‘சுயமரியாதைச் சுடரொளி' இறையனார் - திருமகள் குடும்பம் ஜாதி மறுப்புத் திருமணத்திற்கு எடுத்துக்காட்டான குடும்பம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 24, 2023

‘சுயமரியாதைச் சுடரொளி' இறையனார் - திருமகள் குடும்பம் ஜாதி மறுப்புத் திருமணத்திற்கு எடுத்துக்காட்டான குடும்பம்!

போராட்டத்தில் பூத்த மலர்கள் - காய்த்த கனிகள்!

இ.ப.இனநலம் - ஜோ.அட்லின் மணவிழாவில் தமிழர் தலைவர் விளக்கவுரை

சென்னை, ஜூலை 24  சுயமரியாதைச் சுடரொளி இறையனார் - திருமகள் குடும்பம் ஜாதி மறுப்புத் திரு மணத்திற்கு எடுத்துக்காட்டான குடும்பம்! போராட் டத்தில் பூத்த மலர்கள் - காய்த்த கனிகள்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்.

மணமக்கள் இனநலம் -ஜோ.அட்லின்

கடந்த 25.3.2023 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற மணவிழாவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  வாழ்த்துரையாற்றினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

எல்லையற்ற மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும், எழுச்சியோடும் நடைபெறக்கூடிய மணவிழாவில் இணையக்கூடிய அன்பு இணையர்கள் நண்பர்கள் இனநலம் - ஜோ.அட்லின்  ஆகியோருடைய வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சியில் நம் அனைவரையும் வரவேற்று உரையாற்றிய, இந்தக் குடும்பத்தின் செல்லப் பிள்ளையாக நாங்கள் கருதுகின்ற தோழர் இறைவி அவர்களே,

அதேபோல, இந்நிகழ்ச்சியில் எனக்கு முன் உரை யாற்றிய கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, கழகப் பொதுச்செயலாளர் மானமிகு தோழர் அன்புராஜ் அவர்களே,பொருளாளர் தோழர் குமரேசன் அவர்களே, பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களே, திராவிட முன் னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில ஆலோசகரும், இதழியல் பணியாளருமான சுயமரியாதை வீரர் அருமைத் தோழர் கோவி.லெனின் அவர்களே, மற்றும் கழகப் பொறுப்பாளர்களே, தாய் மார்களே, பெரியோர்களே, சகோதரர்களே, கொள்கை உறவுகளே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீண்ட நேரம் ஆனாலும், யாரும் சோர்வில்லாமல், களைப்பில்லாமல் உற்சாகமாக, மகிழ்ச்சிகரமான விழா வான இவ்விழாவில் நாம் அனைவரும் கலந்துகொண் டிருக்கின்றோம்.

இந்த மேடையைப் பார்க்கும்பொழுது, எதிரில் அமர்ந்துள்ள உங்களையெல்லாம் பார்க்கும்பொழுதும் தோழர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.

பெரியார் கொள்கை பெற்றிருக்கும் பெருவெற்றிக்கு அடையாளம்

இறைவி அவர்கள் உரையாற்றும்பொழுது, அவருடைய பெற்றோர் திருமணம் ஜாதி மறுப்புத் திருமணமாக இருக்கிறதே என்று அந்தக் காலத்தில் உறவினர்களெல்லாம் சங்கடப்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் சங்கடம் நீங்கி, இன்றைக்கு மகிழ்ச்சியாக வந்திருக்கிறார்கள்; இந்தக் கொள்கை வெற்றிக்கு அடையாளமாகத்தான் அவர்களையும் நாங்கள் பெருமைப்படுத்தவேண்டும் என்று இந்த மணவிழாவிற்கு அழைத்திருக்கின்றோம் என்று சொன்னார்கள்.

இதுதான் பெரியார் கொள்கை பெற்றிருக்கும் பெருவெற்றிக்கு அடையாளம்.

