறையையும் பார்க்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது எனக்கு - ஒரு பெரிய மகிழ்ச்சி.  

இப்போது திருமதி மூர்த்தி இங்கே இருக்கிறார்கள்,  உங்களுக்கு ரொம்ப பேருக்கு அதிசயமாக இருக்கும். மூர்த்தி என்னுடைய வயதைவிட மூத்தவர்! அவங்களுக்கு திருமணம் நான் தான் நடத்தி வைத்தேன்!! உள்ளிக்கோட்டையில். இதை சொன்னவுடன் என் பேரனுக்கு ஆச்சரியமாக என்னய்யா உங்க வயது என்ன? அவர் வயது என்ன? என்றான்.  வயது என்னப்பா வயது,  நமக்கு வயது முக்கியமில்லை - கொள்கை தான் முக்கியம் என்றேன். அந்த வகையில் இன்றைக்கு அடுத்த தலைமுறைகள் இந்த கொள்கையை எடுத்துச் செல்கிறார்கள் மிக முக்கியமாக “பழுது இல்லா விழுதுகள்”. நல்ல ஆலமரத்திற்கு என்ன அடையாளம் என்னவென்றால் பழுது இல்லா விழுதுகள் விடவேண்டும். அந்த வகையில் இந்த விழுதுகள் கூட அரசியல் பதவி என்று எதையும் விரும்பாது. தொண்டறத்தை விதைத்திருக்கிறார்கள்.

எந்த வீழ்ச்சியும் - எந்த தாழ்ச்சியும் கிடையாது

நம்முடைய கலை அவர்கள் சொன்னார் "அய்யா பெயரில் மன்றம்  பதிவு பண்ணி இருக்கிறீர்களா" என்று அதிகாரிகள் கேட்டார்கள். ரொம்ப நாளைக்கு முன்னரே வள்ளுவரே கண்டுபிடிச்ச பெயர் “பெரியார்” என்பது “பெரியாரைத் துணைக்கோடல்” “பெரியாரைப் பிழையாமை” இந்த இரண்டும் வாழ்க்கையில் இருந்தால் அவங்களுக்கு எந்த வீழ்ச்சியும், எந்த தாழ்ச்சியும் கிடையாது - வளர்ச்சிதான் உண்டு என்பது ரொம்ப முக்கியம். அந்த தத்துவம் தான் முக்கியம் நபர் முக்கியம் இல்லை - பெரியார் என்பது தனி நபர் அல்ல, ஏற்றம் மிகு கொள்கை, வாழ்க்கையில் உயரக்கூடிய கொள்கை.

 அண்மையில் தமிழ்நாட்டில் தோழர்கள் என்னிடம் வந்து ஒன்று சொன்னார்கள், முதன்முதலில் பத்து வயதில் சிறுவனாக இருந்தபோது 1943இல் உங்களை மேஜை மீது ஏற்றி தான் பேச வைத்தார்கள், எல்லா ஊர்லேயும் அதுவும் அண்ணாவுக்கு நிதி கொடுத்த கூட்டத்தில் எனக்கு பெரிய வாய்ப்பு! தலைவர்களை முதல் கூட்டத்திலே சந்திப்பதற்கு வாய்ப்பு, தமிழ்நாட்டில் தலைவர்களை உடனடியாக சந்திக்க முடியாது. அப்படி இருக்கையில் அப்போது நான் சிறுவன் எனக்கு அண்ணாவைத் தெரியாது, அண்ணாவுக்கும் என்னை தெரியாது. நான் என் ஆசிரியர் எழுதி கொடுத்ததை பேசினேன். அந்த கூட்டம் 27 ஜுன் 1943இல் நடந்தது என்று அதனை ஞாபகப்படுத்தி இப்ப உங்களுக்கு 90 வயசு ஆகுது, இதில் உங்களுக்கு 80 வயது பொது வாழ்க்கை அதனால உங்களுக்கு 90-இல் 80 என்ற நிகழ்ச்சி நடத்த உள்ளோம் என்று வற்புறுத்தினாங்க.. எனக்கு இதிலெல்லாம் உடன்பாடு இல்லை. நான் எனக்கு வயசாயிடுச்சு என்று ஒத்துக்கறதே  இல்லை, அந்த உணர்வே எனக்கு வரவில்லை - ஏன்னா நான் வேலை செய்து கொண்டே இருக்கிறேன்.. வயசாயிடுச்சு, வயசாயிடுச் சின்னு   என்னை உட்கார வைக்கிறீர்களா? என்று நான் கேட்பேன்.. ஏன்னா நான் தலைவராய் ஏற்றுக் கொண்டு இருப்பது 94 வயது பெரியாரை - அவரே இளைஞர் தான். 

