அமைச்சர்களை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 1, 2023

அமைச்சர்களை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஜூலை 1- அமைச்சர்களை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து 'டிஸ்மிஸ்' செய்து நேற்று முன்தினம் (29.6.2023) தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  உத்தரவிட்டார். இதற்கான காரணத்தை 5 பக்க கடிதம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு தெரிவித்து இருந்தார். அதில், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணை நியாயமான முறையில் நடக்க வேண்டும் என்பதற்காகவும், மாநிலத்தில் அரசமைப்புச் சட்ட நடைமுறையில் சீர்குலைவு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற் காகவும் செந்தில் பாலாஜியை 'டிஸ்மிஸ்' செய்வதாக ஆளுநர்கூறியிருந்தார்.

மேலும் அந்த கடிதத்தில், இந்த பிரச்சினை தொடர்பாக தனக்கு முதலமைச்சர் எழுதிய கடிதங்களில் தேவையற்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு இருந்ததாக குற்றம் சாட்டியிருந்தார். 

இந்தநிலையில், ஒரு திருப்பமாக செந்தில் பாலாஜியை 'டிஸ்மிஸ்' செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, அது வெளி யான 4 மணி நேரத்துக்குள் தற்காலிகமாக நிறுத்தி வைத்து முதலமைச்சருக்கு, ஆர்.என்.ரவி கடிதம் எழுதினார். அதில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிவுரைக்கு ஏற்ப முந்தைய உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

6 பக்க கடிதம்

இந்த சூழ்நிலையில், ஆளுநரின் 5 பக்க கடிதத்துக்கு,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து 6 பக்க கடிதம் ஒன்றை நேற்று (30.6.2023) அனுப்பி வைத்தார். 

அதில், கூறப்பட்டு இருப்பதாவது:-

செந்தில் பாலாஜியை 'டிஸ்மிஸ்' செய்வதாக 29.6.2023 அன்றிரவு 7 மணிக்கு எனக்கு ஒரு கடிதத்தை எழுதிவிட்டு, பின்பு அதே நாளில் இரவு 11.45 மணிக்கு இடைக்காலமாக நிறுத்தி வைத்திருப்பதாக மற்றொரு கடிதத்தை எழுதியிருக் கிறீர்கள். இந்த விஷயத்தில் உண்மை என்னவென்பதையும், சட்டம் சொல்வதையும் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்பு கிறேன்.

உங்கள் கடிதங்கள் வாயிலாக நீங்கள், முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையில் இருந்து எந்தவொரு உதவி யையோ, ஆலோசனையோ கேட்கவில்லை.

நீங்கள் மிகவும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி எழுதிய கடிதத்தில், அட்டர்னி ஜெனரலின் கருத்தை பெற இருப்பதாகவும், அதுவரை முந்தைய உத்தரவை 'வாபஸ்' பெற்றுவிடுவதாகவும் கூறியுள்ளீர்கள். இது எதை காட்டுகிறது என்றால், இவ்வளவு பெரிய முக்கியமான முடிவை நீங்கள் சட்ட ஆலோசனை கேட்காமலேயே எடுத்திருக்கிறீர்கள். ஒன்றிய அமைச்சரின் தலையீடு வரும் அளவுக்கு இந்த விஷயம் சென்றிருப்பதால், நீங்கள் அவசர கதியில் செயல் பட்டிருக்கிறீர்கள் என்பதையும், அரசமைப்புச் சட்டங்களைப் போதிய அளவில் நீங்கள் பின்பற்றவில்லை என்பதையும் காட்டுகிறது.

