கோட்டூர் பாலசுப்பிரமணியன் நூற்றாண்டு விழா!
கோட்டூர் அரசுப் பள்ளியில் 27 ஆசிரியர்களில் 26 பேர் பெண்கள்!
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் பெண்களே முதலிடம்!
குடும்பத்தில் ஒரு பெண் படித்தால், நான்கு ஆண்கள் படித்ததற்குச் சமம்!
கோட்டூர், ஜூலை 27 கோட்டூர் பாலசுப்பிரமணியன் நூற்றாண்டு விழா - கோட்டூர் அரசுப் பள்ளியில் 27 ஆசிரியர்களில் 26 பேர் பெண்கள்! 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் முதலிடம் பெண்களே! ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படித்தால், நான்கு ஆண்கள் படித்ததற்குச் சமம் என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னதை எடுத்துக்காட்டி விளக்கவுரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.
கடந்த 12.7.2023 அன்று மாலை தஞ்சாவூர் சாலை, மன்னார்குடியில் உள்ள பி.பி.மகாலில் நடைபெற்ற பெரியார் பெருந்தொண்டர் கோட்டூர் வீ.பாலசுப்ர மணியன் நூற்றாண்டு விழாவிற்குத் தலைமையேற்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது தலைமையுரை வருமாறு:
கோட்டூர் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்கிறது
இந்தக் கோட்டூர் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்கிறது. இங்கே நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் அய்யா மாரிமுத்து அவர்கள் குறிப் பிட்டதைப் போல, ஒரு புரட்சி பூமி இது.
அப்படிப்பட்ட புரட்சி வெடிக்கின்ற, சிவப்பும் - கருப்பும் கலந்த சூழ்நிலையில், அற்புதமான ஓர் அரசு பள்ளியில் சிறப்பான அறிவு விருந்து காலையிலிருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்று இருக்கக்கூடிய பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும், அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய அம்மையார் திருமதி.இரா.அம்புஜம் அவர்களே,
எளிமையின் சின்னம் - தொண்டின் உருவம் தொண்டறத் தோழர்
சட்டப்பேரவை உறுப்பினர், இங்கே நண்பர்களும், அறிமுக உரையாளர்களும் சொன்னதைப்போல, எளிமையின் சின்னமாக, தொண்டின் உருவமாக, தொண்டறத் தோழராக இருக்கக்கூடிய அருமைக்குரிய திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் - இத்தொகுதிக்கு உரியவர் அய்யா தோழர் மாரிமுத்து அவர்களே,
இந்நகிழ்ச்சியில் சிறப்பான வகையில் நம் அனை வரையும் வியக்க வைக்கக்கூடிய அளவிற்கு, கோட்டூர் வீ.பாலசுப்பிரமணியன் - ருக்மணி அம்மாள் நினைவு அரங்கத்தை - அவர்கள் பெயரால் அமைந்த ஓர் அறக் கட்டளையை உருவாக்கி, அந்த அறக்கட்டளையின் சார்பாக மாணவிகளை உற்சாகப்படுத்தி, மாணவர்களை உற்சாகப்படுத்தி, ஆண்டுதோறும் பரிசுகளை வழங்கி, இவ்வாண்டு மழை, வெய்யிலிலிருந்து மாணவர்களைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காக, இப்படி ஓர் அற்புத மான எழில் நிறைந்த பயனுறு அரங்கத்தை சிறப்பாக உருவாக்கி - அதற்காக இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து, இந்த ஊரினுடைய வரலாற்றில் குறிப்பிடத்தகுந்ததும் - ஊர் குடிமக்களே பாராட்டக்கூடிய, மெச்சக்கூடிய, நன்றி செலுத்தக் கூடிய சிறப்பைப் பெற்றுள்ள அருமை அறங்காவலர் தோழர் பா.இந்திரஜித் அவர்களே, அவரது குடும்பத்து சகோதர, சகோதரிகளே,
இந்நிகழ்ச்சியில் சிறப்பான வகையில் வரவேற்புரை யாற்றிய தலைமை ஆசிரியை பொறுப்பில் இருக்கக் கூடிய திருமதி.விஜயதீபா அவர்களே,
இந்நிகழ்ச்சியில் வாழ்த்துரையை வழங்கி, இப்பள்ளி யின் வளர்ச்சியில் தோன்றாத் துணையாக மிக முக்கிய மாக இருக்கக்கூடியவர்களில் முதன்மையாக இருக்கக் கூடிய வடக்கு ஒன்றிய செயலாளர் அருமைத் தோழர் பாலஞானவேல் அவர்களே,
கோட்டூர் ஒன்றியப் பெருந்தலைவர் அன்பிற்குரிய திருமதி மணிமேகலை முருகேசன் அவர்களே,
சிறப்புமிகுந்த ஆற்றல் வாய்ந்த கோட்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் அன்பிற்குரிய தோழர் கே.ஜி.ஆனந்தம் அவர்களே,
ஒரு சிறப்பான, மறக்க முடியாத அறிவுரையை வழங்கி தாலாட்டு இல்லாமல், குழந்தைகளைப் பாராட் டிய பகுத்தறிவுப் பாவலர் அறிவுமதி அவர்களே,
திருவாரூர் மாவட்டக் கல்வி அலுவலர், சீரிய பகுத்தறிவாளர் அருமை அய்யா இல.நாதன் அவர்களே,
கோட்டூர் மானமிகு பாலசுப்பிரமணியன் - ருக்மணி அம்மையாரின் குடும்பத்துச் செல்வங்களே,
இந்நிகழ்ச்சியில், பரிசு பெற்ற செல்வங்களே, பரிசு பெற காத்திருக்கக்கூடிய மாணவச் செல்வங்களே, அருமைப் பெற்றோர்களே, பெரியோர்களே, நண்பர் களே, மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் அவர்களே, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்களே, மாணவச் செல்வங்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத் தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களிடம் மன்னிப்பையும், வருத்தத்தையும்
தெரிவித்துக் கொள்கிறேன்!
நான் என்னுரையைத் தொடங்குவதற்கு முன்பு, உங்களிடம் மன்னிப்பையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிகழ்வு இவ்வளவு காலந்தாழ்ந்ததற்குக் காரணம் நான்தான் என பொறுப்பேற்கிறேன்.
காரணம் என்னவென்றால் நண்பர்களே, ஒரு திருமண நிகழ்வு என்னுடைய சுற்றுப்பயணத்தில் இடைச்செருகலாக உள்ளே நுழைந்ததுதான்; இந்தக் குடும்பத்திற்குரியதுதான் அந்தத் திருமணம். மன்னார்குடியில் அந்தத் திருமணத்தை நடத்தி விட்டு வந்ததால்தான் காலதாமதமானது. அதற்காக அருமை சான்றோர் பெருமக்கள், மாணவச் செல்வங்கள், பெற்றோர், ஆசிரியர்ப் பெருமக்கள் மற்றும் மேடையில் இருக்கும் அறிஞர்கள் அத் துணை பேரும் பொறுத்தருள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
‘திராவிட மாடல்’ ஆட்சி
காலைச் சிற்றுண்டி வழங்குகிறது
பெரியவர்கள் பசியைப் பொறுத்துக் கொள்வார்கள். மாணவர்களுக்குப் பசி இருக்கக்கூடாது என்பதற்காகத் தான், ‘திராவிட மாடல்' ஆட்சி காலைச் சிற்றுண்டி வழங் குகிறது. இந்தப் பள்ளி அதில் சேர்ந்ததா? இல்லையா? என்று தெரியவில்லை. சேர்ந்துள்ளதாகவே நம்பிக்கை அளித்திருக்கிறது.
பிள்ளைகளே, காலைச் சிற்றுண்டியை நீங்கள் தவிர்க்காதீர். பல பிள்ளைகள், வீட்டிலிருந்து புறப்படும் பொழுது காலைச் சிற்றுண்டியைத் தவிர்த்துவிட்டு வருகின்றனர். அவர்களையும் சேர்த்துத் தாயினும் சாலப் பரிந்து நம்முடைய முதலமைச்சர் அவர்கள், காலைச் சிற்றுண்டியை அரசு பள்ளிகளில் வழங்குவதாகச் சொல்லும்பொழுது - அது ஒரு நல்ல திட்டம் என்றோம்.
நம்முடைய விழா ஏற்பாட்டாளர்கள், அறக்கட்டளை யாளர்கள், ஆசிரியர்கள் சேர்ந்து நம்முடைய மாணவப் பிள்ளைச் செல்வங்களுக்கு ரொட்டி வழங்கினார்கள். அதை சாப்பிட்ட காரணத்தினால், ஓரளவு அவர்களுக்கு பசி தீர்ந்திருக்கும்.
‘‘செவிக்கு உணவு இல்லாதபொழுது, சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்'' என்கிற குறளுக்கேற்ப, அந்த ரொட்டி கொஞ்ச நேரம் பசியாற்றும்.
இந்நிகழ்வு என்பது வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த ஒன்றாகும்.
இந்தப் பள்ளிக்கூடத்தினுடைய சிறப்பு என்னவென்று கேட்டேன், அதைக் கேட்டு தனி மகிழ்ச்சியடைந்தேன்.
கல்வி பரவவேண்டும் என்று சொன்னார்கள்; அதுவும் நாடெலாம் பாய்ந்தது கல்வி நீரோடை.
‘‘கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக் கசடர்க்குத்
தூக்குமரம் அங்கே உண்டாம்!''
என்றார் புரட்சிக்கவிஞர்.
யாருக்காவது படிப்பில்லை என்றால், அவனை தூக்கில் போடவேண்டும் என்றார்.
தூக்குத் தண்டனையைக்கூட ஒழிக்கவேண்டும் என நினைக்கிறவர்கள்கூட, கடுமையாக கல்வியில்லாதவர் களைத் தண்டிக்க வேண்டும் என்பதற்காக புரட்சிக் கவிஞர் அவ்விதம் சொன்னார்.
ஆனால், அவர் யாரை ஆசிரியராகக் கொண்டாரோ, அந்த பாரதியார் சொன்னார்,
‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’
என்று சொன்னார்.
அதைவிட பெண்களுக்கு எழுத்தறிவித்தல் - அது குறித்து இங்கே அம்மையார் அவர்களும், அறிவுமதி அவர்களும், மற்றவர்களும் சொன்னார்கள்.
ஒரு பெண் படித்தால்,
நான்கு ஆண்கள் படித்ததற்குச் சமம்!
தந்தை பெரியார்தான் சொல்வார், ‘‘குடும்பத்தில் ஒரே ஒருவருக்குத்தான் கல்வி கற்க வாய்ப்பு என்று சொன்னால், அந்த வாய்ப்பை, அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்ணுக்குத்தான் கொடுப்பேன். காரணம் என்னவென்றால், ஒரு பெண் படித்தால், நான்கு ஆண்கள் படித்ததற்குச் சமம்'' என்பார்.
பெண்கள் என்று சொல்லும்பொழுது, அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி, கோட்டூரில், 457 பேர் படிக்கிறார்கள். இதில் பெண்கள் 100-க்கு 100.
ஒரு கருத்தை அறிவுமதி அவர்கள் சொன்னார்; அதற்கு நான் பிறகு விளக்கம் சொல்கிறேன்.
பெண்களுக்கான பள்ளியாக இருப்பதினால் தான், இப்பொழுது 457 பேர் படிக்கிறார்கள். இந்த எண்ணிக்கை இன்னும் வளரக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
27 ஆசிரியர்களில் 26 பேர் பெண்கள்!
பெரியார் வெற்றி பெற்று இருக்கிறார்!! திராவிடம் வெற்றி பெற்று இருக்கிறது!!!
இப்பள்ளியின் ஆசிரியர்களின் எண்ணிக்கை 27 பேர். பாராட்டவேண்டியதுதான். இந்த 27 ஆசிரியர்களில் மிகவும் சுட்டிக்காட்டப்படவேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. 27-இல், 26 பேர் பெண்கள். ஆண்கள் ஆசிரியராக இருந்தால், எப்படி இருப்பார்கள் என்று தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் ஒரே ஒரு ஆண் ஆசிரியர்.
இங்கேதான் பெரியார் வெற்றி பெற்றிருக்கிறார்; இங்கேதான் திராவிடம் வெற்றி பெற்று இருக்கிறது என்று அர்த்தம்.
ஏனென்றால், தொடக்கத்தில், பெரியார் அவர்கள், ஆசிரியர்களாக பெண்கள் வரவேண்டும் என்று நினைத்தார்.
ஒரு காலத்தில் ‘‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப் பெதற்கு?'' என்று சொன்ன நாடு நம்முடைய நாடு. இதில் என்ன பெரிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது இப்பொழுது?
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு -
12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் பெண்களே முதலிடம்!
இப்பொழுதுதான் கல்வியில் ஒரு புரட்சி - ரத்தம் சிந்தாத புரட்சி- அறிவுப்புரட்சி - அமைதிப் புரட்சி. இங்கே பிள்ளைகள் பரிசு வாங்கினார்கள். இன்னுங்கேட்டால், ஒவ்வொரு ஆண்டும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு நடக்கிறது. இந்த இரண்டு பொதுத் தேர்விலும்- நாங்கள் எல்லாம் படிக்கும்பொழுது ஆயிரக்கணக்கில்தான் தேர்வெழுதுவோம். இப் பொழுது அப்படியல்ல - லட்சக்கணக்கில் தேர்வு எழுதுகிறார்கள். அப்படி தேர்வெழுதி முடிவுகள் வரும்பொழுது, யார் முதல் மதிப்பெண்களைப் பெறுகிறார்கள் என்றால், பெண்கள்தான். ஆண்கள் இரண்டாவதுதான். எவ்வளவு உற்சாகமாகக் கைதட்டுகிறார்கள் பாருங்கள்.
யார் என்ன பேசுகிறார்கள் என்று,
யாருக்குமே தெரியாது!
அதனால் ஆண்களுக்கு அறிவு குறைவு என்று அர்த்தம் அல்ல. ஆண்களுக்கு பலவிதமான கவனச் சிதறல்; இப்பொழுது கைத்தொலைப்பேசி வந்து விட்டதால், பெரும்பாலான நேரங்களில், மனிதர்களோடு அவர்கள் பேசுவதில்லை. எல்லோரும் அவர்களுக் குள்ளேயே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான்கு பேர் இருந்தால், நான்கு பேரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்த நான்கு பேரும் தனித்தனியாகப் பேசிக்கொண்டி ருக்கிறார்கள். யார் என்ன பேசுகிறார்கள் என்று, யாருக்குமே தெரியாது.
இந்தக் காலகட்டத்தில், படிப்பை, கல்வியை முன் னிறுத்தி எங்கள் செல்வங்கள், எதிர்காலத்தில் சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காகத்தான், வெய்யிலிலும் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இவ்வளவு கடும் வெப்பத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தாலும், நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள் - இந்த அரங்கம் இல்லையென்றால், நாங்கள் எல்லாம் மேடை போட்டு வசதியாக அமர்ந்திருப்போம்; ஆனால், பிள்ளைகள், ஆசிரியர்கள் எல்லாம் எங்கே அமர்ந்திருப்பீர்கள்? திறந்தவெளி அரங்கத்தில்தான்.
பாலசுப்பிரமணியன் - ருக்மணி அம்மையார் அறக்கட்டளை சார்பில்...
வெப்பத்தினால் பாதிக்கப்பட்டோம் என்று நீங்கள் சொல்ல முடியாது; மழை பெய்கிறது, அதனால் நிகழ்ச் சியை நடத்த முடியாது என்றும் சொல்ல முடியாது. அதற்காகத்தான் நம்முடைய பாலசுப்பிரமணியன் - ருக்மணி அம்மையார் அறக்கட்டளை சார்பில், ரூ.20 லட்சம் மதிப்பீடு போட்டிருந்தாலும், இன்றைக்கு அது ரூ.40 லட்சமாக உயர்ந்தாலும், ‘‘சொன்ன சொல்லைக் காப்பாற்றுவோம், அரங்கத்தைக் கட்டிக் கொடுப்போம்'' என்று இந்த அழகான அரங்கத்தைக் கட்டிக் கொடுத் திருக்கிறார்கள்.
(தொடரும்)
No comments:
Post a Comment