கோட்டூர் பாலசுப்பிரமணியன்- ருக்மணி அரங்கத்தைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 28, 2023

கோட்டூர் பாலசுப்பிரமணியன்- ருக்மணி அரங்கத்தைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

 கோட்டூர் பள்ளியில் முதன்மையாக வந்த தமிழ்ச்செல்வி, சிங்கப்பூர் அரசின் ஆதரவோடு நடைபெறும் தேசிய அளவிலான சிறுகதை போட்டியில் முதல் பரிசை பெற்றிருக்கிறார்!

கோட்டூர் பள்ளியின் சிறப்பு - மாண்பை அறிந்து சுடரை ஏந்தி ஓடுங்கள், வெற்றி பெறுங்கள்!

கோட்டூர், ஜூலை 28  ‘‘உங்கள் பள்ளியில் முதன்மையாக வந்த தமிழ்ச்செல்வி, சிங்கப்பூரில் சிறுகதை எழுத் தாளராக,  சிங்கப்பூர் அரசின் ஆதரவோடு நடைபெறும் தேசிய அளவிலான சிறுகதை போட்டியில் முதல் பரிசை பெற்றிருக்கிறார் என்றால், கோட்டூர் பள்ளியினுடைய சிறப்பு, இந்தக் கல்வியினுடைய மாண்பு எப்படி என்பதை நன்றாக சிந்தித்துப் பாருங்கள்.  அதைத் தொட ருங்கள்; அந்தச் சுடரை உங்களிடம் அளித்திருக்கிறார்கள். ஓடுங்கள், வெற்றி பெறுங்கள்'' என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்  கி. வீரமணி அவர்கள்.

கடந்த 12.7.2023 அன்று மாலை தஞ்சாவூர் சாலை, மன்னார்குடியில் உள்ள பி.பி.மகாலில் நடைபெற்ற பெரியார் பெருந்தொண்டர் கோட்டூர் வீ.பாலசுப்ர மணியன் நூற்றாண்டு விழாவிற்குத் தலைமையேற்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது தலைமையுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

‘‘சொன்ன சொல்லைக் காப்பாற்றுவோம், அரங்கத்தைக் கட்டிக் கொடுப்போம்!’’

நம்முடைய பாலசுப்பிரமணியன் - ருக்மணி அம்மையார் அறக்கட்டளை சார்பில், ரூ.20 லட்சம் மதிப்பீடு போட்டிருந்தாலும், இன்றைக்கு அது ரூ.40 லட்சமாக உயர்ந்தாலும், ‘‘சொன்ன சொல்லைக் காப்பாற்றுவோம், அரங்கத்தைக் கட்டிக் கொடுப்போம்’’ என்று இந்த அழகான அரங்கத்தைக் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.

நாங்கள் பல பள்ளிகளை நடத்தக்கூடியவர்கள்.  அதில் என்னென்ன நடைமுறைச் சிக்கல்கள் இருக்கும்; எவ்வளவு பொருளாதாரத் தட்டுப்பாடுகள் ஏற்படும் என்று எங்களுக்குத் தெரியும்.

தனியார் பள்ளிக்கூடம் நடத்துபவர்களாகிய நாங்கள் பள்ளியின்  பேருந்து பழையதாகிவிட்டால், அதை விற்றுவிட்டு பணமாக்கவேண்டும் என்று நினைப்போம். ஆனால், ஓர் அரசு அலுவலகத்தில் ஓர் உடைமையை மாற்றவேண்டும் என்று சொன்னால், அதை உடனடியாக ஒருவரால் செய்ய முடியாது. மேலதிகாரிகளுக்குக் கடிதம் எழுதி, அதற்குப் பதில் வந்து பிறகுதான் எதையும் செய்ய முடியும்.

“பிச்சைப்புகினும் கற்கை நன்றே!’’

ஆகவே, நல்ல வழி என்னவென்றால், “பிச்சைப் புகினும் கற்கை நன்றே'' என்று சொல்லக்கூடிய அள விற்கு, நிறைய நன்கொடைகளைக் கேட்டு வாங்கித்தான் கல்வி வளர்ச்சிப் பணிகளைச் செய்யவேண்டும்.

