சமூக நீதிக்கான சரித்திர நாயகர் முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டியதைச் சொல்லியிருக்கிறார்; சுழற்ற வேண்டிய சாட்டையையும் சுழற்றியுள்ளார்.
கொள்கைப் படைமுன் இனப்பகையை விரட்டுவோம் என்ற வீச்சுதான் அது.
56 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் மிகச் சரியாக அறுதியிட்டுச் சொன்னார்.
"இன்றைய அரசியல் போராட்டம் என்பதே கம்யூனிஸ்டுகள் முதல் எல்லாக் கட்சிகளுக்கும் சமுதாயத் துறை தத்துவம்தான் அடிப்படை இலட்சியமே தவிர, மற்றபடி வாயால் சொல் வதற்குக்கூட கொள்கைகள் கிடை யாதே! அதாவது எதுவும் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்ற அடிப்படையைக் கொண்டதுதான்" (விடுதலை 22.5.1967) என்றார் தந்தை பெரியார்.
இப்பொழுது நாட்டில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது. ஒன்றிய அரசு என்பது - பா.ஜ.க., தலைமை யிலான ஆட்சி என்பது பார்ப்பன ஜனதா ஆட்சி தானே! இல்லை என்று மறுக்க முடியுமா?
ஒரு பிற்படுத்தப்பட்டவர் பிரதமராக இருக்கிறாரே என்று சொல்லலாம். அவர் வெறும் பம்பரம்தான். சுழற்றுவது ஆர்.எஸ்.எஸின் தலைமைப் பீடம்தானே.
இந்து ராஜ்ஜியம் என்று சொன்னாலும் சரி, ராமன் ராஜ்ஜியம் என்று சொன்னாலும் சரி - அது வருணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பன ராஜ்ஜியம்தானே!
பூணூலைப் பிடித்துக் கொண்டு திமுகவுக்கு ஓட்டுப் போடுங்கள் என்றார் ராஜகோபாலாச்சாரியார்.
வெற்றி பெற்ற தி.மு.க. அதன் முதலமைச்சர் அண்ணா அவர்கள் ஆச்சாரியாரையா முதலில் சந்தித்தார்? திருச்சி பெரியார் மாளிகையில் இருந்த தான் கண்ட - கொண்ட ஒரே தலைவரான தந்தை பெரியாரைச் சந்தித்துதானே "வழி காட்டுங்கள் அய்யா - அதன்படி ஆட்சியை நடத்துகிறேன்" என்று சொல்லவில்லையா?
"இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை!" என்று முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் அதிகாரப் பூர்வமாக சட்டப் பேரவையில் பிரகடனப்படுத்தினாரே!
அண்ணாவுக்குப் பின் முதல் அமைச்சராக வந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் "இது சூத்திரர்களுக்காக சூத்திரர்களால் ஆளப்படும் நான்காம் நிலை ஆட்சியே?" என்று அறிவித்து, மனுவாதி சரித்திரத்திற்கு சமாதி கட்டினாரே! (28.7.1971)
1971 தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான தேர்தலுக்கு சில வாரங்களுக்குமுன் திராவிடர் கழகத்தால் சேலத்தில் நடத்தப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் ராமன் படத்திற்கு தி.க.வினர் செருப்பால் அடித்தனர் என்று கூறி ராஜாஜி தலைமையில் பார்ப்பனர்கள் எல்லாம், பார்ப்பனப் பத்திரிகைகளெல்லாம் கூப்பாடு போடவில்லையா?
தி.மு.க. தோற்கும் என்று கூறி, நிழல் அமைச்சரவை ஏற்பாடு என்கிற அளவுக்குச் சென்றதுண்டே!
தேர்தல் முடிவு என்னவாக இருந்தது? 1967 தேர்தலில் 138 இடங்களில் வென்ற தி.மு.க. - சேலம் நிகழ்வுக்குப்பின் நடைபெற்ற 1971 தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் 184 இடங்களைக் கைப்பற்றியதே!
அப்பொழுது முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் என்ன சொன்னார்? "பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தை பெரியார் முன்பு துவக்கினர். இந்தத் தேர்தலில் ஆச்சாரியார் துவக்கியுள்ளார். இந்தத் தேர்தலின் ஒரே புதிய அம்சம் இதுதான்" என்று திருச்சியில் செய்தி யாளர்களிடம் கூறினார் முதல் அமைச்சர் கலைஞர் (3.3.1971).
நாட்டில் நடக்கும் போராட்டம் எதன் அடிப்படையில் என்று 56 ஆண்டுகளுக்குமுன் தொலைநோக்கோடு தந்தை பெரியார் சொன்னது பலித்து விட்டதே!
இப்பொழுது தி.மு.க. ஆட்சியை எதிர்ப்பவர்கள் யார்? திமுகவை எதிர்க்கும் ஏடுகள், இதழ்கள் எவ்வினத்தைச் சேர்ந்தவை?
தி.மு.க., தி.க.வை நோக்கி செல்கிறது. மு.க. ஸ்டாலின் வீரமணியிடமிருந்து விலகி நிற்க வேண்டும் என்று குருமூர்த்திகள் 'துக்ளக்'கில் எழுதுவதன் பொருள் என்ன?
அதற்குப் பதிலடியாக 'நேற்றும் சரி, இன்றும் சரி, நாளையும் சரி எங்களை வழி நடத்துவது பெரியார் திடல்தான்' என்று பகிரங்கமாக அறிவித்து விட்டாரே! தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து அய்.ஏ.எஸ். பார்ப்பனர் வரை உறுதி மொழி எடுக்கச் செய்து விட்டாரே!
'திராவிட மாடல்' ஆட்சி என்பது இதுதானே - இதனைப் புரிந்து கொண்டு தானே முதல் அமைச்சர் மீதும், தி.மு.க.வின்மீதும் தி.மு.க. ஆட்சியின் மீதும் சேற்றை வாரி இறைக்கிறார்கள்.
கொள்கைப் படையால் இனப் பகையை முறியடிப் போம் என்று முதல் அமைச்சர் கூறி இருப்பதன் பின்னணியில் ஒரு நீண்ட கால வரலாறு உண்டு.
இளைஞர்களே எழுவீர்! இனப்பகையை அடை யாளம் காண்பீர்!
No comments:
Post a Comment