கடவுள் மறுப்பாளர்களாக, ஜாதி மறுப்பாளர்களாக, பெண்ணடிமை மறுப்பாளர்களாக,
மத மறுப்பாளர்களாக இருக்கக்கூடிய நாங்கள் வீழ்ந்துவிடவில்லை, தாழ்ந்துவிடவில்லை - மற்றவர்களைவிட வாழ்க்கையில் உயர்ந்திருக்கின்றோம்!
எங்கள் அறிவின்மூலம், பகுத்தறிவின்மூலம் என்று காட்டுவதற்கு இது ஒரு பிரச்சார முறை!
சென்னை, ஜூலை 25 ‘‘கடவுள் மறுப்பாளர்களாகிய நாங்கள், ஜாதி மறுப்பாளர்களாக இருக்கக் கூடிய நாங்கள், பெண்ணடிமை மறுப்பாளர்களாக இருக்கக் கூடிய நாங்கள், மத மறுப்பாளர்களாக இருக்கக்கூடிய நாங்கள் வீழ்ந்துவிடவில்லை, தாழ்ந்துவிடவில்லை - மற்றவர்களைவிட வாழ்க்கையில் உயர்ந்திருக்கின்றோம், எங்கள் அறிவின்மூலம், பகுத்தறிவின்மூலம் என்று காட்டுவதற்கு இது ஒரு பிரச்சார முறை. அதற்குத்தான் இவ்வளவு பெரிய ஆடம்பரமான மணவிழா - விருந்து’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மணமக்கள் இனநலம் -ஜோஅட்லின்
கடந்த 25.3.2023 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடை பெற்ற மணவிழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரை யாற்றினார்.
அவரது வாழ்த்துரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
சட்டத்தைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை;
பெரியாரின் ஆணைதான் பெரிது!
சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்றார்கள் சொன்னவுடன், அம்மணமுறை நின்று விட்டதா? என்றால், இல்லை. அதுதான் பெரியாரின் வெற்றி. எங்களுக்குப் பெரியாரின் கொள்கை முக்கியம். சட்டத்தைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. பெரியாரின் ஆணை தான் பெரிது என்று தோழர்கள் நினைத்தார்கள்.
சட்டம் பின்னால் முண்டியடித்துக் கொண்டு வந்தது.
1967 இல் பேரறிஞர் அண்ணா செய்த பெரிய மகத்தான ஓர் அமைதிப் புரட்சி என்னவென்றால், அது சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட வடிவம் கொடுத்ததுதான்.
இன்னொரு செய்தியை சொல்லுகிறேன். இங்கே இருக்கக் கூடிய மணமக்கள் இனநலம் - அட்லின் மிகவும் மகிழ்ச்சியாக இங்கே அமர்ந்திருக்கிறார்கள்.
1933 ஆம் ஆண்டு எங்களைப் போன்றவர்கள் பிறக்காத காலம் - மே மாதம் 13 ஆம் தேதி மறைந்த அன்னை நாகம்மையார் அவர்களை அடக்கம் செய்துவிட்டு, அடுத்த நாளே தந்தை பெரியார் அவர்கள் திருச்சியில் உள்ள பாலக்கரை பகுதியில் சுயமரியாதைத் திருமணம் ஒன்றை நடத்தி வைக்கிறார்.
அந்த மணக்களில் ஒருவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். கிறிஸ்தவ பாதிரியார் செய்யவேண்டிய திருமணத்தை, பெரியார் செய்வது எங்கள் மதத்திற்கு விரோதமாகும் என்று ஒரு பாதிரியார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினரும், பெரியாரை கைது செய்ய வருகிறார்கள்.
உடனே பெரியார் அவர்கள், ‘‘திருமணத்தை நடத்தி வைத்தவுடன் என்னை கைது செய்யுங்கள்'' என்று சொல்கிறார்.
அந்தத் திருமணத்தை நடத்தியவுடன், பெரியார்மீது வழக்குத் தொடுக்கிறார்கள்.
சுயமரியாதைத் திருமணம் 1933 ஆம் ஆண்டில், வழக்காக வந்த நிலை. ஆனால், இன்றைக்கு வாடிக்கை யாகி விட்டது என்பதுதான் மிகவும் முக்கியம்.
இந்தக் கொள்கை அந்தத் தளத்திலும் வெற்றி பெற்றது. இன்றைக்கு சுயமரியாதைத் திருமணங்களில், கிறிஸ்தவ பாதிரியார்கள் வந்து வாழ்த்துகிறார்கள்.
பெரியாருடைய சிந்தனைகள்
காலத்தைத் தாண்டி வெற்றி பெறும்!