நிறைய பள்ளிக்கூடங்கள் வரவேண்டும் என்று இங்கே நண்பர்கள் சொன்னார்கள். நம்முடைய சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி நிதியை இதுபோன்ற பள்ளிக்கூடங்களுக்குத் தாராளமாகத் தருவதற்கு அவரும் தயாராக இருக்கிறார்; ஏற்கெனவே செய்து கொண்டும் இருக்கிறார்.

எல்லாவற்றையும்விட பாலசுப்பிரமணியன் - ருக்மணி அம்மாள் அறக்கட்டளை அறப்பணியை செய்து வருகிறது. ரூ.40 லட்சம் என்று - இரட்டிப்பு மடங்கு ஆனாலும், பின்வாங்காமல் இதனை பொறுப் புள்ள சகோதர, சகோதரிகள் மகிழ்ச்சியோடு செய்திருக் கிறார்கள்.

அறவிலை வணிகர் என்கிற ஒரு முறை உண்டு. காலணா வேலை செய்துவிட்டு, நாலணா விளம்பரம் தேடுவது. அதுபோன்று இருக்கக் கூடியவர்கள் அல்ல இவர்கள்.

மக்கள் நலனுக்காக செய்த அவர்களைப் 

பாராட்ட வார்த்தைகளே கிடையாது!

அய்யா பாலசுப்பிரமணியனார் அவர்கள் எனக்கு மிகவும் நெருக்கமானவர் இயக்கத்தில் - எல்லா வகையிலும். கொள்கை உறவும் உண்டு - குடும்ப உறவும் உண்டு. அப்படிப்பட்டநெருக்கமான நிலையில் இருக்கும்பொழுது, அய்யா பாலசுப்பிரமணியனார் அவர்கள் பெரிய நிலக்கிழார் - இந்தப் பகுதியில் மிராசுதாரர். ஆனால், அம்பானி அல்ல, அதானி அல்ல, டாடா பிர்லா அல்ல. எளிய விவசாயி. ஒப்பந்தக்காரராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிள்ளைகளை யெல்லாம் ஆளாக்கி, இன்றைக்கு அவர்கள் எல்லாம் சிறப்பாக, வசதியாக இருக்கக்கூடிய அளவிற்கு, தன்பெண்டு, தன்பிள்ளை, தங்களைப்பற்றி மட்டும் கவலைப்படாமல், ஊர்நலம் ஓம்புதல் என்று சொல்லக் கூடிய அளவிற்கு, மக்கள் நலன் பார்த்து இதனைச் செய்து கொடுத்திருக்கிறார்களே, அவர்களைப் பாராட்ட வார்த்தைகளே கிடையாது.

பாலசுப்பிரமணியனார் அவர்கள் எத்தனையோ சொத்துகளை சேர்த்திருப்பார். அப்படிப்படிப்பட்டவர் சொத்து சேர்த்தால் - தந்தை பெரியார் அவர்கள் ஒரு கருத்தைச் சொல்வார்; ஒருவர் வீடு (சொத்து), அவருக் கென்று எப்பொழுதும் நிரந்தரமாக இருக்கவேண்டு மானால், அது பொதுவுக்கானால்தான் அது நிரந்தரமாக  இருக்க முடியுமே தவிர, தனியாரிடம் இருந்தால் அது நிரந்தரம் கிடையாது.

ஏனென்றால், எனக்கு சொத்து இருந்தால், பிறகு அது என் மகனுக்குச் சொத்தாகும்; அவர் பெயரில்தான் வரும், என்னுடைய பெயரில் இருக்காது. அவர் கெட் டிக்காரராக இருந்தால், அந்த சொத்தைப் பெருக்குவார்; ஊதாரியாக இருந்தால், அந்த சொத்தை இல்லாமல் செய்வார். எனவே, அந்த சொத்து அவரிடம் இருக்காது. 