வயதில் அறிவில் முதியவர்,

வாய்மைப் போருக்கு என்றும் இளையார்

“தொல்லுலக மக்களெல்லாம்”

உயர் எண்ணங்கள் மலரும் சோலை" என்று புரட்சிக் கவிஞர் சொன்னது. அப்படிப்பட்ட அளவிற்கு உணர்வு இருக்க வேண்டும் என்று சொல்கிற நேரத்திலே.. எல்லாரும் அந்த நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்று என்னை வற்புறுத்தினாங்க! கடைசியா நான் ஒத்துக் கொண்டேன், காரணம் என்னவென்றால் அந்த தலைப்பு நல்ல தலைப்பு "90-இல் 80 என்பது ஒரு நல்ல தலைப்பு - இதை வைத்து ஒரு செய்தியை சொல்ல வேண்டும் என்று தான் ஒத்துக்கிட்டேன் என்று என்னுடைய ஏற்பு முறையில் சொன்னேன் (தமிழ்நாட்டில்). அது என்னவென்றால் இந்த 90 எப்படி கிடைத்தது? எனக்கு அய்ந்து ஆறு தடவை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துள்ளேன், எனக்கு உடம்பில் மருத்துவக் கத்தி படாத இடமே இல்லை.. அதே மாதிரி என்னுடைய வாழ்க்கையில கொள்கைக்காக நாலஞ்சு தடவை தப்பித்துள்ளேன்.. வாழ்க்கையில இதெல்லாம் தாண்டி தொண்ணூறு வயதுன்னு நீங்க நினைவூட்டுறீங்க! நான் நினைவு வைத்துக் கொள்வதில்லை. ஆனால், இந்த 90 எப்படி வந்தது என்றால்? காரணம் இந்த 80தால் தான் எனக்கு 90 - தொடர்ந்து பணியாற்றித் தொண்டு செய்தால் அவர்கள் என்றைக்கும் இளமை ஆக இருப்பார்கள் என்பதை தெரிந்துக்கொண்டு..  நீங்களும் உங்கள் பங்களிப்புக்கு உங்கள் சுயநல வாழ்க்கை, தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வாழ்வு என்ற கடுகு உள்ளம் இல்லாமல் “தொல்லுலக மக்களெல்லாம்” நம்முடைய மக்கள் என்று பெருவாழ்வு வாழக்கூடிய அள வுக்கு வாழுங்கள்.. இதனை இளைஞர்களுக்கு சொல்வதற்காகத் தான் நான் ஒத்துக் கொண்டேன் என்று சொன்னேன். 

தந்தை பெரியார் ரொம்ப நாளைக்கு முன்னாடி சொன்னார். "நான் வாலிபர் என்று ஒருத்தரை சொல்வதற்கு காரணம் வயதை வைத்து சொல்வதில்லை.. நான் வாலிபர் என்று ஒருவரை சொல்வது அவர் கொள்கையை வைத்துதான். அவர் எந்த அளவுக்கு வலிமையாக பின்பற்றுகிறாரோ அவரைதான் சொல்கிறேன்" என்று சொன்னார்.

எந்த தனித்த சிந்தனையாளரும் 



வாழ்க்கையில் மனிதர்கள், சக மனிதர்கள் எல்லோரும் ஒன்றானவர்கள் - இதுதான் மிக முக்கியம், இதில் வேற்றுமை கிடையாது நாட்டால் வேறுபடலாம், மொழியால் வேறுபடலாம், எல்லாவற்றையும் தாண்டி பெரியார் என்று தத்துவத்தால் ஒன்று படலாம்.  பெரியார் சொன்னார் - ஒரே வார்த்தை, வேறு எந்த தனித்த சிந்தனையாளரும் அப்படி சொன்னதே இல்லை, எனக்கு எந்தப் பற்றும் இல்லை என்று ஒரு தத்துவ ஞானியாகச் சொன்னார்.  உங்களுக்கு வேறு எந்தப் பற்று உண்டு என்று கேட்டால். உண்டு அது “வளர்ச்சிப் பற்று “ “அறிவுப் பற்று” என்று சொன்னார். இதுதான் எனக்கு முக்கியம். அது வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும், ஓவ்வொரு நாட்டுக்கும் ஒரு மாதிரி இருக்கும் ஆனால் அதில் பேதம் இருக்கக் கூடாது, பேதமில்லா பெருவாழ்வு, சமத்துவ வாழ்வு, சம வாய்ப்பு அவ்வளவுதான் இருக்க வேண்டும். அதன் பிறகு உயர்ந்தவர், தாழ்ந்தவர், படித்தவர், படிக்காதவர் பணக்காரர் ஏழை இதில் எந்த பேதம் இல்லாமல் இருக்க வேண்டும்.