அந்த வகையிலே, நான் இந்த மணவிழாவினை நடத்தி வைப்பதற்கு உரிமையோடும், உறவோடும் வந் திருக்கின்றேன்.

நான் உரிமையோடு உங்கள் அனைவரையும் வருக! வருக! வருக! என்று மனப்பூர்வமாக வரவேற்கக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

உங்களை வரவேற்க வேண்டியது 

எங்களுடைய தலையாய கடமை!

ஏனென்றால், இறையனார் இல்லாத நேரத்தில், திருமகள் இல்லாத நேரத்தில், அந்தப் பொறுப்பு பெரியார் திடலைச் சார்ந்த எங்களைத்தான் சாரும் என்ற காரணத்தினால், உங்களை வரவேற்க வேண்டியது எங்களுடைய தலையாய கடமையாகும்.

பிறகுதான் மணவிழாவினை நடத்தி வைப்பதுபற்றி சிந்திக்கவேண்டும்.

அந்த வகையில் நண்பர்களே, இது ஓர் அருமையான வாய்ப்பு. எவ்வளவு பெரிய  கொள்கை வெற்றிகள்.

இறையனாரின் குடும்பத்தினர் எல்லாம் இங்கே இருக்கிறார்கள். எல்லோருமே கொள்கைக்காரர்கள். ஒவ்வொரு அசைவும் கொள்கையைப் பிரச்சாரம் செய்யக்கூடியதாக இருக்கும் குடும்பம் இந்தக் குடும்பம்.

அது மழலையாக இருந்தாலும், சிறு குழந்தையாக இருந்தாலும்கூட கொள்கையை முன்னிறுத்தித்தான் அவர்கள் வளர்த்திருப்பார்கள்.

நல்ல குடும்பம் ஒரு கொள்கைப் பல்கலைக் கழகம் - ஒரு சுயமரியாதைப் பல்கலைக் கழகம் என்று சொல்லக்கூடிய அளவில், இந்தக் குடும்பம் பெருமை பெற்ற கொள்கைபூர்வமான மூன்றாவது, நான்காவது தலைமுறையை சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இம்மணவிழாவினை நடத்தி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன், பெருமையடைகிறேன்.

இங்கே எதை விளக்கமாக சொல்லவேண்டும் என்று நான் நினைத்திருந்தேனோ, அதை நம்முடைய கவிஞர் அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

இறையனார் -திருமகள் மறையவில்லை; அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்!

மணமகனின் பெற்றோர் பசும்பொன் - இசையின்பன் ஆகியோர் இரண்டு பேருமே இந்த இயக்கத்திற்கு அன்றாடம் பயன்படக் கூடியவர்கள். அவர்களுடைய தொண்டறம், திருமண நிலைய மாக இருந்தாலும் சரி, ‘விடுதலை' நாளேடு வெளிவருவதற்குரிய வாய்ப்பாக இருந்தாலும் சரி, அத்தனையும் அவர்களுடைய உழைப்பு - கூட்டுப் பணியாளர்களாக எங்களோடு இருக்கக் கூடியது என்பது இருக்கிறதே - இறையனாரோ, திருமகளோ மறையவில்லை; அவர்கள் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு அடையாளமாகும்.

இறையனார் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் இயக்கத்திற்குப் பயன்படக்கூடியவர்கள். அவர் களுடைய தொண்டு பாராட்டி சொல்லப்பட வேண்டிய தொண்டாகும். அதற்கு ஒரு வாய்ப் பாகத்தான் நான் இந்த மணவிழாவில் ஆற்றும் உரையைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

கொள்கை சீலத்திலிருந்து 

இவர்கள் வழுவுவதே கிடையாது

நன்றி சொல்ல முடியாத அளவிற்கு அவர்களுடைய உழைப்பு - இசையின்பன் ஆனாலும் சரி, அவருடைய சகோதரிகளானாலும் சரி, அவர்களுடைய வாழ் விணையர்கள் ஆனாலும் சரி - எல்லோரும் கொள்கைத் தங்கங்கள். அந்தக் கொள்கை சீலத்திலிருந்து அவர்கள் வழுவுவதே கிடையாது.

இன்னுங்கேட்டால், ஒருவருக்கொருவர் கொள்கையிலே யார் அதிகத் தீவிரமாக இருக்கின்றவர் என்கிற ஆரோக்கியமான போட்டி இருக்கும். இந்தக் குடும்பத் தினுடைய வரலாற்றை எழுதினால், எத்தனை ராகுகாலத் திருமணங்கள்!

இறையனார் - திருமகள் அவர்களுடைய பிள்ளை களுக்கு ராகுகாலத்தில் மணவிழாக்களை நடத்தினார்கள். அதற்கடுத்து திருப்பூரில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள், எமகண்டத்தில் மணவிழாவை நடத்தவேண்டும் என்று கேட்டனர்.

மணியம்மையார் அவர்களுடைய தலைமையில், அவருடைய இல்ல மணவிழாவினை நடத்தி வைத்தோம்.

மணமகன் இனநலம் அவர்களின் பெற்றோரான பசும்பொன் - இசையின்பன்  ஆகியோருடைய திருமணம் நடந்ததைப்பற்றி சொன்னால், மிகவும் வேடிக் கையாக இருக்கும்.

திராவிடர் கழகத்தின் சார்பில் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனுக்குக் கருப்புக்கொடி!

குடியரசுத் தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் அவர்களுக்கு, திராவிடர் கழகத்தின் சார்பில், விமான நிலையத்தின் அருகிலேயே அவருக்குக் கருப்புக் கொடி காட்டியதற்காக எங்களையெல்லாம் காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் வைத்திருந்தார்கள்.

அப்பொழுதுதான் நான் இதய சிகிச்சை செய்து, இரண்டொரு நாள்கள்தான் ஆனது. அந்தக் கருப்புக் கொடி போராட்டத்தில் நீங்கள் கலந்துகொள்ளவேண்டாம் என்று தோழர்கள் எல்லாம் சொன்னார்கள்.

இல்லை, இல்லை. என்னுடைய தலைமையில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு செய்யுங்கள் என்றேன்.

என்னுடைய தலைமையில், 1000 தோழர்கள் ஆலந்தூருக்குப் போகும் சாலைப் பகுதியில் கருப்புக் கொடியோடு திரண்டிருந்தனர். இதை காவல்துறையே எதிர்பார்க்கவில்லை.

காவல்துறை அதிகாரிகள் என்னிடம் வந்து, ‘‘அய்யா, உங்கள் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, போராட் டத்தைத் தொடங்கி வைத்துவிட்டு, புறப்பட்டு விடுங்கள்'' என்று சொன்னார்கள்.

இல்லை, இல்லை. நான் கைதாவதற்கும் தயாராக இருக்கிறேன் என்று சொன்னேன்.

குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன் கார் செல்லும் பொழுது, நாங்கள் எல்லாம் கருப்புக் கொடியைக் காட்டினோம்.

அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற எங்களை கைது செய்து, அருகிலிருந்த புதிய கட்டடத்தில், அது திருமண மண்டபத்திற்காக கட்டப்பட்ட கட்டடம் - அந்தக் கட்டடத்திற்குள் எங்களை அழைத்துச் சென்றார்கள்.

ஆலோசனைக் கூட்டமாக மாற்றினோம்!

திராவிடர் கழகத்தின் கிளர்ச்சிக்கு ஒரு பெரிய வாய்ப்பு என்னவென்றால், ஒலிப் பெருக்கியை எடுத்துக் கொண்டு செல்வோம்; கைதாகி தோழர்கள் எல்லோரும் இருக்கும்பொழுது, பாட்டுப் பாடுவது, இயக்கத்திற்கு எப்படி வந்து சேர்ந்தோம்? கொள்கையில் எப்படி மாறு பாடு நடந்தது என்பதைப்பற்றியெல்லாம் பேசக்கூடிய வாய்ப்பாக அதைப் பயன்படுத்திக் கொள்வோம்.

அதற்கு இரண்டு, மூன்று நாள்களுக்கு முன்பு, இசையின்பன் திருமணத்திற்காக தேதி வேண்டும் என்று கேட்டிருந்தார்கள் என்பது என்னுடைய நினைவிற்கு வந்தது.

பசும்பொன் - இசையின்பன் மணவிழாவிற்கு ஏற்பாடு செய்தோம்!

இசையின்பனும் கைதாகி இருக்கிறார்; இறையனாரும், திருமகளும் கைதாகி இருந்தனர். அப்பொழுது திரு மகளை அழைத்து, நீங்கள் இரண்டு பேரும் இங்கேதான் இருக்கிறீர்கள்; இசையின்பனும் இங்கேதான் இருக்கிறார்; மாப்பிள்ளை இங்கே தயாராக இருக்கிறார்; மணப்பெண் எங்கே இருக்கிறார்? என்று கேட்டேன்.

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள வீட்டில்தான் மணப்பெண் இருக்கிறார் என்று சொன்னார்கள்.

உடனே அழைத்து வந்துவிடுங்கள்; பெயர்ப் பட்டி யலை இப்பொழுதுதான் காவல்துறை எழுத ஆரம் பித்திருக்கிறார்கள். ஒரு மணிநேரம் ஆகும்; மணப் பெண்ணை அழைத்து வந்து, பெயர்ப் பட்டியலில் சேர்த்துவிடலாம் என்றேன்.

இங்கேயே திருமணத்தை முடித்துவிடலாம் அய்யா என்றனர். 

மணப்பெண்ணான பசும்பொன் அவர்களை கைதாகி இருக்கும் இடத்திற்கு அழைத்து வரச் சொன் னோம்.

கைதாகி இருக்கும் அனைவரின் முன்னிலையிலும், அரசாங்க செலவிலேயே, முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக அல்ல - 33 போலீஸ்காரர்கள் சாட்சியாக - பசும்பொன் - இசையின்பன் மணவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதற்குப் பிறகு அவர்களுடைய மகள் சீர்த்தியினுடைய திருமணத்தை நடத்தி வைத்தேன்; இப்பொழுது மகன் இனநலத்தினுடைய மணவிழாவினை நான் நடத்தி வைக்கிறேன்.

மூன்றாவது, நான்காவது தலைமுறை திருமணங்களை நடத்தியிருக்கிறேன்!

9.11.1991 அன்று இசையின்பன் - பசும்பொன் ஆகியோருடைய மணவிழா - அதற்கடுத்து மகள் சீர்த்தி திருமணம்.  இன்றைக்கு மகன் இனநலம் - ஜோ.அட்லின் மணவிழா - இதுபோன்று மூன்றாவது தலைமுறை, நான்காவது தலைமுறை மணவிழாக்களையும் நான் நடத்தி வைத்திருக்கிறேன்.

எனவே, போராட்டத்தில் பூத்த மலர்கள் - அந்த மலர்களுக்குப் பிறகு, அந்தப் போராட்டத்தில் காய்த்த கனிகள்.

அந்தத் திருமணத்தை ஒப்பிடும்பொழுது இன்று நடைபெறும் மணவிழாவிற்கு அதிக செலவுதான். மண்டபம், சாப்பாடு மற்றவற்றிற்கு. அன்றைய மண விழாவிற்கு சாப்பாடு கொடுத்தது அரசாங்க செலவில்.

இது எவ்வளவு பெரிய அமைதிப் புரட்சி. வேறு எங்காவது  நடந்திருக்கிறதா?

எளிமையாக சாதித்துக் காட்டிய தத்துவத்திற்குப் பெயர்தான் பெரியார் - சுயமரியாதை இயக்கம்!

