கள்ளக்குறிச்சி பயிற்சிப் பட்டறை தாய்க்குத் திருமணம் செய்து வைத்த இரண்டு பிள்ளைகள்! - வி.சி.வில்வம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 25, 2023

கள்ளக்குறிச்சி பயிற்சிப் பட்டறை தாய்க்குத் திருமணம் செய்து வைத்த இரண்டு பிள்ளைகள்! - வி.சி.வில்வம்

திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 23.7.2023 அன்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது.

"எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன் என்பதைவிட, நாம் சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்வோம்", எனத் தொடங்கினார் பேராசிரியர் முனைவர் எழில்.

"பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகளைப் பேச சொன்னார்கள். இந்த அரங்கிலும் பெண்கள் அதிகம் இருப்பதில் மகிழ்ச்சி!

நாங்கள் பட்டதாரிகள் ஆகியே தீருவோம்! "உங்கள் வீடுகளில் எத்தனை அம்மா, அப்பாக்கள்  பட்டதாரிகள்?", எனும் கேள்வியை முதலில் முன்வைத்தார். 55 மாணவர் களில் ஒருவரும் கை உயர்த்தவில்லை. ஆக நம் குடும்பத்தில் அம்மா, அப்பாவிற்கே படிக்க வாய்ப்பில்லாத போது தாத்தா, ஆயா காலங்களில் வாய்ப்பே இருந்திருக்காது. ஆனால் நீங்கள் அனைவரும் நிச்சயமாகப்   பட்டதாரிகள் ஆகிவிடுவீர்கள், இதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா எனக் கேட்க, மாணவர்கள் அனைவரும் நாங்கள் பட்டதாரி கள் ஆகியே தீருவோம் என முழக்கமிட்டனர். இரண்டு தலை முறைக்கு முன்பு நம் அம்மாவுக்குக்  கிடைக்காத வாய்ப்பு, நமக்கு எப்படி கிடைத்தது என்றால், அதுதான் பெரியாரின் பெண்ணுரிமைக்கு கிடைத்த வெற்றி!

பெண் விடுதலை குறித்துப் பாரதியார் பாடினார், உடன் கட்டை ஏறுவதை இராஜாராம் மோகன்ராய் எதிர்த்தார் என்றெல்லாம் சொல்வார்கள். சில தலைவர்கள் ஓரிரு விசயங்கள் பேசியிருந்தாலும்,  பெரியார் கொள்கைக்கு அது இணையாகாது.

பெண்களின் பிரச்சினைகளை அறிந்தார், அதுகுறித்து சிந்தித்தார், போராடினர், தீர்வு கண்டார், அதில் வெற்றியும் பெற்றார்!

அகற்றப்பட வேண்டியவை! கொடுக்கப்பட வேண்டியவை!

பெண் விடுதலை என்பதன் மறுபதம் பெண் அடிமை! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனுதர்மம் தான் இங்கு  சட்ட நூல். அதில் பெண்கள் பாவப் பிறவிகள். இள மையில் தந்தையும், திருமணத்தில் கணவரும், வயதானால் மகனும் பார்த்துக் கொள்வார்கள். சொந்தமாக முடிவெடுக்கக் கூடாது, சுயமாக வாழக் கூடாது என்கிறார் மனு! இன்றைக்குக் கூட, அப்பா தவறிய வீடுகளில் அம்மா பெயர் எழுதி, திருமண அழைப்பிதழ் கொடுக்க மாட்டார்கள். பிள்ளைகள் பெயர்களை எழுதுவார்கள். கைம்பெண் அம்மாவுக்கு இந்து மதத்தில் அவ்வளவுதான் மரியாதை!

பெரியார் பெண்கள் முன்னேற்றத்தை இரண்டு வகை யாகப் பார்த்தார். ஒன்று அகற்றப்பட வேண்டியவை. மற் றொன்று கொடுக்கப்பட வேண்டியவை. காலம் காலமாகப் பெண்கள் அடிமையாக இருப்பதற்கு எது காரணமோ அவை அகற்றப்பட வேண்டும். எவற்றையெல்லாம் கொடுத் தால் முன்னேறுவார்களோ, அவை கொடுக்கப்பட வேண்டும்! அகற்றப்பட வேண்டிய சில செய்திகளைப் பார்ப்போம். 

பெண்களை அடகு வைத்த இந்து மதம்!

இளம் வயது திருமணத்தை இந்து மதம் ஆதரிக்கிறது. பெண்களின் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம், சுயதன்மை, மகிழ்ச்சி என அனைத்தையும் குடும்பத்திற்குள் போட்டு அமுக்கி விடுகிறார்கள். பெண்களின் திருமண வயதை உயர்த்த வேண்டும் என 1929 ஆம் ஆண்டிலேயே சொன்னவர் தந்தை பெரியார்.

அப்போதுதான் மனதளவிலும், உடல் அளவிலும் அவர்கள் தயாராவார்கள். இணையரை தேர்ந்தெடுக்கும் பக்குவமும் பெறுவார்கள்!

