(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
யார் இந்த ஜகத்குரு?
தமிழாக்கம்: பொன்மலை பதி
கீழ்வரும் உரையாடல் ஓர் உண்மை விளக்கமாகும். கற்பனையன்று. இதற்கு ஆதாரம் இதிகாசத்தில் உள்ளது. இதைப் பற்றிய குறிப்பு "சங்கர் திக்விஜயம்" நூலில் ஆறாவது சரக்கத்தில் 25-39ஆவது சுலோகங் களில் காணலாம்.
இதை திரு.வீரேந்திர மாளவியா ஹிந்தியில் மொழி பெயர்த்தார். அதை அப்படியே திரு.சாந்தராம் (பஞ்சாப்) தமது "ஹமாரா சமாஜ்" என்னும் நூலில் ஒன்பதாவது அத்தியாயத்தில் ஒரு பக்கமாக "பங்கிகா தத்துவ ஞான" என்னும் தலைப்பில் பக்கம் 72-32இல் எடுத்து வழங்கியுள்ளார். அதை அப்படியே தமிழில் கீழே தரப்படுகிறது.
ஏய்! ஏய்! யாருடா அவன்? காது என்ன செவிடா?
என்னங்கோ மகராஜ்? என்று தெருக்கூட்டுவதை நிறுத்தி விட்டுக் கேட்டான்.
ஓடி ஒளிந்துகொள்!
நீ உடனே இந்த இடத்தை விட்டு விலகி ஓடிவிட வேண்டும் ஓடு! எங்கேயாவது சந்து பொந்தில் ஓடி ஒளிந்து கொள்! உம்! ஓடு! ஓடி விடு!
ஏன்? எதற்காக?
ஜகத்குரு சங்கராச்சாரியார் எழுந்தருளிக் கொண்டி ருப்பது உனக்குத் தெரியவில்லையா? பேச நேரமில்லை விலகு, விலகி ஓடி விடு!
இருந்தால் என்னவாகும்? வரட்டுமே! அதற்காக நான் ஏன் ஓடி ஒளிந்துகொள்ள வேண்டும்? என்னை அவர் கண்ணுக்குத் தெரியாமல் ஓடி ஒளிந்து கொள் ளும்படி, நேர் உத்தரவு ஏதாவது பிறப்பித்தாரா?
ஆமாம்! ஜல்தி ஓடித் தொலை.
சரி! அவர் ஏன் என்னைத் தலைமறைவாக ஓடும் படி உத்தரவு இடவேண்டும்?
நீ சூத்திரன்! அதனால்,
நான் நேரில் அவரிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும்.
கேள்விகள் கேட்க வேண்டுமா? என்ன விந்தை! அது ஒருக்காலும் முடியாத காரியம். வீணே தர்க்கம் ஆடாதே! அவரிடம் பேச உனக்கு யோக்கியதையோ, அதிகாரமோ கிடையாது.
ஏன்?
ஹ! ஹ! ஹ! ஹ! நீதான் சூத்திரன் ஆச்சே; உன் முகத்தையே நேருக்கு நேர் அவர் பார்க்க மாட்டார் என்றால் அவரிடம் உரையாடலாவது? பேசாமல் போடா எட்டி!
"தாங்கள் என் உடலிலுள்ள ஆத்மாவைத்தான் வெறுக்கிறீர்களா? அப்படியானால் ஆத்மா, தங்களது சாஸ்திரப் படி பிரமத்துவம் வாய்ந்ததாயிற்றே! அப்பழுக்கற்ற சுத்த பிரமத்துவத்திற்கு விகாரம் அறவே கிடையாதென்பது தாங்கள் அறியாததா? ஆதலால் எனது ஆத்மாவின் மீது தங்களுக்கு வெறுப்பு எழ நியாயமில்லையே?"
"ஜகத்" குருவா?
என்னைப் பார்க்க மாட்டார்! என்னிடம் பேச மாட்டார்! அப்படியானால் அவர் எப்படி "ஜகத் குரு" ஆனார்?