ஆகவே, ஒரு குறிப்பிட்ட அளவு வரையில், பாலசுப்பிரமணி யனார் - ருக்மணி அம்மாள் சொத்தாக இருக்கும். அதற்குப் பிறகு, அந்த சொத்தை வாங்குபவரின் சொத்தாக இருக்கும். பிறகு அவர் யாருக்கு விற்கிறாரோ, அது அவருடைய சொத்தாகும்.

நூறு ஆண்டுகளானாலும், 200 ஆண்டுகளானாலும் அவருக்கென்று நிலைத்திருக்கின்ற சொத்தாக இது இருக்கும்!

ஆனால், இதுபோன்று பொதுக் காரியத்திற்காக செய்து, போர்டு வைத்திருக்கிறார்களே -  பாலசுப்பிரமணியன் -ருக்மணி அம்மாள் அரங்கம் என்று போட்டிருக்கிறார்களே, இந்த சொத்துதான் நூறு ஆண்டுகளானாலும், 200 ஆண்டுகளானாலும் அவருக்கென்று நிலைத்திருக்கின்ற சொத்து. இதிலிருந்து எல்லோரும் தெரிந்துகொள்ள வேண் டியது என்றால், நாமெல்லாம் இத்தகைய பொதுச்சொத்தைத்தான் தேடவேண்டும். இதுபோன்று பொதுக்காரியங்களை, பொதுத் தொண்டினை செய்யவேண்டும். மற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டும்.

என்றைக்கு இருந்தாலும், இந்த சொத்தை யாராலும் எடுத்துக் கொள்ள முடியாது; தனிப்பட்ட சொத்து என்றால், ஏதாவது திருகுதாளங்களை செய்து எடுத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு உண்டு.

அதேநேரத்தில், அறக்கட்டளையின்மூலம் இந்த அரங்கத்தை அமைத்திருப்பதுதான், அதன்மூலம் அவர்களுடைய தாய் - தந்தையருக்கு நிரந்தரப் புகழைத் தேடித்தந்திருக்கிறார்கள், அவர்களுடைய பிள்ளைகள்.

பெரியாருடைய பெருமை பெண் கல்வி!

இந்த ஊரிலே அவர் எந்த நோக்கத்திற்காக இருந்தார் - பெரியாருடைய தொண்டர் அவர் - பெரியாருடைய பெருமை பெண் கல்வி என்பது. பெண் கல்வி என்று சொல்லும்பொழுது ஒரு கருத்தை சொன்னார் - சமத்துவத்தைக் கருதி நம்முடைய பாவலர் அறிவுமதி சொன்னார். இன்று அதை இரண்டு, மூன்று கட்டமாகப் பார்க்கவேண்டும்.

பெரியார் அறக்கட்டளையின் சார்பாக, தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா கொண்டாடும்பொழுது, தஞ்சையில் பொறியியல் கல்லூரியைத் தொடங்கினோம். அதற்கு முன்பு பாலிடெக்னிக் கல்லூரி. வல்லத்தில் உள்ள அந்தக் கல்லூரியில் படித்து உலகம் முழுவதும் நிறைய பேர் இருக்கிறார்கள். பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த தமிழ்ச்செல்வி இங்கே பரிசு பெற்றார். அங்கே பணியும் செய்தார். முதலில் பெண்களுக்கு மட்டும்தான் என்று தொடங்கினோம்.

பாவலர் அறிவுமதி கருத்திற்கு விளக்கம்!

பாவலர் அறிவுமதி ஒரு கருத்தை சொன்னார் - அதற்கு விளக்கம் சொல்கிறோம்.

நம் நாட்டில் உள்ள குறுகிய மனப்பான்மையில், பெற்றோர், தம்முடைய பெண் பெரிய மனுஷியாகி, மஞ்சள் நீராட்டு விழா முடிந்தவுடன், சாக்கைக் கட்டி உள்ளே அமர வைத்தால், பிறகு வெளிச்சத்தையே பார்க்க முடியாது; மிக நெருக்கமான வட்டத்தைத் தவிர, அந்தப் பெண் யாரையும் பார்க்க முடியாது.

பெரியாரால், இந்த இயக்கத்தினால் 

மாறிப் போயிற்று!

இப்படித்தான் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. இப்பொழுது இருக்கின்ற பிள்ளைகளுக்கு அது தெரி யாது. ஏனென்றால், அந்த முறை இப்பொழுது குறைந்து போனது - பெரியாரால், இந்த இயக்கத்தினால் அது மாறி போயிற்று.

‘‘பெண் பிள்ளை படித்தால் என்னாகும்?'' என்று கேட்டார்கள்.

‘‘பெண் பிள்ளை படித்தால், கடுதாசி எழுதலாம்'' என்று சொல்வார்கள்.

‘‘பெண் பிள்ளைகளுக்கு என்னங்க படிப்பு வேண்டி கிடக்கு?  ஆண் பிள்ளையே படிக்கவில்லை, பெண் பிள்ளை படிக்கலாமா?'' என்றெல்லாம் நூறு ஆண்டு களுக்கு முன்பு கேட்டார்கள்.

மனுதர்மத்தில், ஆண்களும் படிக்கக்கூடாது; ஏனென்றால், கீழ்ஜாதிக்காரர்கள் என்று எழுதி வைத் தார்கள்.

‘‘வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கின்றோம்'' என்பார்கள்!

இந்தச் சூழ்நிலையில், ஒரு பெண் படித்தால், நான்கு ஆண்கள் படிப்பதற்கு சமம் என்று சொல்லும்பொழுது, அந்தப் பெண்ணை படிக்க வைக்கவேண்டும் என்றால், அவருடைய பெற்றோர் படிக்க வைக்க அனுப்ப வேண் டும்; ஆனால், அந்தப் பெற்றோருடைய மனப்பான்மை யில், பெண்ணைப் பாதுகாக்கவேண்டுமே, ‘‘அய்யோ, பெண்ணைப் பெற்றுவிட்டோமே என்று வயிற்றில் நெருப் பைக் கட்டிக் கொண்டிருக்கின்றோம்'' என்று சொல்வார் கள். ஆண் பிள்ளையைப்பற்றி கவலைப்படமாட் டார்கள். அப்படி அந்தப் பெண்ணுக்குப் பாதுகாப்பு கொடுப்பதில், பெற்றோருக்குத் தேவையில்லாத ஓர் அச்சம். ஒரு தனித்தன்மையான வாழ்க்கையை, சுதந்திரத்தை பெண் பிள்ளைகளுக்குக் கொடுக்காமல் இருந்தார்கள்.

இந்த சூழ்நிலையில், அந்தப் பெண்களைப் படிக்க வைக்கவேண்டுமானால், பெண்களுக்கென்றே தனியே ஒரு பள்ளி இருக்கிறது என்று தொடங்கினால்தான், பெற்றோர்கள் தங்கள் பெண்களைப் பள்ளிக்கு அனுப்புவார்கள். அதைக் கருதித்தான் தந்தை பெரியார் அவர்கள், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தைத் தொடங்கியவர், பெரியார் பள்ளியை தொடங்கியவர், ஆசிரியர் பயிற்சிப் பள்ளியைத் தொடங்கியவர்; பிறகு பெண்களுக்காகத் தனியே நாகம்மை ஆசிரியர் பயிற்சிப் பள்ளி என்று ஆரம்பித்தார். பெண்களை ஆசிரியர்களாக ஆக்கவேண்டும் என்று நினைத்தார்.

ஆகவே, பாவலர் அறிவுமதி அவர்களுக்குச் சொல்கிறேன், அதுபோன்று சிந்தித்தது தவறில்லை; ஆனால், நடைமுறை எதார்த்ததிற்கு வந்து, மக்களை நம்மோடு இழுத்துக்கொண்டு செல்லவேண்டும். வேக மாக வராதவர்களுக்காக நாம் மெதுவாக நடந்து, அவர்களும் நம்மோடு வரவேண்டும் என்று நினைக் கிறோம்.

உலகத்தினுடைய முதல் 

பெண்கள் பொறியியல் கல்லூரி

இதே கேள்வியை, இங்கிலாந்திற்கு ஒருமுறை நான் சென்றிருந்தபொழுது, ‘‘உலகத்தினுடைய முதல் பெண்கள் பொறியியல் கல்லூரி, வல்லம்'' என்று சொன்னவுடன், ஒரு பெண் எழுந்து, ‘‘சமத்துவம்பற்றியெல்லாம் பேசுகிறீர்களே, பிறகு ஏன் பெண்களுக்கு மட்டும் பொறியியல் கல்லூரியைத் தொடங்கியிருக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.

உண்மைதான். அந்த சமத்துவத்தை உருவாக்க வேண்டுமானால், எங்கள் நாட்டு சமூக சூழ்நிலை யைப் பார்க்கவேண்டும். அந்த சமூக சூழ்நிலையில், பெற்றோர் பலருக்குத் தனியே அந்தப் பெண் பிள்ளை படித்தால், அவர்களுக்கு நிம்மதி ஏற்படும்.

கல்லூரியில் நாங்கள் 

மிகவும் கண்டிப்புடன் இருப்போம்!

1980 ஆம் ஆண்டு தொடங்கிய பாலிடெக்னிக் கல்லூரியில் நாங்கள் மிகவும் கண்டிப்புடன் நடப்போம். அங்கே படிக்கின்ற பெண்ணை, பெற்றோர்தான் வந்து பார்க்கவேண்டும்; அவர்கள் வரவில்லையானால், யார் வருவார்கள்? என்பதை முன்பே குறிப்பில் சொல்லி யிருக்கவேண்டும். அவர்களை மட்டும்தான் நாங்கள் பார்ப்பதற்கு அனுமதிப்போம்.

உடனே கேட்டார்கள், ‘‘பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு, இவ்வளவு கட்டுப்பாடு போட்டு வைத்திருக்கிறீர்களே'' என்று.

அந்தக் கட்டுப்பாடு இருப்பதால்தான், அந்தப் பெண் படிக்கக்கூடிய சூழ்நிலை வந்தது. பெற்றோர் அப் பொழுதுதான் நம்பி அனுப்புவார்கள்.

தமிழாசிரியரியரின் பாராட்டு!

ஒரு திருமணத்திற்காக எடப்பாடிக்குச் சென்றிருந் தேன்; என்னிடம் தமிழாசிரியர் ஒருவர் வந்து, ‘‘உங்கள் பாலிடெக்னிக் கல்லூரியைப்பற்றி பேசவேண்டும்; என்னுடைய மகளை அங்கேதான் சேர்த்திருக்கிறேன்'' என்றார்.

நானும், ‘‘சரி'' என்றேன்.

நான் தமிழாசிரியராக இருக்கிறேன். எனக்கு ஒரே மகள். வல்லத்தில் உள்ள பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்த்தேன். காரணம் என்னவென்றால், அந்தக் கல்லூரி பெண்களுக்கே என்று வைத்திருக் கிறீர்கள். அதனால் பாதுகாப்பாக இருக்கும் என்பதால், ஹாஸ்டலிலும் சேர்த்திருக்கிறேன்.

குறிப்பிட்ட நாள்களில்தான் பிள்ளைகளைப் பார்ப் பதற்காக அனுமதிப்பீர்கள் என்கிற கல்லூரி விதி இருக் கிறது அது. எனக்குத் தெரியாது. நான் செவ்வாய்க்கிழமை வேறொரு வேலையாகச் சென்றபொழுது, என் மகளைப் பார்க்கலாம் என்று சென்றேன்; ஆனால், புதன்கிழமை, சனிக்கிழமை ஆகிய இரண்டு நாள்களில்தான் பார்க்க முடியும்; மற்ற நாள்களில் அனுமதிக்கமாட்டோம் என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டார்கள்.

அதைக் கேட்டவுடன் நான் கோபப்படவில்லை அய்யா. இப்படித்தான் நிர்வாகம் இருக்கவேண்டும். ஆகவே, நான் என் பெண்ணைப் பற்றி கவலைப்படாமல், நான் நம்பிக்கையோடு திரும்பினேன்'' என்றார்.

பயிற்சி பெற்றுவிட்டால், 

வாழ்க்கையில் சிறப்பாக இருப்பார்கள்

மனப்பான்மையை மாற்றவேண்டும். நம்முடைய மனப்பான்மையை அவ்வளவு சீக்கிரம் மாற்ற முடியாது. ஆனால், சமூகத்தை மாற்றவேண்டும்; அப்படி சமூகத்தை மாற்றுவதற்காகத்தான், முதல் கட்டமாக கும்கி யானையைப் பழக்கப்படுத்தி, பிறகு மற்ற யானைகளைப் பிடிப்பது போன்று - இவர்கள் எல்லாம் கும்கி யானை; இவர்கள் பயிற்சி பெற்றுவிட்டால், வாழ்க்கையில் சிறப்பாக இருப்பார்கள்.

ஒரு வீட்டில் ஆண் பிள்ளை இரவு 9 மணியானாலும் வரவில்லை என்றால், கவலைப்படுவதில்லை. ஆனால், பெண் பிள்ளை வருவதற்குச் சற்று காலதாமதம் ஆனவுடன், அம்மா கவலையுடன் வாசலில் அமர்ந்திருக்கிறார்; இன்னமும் காணவில்லையே, என்று அப்பா கேட்கிறார்.

இதற்குக் காரணம், அது முட்டாள்தனம் அல்ல; இன்றைய சூழ்நிலையில், அது தேவைப்படக்கூடிய அளவிற்கு இருக்கும்.

கல்விப் புரட்சி என்பது அமைதியான புரட்சி!

ஆகவேதான் அருமை நண்பர்களே, பாவலருக்கும் சொல்கிறேன், மற்றவர்களுக்கும் சொல்கிறேன். கல்விப் புரட்சி என்பது அமைதியான புரட்சியாகும். 

மாணவச் செல்வங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன் - உங்கள் அம்மாவினுடைய அம்மா - பாட்டி; அல்லது உங்கள் அப்பாவினுடைய அம்மா - யாராவது கல்லூரியில் படித்து பட்டதாரி ஆனவர்கள் எத்தனை பேர் என்று கையைத் தூக்குங்கள்.

இரண்டு மாணவிகள் கையைத் தூக்கினர்.

நானூற்று சொச்சம் பேரில், இரண்டே இரண்டு பேருடைய பாட்டிகள்தான் பட்டதாரிகள்.

சரி, அடுத்த கேள்வி - உங்கள் அம்மாக்களில் பட்டதாரிகளாக இருக்கக்கூடியவர்கள் எத்தனை பேர் என்று கையைத் தூக்குங்கள்.

24 பேர் கைகளைத் தூக்கினர்.

பெரியார் என்ன செய்தார்? என்பதற்கு இதுதான் விடை. நீங்கள் அத்துணை பேரும் இன்றைக்குப் படிக்கிறீர்கள்; பட்டதாரிகள் ஆகப் போகிறீர்கள். நீங்கள் பட்டதாரிகள் ஆவதற்காக ஆயிரம் ரூபாயை மாதாமாதம் ‘திராவிட மாடல்' அரசாங்கத்தில் கதவைத் தட்டி உங்களுக்குக் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறார்கள். இவ்வளவு பெரிய முயற்சிகள் இன்றைக்கு நடைபெறுகின்றன. ஆனால், அன்றைக்கு இது இல்லை.

பாட்டி சரசுவதி கைநாட்டுப் பேர்வழி - 

பேத்தி சரசுவதி மருத்துவர்!

இன்னுங்கேட்டால், பாட்டிக்குப் பெயர் சரசுவதி. கல்விக்கே கடவுள் சரசுவதிதான்.  ஆனால், பேத்தி சரசுவதி, இன்றைக்கு டாக்டர் சரசுவதி; பேத்தி சரசுவதி, இன்றைக்கு வழக்குரைஞர் சரசுவதி; பேத்தி சரசுவதி, இன்றைக்கு என்ஜினியர் சரசுவதி; ஆனால், பாட்டி சரசுவதி கைநாட்டுப் பேர்வழி.

அவர் சொன்னார் அல்லவா, கைநாட்டு என்று. இத்தனையும் மாற்றியது யார் என்றால், பெரியார். அந்தப் பெரியார் பெருந்தொண்டின் காரணமாகத்தான், பாலசுப்பிரமணியன் அவர்களும், ருக்மணி அம்மையாரும் வாழ்க்கை இணையர்களாக ஆனார்கள். அந்தக் கொள்கைக் காரணமாகத்தான், இப்படி கல்விக்கு நாம் உதவவேண்டும் என்ற மனப்பான்மை இந்தப் பிள்ளைகளுக்கு வாழையடி வாழையாக வரக்கூடிய அளவிற்கு, ‘‘வேர்களும் பழுதில்லாதது; விழுதுகளும் சிறப்பானது'' என்ற அளவில் இருக்கிறது.

எனவே, வேரை நினைத்து செயல்படுகிற விழுதுகளே உங்களை வாழ்த்துகிறோம்.

மாணவச் செல்வங்களே, நீங்கள் பெருமையோடு ஒவ்வொருவரும் முயற்சி செய்யவேண்டும். தமிழ்ச்செல்வி அவர்கள் இந்தப் பள்ளிக்கூடத்தில் படித்து, முதன்மையானவர் என்று வந்துள்ளார். அதுபோல உங்களில் விஞ்ஞானிகள் இருக்கிறார்கள்; உங்களில் பொறியாளர்கள் இருக்கிறார்கள்; உங்களில் சட்ட மேதைகள் இருக்கிறார்கள்; உங்களில் விண்வெளி பயணத்திற்கு ஆளாகக்கூடிய அறிவார்ந்த திறமைசாலிகள் இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் நீங்கள் மேலே வாருங்கள். 

‘‘நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது

வேறு யாராலும் முடியாதது, நம்மால் மட்டுமே முடியும்!''

இதைத்தான் நீங்கள் சொல்லவேண்டும்.

நான் இப்பொழுது சொல்கிறேன், அதை நீங்கள் திரும்பச் சொல்லவேண்டும்.

தமிழர் தலைவர்: ‘‘நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது''; மாணவிகள்: ‘‘நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது.''

தமிழர் தலைவர்: ‘‘வேறு யாராலும் முடியாதது, நம்மால் மட்டுமே முடியும்!'' 

மாணவிகள்: ‘‘வேறு யாராலும் முடியாதது, நம்மால் மட்டுமே முடியும்!'' என்று சொன்னார்கள்.

ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையின் சிகரங்களாக இருங்கள்!

இந்தத் தன்னம்பிக்கையின் சிகரங்களாக இருங்கள்; உங்கள் ஒவ்வொருக்கும் திறமைகள் உண்டு. எவரும் முட்டாள்கள் அல்ல; எவரும் தகுதிக் குறைந்தவர்கள் அல்ல. எவரும் அறிவில்லாதவர்கள் இல்லை. வாய்ப்பு உங்களை வெளியே கொண்டு வரும்.

கோட்டூர் பள்ளியினுடைய சிறப்பு, 

இந்தக் கல்வியினுடைய மாண்பு!

இந்தப் பள்ளி, தேசப்படத்தில் வரக்கூடிய அளவிற்கு வாருங்கள்; அந்தப் பெருமை இருக்கிறது. காரணம், உங்கள் பள்ளியில் முதன்மையாக வந்த தமிழ்ச்செல்வி, சிங்கப்பூரில் சிறுகதை எழுத்தாளராக,  சிங்கப்பூர் அரசின் ஆதரவோடு நடைபெறும் தேசிய அளவிலான சிறுகதை போட்டியில் முதல் பரிசை பெற்றிருக்கிறார் என்றால், கோட்டூர் பள்ளியினுடைய சிறப்பு, இந்தக் கல்வியினுடைய மாண்பு எப்படி என்பதை நன்றாக சிந்தித்துப் பாருங்கள்.

அதைத் தொடருங்கள்; அந்தச் சுடரை உங்களிடம் அளித்திருக்கிறார்கள். ஓடுங்கள், வெற்றி பெறுங்கள்!

நன்றி, பாராட்டுகள், வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


No comments:

Post a Comment