பெண்களை வீட்டில் உள்ள "பண்டம்" போல பாவிக்கிறார்கள். அரிச்சந்திரா நாடகம், மகாபாரதம் போன்றவற்றில் மனைவியை அடமானம் வைப்பது போல கதையமைப்பு இருக்கும். பொருளாதார சிரமம் இருந்தால் நம் வீட்டில் "அண்டா, குண்டாவை" அடகு வைப்போம் அல்லவா? அதேபோல ஒரு பொருளாக நினைத்துப் பெண்களையும் அடகு வைக்கும் கேவலத்தை இந்து மதம் செய்கிறது.

மஞ்சள் கயிறைக் கழட்டி வீசிய கதாநாயகி!

அதேபோல தாலி எனும் அடிமைச் சின்னம். இதற்குப் புனிதப் பொருள் என்ற பெயரும் உண்டு. பெண்களின் எல்லா "செண்டிமெண்டும்" தாலியில் வந்துதான் முடியும். பெண்கள் மனதால் கூட வேறு ஆண்களை நினைக்கக் கூடாது என்பதற்கு இந்தக் கயிறுதான் பாதுகாப்பு. வியப்பான ஒரு செய்தி என்னவென்றால் "எதிர்நீச்சல்" என்றொரு தொடர் தொலைக்காட்சியில் வருகிறது. அதில் கதாநாயகி யின் தோழியாக வரும் அன்பரசி எனது மாணவி ஆவார். அதில் கதாநாயகிக்கு ஒருவர் கோயிலில் வைத்து, வலுக் கட்டாயமாக தாலி கட்டிவிடுவார். "ஒரு மஞ்சள் கயிறை கட்டிவிட்டால், நீ என் கணவர் ஆகிவிடுவாயா?', என்று கூறி, தாலியைக் கழற்றி எறிந்துவிடுவார். இந்தக் காட்சிதான் தமிழ்நாட்டில் பெரியார் வென்றதற்கான சாட்சி!

பெண்ணுரிமை என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல. மாறாக பெண் விடுதலையே ஆண்களுக்கான பாதுகாப்பு! 

தலைமுடி நீளமாக இருப்பதை அழகு என்கிறார்கள். சாரைப் பாம்பு போல சடை இருக்க வேண்டும்; முடி குறைந்தால் சவரி முடி சேர்க்க வேண்டும் என நினைக்கிறார்கள். பெண்களுக்கு இவையெல்லாம் தேவையில்லாத ஒன்று. அவர்கள் ஆண்களைப் போல "கிராப்" வெட்டிக் கொள்ள வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் கூறினார். இன்றைக்குப் பெண்கள் பலரும் முடி வெட்டி, பேண்ட், சட்டை அணிந்து கம்பீரமாகச் செல் கிறார்கள்.

"புல்லட்" ஓட்டும் பெண்கள்!

அதேபோல பெண்கள் "சைக்கிள்" ஒட்டினாலே  வேடிக்கைப் பார்ப்பதும், கேலி செய்வதும் நடைமுறையில் இருந்தது. ஆண்கள், பெண்கள் எனத் தனித்தனி "சைக்கிள் கள்" இருக்கும். பின்னர் இரு சக்கர வாகனங்கள் வந்தன. அதிலும் இரண்டு வகைகள் வந்தன. எல்லாவற்றையும் கடந்து இன்றைக்குப் பெண்கள் "புல்லட்" ஓட்டிச் செல் கிறார்கள். பெரியார் சொன்னதைக் கேட்காமல் புடவையைச் சுற்றிக் கொண்டு இருந்தால், இது நடந்திருக்குமா? மேலே கூறியவை எல்லாம் அகற்றப்பட வேண்டியவை.

கொடுக்கப்பட வேண்டியவை பட்டியலில் கல்வி, சொத்துரிமை, மறுமணம் உள்ளிட்ட பலவும் வரும். பெண்களுக்குக் கல்வி கொடு, வேலை வாய்ப்பைக் கொடு, அதுவும் காவல்துறை, இராணுவத்தில் கொடு என்றார் பெரியார். சாலையில் ஒரு ஆண் காவலரைப்  பார்த்தால் ஒரு மரியாதை, அது கலந்த பயம் வருகிறது. காரணம் அந்தக் காவலருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று பெண்கள் நிலையும் உயர வேண்டும் எனப் பலப்பல ஆண்டுகள் முன்னால் பேசியவர் பெரியார்.

முதலமைச்சராக இருந்த கலைஞர் அதைச் செய்து காட்டினார். வீட்டில் குழந்தைகளை இரண்டாகப் பிரிப் பார்கள். ஆஸ்திக்கு ஒன்று என ஆணையும், ஆசைக்கு ஒன்று எனப் பெண்ணையும் கூறுவார்கள். அதாவது குடும்பச் சொத்தை அனுபவிக்க ஆணும், ஆசையாய்  கொஞ்சுவதற்குப் பெண் குழந்தை எனவும் சொல்வார்கள். அந்தப் பழம்பெரும் சிந்தனையை உடைத்து, பெண்களுக் கும் சொத்துரிமை எனத் தீர்மானம் போட்டு போராடினர் பெரியார். அதையும் கலைஞர் சட்டமாக்கினார்.

