பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணி மனிதர்களை பயன்படுத்தினால் குற்ற வழக்கு உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 14, 2023

பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணி மனிதர்களை பயன்படுத்தினால் குற்ற வழக்கு உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்

 சென்னை, ஜூலை 14 - பாதாள சாக்கடைகள் சுத்தப்படுத்தும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது என அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், குற்ற வழக்கும் தொடரப்படுகிறது என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் 'சபாய் கர்மாச்சாரி அந்தோலன்' என்ற அமைப்பு தாக்கல் செய்த மனுவில், பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் நடைமுறையை முழுவதுமாக ஒழிக்க வேண்டும். ஊழியர்களை இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடு படுத்தும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசார ணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி, "பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் நடைமுறை அமலில் உள்ளதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரர் அமைப்பு சார்பில், "மாநகராட்சிகள் பணியமர்த்துகிறது. அதேபோல், கழிவறைகளை சுத்தப்படுத்தும் பணியில் தனியாரும் மனிதர்களை ஈடுபடுத்துகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும், பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதை தடுக்கும் வகையில் விதிகள் இயற்றப்பட்டு, ஆகஸ்ட் 2022 அறிவிக்கப்பட்டுள்ளது. சுத்தம் செய்யும் பணிகளுக்கு இயந்திரங்கள் பயன் படுத்தப்படுகிறது. விதிகளை மீறுவோருக்கு எதிராக குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது" என்று விளக்க மளிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, இதுபோன்ற கோரிக்கையுடன் வழக்கு தொடர்வது என்பது தொடர் நடவடிக்கைதான். எனவே இவற்றைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அரசு பிளீடர் முத்துகுமார், "பாதாள சாக்கடைகள் சுத்தப்படுத்தும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது என அனைத்து நகராட்சி, மாநகராட்சிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், குற்ற வழக்கும் தொடரப்படுகிறது" என்று விளக்கமளித்தார். இந்த நடவடிக்கைகளை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment