இரு நூறுகளும் ஒரு தொண்ணூறும் - சில நினைவுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 31, 2023

இரு நூறுகளும் ஒரு தொண்ணூறும் - சில நினைவுகள்

கி.வீரமணி

பெரும்புலவரும், சீரிய பகுத்தறிவாளருமான நன்னன் அவர்களது நூற்றாண்டு நிறைவு விழா நேற்று (30.7.2023) சிறப்பாக நடந்தது.

தமிழ்நாடு திராவிட மாடல் ஆட்சி யின் நாயகர், மாண்புமிகு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெரும் புலவர் மா.நன்னனின் நூல்கள் அரசுடைமையாக்கப்படும் என்று அறிவித்து, அவரது நூற்றாண்டு விழாப் பேருரை நிகழ்த்தி, பல்வேறு அனுபவங்களையும் அவரது நிறை வாழ்வின் சிறப்புப் பற்றியும் எடுத்துரைத்தார்.

ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியராக - ஒரு குக்கிராமத்தில் ஒரு வேளாண் மைத் தோழராக துவங்கி இறுதியில் திராவிட நிலத்தில் பகுத்தறிவுப் பயிர் செழித்தோங்கிட பாங்குடன் பாடுபட்டு வெற்றி பெற்ற சொல்லேருழவர், எழுத் தேருழவர் - ஆனால் அந்த சிந்தனைப் பண்ணையின் சொந்தக்காரர்.

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக உயர்ந்து ஓய்வு பெற்றார்; பிறகு நேரடியாகவே தன்மானப் பிரச்சார தொண்டறத்தின் தொடர் பரப்புரைத் தூதரானார்!

பெரியார் திடலையும் அண்ணா அறிவாலயத்தையும் அவரது பொதுத் தொண்டறத்திற்கான பணிமனை களைப் போல அமைத்துக் கொண்டார். 

நெருக்கடி காலம் அதிகாரியாக இருந்த அவரையும் சீண்டிப் பார்த்தது; தோல்வியுற்றது!

பதவிப் பொறுப்பில் இருந்து ஓய்வுப் பெற்ற நிலையில், பல இயக்க நிகழ்ச்சி களில் நேரடியாகவே பங்கு பெற்ற அவருக்கு திடீரென ஒரு ஆசை வந்தது!

பெரியார் திடலில் ஒரு ஹிந்தி எதிர்ப்புப் போராட்ட அறிவிப்பு!

சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் ஹிந்தி எழுத்து அழித்தல் என்பது அறிவிக்கப்பட்டு - அது எனது தலைமையில் என்று திராவிடர் கழகத் தால் ஏற்பாடு செய்யப்பட்ட அறப் போராட்டம்!

முதல் நாள் விளக்கக் கூட்டம் எனது தலைமையில் (பெரியார் திட லில்) முத்தமிழறிஞர் கலைஞர் பேரு ரையான - "வீரமணி வென்றிடுக; வெற்றிமணி ஒலித்திடுக" என்ற தலைப் பில் அவ்வுரை ஒரு சிறு வெளியீடா கவே வந்து பல பதிப்புகள் கண்டது!) புலவர் மா.நன்னனும் பேச்சாளர் அக்கூட்டத்தில்.

என்னிடத்தில் ‘ஆசிரியரே - இதுவரை நான் அதிகாரி, ஆசிரியர் இப்படி பல பொறுப்புகளிலும் இருந்து விட்டேன்; அதனால் எனக்கு போராட் டக் காலத்தில் சிறைக்குப் போகும் வாய்ப்பே கிட்டவில்லை என்று கூறி - என்னுடன் தானும் அம்மொழிப் போராட்டத்தில் கலந்து கொள்கிறேன் என்று அறிவித்தார்!

நான் சற்றுத் தயங்கி, ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை - அதிகாரி வாழ்க்கை வாழ்ந்து பழகி விட்ட நிலையில் - சிறை வாழ்வு எப்படி, எவ்வளவு நாள் இருக்கும் என்று நமக்குத் தெரியாததால் தவிர்க்கலாமே என்றேன்.

அவர் பிடிவாதமாக இல்லை - நான் நாளை உங்களுடனே போராட்டத்தில் கலந்து கொள்கிறேன் என்பதை உறுதி செய்து விட்டார்!

மறுநாள் காலை பெரியார் திடலில் - ஊர்வலமாக போராட்டத் தோழர்கள், அனுப்பி வைக்க முழக்கங்களுடன் சென்றோம்!

காந்தி - இர்வின் சாலையில் எதிர்க் கட்சித் தலைவர் (எம்.ஜி.ஆர். ஆட்சி) கலைஞர் வந்து, தார் சட்டியையும் பிரஷையும் எனது கையில் கொடுத்து வழியனுப்பினார்.

எழும்பூர் போராட்டத்தில் கைது செய்யப்பட்டோர் 200, 300 தோழர் களுடன் சென்னை மத்திய சிறைச் சாலைக்கு (பழைய இடம்) 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க ரிமாண்ட் செய்யப்பட்ட நிலையில் அனுப்பப் பட்டோம்!

எனது அறைக்கு பக்கத்து அறை யில் (தனி அறை) பகலில் எல்லாம் கலந்துரையாடல் - பகுத்தறிவுப் பயிற்சி வகுப்பு. இப்படி கலகலப்பாக நேரம் போவதே தெரியாது சென்றது!

மகிழ்ச்சியுடன் இருந்தார் - இரவில் தூக்கம் புதிய இடம் - பூட்டப்பட்ட அறை - இதுதான் துவக்கநாளில் ‘ஒரு மாதிரி' இருந்தது; பிறகு அது மாறி, மங்கி, மறைந்தோடி விட்டது என்றார் சிரித்துக் கொண்டே!

வெளியில் கலைஞரும் மற்ற எதிர்க் கட்சித் தலைவர்களும் ஹிந்தியை எதிர்த்தவர்களுக்கு அதிமுக எம்ஜி ஆர் ஆட்சியில் இப்படி 15 நாள் சிறையா? என்று பல குரல்கள் கிளம்பிய நிலையில் - முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள், உடனடியாக தலைமைச் சிறை அதிகாரிகள், அத் துறை காவல்துறை செயலாளரை அழைத்து, உடனடியாக இப்போதே, அவர்களை - தி.க.வினரை வீரமணி, நன்னன் உட்பட அனைவரையும் 5-10 மணித் துளிகளில் விடுதலை செய்து வெளியே அனுப்ப வேண்டும் என்று அவரே ஆணை பிறப்பித்தது கண்டு, அதிகாரிகள் அதிர்ந்து விட்டு, ஆணை வேண்டுமே என்று கேட்டவுடன் - அதெல்லாம் அப்புறம் - முதலில் வெளியே அனுப்புங்கள் என்று சொன்ன வேகம் கண்டு பதிலே பேசாமல் - எங்களிடம் வந்து உடனே கிளம்புங்கள், கிளம்புங்கள் என்று அவசரப்படுத்தினர்.

அய்யா நாங்கள் எங்கள் பொருள்கள் புத்தகங்களை - எடுக்க அவகாசம் தாருங்கள் என்று கேட்ட போது, அவர்கள் அவைகளை நாம் ஒவ்வொருவரிடமும் தனித்தனியே கொண்டு வந்து தருகிறோம். உடனே கிளம்புங்கள் என்றனர். 

எங்களுக்கு மிகவும் வியப்பு - பிறகு நேராக நான், வெளியே வந்து பெரியார் திடலுக்கு வந்து - பிறகு உடனே கோபாலபுரத்தில் இருந்த முத்தமிழ் அறிஞரைச் சந்தித்து நிகழ்வைக் கூறினேன்!

உடனே கலைஞர், ‘‘அது ஒண்ணுமில்லே, விமர்சனங்கள் வெடித்தன - வேறு வழியில்லாமல் உங்களை வெளியே அனுப்பி தன் பழியை துடைத்துக் கொண்டார் எனது நண்பர் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். 

ஹிந்திப் பிரச்சினைதான் நீங்கள் உள்ளே போவதற்குக் காரணம்; அதே பிரச்சினையில் அவரது கட்சி நிலைப் பாடு நினைவூட்டப்பட்டது. அதுதான் உங்களை 4 நாள்களிலேயே வெளியே கொண்டு வந்து விட்டது - என்று சிரித்துக் கொண்டே எனக்கு சால்வை போர்த்தி, காபி கொடுத்து உரையாடி மீண்டும் வரவேற்று, வழியனுப்பினார் கோபால புரத்திலிருந்து!

இந்த இரு நூறுகள் ஒரு தொண்ணூறு கதை எப்படி?!

No comments:

Post a Comment