ஆகவே, இந்த மணவிழா என்பது இருக்கிறதே, இது வெறும் வாழ்க்கை இணையேற்பு மட்டுமல்ல; கொள்கை வெற்றி விழா என்று சொல்லவேண்டும். பெரியாருடைய சிந்தனைகள் காலத்தைத் தாண்டி வெற்றி பெறும் என்பதற்கு மிக அருமையான அடையாளமாகும்.
அதேபோன்று, சுயமரியாதைத் திருமணங்களை செய்து வாழக்கூடியவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
உடலுக்கு எப்படி ஒவ்வொரு உறுப்பும் பயன் படுகிறதோ, அதுபோன்று நமக்குப் பயன்படக்கூடிய வர்கள் இறையனார் - திருமகள் குடும்பத்தினர். ஒரு பக்கத்தில் இறையனார் அவர்கள், பிரச்சாரத்திற்கும், சிந்தனைக்கும், எழுத்துப் பணிகளைச் செய்தார். அவருடைய புனை பெயர் ‘இனநலம்' என்பதுதான். தொண்டறச் செம்மலாக வாழ்ந்தவர் அவர்.
இறையனார் - திருமகள் ஆகியோர் செய்த பணிகள் சாதாரண பணிகள் அல்ல!
அதேபோன்று திருமகள் அவர்களும் அதே உணர்வோடு இருந்தார்கள். இங்கே பெரியார் திடலில் இருந்தவரை இருவரும் செய்த பணிகள் சாதாரண பணிகள் அல்ல. திருமகள் அவர்களிடம், பெரியார் சுய மரியாதைத் திருமண நிலையப் பொறுப்புகளை ஒப்படைத்தோம். அந்தப் பணியை மிகச் சிறப்பாக செய்தார்.
அவருக்கு உதவிகரமாகத்தான் அவருடைய மரு மகளான பசும்பொன் அவர்கள் பயன்பட்டார். திருமகள் மறைவின்போது எங்களைப் போன்றவர்கள் மிகுந்த கவலையடைந்தோம். அவர்களுடைய மறைவு ஒரு பக்கத்தில் சமூகநட்டம்; பெரியார் திடலுக்கு சங்கடமான சூழல் - யார் அவருடைய பணியைத் தொடர்ந்து செய் வது என்று நினைத்த நேரத்தில், நம்முடைய பசும்பொன் அவர்கள், அந்தப் பொறுப்பை ஏற்று, பெருமையோடு சொல்கிறேன், திருமகள் இருந்தால் என்ன செய்வாரோ, அதுபோன்று பல மடங்கு செய்கிறார். அதேபோன்று, இசையின்பன் அவர்கள், ‘விடுதலை' நாளிதழ் வரு வதற்குத் துணையாக இருக்கிறார்.
அதேபோன்று இறைவி அவர்களானாலும், இவர் களுடைய சகோதரிகளானாலும், இந்தக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருடைய பங்களிப்பும் சாதாரண மானதல்ல.
அறிவில், சமத்துவத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பெரியார் திடலுக்கு வருகிறார்கள்!
பெரியார் திடலில் உள்ள சுயமரியாதைத் திருமண நிலையத்தில் எப்பொழுது பார்த்தாலும் கூட்டமாக இருக்கும். ஒரு காலத்தில் கோவில் களுக்குச் சென்று திருமணத்தை நடத்திக் கொண் டிருந்தார்கள். மூடநம்பிக்கையாளர்கள், பக்தியில் நம்பிக்கை உள்ளவர்கள் கோவிலுக்குச் செல் கிறார்கள். அறிவில் நம்பிக்கை உள்ளவர்கள், சமத்துவத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பெரியார் திடலுக்கு வருகிறார்கள்.
அப்படிப்பட்ட நிலையில், எந்தவிதமான புகாருக்கும் இடமில்லாத அளவிற்கு பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் நடைபெற்ற இணையேற்பு விழாக்கள், இந்த ஆண்டை எடுத்துக் கொண்டால், ஜனவரி 21 ஆம் தேதிமுதல், நேற்றுவரையில் (24.3.2023) 332 திருமணங்கள் நடைபெற்று இருக்கின்றன. அவர்களுக்கு நாங்கள் கடமைப்பட்டு இருக்கின்றோம்.
பெரியார் சுயமரியாதைத்
திருமண நிலையம்!
வாழ்க்கை என்பது நமக்காக மட்டுமல்ல; தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு என்கிற சின்ன தோர் குடும்ப உணர்வோடு இல்லை. மற்றவர் களுக்குப் பயன்படவேண்டும். எத்தனை பேரை வாழ வைத்துக்கொண்டிருக்கிறார்கள் அதன் மூலமாக.