தேவையற்ற அச்சுறுத்தல்

எனது அமைச்சர்களும், எங்கள் சட்டமன்ற உறுப்பினர் களும் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளனர். மக்களின் நம்பிக்கையே எங்களின் அசைக்க முடியாத சொத்தாக உள்ளது. அவர்கள் எங்களுக்கு பின்னால் உறுதியுடன் நின்று கொண்டிருக்கிறார்கள். எனவே அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் பதவி ஏற்றுள்ள ஆளுநர்போன்ற அதிகாரி கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் நிர்வாகத்தை மேற் கொள்ளும்போது கண்ணியத்துடனும், தேவையற்ற அச்சுறுத் தல்களை செய்யாமலும் நடந்துகொள்ள வேண்டும்.

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடருவதில் நீங்கள் கூறியுள்ள கருத்துக்கும் சேர்த்து பதில் அளிக்க விரும்புகிறேன். உங்களுக்கு 1.6.2023 அன்று எழுதிய கடிதத்தில், விசார ணையை எதிர்கொள்ளும் ஒருவருக்கும், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட ஒருவருக்கும், நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கும் இடையேயான வித்தியாசங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

லில்லி தாமஸ் வழக்கு

நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்குத் தான் அமைச்சர் பதவி அல்லது மக்கள் பிரதிநிதி என்ற பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்ய முடியும். இதை லில்லி தாமஸ் வழக்கில் 2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தெளிவுப் படுத்தியுள்ளது.

நீங்கள், செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக உச்சநீதி மன்றம் கூறியுள்ள கருத்தில் சில கருத்துகளை தேர்ந்தெடுத்து கூறியிருப்பதால், அதுபோலவே லில்லி தாமஸ் வழக்கில் இருந்தும் உங்களுக்கு குறிப்பிட்ட கருத்தை எடுத்து கூற விரும்புகிறேன்.

அதில் கூறியுள்ளப்படி, தகுதி இழப்பு என்பது நீதிமன் றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டப்பிறகே நிகழ்கிறதாக உள்ளது. ஆனால் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அம லாக்கத்துறை அவரை கைது செய்திருக்கிறதே தவிர, அவர் மீது இன்னும் குற்றபத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை. அதுபோல, குற்ற வழக்குகளை எதிர்கொண்டு வரும் நபர்களின் அமைச்சர் பதவி தொடர்பாக, உச்சநீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட  அமர்வு, 2014ஆம் ஆண்டு மனோஜ் நருல்லா - இந்திய அரசு வழக்கில் பிறப்பித்த உத்தரவையும் சுட்டிக்காட்டுகிறேன். அதில், குற்ற வழக்கை எதிர்கொள்ளும் ஒருவர் அமைச்சரவையில் இருக்க வேண்டுமா? அல்லது நீக்கப்பட வேண்டுமா? என்பது பிரதமரோ அல்லது முதலமைச்சரோ முடிவு செய்ய வேண்டிய விஷயமாக உள்ளது என்று கூறியிருக்கிறது.

அடிப்படை ஆதாரமற்றது

எனவே ஒரு விசாரணை முகமை ஒருவர் மீது ஒரு வழக்கை தொடர்ந்திருப்பதால் மட்டுமே அவர் சட்டப்படி அமைச்சராக தொடர முடியாது என்று கூறிவிட முடியாது. 16.5.2023 அன்று செந்தில் பாலாஜி தொடர்பாக உச்சநீதிமன்றம் கூறிய கருத்தை உங்களுக்கு நான் ஏற்கெனவே விளக்கமாக கூறியிருக்கிறேன். அது குற்றத்தை கண்டறிந்து முடிவெடுத்து அளிக்கப்பட்ட தீர்ப்பு அல்ல. எனவே அதை செந்தில் பாலாஜியை தகுதி இழக்கச்செய்வதற்கான உத்தரவாக ஏற்றுக்கொள்ள முடியாது.

வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையின் போது, சிலர் தாக்கியதாக கூறப்பட்டுள்ள சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. நீதிமன்றத்திலும், விசாரணை அதிகாரிகளிட மும் உள்ள அந்த விவகாரத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டு களை நீங்கள் எழுப்புவது நீதி நிர்வாகத்தில் தலையிடுவது போல் உள்ளது. மேலும் நீங்கள் இதுதொடர்பான விசாரணை யில் செந்தில் பாலாஜி தலையிட்டிருப்பதாக கூறும் குற்றச் சாட்டு அடிப்படை ஆதாரமற்றது.