அட! என்ன விசித்திரமான சந்தேகம்! அகில உலகமே அவர் காலடியில் கிடக்கிறது! பெரிய பெரிய நாத்திகச் சூரர்களெல்லாம் அவர் முன் தலை தாழ்ந்து கிடக்கிறார்கள்! சொத்தைச் சுண்டைக்காய் நீ, எம்மாத் திரம்! அவர் ஜகத் குரு தானா என்று நீ சந்தேகப்பட முளைத்து விட்டாயா? போடா அந்தப் பக்கமாக!
மகராஜ்! குறுக்கே ஒரு வார்த்தை; என் மனதில் கிளர்ந்துள்ள சில கேள்விகளுக்கு அவர் பதில் கூறாத வரைக்கும் அவரை "ஜகத்குரு" என்று ஒப்புக் கொள்ளவே முடியாது. ஏனெனில், நானும் இந்த ஜகத்தில்தான் இருக்கிறேன். என் உள்ளத்தில் எண்ணற்ற வினாக்கள் அலை மோதிக் கிடக்கின்றன. அவர் அவைகளுக்கு தக்க விடைகள் அளிக்காத வரையில் அவரை ஒருக்காலும் "ஜகத்குரு" என்று ஏற்றுக்கொள்ளத் தயாராயில்லை.
"என்ன! என்னவாம்! இன்னுமா - அவனை விரட்டி அடித்து ஓட்டவில்லை?... யாரடா நீ? போடா தூரமா! குதர்க்கம் பேச வந்து விட்டானாம்; முகரையைப் பார்! ஓடுடா! கிட்டத்தில் வந்து கொண்டிருக்கிறாரே ஆச்சாரிய சுவாமிகள்! இன்னுமா தாமதம்! ஓடிப்போடா! ஆமாம் ஓடித் தொலையடா!" என்று விரைந்து அடித்துக் கொண்டு வந்து இரண்டாவது 'பிராமணனும்' உறுமினான். கண்கள் சிவக்க கோபத்தால் முகங்கடுக்க கடிந்து பேசினான்! ஏசினான்!
ஆனால் அவன் சிறிதும் மசியவில்லை.
பிராமண இளைஞரே! சற்றுப் பொறுங்கள்! கோபம் உங்கள் முகத்தையே விகாரப்படுத்திக் கோரக் காட்சியை அள்ளி வீசுகிறது! கோபம் விவகாரத்தைத் தீர்த்து வைக்காது!
யாருக்கு உபதேசம்?
ஏலே! அதிகப் பிரசங்கி! பிராமணனுக்கே உபதேசம் செய்யக் கிளம்பி விட்டாயா?உமக்கு யாரே உபதேசஞ் செய்ய வல்லார். நான் உமது பாடத்தைத்தான் திருப்பிப் படித்துக் காட்டுகிறேன். வேறொன்றுமில்லை.
சரி! சரி! நீ இங்கிருந்து தொலைகிறாயா இல்லையா?
ஜகத்குருவினுடைய பல்லக்கு நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.
ஆச்சாரியாரின் திருவடியை நான் காண வேண்டும். கண்டு களித்து சந்தேகங்களை நிவர்த்தி பண்ணிக் கொள்ள வேண்டும்.
அபசகுனம் - பாவம்!
நீ சூத்திரன் என்பதை மறந்து விட்டாயே? உன் முகத்தில் விழிப்பதே அபசகுனம்! அதோடு மகா பாவம்.
இது என்ன ரகளை?... என்று மூன்றாவது பிராம ணனும் முண்டியடித்துக் கொண்டு வந்து பதறினான்! கூட்டம் கூடி விட்டது! அதோ மணியோசை கேட்கிறது. சங்கநாதம் முழங்குகிறது! பல்லக்குப் பரிவாரங்களுடன் ஜகத்குரு எழுந்தருளிக் கொண்டிருக்கிறார். சூத்திரத் தொழிலாளி ஆச்சாரியாரை நோக்கி விரைகிறான்.
ஆச்சாரியரின் சிஷ்யகோடிகள் தீட்டிற்குப் பயந்து ஓடியவாறே தடுத்துப் பார்க்கிறார்கள். முடியவே இல்லை. தொழிலாளி உரத்தக் குரலெடுத்து "ஜகத் குருவைச் சந்திக்க எனக்கு உரிமையுண்டு! என்னை எவரும் தடுத்து நிறுத்திவிட முடியாது!" என்று கூறிக் கொண்டே ஓடுகிறான்.
அவன் குரல் ஆச்சாரியாரின் திருச்செவியிலும் ஒலித்து விட்டது. உடனே வினவினார்: "என்ன அங்கே? யாருடைய குரல் அது? அவனை இங்கே வர விடுங்கள்!" என்று தமது சிஷ்ய கோடிகளுக்குச் சமிக்ஞை காட்டினார்.
"அவன் சூத்திரன்! முரடன்! நீசன்! தங்கள் தரிசனத்திற்குத் தகுதியற்றவன்! ஓடி வருகிறான்! தங்களைக் கண்டு தர்க்கமாடவாம்! உத்தரவு!" என்று ஒதுங்கினார்கள் சிஷ்யர்கள்.
"இல்லை! அவன் சூத்திரனாக எனக்குப் பட வில்லை. அவனது உச்சரிப்பு, சொற்கள் எல்லாம் சுத்தமாக இருக்கின்றன. அவனை இங்கே வர விடுங்கள்" என்றார் சங்கராச்சாரி.
கேள்விக்கணை
சூத்திரனுக்கு வழிவகுத்து விடப்பட்டது. தொழி லாளி ஆச்சாரியாரை அணுகி வணங்கி நோக்கினான். மெல்லக் கேட்டான்.
"சுவாமியே! தாங்கள் என் உள்ளத்தே கிளர்ந்துள்ள சில சந்தேகங்களுக்கு சமாதானம் அளிக்காத வரையில் நான் எப்படி தங்களை "ஜகத்குரு" என்று ஒப்புக் கொள்வது? நானும் இந்த ஜகத்தில் உயிர் வாழ்பவன்தானே?"
"மூடு வாயை!..." என்று குறுக்கே ஒரு பிராமணன் கூவினான்.
"அமைதி! அமைதி! அவனைப் பேச விடுங்கள்!" என்று ஆச்சாரியார் நாவசைக்க, அனைவரும் அடங்கினர்.
"நான் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்?"
"சரி! சரி! கேள்!"
"தாங்கள் என்னை பாதையை விட்டு விலகி ஓடும்படி எதற்காகக் கட்டளையிட்டீர்கள்? அதன் காரணத்தை நான் அறிய வேண்டும்?"
ஆச்சாரியார் இந்தக் கேள்வித் தொனியில் மண்டிக் கிடக்கும் கம்பீர உரிமை வாதத்தை சிந்தையில் ஏற்று அமைதி வடிவப் புன்முறுவலாகச் சிரிப்பதற்குள் குறுக்கே சீறிப் பாய்ந்தது ஒரு பிராமணக் குடுக்கை!
"காரணமா? நீ ஜாதியில் சூத்திரன் என்பதை மறந்து விட்டாயா? சண்டாளா?" என்று சீறிற்று.
அதைப் பொருட்படுத்தாத தொழிலாளி சாதுர்யமாக: "இதனால், சுவாமிகளே! என்மீது உங்களுக்கு வெறுப்பு என்பதாகத்தானே அர்த்தம்?"
"ஆமாம்! அதிலென்ன சந்தேகம்? நீ வெறுத்து ஒதுக்கித் தள்ளப்பட வேண்டியவனே" என்று அதே பிராமணக் குடுக்கை அலறிற்று.
ஆச்சாரியார் கம்பீரத் தோற்றத்திலேயே வீற்றிருக்கிறார். தொழிலாளி தொடர்ந்து கேட்கிறான்.
"எதன்" மீது வெறுப்பு?
"ஆச்சாரியாரே! தாங்கள் எனது இந்தச் சரீரத்தைக் கண்டா, அல்லது இந்த சரீரத்திற்குள் இருக்கும் ஆத் மாவைக் கண்டா அன்றி, நான் செய்யும் தொழிலைக் கொண்டா வெறுக்கிறீர்கள்? உண்மையை அறிய விரும்புகிறேன்."
