சென்னை, ஜூலை 3 - மேகதூது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள காட்சிப் பதிவில் கூறியுள்ள தாவது:-
கருநாடகத்தில் நடைபெறுகிற மோடிக்கு எதிரான கூட்டத்தில் தமிழ் நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டால், அவர் தமிழ் நாட்டில் நுழைய முடி யாது என்று தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சூளுரைத்திருக்கிறார்.
அவர் தமிழ்நாட்டை உத்தரப்பிரதேசம் என்று நினைத்துக்கொண்டார் போலும். கருநாடகத்தில் மேக தாது அணையை அவர்கள் கட்டினால், அதற்கு காரணம் காங்கிரசும், தி.மு.க.வும்தான் என்பதைப்போன்ற ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார்கள். இதற்கு அடித்தளம் இட்டதே பா.ஜ.க.தான். உங்களுடைய முந்தைய மாநில அரசுதான், உங்களுடைய ஒன்றிய அரசுதான். பசவராஜ் பொம்மை முதலமைச்சராக இருந்தபோது மேகதாது அணை கட்டுவதற்கான வரைவு திட்டத்தை டில்லிக்கு எடுத்துச்சென்று, ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத் திடம் அதற்கான அனுமதியை பெற்றார்.
ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகம் அப்படியொரு அனுமதியை கொடுக்கிறபோது, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஆலோசனையை கேட்கவேண்டும் என்பது விதி. தமிழ்நாடு, புதுச்சேரியிடம் கேட்டிருக்கவேண்டும். ஆனால் அவர்கள் கேட்காமல், தங்களுடைய அரசு மத்தியில் இருக்கிறது என்பதற்காக அந்த வரைவு திட்டத் துக்கு அனுமதி கொடுத்தார்கள். அதை வைத்துக் கொண்டுதான் பொம்மை அரசு, அந்தப் பணியை தொடங்க ஆரம்பித்தார்கள். எனவே இதற்கு காரணமே அவர்கள் தான்.
காவிரி பிரச்சினையை பொறுத்தவரை தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காங்கிரசும் தெளிவாக இருக்கிறோம். உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் தெளிவாக இருக்கின்றன. மழைக்காலத்தில் எவ்வளவு தண்ணீர் தரவேண்டும்? மழை இல்லாத வறட்சிக் காலங்களில் எவ்வளவு தண்ணீர் தரவேண்டும்? தண்ணீரை வேறு இடத்தில் தேக்கி வைப்பது எந்த அளவுக்கு குற்றம்? என்பதை போன்ற எல்லா விடயங்களையும் அவர்கள் தெளிவுப்படுத்தியிருக்கிறார்கள்.
எனவே, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை மீறி நமக்கு தண்ணீர் இல்லை என்று கருநாடகம் சொல்ல முடியாது. சொல்வதற்கான வழியும் இல்லை. அப்படி அவர்கள் சொன்னால் விட்டுவிடுகிற மாநில அரசும் அல்ல இது. நமது மாநில அரசு உரிமைகளுக்காக போராடுகிறது.
தமிழ்நாட்டின் எல்லா உரிமைகளுக்காகவும் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பவர் முதல்-அமைச்சர். அவர்களுக்கு தோழமையாக இருக்கும் காங் கிரஸ் கட்சியும், மற்ற மதச்சார்பற்ற கட்சிகளும் மாநிலத் தின் உரிமைகளுக்காக நேர்மையாக போராடுவோம். வெறும் வாய்சொல் வீரர்கள் அல்ல. நாம் எந்த கருத் தையும் தெளிவாக எடுத்து வைப்போம். நீதிமன்றம் இருக்கிறது. இந்தியாவில் இறையாண்மை இருக்கிறது.
கருநாடகத்தின் அமைச்சர் சொல்லிவிட்டார் என்றால், அது சட்டமாகாது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு அவர்கள் தலைவர்கள் அல்ல. எனவே எங்களையும் யாரும் கட்டுப்படுத்த முடியாது. தமிழ்நாடு அரசையும் யாரும் கட்டுப்படுத்த முடியாது.
தமிழ்நாட்டில் இருக்கும் பா.ஜ.க. இதை வைத்து நாடகம் ஆடுகிறது. இதில் குற்றவாளிகளே பா.ஜ.க. தான். இதை தொடங்கி வைத்துவிட்டு மவுனமாக இருப்பது அவர்கள் தான். மற்றவர்கள் மீது குறை சொல்ல நீங்கள் முயற்சிக்கிறீர்கள். வரைவு திட்டத்துக்கு அங்கீகாரம் கொடுத்ததே மோடி அரசுதான். அந்த வரைவு திட்டத்தின் அங்கீகாரத்தை பெற்றவர்கள் பொம்மை அரசு தான். எனவே அவர்களை பொம்மையை போல கவிழ வைப்போம் என்பதை மட்டும் கூறிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
No comments:
Post a Comment