மனிதர்கள் எல்லோரும் சமமான மனிதர்கள். 

மனிதம் மனிதர்களுக்கு மிக முக்கியமானது.

மனிதமில்லா மனிதர்கள் உண்மையான மனிதர்கள் அல்ல.  

பெரியார் என்ற கைத்தடி உள்ளது

இந்த கொள்கையை நாம் ஏற்றதினால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், உற்சாகமா இருக்கிறேன். 90-இல் இன்னும் எனக்கு கைத்தடி தேவையில்லை.  ஏற்கெனவே எனக்கு பலமான பெரியார் என்ற கைத்தடி உள்ளது.  ஆகவே இன்றைக்கு உங்களை எல்லாம் சந்திப்பது மகிழ்ச்சி.

நான் எப்போது இங்கு வந்தாலும் உங்களை எல்லாம் சந்திப்போம்,  அன்பழகன் சொன்னார் அவர் தான் என்னை புத்தகக் கடைக்கு அழைத்து செல்வார். அவர் தான் எனக்கு பார்த்தசாரதி. அதுபோல, நம்முடைய கலை அழைத்துச் செல்வார். அதுபோல நம்முடைய இலியாஸ் கடைக்கு செல்வேன், ஒவ்வொருவரையும் தனித்தனியா சந்திப்பேன். புதிய நிலா ஜஹாங்கீர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு விழா எடுக்கும் ரெத்தின வெங்கடேசன் இவர்களை எல்லாம் பார்ப்போம், நலன் விசாரிப்பேன்.  ஆனால் இந்த முறை அந்த வாய்ப்பு இருக்காது என்று நினைத்த நேரத்தில் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்கிறோம் என்று சொன்னார்கள். எனக்கு ரொம்ப மகிழ்ச்சி காரணம் உறவு என்பது எனக்கு கொள்கை உறவுதான் முதலில் முக்கியம், இரத்த உறவு என்பது எங்களுக்கெல்லாம் பின்னால்தான். கொள்கை உறவு என்றால் என்னவென்றால் சமத்துவம் சம வாய்ப்பு மனிதம் எல்லோருக்கும் எல்லாம்-  மதம் ஜாதி, கட்சி, என்று எதுவுமே நம்மை பிரிக்கக் கூடாது நாம் அன்போடு இருக்க வேண்டும்... அந்த வகையில் கரோனா என்ற இந்த கொடுந்தொற்றுக் காலத்தில் எல்லோரையும் நேரடியாக சந்திக்க முடியாத சூழலை கடந்து மீண்டும் இங்கு வந்தவுடன் எனக்கு ஒரு பெரிய வாய்ப்பாக இவ்வளவு பேரை நான் சந்திப்பேன் என்று நினைக்கவே இல்லை. 

தொண்டை பற்றி பெரியார் கருத்து 

தோழர்களுக்கு ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்கிறேன்.. தன்னம்பிக்கை, தன்மானம் அதைத் தாண்டி இனம் மானம் எந்த நிலையில் இருந்தாலும் தொண்டு செய்ய வேண்டும். இந்தத் தொண்டை பற்றி பெரியார் அய்யா அவர்களுடைய ஒரே ஒரு கருத்தை சொல்லி இந்த சந்திப்பு உரையை நிறைவு செய்கிறேன். மிக முக்கியமான ஒரு செய்தி என்னவென்றால் திருக்குறள். 

தவத்திரு குன்றக்குடி அடிகளார் உடன் தந்தை பெரியார் பேசிக் கொண்டிருக்கும் போது. அடிகளார் அவர்கள் பெரியார் அவர்களிடம் 1300 குறள்களில் உங்களுக்கு  பிடித்த குறள் என்ன என்று கேட்டார்? 

பெரியார் சொல்கிறார் நான் 1300 குறள்களையும் படித்திருக்கேன். ஆனால் எனக்கு ரொம்ப பிடித்த குறள் சுவாமிகள் கேட்டதனால் சொல்கிறேன் (பெரியார் அவர்கள் குன்றக்குடி அடிகளாரை சுவாமிகள் என்று மரியாதையுடன் அழைப்பார்) 

"குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து

மானங் கருதக் கெடும்."

 என்ற குறளை சொன்னார். இதுதாங்க தொண்டுக்கு இலக்கணம்.

தொண்டுக்கு இலக்கணம் என்னவென்றால் சமூகத்துக்காக செய்யணும் அப்படி உழைக்கிறவர்களுக்கு, பொதுத்தொண்டு செய்ய வரக்கூடியவர்களுக்கு பொது வாழ்க்கைக்கு வரக்கூடியவர்களுக்கு எது முக்கியமானது என்றால்? நேரம் காலம் முக்கியமே இல்லை, “குடிசெய்வார்க் கில்லை பருவம்” குடிமக்களுக்காக தொண்டு செய்பவர்களுக்கு பாடுபடுபவர்களுக்கு பருவம் கிடையாது கோடை காலமா, குளிர்காலமா, நல்ல வாய்ப்பா, கெட்ட வாய்ப்பா, நோய்காலமா, நோய் இல்லாத காலமா? அது போல் எந்த பருவமும் இல்லை.

அதுபோல் மடிசெய்து மானங் கருதக் கெடும்.. 

மானம் ரொம்ப முக்கியம் என்று பெரியாரும், வள்ளுவரும் இருவருமே சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அந்த மானத்தைக்கூட விடவேண்டும் தொண்டு செய்யும் போது பொதுக் காரியம் செய்யும் போது என்று சொல்கிறார்கள்.. பொதுத் தொண்டு செய்யும் போது உன்னுடைய தனி மானம் முக்கியமல்ல, சமூகத்தினுடைய வளர்ச்சிதான் மிக முக்கியம் சமூகம்தான் மிக முக்கியம் அதற்காக மானத்தை பார்க்காதே என்று மானத்தைப் பற்றிய பேசிய ஒருவர். அதற்காக ஒரு இயக்கத்தை உருவாக்கியவர், மானத்தை பார்க்காதே என்று சொன்னார். 

கெட்ட பெயர் எடுக்கறவங்க எல்லாம் என்கிட்ட வாங்க

மேலிருந்து பார்த்தால் ஒரு முரண்பாடு மாதிரி தெரியும் ஆனால் உள்ளே போய் பார்க்கும் போது, மானத்தை எப்போது பார்க்கக் கூடாது? பொதுக் காரியம் செய்யும் போது - எனக்காக ஒரு வெள்ளி கொடுங்க அப்படின்னு கேட்டால் - அய்யோ மரியாதை போச்சு என்று பிச்சைக்காரன் போல கேட்கிறோமே என்று அர்த்தம். ஆனால் சேவை பண்ணும் போது சேவை மன்றத்துக்காக ஒரு வெள்ளி கொடுங்கன்னு கேட்டால்  அது தவறில்லை. ஆயிரம் முறைகூட கேட்கலாம். சிலபேர் எதிர்த்துக்கூட பேசுவார்கள்,  அதையெல்லாம் கேட்டுக் கொண்டு வரவேண்டியது தான்.. பல பிரச்சினைகள் வரும்.. கெட்டப்பெயர் வரும் அவதூறுகள் வரும் அதனால்தான் பெரியார் அய்யா வித்தியாசமாக சொல்வார் "கெட்ட பெயர் எடுக்கறவங்க எல்லாம் என்கிட்ட வாங்க,  நல்ல பேரு வாங்கணும்  என்று விரும்புகிறவங்க என்கிட்ட வராதீங்க! அப்படியாக வித்தியாசமா சொல்லுவார். 