ஆச்சாரியார் மிகவும் உன்னிப்பாக கேள்விக் கணைகளை வாங்கிச் சிந்திக்கிறார்! மேலும் தொழிலாளி கேட்கிறான்.
"தாங்கள் என் உடலிலுள்ள ஆத்மாவைத்தான் வெறுக்கிறீர்களா? அப்படியானால் ஆத்மா, தங்களது சாஸ்திரப்படி பிரமத்துவம் வாய்ந்ததாயிற்றே! அப் பழுக்கற்ற சுத்த பிரமத்துவத்திற்கு விகாரம் அறவே கிடையாதென்பது தாங்கள் அறியாததா? ஆதலால் எனது ஆத்மாவின் மீது தங்களுக்கு வெறுப்பு எழ நியாயமில்லையே?"
'ஆத்மா' மீது வெறுப்பு இல்லை
"நான் அந்த ஆத்மாவை வெறுக்கவில்லை" என்று ஆச்சாரியார் திருவாய் மலர்ந்தருளி விட்டார்.
ஆத்மாவின் மீது வெறுப்பு இல்லை என்பது உண்மையானால் இந்த உடலின் மீது வெறுப்பு கொள்கிறீரா?
ஆமாம்! அது அவசியம் வெறுப்புக்குள்ளானதே!
வெறுக்கத்தகுந்த பஞ்சதத்துவத்தால் ஆனதுதானே உடலென்பது?
பூமி சகல அழுக்குகளையும் தம்முள் அடக்கிக் கொண்டிருக்கிறது.
தண்ணீர் அப்படியே! தண்ணீரில் வாழும் சகல ஜீவராசிகளின் மலம் - மூத்திரம் அனைத்தும் அதனுள் அடங்கிக் கிடக்கிறது.
நெருப்பு, பிணம் முதற்கொண்டு அத்தனை அனாச்சாரங்ளையும் ஜீரணித்துக் கொண்டிருக்கிறது.
காற்று, பூமியில் அழுகிக் கிடக்கும் அத்தனை யினின்றும் எழும் துர்நாற்றத்தைத் தேங்க வைத்துக் கொண்டிருக்கிறது.
ஆகாயமோ - மேலே கூறியவைகளுக்கெல்லாம் விதி விலக்கல்லவே! இத்தனையாலும் ஆனதுதானே இந்த உடல்! அப்படிப்பட்ட நிலையில் இந்த உடலை வெறுத்துப் பழிப்பது நியாயம்தான். ஆனால் சுவாமி! தங்கள் உடலும் இத்தகு பஞ்ச பூதத்தத்துவங்களால் ஆக்கப்பட்டதுதானே? அதுபோல தங்களுக்கே தங்களது உடல்மீது வெறுப்பு உண்டு என்பதும் உண்மையானால் அதை ஏன் தாங்கள் தாங்கிக் கொண்டிருக்க வேண்டும்? வெறுத்துத் தள்ளி விடலாமே?
'உடலின்' மீதும் வெறுப்பு கிடையாது!
'இல்லை! எனக்கு உன் உடலின் மீது கூட வெறுப்பு இல்லை' என்று ஆச்சாரியார் திருவாய் மலர்ந்தரு ளினார்.
அதுவும் இல்லாதபோது தாங்கள் நான் செய்யும் தொழிலின் மீது ஒருக்கால் வெறுப்புற்று இருக்கலாமோ?