தாய்க்குத் திருமணம்  செய்த பிள்ளைகள்!

கணவரை இழந்த பெண்ணுக்கு மறுமணம் வேண்டும் என்றார். அதையும் தம் வீட்டில் இருந்தே தொடங்கினார். இன்றைக்கு கள்ளக்குறிச்சி, வளையப்பட்டு அருகே பாஸ்கர், விவேக் என்கிற இரண்டு இளைஞர்கள், தம் அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்திருக்கிறார்கள். பத்திரிகையாளர்கள் கேட்டபோது, "பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைக ளைப் படித்தோம். அம்மாவிடமும் எடுத்துக் கூறி, திருமணம் முடித்தோம் என்கிறார்கள் அவ்விரு மகன்களும்! மகன்கள் தான் வாழ்க்கை என்று அடிக்கடி சொல்வார்கள், ஆனால் அவர்களுக்கும் இனி ஒரு வாழ்க்கை இருக்கிறது என்றார்கள். தமிழ்நாட்டைப் பெரியார் சிந்தனைகள் தான் ஆளும் என்பது தொடர்ந்து நிரூபணம் ஆகிவருகிறது", என முனைவர் எழில் பேசினார்.

நிகழ்ச்சித் தொடக்கம்!

முன்னதாக ஜெயகோவிந்த் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்வில் கழகக் காப்பாளர் ம.சுப்பு ராயன் தலைமை வகித்தார். திராவிடர் மாணவர் கழக மாநிலத் துணைச் செயலாளர் திராவிடப் புகழ் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் கோ.சா.பாஸ்கர், செயலா ளர் ச.சுந்தர்ராஜன், அமைப்பாளர் த.பெரியசாமி, மாவட்ட மகளிரணி தலைவர் கூ.பழனியம்மாள், ஒன்றியத் தலைவர் செல்வ.சக்திவேல், மாவட்ட இளைஞரணி தலைவர் அ.கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் தொடக்க உரை ஆற்றினார்.

தலைப்பும், வகுப்பும்!

தந்தை பெரியார் ஓர் அறிமுகம் என்கிற தலைப்பில் முனைவர் துரை.சந்திரசேகரன், கடவுள் மறுப்புத் தத்துவ விளக்கம் எனும் தலைப்பில் முனைவர் க. அன்பழகன், சமூக ஊடகங்களில் நமது பங்கு என்கிற தலைப்பில் மா.அழகிரிசாமி, தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் எனும் தலைப்பில் முனைவர் எழில், ஊடகத் துறையில் தடம் பதித்த திராவிடர் இயக்கம் என்கிற தலைப்பில் வி.சி.வில்வம், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள் எனும் தலைப்பில் முனைவர் க.அன்பழகன், பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு என்கிற தலைப்பில் சு.அறிவுக் கரசு ஆகியோர் வகுப்பெடுத்தனர்.

திராவிட கழக மாநில ஒருங்கிணைப்பாளரும், பெரியார் பயிற்சிப் பட்டறைப் பொறுப்பாளருமான இரா.ஜெயக்குமார் சிறப்பாக ஏற்பாடு செய்த கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் பயிற்சியில் பங்கேற்றுச் சிறப்பித்த மாணவர்களையும் பாராட்டி உரையாற்றினார். வகுப்பில் சிறப்பாகக் குறிப் பெடுத்த மூன்று மாணவர்கள் தேர்ந்தெடுந்தக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன. கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் குழுப் படம் எடுத்துக் கொண்டனர்.

நிகழ்வில் பங்கேற்றோர்!

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் எழிலரசன், முருகன், அண்ணாத்துரை, திருக்கோவிலூர் ஒன்றிய கழகச் செயலாளர் மு.இளங்கோவன்,  மாவட்ட இலக்கிய அணி தலைவர் பெ.ஜெயராமன், சங்கராபுரம் ஒன்றிய கழகத் தலைவர் பெ.பாலசண்முகம், கள்ளக்குறிச்சி மாவட்ட ப.க தலைவர் வீர.முருகேசன், அமைப்பாளர் சி.முருகன், கல்லை நகரத் தலைவர் இரா.முத்துச்சாமி, வடக்கந்தல் பக அமைப் பாளர் கூ.தமிழரசன், வடக்கந்தல் கழகச் செயலாளர் நா.பெரியார், ரிஷிவந்தியம் ஒன்றியத் கழகத் தலைவர் அர.சண்முகம், மூரார்பாது கழகத் தலைவர் இரா.செல்வமணி, சங்கராபுரம் நகரத் தலைவர் கலை அன்பரசு, ஜம்பை தலைவர் அ.தமிழரசன், கல்லை நகர ப.க அமைப்பாளர் கி.அண்ணாதுரை, ஜம்பை திராவிடர் கழகச் செயலாளர் வை.சேகர் கல்லை மாவட்ட மாணவர் கழக துணைத் தலைவர் திராவிட சசி ஆகியோர் பங்கேற்றனர். நிறைவாக மாவட்ட இளைஞரணி செயலாளர் கே.முத்து வேல் நன்றி கூறினார்


No comments:

Post a Comment