‘காமராஜர் தம்முடைய பணிகளின் மூலம் நாட்டின் தரத்தை உயர்த்த முயன்றார்; தமிழர்களுக்கு நற்பணியாற்றினார்; தமிழர்கள் பெருமைப்படத்தக்க நல்ல காரியங்களைச் செய்தார்.
இப்போது நான் திறந்து வைத்த காமராஜர் படத்தை யாருக்குப் பரிசளிப்பது? எதற்குப் பரிசளிப்பது? அதை நான் இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்கே பரிசாகத் தருகிறேன். ஒருவருக்கொருவர் மாறுபாடான கருத்து இருந்தாலும் மதிக்க வேண்டும். அப்படி மதிப்பதாலேயே எல்லாவற்றிலும் ஒன்றுபட வேண்டுமென்பதில்லை. தனித் தன்மையுடன், ஆனால், ஒருவருக்கொருவர் மதிப்புடன் நடந்துகொள்ள வேண்டுமென்பதை, காமராஜர் படத்தை நான் திறந்து வைக்கும் நிகழ்ச்சி உலகுக்கு எடுத்துக்காட்ட வேண்டும்.
அதிலும் குறிப்பாக, சிறப்பாக, காமராஜரது படத்தைத் திறப்பதிலோ, அவரைப் பாராட்டுவதிலோ நான் தயக்கம் காட்டியதில்லை! தயக்கம் காட்டவும் மாட்டேன்! இதனால் அவர் என்னை மதிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. அது அவர் விவகாரம். கருத்து வேறுபாடு இருந்தாலும் பாராட்ட வேண்டியதைப் பாராட்டுவது என்பது தமிழ்ப் பண்பாடு, அந்தப் பண்பாடு மேலும் சிறக்க வேண்டுமென்பதைத்தான் இந்த நிகழ்ச்சி மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
காமராஜர் படத்தை ஒரு காங்கிரஸார் திறந்து வைத்து அவருடைய அருமை பெருமைகளைப் பாராட்டிப் பேசினால், அது அவர்களது கடமையாக இருக்கலாம்; அல்லது, அவர்கள் ஏதாவது பெற்றதற்காக இருக்கலாம்! அல்லது, பெறலாம் என்கிற ஆசை காரணமாக இருக்கலாம்.
நான் அவரது படத்தைத் திறப்பது. பெற்றதற்காகவும் அல்ல; பெறலாம் என்பதற்காகவும் அல்ல! எங்களிடையே கருத்து வேறுபாடு இல்லை என்பதைக் காட்டுவதற்காகவும் அல்ல!
அவர் படத்தை நான் திறக்கிறேன் என்றால், அவர் தமிழ்நாட்டிற்கு நன்மை என்பதற்காக. அடக்கி ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்துதான் உன்னதமான மனிதர்கள் தோன்றுவார்கள் என்று மூதறிஞர்கள் கூறியிருக்கிறார்கள்.
வைரம் என்பது நீண்ட நெடுங்காலத்துக்குப் பூமியின் அழுத்தத்தால், கீழே அடங்கி ஒடுங்கிக் கிடந்த கரித்துண்டுதான். அதுபோல் நெடுங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து தோன்றிய வைர மணிகளில் ஒருவரே காமராஜர்! அவர் மாற்றுக் கட்சியைச் சார்ந்தவர் என்றாலும், அவரை நான் போற்றுவதற்கு இது ஒரு காரணம்!”
(23.4.1967 அன்று காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர் நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் காமராஜர் உருவப் படத்தைத் திறந்து வைத்து
தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணா ஆற்றிய உரை.)
No comments:
Post a Comment