அய்ந்தாம் வேதத்தினை பாடம் எழுதிய நாமதாரி சதுர்வேதி என்ற கிரிமினல் சாமியார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 14, 2023

அய்ந்தாம் வேதத்தினை பாடம் எழுதிய நாமதாரி சதுர்வேதி என்ற கிரிமினல் சாமியார்!

*‘‘ஊசி மிளகாய்’’

இன்றைய (14.7.2023) 'தினமலர்' நாளேட்டில் 6ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ள ஒரு முக்கிய செய்தியை அப்படியே தருகிறோம் - படியுங்கள்.

"தேடப்படும் குற்றவாளியாக 

சதுர்வேதி சாமியார் அறிவிப்பு

சென்னை, ஜூலை 14-  பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சதுர்வேதி சாமியார், வரும், 31ல் நேரில் ஆஜராகும்படி, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, தி.நகர் பசுல்லா சாலையில், ஸ்ரீராமானுஜர் மிஷன் டிரஸ்ட், பாஷ்யகாரா சாரிட்டபிள் டிரஸ்ட் ஆகிய தொண்டு நிறுவனங்களை நடத்தியவர், வெங்கட சரவணன் என்ற பிரசன்ன வெங்கடாச்சாரியார் சதுர்வேதி, 46.

'சதுர்வேதி சாமியார்' என்ற பெயரில் பிரபலமான அவர், ஏராளமான பெண் பக்தர்களை கொண்டிருந்தார். 

சென்னை, ஆழ்வார் பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தொழிலில் ஏற்பட்ட பிரச்னையை தீர்க்க, சதுர்வேதி சாமியாரை நாடினார். 

இதற்காக அவர் வீட்டுக்குள் சென்ற சதுர்வேதி சாமியார், கீழ்தளத்தில் தொடர்ந்து வசித்ததோடு, தொழிலதிபரின் மனைவி மற்றும் மகளை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக, சதுர்வேதி சாமியார்மீது அய்ந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின், அவரை கைது செய்து, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

இதை எதிர்த்து சதுர்வேதி சாமியார் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், குண்டர் சட்டம் செல்லாது என உத்தரவிட்டது. பின், மீண்டும் இதே வழக்கில், 2016ல் சதுர்வேதி சாமியார் கைது செய்யப்பட்டார்.

சதுர்வேதி சாமியாருக்கு எதிராக, மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் போலீசார், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஜாமினில் வெளியே வந்த சதுர்வேதி சாமியார், தலைமறைவானார். அவரை கைது செய்ய, பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அவர் எங்கு இருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை.

இதையடுத்து, அவரை தேடப்படும் குற்றவாளியாக, சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வுநீதிமன்றம் அறிவித்தது. மேலும், அவர் வரும், 31ல் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது."

இதுதான் 'தினமலர்' வெளியிட்ட செய்தி.

ஏராளமான பெண் பக்தர்களைக் கொண்டி ருந்ததாகக் கூறுகிறது அச்செய்தி!

தனக்கு ஏற்பட்ட தொழில் பிரச்சினையைத் தீர்க்க, இந்த நாமதாரி சாமியாரான கபடதாரியிடம் போன    அதிபுத்திசாலியான அந்தத் தொழிலதிபர், அந்த சதுர்வேதி சாமியாரை - 'சதுர்வேதி' என்றால் நாலு வேதம் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைக் கற்றதாகக் கூறிய சாமியாரை - தன் வீட்டுக் கீழ் தளத்தில் குடியேற அனுமதியளித்ததற்குக் கை மேல்பலன் பெற்றார் - இந்த முட்டாள் தொழிலதிபர்.

தொழிலதிபர் மனைவி, மகளை, கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இவரை காவல்துறை 5 பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்குப் பதிவு செய்து குண்டர் தடுப்புச் சட்டத்திலும் போட்டு விட்டார்கள்.

அந்த குண்டர் சட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறியதாம்! (நீதி பட்டபாடு)

ஜாமீனில் வெளிவந்த இந்த சதுர்வேதி சாமியார் என்ற கிரிமினல் பேர் வழி எங்கிருக்கிறார் என்பதை போலீசார் தேடித் தேடி  அலைகின்றனராம். இந்த காவிச் சாமியார் இப்போது தேடப்படும் குற்றவாளி.... 

எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?

பக்தி சாமியார் வேஷம்!

மூக்கு முட்ட நாமம், ஆனால் 'காமவேள்' நடன சாலையில் இந்தக் கயவன்! இந்த நாகப்பாம்பை வீட்டிற்கே வரவழைத்துக் குடும்பத்தின் மானத்தையே கொச்சைப்படுத்துவது எவ்வளவு விரசம் நிறைந்த வேதனை! தொழில் முதலாளிகளின் நிலை!

'பக்தி வந்தால் புத்தி போகும்' என்று பெரியார் சொன்னது இந்தத் தொழிலதிபர் விஷயத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது பார்த்தீர்களா?

பலே பலே நாமதாரி சதுர்வேதி! 

நாலு வேதங்களையும் தாண்டி  அய்ந்தாம் - "அஞ்சாம்"  வேதத்தையும் சொல்லிப் பாடம் எழுதினார் போலும்! பலே பலே!!

மறைந்தும் மறையாத நடிகர் விவேக் வசனம் தான் நினைவுக்கு வருகிறது!

இன்னும் 200 பெரியார்கள் வந்தாலும் இந்த முட்டாள் பக்தர்களும், அயோக்கிய சதுர்வேதிகளும் ஒரு போதும் திருந்தவே மாட்டார்கள் போலும்!

வெளியே வந்த செய்திகளைவிட வராது அமுக்கி  வைக்கப்பட்ட செய்திகள் -  இதுபோன்ற விஷயங்கள் மிக அதிகம் உண்டே!

No comments:

Post a Comment