இரட்டை நடவடிக்கை

செந்தில் பாலாஜி விவகாரத்தில் 5 பக்க கடிதம் எழுதியி ருக்கும் நீங்கள், முந்தைய அ.தி.மு.க. அரசின் மேனாள் அமைச்சர்கள், அதிகாரிகள் செய்த குற்றங்கள் தொடர்பாக விசாரணை அனுமதியை அளிக்கும்படி எனது அரசு வைத் துள்ள கோரிக்கைளை கிடப்பில் போட்டு, விளக்கமுடியாத மவுனத்தில் இருக்கிறீர்கள். பல மாதங்கள் அந்த கோரிக்கைகள் கிடப்பில் உள்ளன.

குற்ற வழக்கில் நடவடிக்கைகளுக்கு அனுமதி கேட்டு சி.பி.அய். வைத்த கோரிக்கைமீதுகூட எந்த நடவடிக்கையும் இல்லை. இதுபோன்ற பாரபட்ச நடவடிக்கைகள், உங்களது ஆரோக்கியமற்ற ஒருதலைபட்ச செயல்பாட்டை வெளிக் காட்டுவதோடு மட்டுமல்ல, நீங்கள் மேற்கொண்டுள்ள இரட்டை நடவடிக்கையின் பின்னால் இருக்கும் உள்நோக்கத் தையும் வெளிப்படுத்துகிறது.

அதிகாரம் இல்லை

நான் வரம்பு கடந்த வார்த்தைகளை பயன்படுத்தியதாக என் மீது குற்றம் சாட்டியிருக்கிறீர்கள். தமிழ்நாடு அரசு எப்போதுமே உங்களுக்கும், உங்கள் அலுவலகத்துக்கும் உள்ள மரியாதையை தந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழ் கலாசாரம் கற்றுக்கொடுத்த அந்த மரியாதையை நாங்கள் எப்போதுமே வழங்கிக்கொண்டிருக்கிறோம். அதனால் உங்களால் எங்களுக்கு அளிக்கப்படும் சட்டவிரோத உத்தரவு களுக்கு நாங்கள் பணிவதாக நினைத்துவிடக்கூடாது. எனவே மீண்டும் நான் வலியுறுத்துவது என்னவென்றால், அர சமைப்புச் சட்டத்தின் 164 (1) பிரிவின்படி ஒரு அமைச்சரை நியமிக்கவோ அல்லது நீக்கவோ முதலமைச்சரின் ஆலோ சனைப்படிதான் ஆளுநர் செயல்படமுடியும்.

அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்க வேண்டும்? யார் நீக்கப்பட வேண்டும்? என்பதை முடிவு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அது முழுக்க, முழுக்க முதலமைச்சரின் தனிப்பட்ட சிறப்பு உரிமையாக உள்ளது. அரசமைப்புச் சட்டம்  164 (2) இன்படி முதலமைச்சரும், அமைச்சரவையும், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவைக்குப் பொறுப்புடையவர்களாக இருக்கிறார்கள். எனவே செந்தில் பாலாஜியையோ, எனது அமைச்சர்களையோ 'டிஸ்மிஸ்' செய்யவேண்டும் என்று உத்தரவிடுவதற்கு உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இது, முழுக்க, முழுக்க தேர்ந்தெடுக்கப் பட்ட முதலமைச்சரின் சிறப்பு உரிமையாகும். எனவே, எனது ஆலோசனை இல்லாமல், செந்தில் பாலாஜியை 'டிஸ்மிஸ்' செய்ததாக நீங்கள் அளித்துள்ள அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான தகவல், சட்டப்படி செல்லாததாகவும், புறக்கணிக்கத் தக்கதாகவுமே உள்ளது.

-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment