இந்திய சுதந்திரப் போராட்ட தியாகி என்று அடையாளப்படுத்தப்படும் திலகர், இன்றைய ஹிந்துத்துவ அரசியலுக்கு துவக்கப் புள்ளியாக இருந்தவர், இந்தியாவில் ஹிந்து சனாதன ஆட்சியை நிறுவியே தீரவேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டவர்
குழந்தைத் திருமணத்தைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, 1880ஆம் ஆண்டு குஜராத்தைச் சேர்ந்த பி.எம்.மலபார் என்பவர் ஆங்கிலேய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதம் பல்வேறு விவாதங்களைக் கடந்து, பல ஆண்டுகளுக்குப் பின்னர் பிரிட்டிஷ் அரசால் குழந்தைத் திருமணத் தடுப்பு சட்ட மசோதாவாக கொண்டு வரப்பட்டது.
சனாதனத்தில் ஊறித் திளைத்த திலகரோ, இது சனாதனத்திற்கு விடப்பட்ட சவால் என்றார். சனாதன சம்பிரதாயங்களில் கை வைப்பதற்கு வெள்ளையனுக்கு எந்த அருகதையும் இல்லை என்றார்! தனது "கேசரி" இதழில் பால்ய விவாகத்தை ஆதரித்து கட்டுரைகளை எழுதினார்! சனாதனிகளுக்கு எதிரான எந்தச் சட்டத்தையும் கொண்டுவர அனுமதிக்க மாட்டோம் என்று ஊர்தோறும் பேசித் திரிந்தார்!
விநாயகனை அரசியலாக்கி, மதவெறி அரசியலுக்கு அடித்தளம் அமைத்தவரும் இவர்தான்.
மகாத்மா புலே, சாகு மகாராஜ் ஆகியோர் மகாராட்டிராவில் துவக்கிய "சத்ய சதக்" இயக்கம், பார்ப்பனரல்லாதாரிடத்தில் மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியது!. ஹிந்துமதம் பார்ப்பனரல்லாதாரை தீண்டத்தகாதவர்களாக, சூத்திரர்களாக வைத்திருப்பதை அவர் களுக்கு உணர்த்தியது. விழிப்புற்று எழுந்த பார்ப்பனரல்லாதாரை மதம் எனும் போதையில் ஆழ்த்தி, அவர்களை தன் வயப்படுத்தும் சூழ்ச்சியில் இறங்கினார் திலகர்!
"சர்வஜன கணபதி விழா" என்ற பெயரில் விநாயகர் ஊர்வலங் களை நடத்தி, இஸ்லாமியர்களுக்கு எதிராக, ஹிந்துமத வெறியூட்டி, கலவரங்களைக் கட்டவிழ்த்து விட்டார். பார்ப்பன ரல்லாதார் என்றென்றும் சூத்திரர்களாகவும், தாழ்த்தப்பட்டவர் களாகவும் தங்கள் வாழ்க்கையைத் தொடர பல்வேறு யுத்திகளைக் கையாண்டார்.
1897இல் புனே, பம்பாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் "பிளேக்" எனும் கொடிய நோய் பரவி மக்கள் பெருமளவில் இறந்து போனார்கள். "பிளேக்" நோய்க்கு "எலி" முக்கிய காரணம் என்று கண்டறியப்பட்டது. உதவி ஆட்சியராக அப்போது பதவி வகித்துவந்த ராண்ட் மற்றும் அயெர்ஸ்ட் ஆகியோர் கொண்ட குழு, "பிளேக்" மேலும் பரவாமல் தடுக்க தீவிரமாக செயல்பட்டது. அப்போது நோய்க்கு காரணமான எலிகளையும் ஒழிக்க அரசு முனைந்தது.
"விநாயகனின் வாகனமான எலியை ஒழிப்பதா?" என திமிறி எழுந்து . "எலிகளைக் கொல்லுவதன் மூலம் ஹிந்துக்களின் மனதை பிரிட்டிஷ் அரசு புண்படுத்துகிறது" என்று அறிக்கை விடுத்தார். இதற்கெல்லாம் சற்றும் சளைக்காது, தன் கடமையிலிருந்து பின் வாங்காது செயல்பட்ட உதவி ஆட்சியர் ராண்ட்டும், அயெர்ஸ்டும் "பிளேக்" நோயை முற்றிலுமாக ஒழித்து, பொதுமக்களிடத்தில் பெரும் செல்வாக்கு பெற்றனர்.
மக்கள் ஒன்றுகூடினால் நோய் அதிகம் பரவும் என்பதால் 'கணேஷ் விசர்ஜன்' நடப்பதற்காக கடுமையான விதிகள் விதிக்கப் பட்டது. ஆங்கிலேய அரசின் இந்த நடவடிக்கையால் 'பிளேக்' மே மாதத்திற்குப் பிறகு புனேவில் குறையத்துவங்கியது.
ஆனால் திலகர் தனது கேசரி இதழில் தொடர்ந்து ஆங்கிலேயரின் நடவடிக்கையை மதவிரோதப்போக்கு என்று எழுதிவந்தார். மேலும் மகாராட்டிரா இளைஞர்களிடையே மதவெறியைத்தூண்டும் வகையில் கூட்டங்கள் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மதவெறி ஏற்றப்பட்ட பேகர் சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட தாமோதர், பால்கிரிஷா என்ற இருவரால் பிளேக் நோயை திறம்படக் கையாண்டு நோய் பரவலைத்தடுத்து நிறுத்தி பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றக் காரணமாக இருந்த ஆங்கிலேய அதிகாரிகள் ராண்ட் மற்றும் லெப்டினன்ட் சார்லஸ் அயர்ஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் அயர்ஸ்ட் உடனடியாக இறந்தார், ராண்ட் ஜூலை 3இல் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்தப்படுகொலையை திலகர் தனது கேசரி இதழில் அப்சல்கானைக் கொலை செய்த சிவாஜியைப் போன்றவர்கள் என்று கொலைகாரர்கள் குறித்து எழுதினார். இதனால் இந்திய தண்டனைச் சட்டத்தின் 124ஆவது பிரிவின் கீழ் தேசத்துரோக வழக்கு பதிவு செய்து திலகருக்குச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
(ராஜ்நாராயண் சந்தவர்க்கர் தொகுத்து வழங்கிய 'இந்தியாவில் பிளேக் பீதி மற்றும் தொற்றுநோய் அரசியல்: 1896-1914' என்ற புத்தகத்தில்)
ஜேம்ஸ் என்கிற ஒரு பாதிரியார், ராண்ட்டுக்கும், மக்களுக்கும் இடையிலான இணக்கமான சூழலைப் பயன்படுத்தி, தீண்டத் தகாதவர்களாக கருதப்பட்ட மக்களிடம், கல்வியின் அவசியத்தை எடுத்துக்கூறி அனைத்து மக்களும் கல்வி கற்பதற்கான ஏற்பாட் டினைச் செய்தார். ராண்ட் மற்றும் அயெர்ஸ்ட் மீது ஏற்கெனவே கோபம் கொண்டிருந்த பார்ப்பன இளைஞர்களுக்கு ஜேம்ஸ் பாதிரியாரின் செயல் மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிப்பதை எதிர்த்ததோடு, பெண்களுக்குக் கல்வி வழங்குவதை அறவே வெறுத்தவர் திலகர். "சூத்திரர்களும், தாழ்த்தப்பட்டமக்களும், பெண்களுக்கும் கல்வியே கற்கக்கூடாது" என்று வெளிப்படையாகவே பேசியவர்தான் திலகர்.
"செக்காட்டும் செட்டியும், செருப்பு தைப்பவனும், துணி துவைப்பவனும் சட்டசபைக்கு வர நினைப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சூத்திரர்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்ட வர்களே தவிர சட்டத்தை இயற்றுபவர்கள் அல்ல" என்று திமிராகப் பேசினார்.
"கீதா ரகசியம்" என்ற உரைநூலை எழுதி, மக்கள் கீதையை படித்து இந்துமத உணர்வு பெறவேண்டும் என்று கூறிய திலகர், இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கைத் தொடர்ந்து கடைப்பிடித்து, இந்திய அரசியலை, இந்துமதக் கோட்பாட்டுக்குள் அடக்க முயற்சித்தார். ஆர்.எஸ்.எஸ். தளகர்த்தராக விளங்கிய சாவர்க்கரை இவர்தான் தயார் செய்தார்.
இத்தகைய மதவெறியாளர் திலகர் பெயரால் பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசிய விருது அறிவிப்பு பொருத்தம் தானே!
ஒரே மதம் - அது ஹிந்து மதம் தான் இந்தியாவில் - என்று கருதுகிற ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் தான் திலகரும், மோடியும்!
No comments:
Post a Comment