தி.மு.க. ஆட்சியை எதிர்த்து பா.ஜ.க. பாத யாத்திரையாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 29, 2023

தி.மு.க. ஆட்சியை எதிர்த்து பா.ஜ.க. பாத யாத்திரையாம்!

தமிழ்நாட்டிற்கு நல்லதே நடக்கக்கூடாது என்ற ஒரே நோக்கத்தில் உள்ள பா.ஜ.க. நடத்தும் நாடகம் தான் நடைப்பயணம்

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பா.ஜ.க. ஓடி ஓடி பல வழக்குகளைத் தொடுத்தது. அதில் மக்கள் நலன் என்பது சிறிதும் இல்லை. 

அதில் முக்கியமாக பாஜக நீதிமன்றத்தில் மூக்குடை பட்ட மூன்று வழக்குகள் வருமாறு:

அதில் ஒன்று கோவில் வருமானத்தை வைத்து கரோனா நோயாளிகளுக்கு அன்னதானம் வழங்கக் கூடாது என்றும், அதற்குத் தடை கேட்டும் ஹிந்து அமைப்பு ஒன்று வழக்கு தாக்கல் செய்தது; திருநெல்வேலி அரசு மருத்துவமனை முன்பு 13.05.2021 அன்று போராட்டமும் நடத்தினார்கள். ஆனால் நீதிமன்றம் அவர்களின் மனுவைத் தள்ளுபடி செய்து, மனுதாரரை இனிமேல் இது போன்ற வழக்குகளை தாக்கல் செய்யக் கூடாது என்று கடுமையாக கண்டித்தது. இந்த வழக்கு தி.மு.க. அரசு ஆட்சி அமைத்து - முதல் அமைச்சரவைக் கூட்டம் துவங்கிய உடனே போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..

அடுத்து 1.07.2021 அன்று முதலமைச்சர் உள்பட யாருமே ஒன்றிய அரசு என்று அழைக்கத் தடை விதிக்க வேண்டும் என்பதாகும் - அதாவது  இந்திய அரசை 'மத்திய அரசு' என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள் 'ஒன்றிய அரசு' என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகின்றனர். இதற்கு பா.ஜ.க. சார்புடைய தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வழக்கு தொடர்ந்தனர். மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

அடுத்த வழக்கு 8.7.2021 அன்று 'நீட்' தேர்வின் தாக்கம் பற்றி ஆராய ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டதை சட்டவிரோதமானது என்று அறிவிக்கும்படி பாஜகவின் பிரமுகர் ஒருவர் தாக்கல் செய்தார்.  இந்த வழக்கை விசாரித்து  உத்தரவு பிறப்பித்த தலைமை நீதிபதி அமர்வு, நீட் தேர்வின் பாதிப்புகளை ஆராயும் நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அமைத்தது செல்லும் எனக் கூறி,  வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலே எடுத்துக்காட்டாகக் கூறியுள்ள 3 வழக்குகளிலும் தமிழ்நாட்டிற்கோ தமிழ்நாட்டு மக்களுக்கோ எந்த ஒரு நன்மையும் இல்லை; அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு தீங்கிழைக்கும் வகையிலேயே இந்த வழக்குகளை பாஜக மற்றும் ஹிந்துத்துவ அமைப்பினர் தொடுத்துள்ளனர். இதிலிருந்து இவர்கள் தமிழர் நலன்களுக்கு விரோதமானவர்கள் என்று தங்களுக்குத் தாங்களே அம்பலப்பட்டது தான் மிச்சம்!

 அதே நேரத்தில் இவர்கள் வட இந்தியாவில் செய்யும் செயல்களைப் பார்த்தாலும் சரி, கடந்த ஆண்டு துபாயில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வென்றதை அடுத்து இந்த வெற்றியைக் கொண்டாடுகிறோம் என்ற பெயரில் லண்டன் வெய்ஸ்டரில் உள்ள ஹிந்து அமைப்பினர், காவிக்கொடியை ஏந்திக் கொண்டு பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக கூச்சலிட்டுக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். வழியில் இஸ்லாமியர்களின் இல்லங்களுக்கு முன்பு இருந்த பூச்செடிகளை தள்ளிவிட்டு அங்கு நின்றுகொண்டு இருந்த கார் கண்ணாடியில் கருப்பு வண்ண பெயிண்டை ஸ்பிரே செய்துகொண்டே சென்றனர். இதனை அடுத்து அங்கு இருதரப்பினருக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது.     

 சமீப காலமாக சில ஹிந்து அமைப்புகள் லண்டனில் ஹிந்து ஒற்றுமை என்ற பெயரில் கூட்டங்கள் நடத்தி ஹிந்து மதத்தைப் பின்பற்றும் இளைஞர்களிடம் மாற்று மதத்தவர்களை மோசமாக சித்தரித்து பகைமையை விதைத்துள்ளன. சுமார் 90 ஆண்டுகளாக ஒன்றாக இணைந்து வாழ்ந்த மக்கள் இன்று சண்டையிட்டுக் கொண்டு திரிகின்றனர். 

ஆஸ்திரேலிய வாழ் இந்தியரான பாலேஷ் தங்கர் பன்னாட்டு பாஜக ஒருங்கிணைப்பு என்ற அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இவர் மோடி ஆஸ்திரேலியா செல்லும் போது எல்லாம் அவருக்கான ஏற்பாடுகளைச் செய்தவர். இவரும் இந்தியாவிலிருந்து படிக்கவும் வேலைக்காகவும் சென்ற ஹிந்து இளைஞர்களை ஒன்று கூட்டி மதவிரோத கருத்துகளை திணித்தவர் என்ற குற்றச்சாட்டும், அவரின் கூட்டங்களுக்குச் சென்ற சில இளைஞர்களை பாலியல் ரீதியாக கொடுமைப் படுத்தியதும், ஆசிய பெண்களுக்கு ஓட்டலில் வேலைவாய்ப்பு என்று விளம்பரம் கொடுத்து அழைத்து அவர்களை மிகவும் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு ஆஸ்திரேலியாவின் உச்சபட்ச தண்டனையை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

லண்டனிலும், ஆஸ்திரேலியாவிலும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் செய்யும் செயல்களைப் பார்க்கும் போதும் சரி, இவர்கள் தமிழ்நாடு மற்றும் தமிழர்களுக்கு மட்டுமல்ல - இந்தியாவிற்கே, ஏன்? மனித குலத்திற்கே விரோதிகள் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.

மணிப்பூரில் மனித வேட்டை நடைபெறுகிறது. குளிர் சாதனப் பெட்டியில் இருந்தது என்ன கறி என்று மோப்பமிட்டு அடித்துக் கொன்றவர்கள் யார்?

ஆடு மேய்க்கும் சிறுமியை ஒரு கோயிலுக்குள் வைத்து, கோயில் அர்ச்சகர் உள்பட கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் யார்?

குற்றவாளிகளைக் கைது செய்தபோது, குற்றவாளி களுக்கு ஆதரவாகப் பேரணி நடத்தியவர்கள் யார்? யார்??

இந்தப் பாசிச பா.ஜ.க. கும்பலே - மக்கள் நல அரசான திராவிட மாடல் அரசை எதிர்த்து நடைப் பயணம் போகிறதாம் - வெட்கக் கேடு!  

No comments:

Post a Comment