332 திருமணங்கள் நடைபெற்று இருக்கின்றன
323 ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வுகளில்
13 வேற்று மாநிலத்தவர்களின் இணையேற்பு
6 பார்ப்பனர் இணையேற்பு
9 மணமுறிவு இணையேற்பு
8 விதவை மறுமணம்
இப்படி பசும்பொன் அந்தப் பணியை அதி காரப் பூர்வமாகத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார். எங்களிடம் எந்த உதவியையும் கேட்பதில்லை. அவர்கள்மீது எந்தப் புகாரும் வந்ததுமில்லை.
அப்படி அருமையாக, தானும் பயன்பட்டு, சமூகத்தில் தன்னுடைய குடும்பத்தையும் உயர்த்தி, பிள்ளைகளை வளர்த்து, ஆளாக்கி, இவ்வளவு பெரிய நிகழ்ச்சி நடத்துவது என்பது - அதுவும் இறையன் - திருமகளுக்குப் பிறகு, அந்தக் குடும்பம் எப்படி நல்ல கொள்கைப் பல்கலைக் கழகமாக இருக்கிறது என்பதற்கு இந்த மணவிழா ஓர் அடையாளம்!
ஒன்றை உங்களுக்குச் சுட்டிக்காட்ட கடமைப்பட்டு இருக்கிறேன்.
என்னுடைய அறைக்கு இறையனாரை அழைத்து, அவரிடம் உரிமை எடுத்துக் கொண்டு பேசுவேன். நான் என்ன சொன்னாலும், அதற்குப் பதில் சொல்லாமல், சிரித்துக்கொள்வார்.
அவர் தனித்தமிழில்தான் பேசுவார். அவரிடம் வேடிக்கை செய்வதற்காக ‘‘இறையனார் வாங்க, பண்டுவம் பார்த்து வந்தீங்களா?'' என்பேன்.
‘‘குளம்பி குடிக்கிறீர்களா?'' என்பேன்.
‘‘எல்லாமே உங்களுக்கு வேடிக்கைதாங்க'' என்பார் இறையனார்.
பத்திரிகைகளுக்கு வழிகாட்டி நூல் இறையனார் எழுதிய ‘‘இதழாளர் பெரியார்!''
அதேநேரத்தில், இரவு - பகல் கண்விழித்து. எதையும் ஆதாரப்பூர்வமாக ஆக்கம் செய்த, ‘‘பெரியார் பேருரையாளர்'' அவர். அவருடைய ஆய்வுகள் என்றைக்கும் காலத்தால் நிற்கக் கூடியன.
இதழியலைப்பற்றி அவர் ஆய்வு செய்து எழுதிய ‘‘இதழாளர் பெரியார்'' நூல் இருக்கிறதே, அதுதான் பத் திரிகையாளர்களை, பத்திரிகைகளைப் பொறுத்தவரை யில் அதிகாரப்பூர்வ மான வழிகாட்டி நூலாகும்.
அதேபோன்று அவரை மிஞ்சக்கூடிய அளவிற்கு அவருடைய குடும்பத்தினர் உள்ளனர்.
கொடுக்கின்ற உள்ளம் பணத்தைப் பொருத்தல்ல - மனதைப் பொருத்தது!
இங்கே பெரியார்மாணாக்கனைப்பற்றி நம்முடைய கவிஞர் அவர்கள் சொன்னார். இவருடைய குடும்பம் மிக எளிமையான குடும்பம். லட்சக்கணக்கில் சம் பாதிக்கக் கூடியவர்களும் அல்ல. ஆனால், கொடுக்கின்ற உள்ளம் என்பது பணத்தைப் பொருத்ததல்ல; மனதைப் பொருத்தது.
பெரியார் மாணாக்கன் - செல்வி, அவர்களுடைய மகள் தொண்டறம் - குடும்பத்தினர் இதுவரையில் இயக்கத்திற்கு மாதந்தவறாமல், ‘விடுதலை' சந்தா, ‘விடுதலை' வைப்பு நிதி, பெரியார் பெருந்தகையாளர் நிதி, பெரியார் மணியம்மை பவுண்டேன் நிதி, பெரியார் உலக நிதி, நாகம்மையார் இல்ல நிதி, உண்மை, பெரியார் பிஞ்சு சந்தா என்று இதுவரையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக மாதம் தவறாமல் நன்கொடை அளித்து வருகின்றனர். அவர்கள் தேர்ந்தெடுத்த தேதி டிசம்பர் 2. இவர்களைப் போன்று ஓரிரு தோழர்கள் இருக் கிறார்கள். நெடுமாறன் வேல்சோமசுந்தரம் இருக்கிறார்.
இதுவரையில் 25 ஆண்டுகளாக அளித்த நன்கொடை- 12 லட்சம் ரூபாய்க்கும் மேலாக நன்கொடை அளித்திருக்கிறார்கள் இயக்கத்திற்கு.