தங்களது சாஸ்திரப்படியே கர்மம் (வினை) இன்றி முக்தி இல்லை என்பது தாங்கள் அறியாத உண்மையன்று. உண்மையின்றி ஜீவன் பயனற்றதே; என்னைப் பொறுத்தமட்டில் எனது உள்ளத்தில் நான் செய்யும் தொழிலில் எவ்வித வெறுப்பும் தோன்ற வில்லை. ஏனெனில், செய்யும் தொழிலிலிருந்து ஒருவன் வழுவலாகாது அப்படி வழுவுவானேயானால், எண்ணற்ற தொல்லைகள் ஆளாகும். குறிப்பாக நான் எனது தெருக் கூட்டும் தொழிலைச் செய்யாதொழிந் தேனானால், குப்பை கூளங்கள் குவியும்! அழுகும்! நோய்க் கிருமிகள் தோன்றும்! மக்களைக் கொள்ளை கொண்டு போகும்? அப்படி எனது மனம் நாட்டங் கொள்ளாது. இவ்வுண்மைகளை நன்கு உணர்ந்தே இந்தத் (இழி) தொழிலை முகமலர்ச்சியுடன் ஏற்றுச் செய்கிறேன். தாங்கள் இத்தொழில் செய்வது கூடாது என்று கூறுகிறீர்களா? இழி தொழிலென்று வெறுக்கச் சம்மதிக்கிறீர்களானால், இதனால் மக்களின் வாழ்வில் நோய், நொடி, கவ்வி, மடிந்தொழியச் சம்மதிக்கிறீர்களா?
ஆச்சாரியாரின் புத்துணர்வு
ஆச்சாரியார் தொழிலாளியின் வாதங்களைச் செவி மடுத்தார். அவையுள் தவழ்ந்து மிளிரும் தத்துவங் களையும் அடுக்கடுக்காக உணர்ந்து மெய்சிலிர்த்துப் போனார். புது உபதேசம் கேட்டு புத்துணர்ச்சி பெற்றார். அப்படியே மெய்மறந்து சிந்தனைச் சூழலில் மூழ்கித் திகைத்து, தாம் கங்கை நீராட வந்தோம் என்பதையும் அடியோடு மறந்தே போனார்.
"ஞான சொரூபம்"
அதோடு இத்தகைய அரிய பெரிய தத்துவ விளக்கத்தை கூறிய அந்த ஆள்தான் யார் என்று தமது "ஞான திருஷ்டி"யினால் காண முனைந்தார். ஞானம் தெளிந்தார். பல்லக்கை விட்டு தாவினார். ஆகா! அந்த ஆள் வேறு யாருமிலலை. தாம் தினந்தினம் யாரை நினைத்து நினைத்து தியானம் செய்கின்றாரோ அதேத் தத்துவஞான சொரூபம்தான் அது - என்று அறிந்த மாத்திரத்தில் அப்படியே "பங்கி" - (சூத்திரன் - தெருக் கூட்டும் இழி பிறவி) தொழிலாளியாக எதிரிலிருக்கும் தத்துவ ஞானப் பிழம்பின் காலில் விழுந்து வணங் கினார். ஆச்சாரிய சுவாமிகள்! அப்போது ஆச்சாரியார் வாயிலிருந்து எழுந்த சொற்கள்:-
"பகவான்! நான் தவறிவிட்டேன், நான் இதுநாள் வரை, ஒருவன் செய்தொழிலால் வெறுக்கப்பட்ட வேண்டியவனே என்று நினைத்தது அஞ்ஞானமே - தாங்கள் தான் இன்று எனது அஞ்ஞானத்தைக் கலைத்து, பூரண ஞானத்தை ஊட்டினீர்கள். உண்மையில் தாங்கள்தான் ஜகத்குரு! நான் அல்லவே அல்ல" என்று உருகினார்.
"ஞான" ஸ்நானம் பெற்றார்!
கூடியிருந்த அத்தனை மக்களும் இக்காட்சியை ஆச்சரியத்துடன் கண்டார்கள். "பங்கி"யின் காலில் அவ்வளவு பெரிய சாஸ்திரி விழுந்தாரே என்று வியந்தார்கள்.
சங்கராச்சாரியார் கங்காஸ்நானம் வேண்டி ஞானஸ்நானம் பெற்று வந்த வழியே மீண்டார்.
சிஷ்ய பரிவாரங்கள், "அய்யனே கங்காஸ்நானம் ஆகாமலேயே....!"
ஆமாம்! வேண்டாம்! நான் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டேன். அதுவே எனக்கு கிடைத்ததற்கரிய ஸ்நானமாகும்! திரும்புங்கள்! மீளலாம்.
(மீண்டார் சங்கராச்சாரியார்)
- உண்மை, அக். 1-15, 1976
No comments:
Post a Comment