நல்ல பணிகளை செய்யக் கூடியவர்களுக்குக்கூட கெட்டப்பெயர் வரும் அவதூறுகள் வரும்... அவதூறு சேற்றை வாரி அடிப்பார்கள் ஆனால் அவதூறுகள் வந்தாலும், பழிச்சொற்கள் வந்தாலும் பருவம் பார்க்காமல் நீங்கள் உங்களை பொதுத்தொண்டறத்ததிற்கு அர்ப்பணித்து செய்யுங்கள்.. அதற்காக எதையும் நீங்கள் இழக்கத் தயாராக இருக்க வேண்டும்.  இழக்கக்கூடாது என்று ஒன்று இருக்கும் என்றால் மனிதனுக்கு அது மானம்,  அந்த மானத்தைக்கூட இழந்து விட்டு சமுதாயத்துக்கு தொண்டு செய்யுங்கள் என்று வள்ளுவர் அவர்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார்கள் என்றால் இந்த மாதிரி ஒரு சிந்தனையாளர்களை சமூகம் பெற்றதில்லை. இந்த இனம் பெற்றிருக்கிறது - இந்த மொழி பெற்றிருக்கிறது என்றால் அந்த இனமும், மொழியும்  அறிவுப்பற்றினால் பாராட்டக்கூடியது - வெறும் மொழிப்பற்றுக்காக அல்ல, அறிவுப் பற்றுடன் இருக்கிறார்கள், வளர்ச்சி பெற்று இருக்கிறார்கள் அதனால் தான் இன்றைக்கு எல்லாரும் செய்றாங்க, நம்முடைய அய்யா முஸ்தபா வந்திருக்கிறார் என்றால் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் அவர் பாட்டுக்கு ஒரு படிப்பகத்தைக் கட்டி ஏற்பாடு பண்ணி, பள்ளிக்கூடத்தை ஏற்பாடு பண்ணி செய்கிறார்கள். அதுக்கு ஒரு பெரிய விளம்பரத்தையும் அவர் கொடுக்கவில்லை.  தன் பெண்டு, தன் பிள்ளை என்று இல்லாமல், நாம் மட்டுமே வாழ்ந்தோம் என்று இருக்க கூடாது.

கொள்கை என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது 

தொண்டறம் என்பது மிக முக்கியம், மனிதனுக்கு தொண்டு செய்ய வேண்டும். ஆகவே மனிதன் தொண்டு செய்யணும், அந்த தொண்டு மற்றவர்களை உயர்த்துவதற்கு இருக்கணும் சமப்படுத்துவதற்கு இருக்கணும், அனைவருக்கும் வாய்ப்புகள் வர வேண்டும் - என்ற கொள்கையால் ஈர்க்கப்பட்ட காரணத்தினால் அன்று முதல் இன்று வரை இந்தக் கொள்கை என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது - என்னை இளமையாக வைத்திருக்கிறது - நீங்களும் இளமையாக வேண்டும் - இந்த கொள்கையை பின்பற்றுங்கள். இந்தக் கொள்கை யாருக்கும் எதிரானது அல்ல, யாருக்கும் வெறுப்பைத் தூண்டுவது அல்ல, யாருக்கும் மறுப்பை சொல்ல வேண்டும் என்பதல்ல, இந்த கொள்கை மனிதனுக்கு அன்பை, ஒற்றுமையை, சிறந்த முன்னேற்றத்தை, வளர்ச்சியை நோக்கி, தளர்ச்சியை நீக்கி போகக்கூடிய ஒரு அற்புதமான ஒரு வழிமுறை. ஆகவே தான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தொண்டு செய்யுங்கள். தொண்டு செய்வதற்கு பெரிய அமைப்பில் தான் சேர்ந்திருக்க வேண்டும் என்று இல்லை, அமைப்பு இருந்தால் நல்ல பலமாக இருக்கும், அமைப்பு இல்லை என்றால் கூட பரவாயில்லை. இன்றைக்கு இரவு படுக்கும்போது மகிழ்ச்சியாக தூங்க நாம் என்ன செய்ய வேண்டுமென்றால் யாருக்கு என்ன உதவி செய்திருக்கிறோம் என்று எண்ணிப் பாருங்கள். அய்யா நான் இன்றைக்கு இவருக்கு நான் இந்த உதவி செய்தேன் அவர் மகிழ்ச்சியடைகிறார். அவருக்கு முடிந்த அளவுக்கு நாம் செய்தோம், நம்மால் நம் சக்திக்கு செய்தோம் - என்று நினைக்கும் போது அந்த மகிழ்ச்சிக்கு ஈடு வேறு எந்த லாபத்திற்கும் கிடையாது. எனவே அதற்குத்தான் பருவம் இல்லை. அதற்குத் தான் உருவம் இல்லை அதற்குத் தான் நேரம் காலம் கிடையாது. எந்த நேரமும் செய்யலாம். ஒருத்தருக்கு உதவி பண்ண வேண்டும். அவர் நடு ரோட்டில் கிடக்கிறார் அவருக்கு உதவி பண்ணுகிறோம் என்றால் அதற்கு நேரம் காலம் கிடையாது. ஆகவே அந்தப் பணியை நாம் செய்வதால் நாம் எத்தனை நண்பர்களை  பெற்று இருக்கிறோம்.