‘‘திருமணத்தைச் செய்து பார்; வீட்டைக் கட்டிப் பார்'' என்று நம்மை மிரட்டினார்கள். ஆனால், எவை சாதிப்பதற்குக் கஷ்டம் என்றார்களோ, அவற்றையெல்லாம் எளிமையாக சாதித்துக் காட்டிய தத்துவத்திற்குப் பெயர்தான் பெரியார், சுயமரியாதை இயக்கம் என்று பெயர்.

ஜாதி மறுப்புத் திருமணத்திற்கு எடுத்துக் காட்டான குடும்பம் என்று இங்கே உரையாற்றி யவர்கள் எல்லாம் சொன்னார்கள். ஜாதி மறுப் பையும் தாண்டி, இன்றைக்கு மத மறுப்புத் திருமணம் நடைபெறுகிறது.

மதங்களுக்கு அடையாளம் உண்டா? என்று தந்தை பெரியார் அவர்கள் மிக எளிமையாக கேட்டார்.

மருத்துவமனையில் குழந்தை பிறக்கும் பொழுது, குழந்தையை மாற்றி வைத்துவிட்டார்கள் என்றால், இது சாயபு வீட்டுக் குழந்தையா? கிறித்தவர் வீட்டுக் குழந்தையா? இந்து  வீட்டுக் குழந்தையா? என்று கண்டுபிடிக்க முடியாது. அவரவர்கள் பெற்றோர்களை வைத்துத்தான் அந்தந்த மதத்தைச் சொல்கிறார்கள்.

இதில் மிகவும் பாராட்டவேண்டிய விஷயம் என்னவென்றால், இங்கே மணமகளாக இருக் கக்கூடிய அட்லின் அவர்களுடைய குடும்பத் தாரை நாம் மிகவும் பாராட்டவேண்டும்.

மணமகள் குடும்பத்தாரின் துணிச்சலை பாராட்டுகிறோம்!

இறையனார் - திருமகள் இல்லத்தினர் இந்தத் திருமண முறையில் மணவிழாவை நடத்துவது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விஷயமல்ல. ஆனால், மணமகள் குடும்பத்தாரின் துணிச்சலை திராவிடர் கழகத்தின் சார்பாக மட்டுமல்ல, ஒட்டுமொத்த கொள்கையாளர்களும் அவர்களைப் பாராட்டுவார்கள்.

அடுத்தபடியாக இன்னொரு செய்தியை உங்களுக்குச் சொல்லவேண்டும். 

இம்மணவிழா மாநாடுபோன்று நடக்கிறது என்று ஒரு பக்கத்தில் இருந்தாலும், இன்னொரு வெற்றி - கொள்கை வெற்றியை உங்களுக்குச் சொல்லவேண்டும்.

பெரியார் கொள்கைகளுக்கு 

எப்பொழுதுமே தோல்வி கிடையாது

பெரியாருக்கு எப்பொழுதுமே தோல்வி கிடையாது.  அவர் சொல்வார், ‘‘என்னுடைய போராட்டங்களும், என்னுடைய கருத்தியல்களும், கொள்கைகளும் ஒருபோதும் தோற்றதே இல்லை. வேண்டுமானால், வெற்றி தாமதித்திருக்கலாம்'' என்றார்.

எடுத்துக்காட்டாக, சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்டம் வடிவம் வருவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆனது.

95 ஆண்டுகளுக்கு முன்பு சுக்கிலநத்தத்தில் சுயமரியாதைத் திருமணம் நடந்தது. அந்தத் திருமணம் செல்லாது என்று சொன்னார்களே! தந்தை பெரியார் அவர்களுடைய தலைமையில் நடைபெற்ற திருமணம் அது. பெரியாரே நீதிமன்றத்திற்குச் சென்று சாட்சி சொல்கிறார். அப்படி இருந்தும் அந்தத் திருமணம் செல்லாது என்று சொன்னார்கள்.

அந்த இணையருக்கு, இரண்டு பெண்கள், இரண்டு மகன்கள் பிறந்து, வளர்ந்து முதல் மகனுக்குத் திருமணம் நடக்கவிருந்த காலகட்டத்தில்தான்.

(தொடரும்)


No comments:

Post a Comment