நட்புறவுடன் பழகவேண்டும்

நாம் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மனிதரும் நட்புறவுடன் பழகவேண்டும், எல்லோரும் என்னுடைய கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்களும் இல்லை, அவர்கள் கொள்கையை நான் ஏற்றுக் கொண்டவனும் இல்லை. அவரவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கை முக்கியம். ஆனால் அவர்களுக்குத் தோன்றிய முறையில் அவர்கள் பணி செய்யும்போது, நாம் எல்லோரும் ஒரே வட்டத்தில் ஒரே மய்யப் புள்ளியில் இருக்கிறோம். அந்த மய்யப்புள்ளி விரிவடையட்டும் மனிதம் ஓங்கட்டும் வாழ்க பெரியார்!  வளர்க பகுத்தறிவு!  நன்றி வணக்கம்! என்று கூறி ஆசிரியர் அய்யா தன்னுடைய உரையை நிறைவுசெய்தார்.

இதன் பிறகு சுமார் 30 நிமிடம் கேள்வி பதில் அரங்கம் இடம் பெற்றது. அதில் பல்வேறு கேள்விகளுக்கு ஆசிரியர்  பதில் அளித்து உரையாற்றினார். (கேள்வி பதில் அரங்கத்தில் ஆசிரியரின் உரை தனியாக விடுதலையில் விரைவில்  வெளிவரும்)

பங்கேற்றோர்

நிகழ்ச்சியில் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா. ஆண்டியப்பன் புதிய நிலா ஜஹாங்கீர், சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களத்தின் தலைவர் முனைவர் ரத்தின வெங்கடேசன், ஆசிரியர் உஷா, சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தின் தலைவர் செல்வராஜ், சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவர் தொழிலதிபர் அ. முகமது பிலால், தமிழவேள் நற்பணி மன்றத்தின் செயலாளர் எம் இலியாஸ், பிச்சுனிக்காடு இளங்கோ, தொழிலதிபர் முஸ்தபா, சிங்கப்பூர் நாகப்பட்டினம் சங்கத்தின் தலைவர் எஸ் ஜே சதிக், கவிமாலை அமைப்பின் மதியுரைஞர் இறை.மதியழகன். சிங்கப்பூர் தமிழ் பட்டிமன்ற கழகத்தின் தலைவர் ரஜீத், சிங்கப்பூர் அப்துல் கலாம் இலட்சியக் கழகத்தின் துணைத் தலைவர் திரு அருமைச்சந்திரன், தொழிலதிபர் சீனி ஜாபர் கனி, வள்ளியப்பன், அண்ணாமலை பல்கலைக் கழக மேனாள் மாணவர்கள் சங்கத்தின் ஆலோசகர்  மூர்த்தி, கவிஞர் க.து.மு.இக்பால், பெரியார் சமூக சேவை மன்ற உறுப்பினர்கள் திருமதி சுசிலா மூர்த்தி, திருமதி மலையரசி, நா. மாறன், இராஜராஜன், கவிதா மாறன், வானதி ,வளவன், சவுந்தர், குமரப்பன், குடியரசி, பி.மதியழகன், சேது ஜகதீசன், ஜகன்தங்கதுரை, அசிரியை லீலாராணி, சங்கர்நாராயணன் மற்றும் பலர் கலந்துக்கொண்டார்கள்.

தமிழ் உணர்வாளர்கள் அய்யா அவர்களுக்கு சிறப்பு செய்து ஓளிப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

சிங்கப்பூரில் உள்ள திராவிடர் இயக்க பற்றாளர்கள் நரசிம்மன் நரேஷ், கிரிஙி அரிஃப்,  கார்த்திக் ராமசாமி, இராஜராஜன், செல்வபூபதி, பிரதாப் எஸ்.பாண்டியன், வாசுதேவன், கலைச்செல்வி, செல்வா, பாலா, விக்கி, சிவா, லோகநாதன், பிரபாகரன், தரணி, பரசுராமன், அமல்ராஜ் இன்னும் பல தோழர்கள் ஆசிரியருக்கு சிறப்பு செய்து “கலைஞர் பேனா” சிலையை நினைவுப் பரிசு அளித்து ஒளிப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

இறுதியாக அனைவரும் இரவு உணவு உண்டு விருந்தோம்பலுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

செய்தி: க.பூபாலன் சிங்கப்பூர்.


No comments:

Post a Comment