தங்களுடைய வருவாயில் தங்களுடைய குடும்பத் தையும் நடத்தி, இயக்கமும் ஒரு குடும்பம் என்று நினைத்து நன்கொடைகளை அளித்து வருகிறார்கள்.
எனவேதான், இதை நான் வெறும் வார்த்தைக்காகச் சொல்லவில்லை- இந்தக் குடும்பம் ஒரு கொள்கைப் பல்கலைக் கழகம்.
கலைவாணனின் பொம்மலாட்ட நிகழ்ச்சி!
நம்முடைய கலைவாணன் ‘சுயமரியாதைத் திருமணம் ஏன்?' என்கிற ‘பொம்மலாட்ட' நிகழ்ச் சியை இங்கே நடத்தினார்; மிக அற்புதமான கொள்கை நிகழ்ச்சி அது. திருமணத்தை ஆடம் பரமாக நடத்துகின்ற தோழர்கள், அந்த ஆடம் பரத்தைக் குறைத்து, கலைவாணன் அவர் களுடைய பொம்மலாட்ட நிகழ்ச்சியை முதலில் நடத்துங்கள்.
நாங்கள் மேடைகளில் விளக்கி சொல்ல முடி யாத காரணங்களை மிக அழகாக பொம்மலாட்ட நிகழ்ச்சி மூலம் எடுத்து விளக்கிச் சொன்னார்.
கவிஞர் அவர்கள் இங்கே சொல்லியதுபோல, நவீன காலத்தில், கூட்டம் பெரிதாக இருக்கிறது, ஆடம்பரம் பெரிதாக இருக்கிறது; ஆனால், கொள்கையைத் தேடிப் பிடிக்க வேண்டியதாக இருக்கிறது. ஆனால், இம்மண விழா கொள்கைப் பிரச்சார விழாவாகும்!
கலைஞர் தேர்ந்தெடுத்த பிரச்சார மேடை சுயமரியாதைத் திருமணம்!
நெருக்கடி காலத்தில் பொதுவெளியில் கூட்டம் நடத்த முடியாத சூழ்நிலையில், கலைஞர் அவர்கள் தேர்ந்தெடுத்த அருமையான முறை என்னவென் றால், சுயமரியாதைத் திருமணங்களைத்தான் பிரச்சார மேடையாகப் பயன்படுத்தினார்.
சனாதனம் என்கிற பெயரில், எவ்வளவு பெரிய மூடத்தனத்தையும் தமிழ்நாட்டில் இருக்கின்ற ஆளுநர் ஒவ்வொரு நாளும் சொல்லி வருகிறார்.
இந்த நாட்டில் பெண்களை அடக்கி, ஒடுக்கி எப்படி வைத்திருந்தார்கள் என்று இன்றைய தாய்மார்களுக்கு, நம்முடைய சகோதரிகளுக்குத் தெரியாது. நூறாண்டு களுக்கு முன்பு எப்படி மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் படித்திருந்தால்தான் மனுவே போட முடியும் என்கிற தகவல் இன்றைய டாக்டர் களுக்குத் தெரியாதோ, அதேபோன்று, பெண்களுக்கு எவ்வளவு கொடுமை இருந்தது என்று, பெண்களாக இருக்கக்கூடிய சகோதரிகள், மகளிர் இங்கே வந்திருக்கக் கூடியவர்கள் அறிந்துகொண்டால், பெரியாருடைய பெருமை என்ன? சுயமரியாதை இயக்கத்தினுடைய சாதனை என்ன? என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.
220 ஆண்டுகளுக்கு முன்பு...
1802 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 220 ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய நாட்டில், வடநாட்டில் பெண் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தையின் கழுத்தைத் திருகி கங்கையில் வீசி விடுவார்கள்.
வெள்ளைக்காரர்கள் வந்த பிறகுதான், இது மனிதாபிமானத்திற்கு விரோதம் என்று சொல்லி 1802 ஆம் ஆண்டு பெண் குழந்தைகளின் கழுத்தைத் திருகி கங்கையில் வீசியதை எதிர்த்து ஒரு சட்டத்தை நிறைவேற்றினார்கள்.
வங்காளத்தில், வயல்வெளியில் பெண் குழந்தை களின் கழுத்தைத் திருகிப் போட்டால், பயிர் நன்றாக விளையும் என்கிற ஒரு மூடநம்பிக்கை இருந்தது.
அதனுடைய தாக்கம் தமிழ்நாட்டில் அதிகம் கிடை யாது. எங்கேயோ ஒன்றிரண்டு ஊர்களில் கள்ளிப்பால் ஊற்றினார்கள் என்பது மிகப்பெரிமை கொடுமைதான்.
இந்த இயக்கம் இல்லையென்றால், பெரியார் பிறந்திருக்காவிட்டால், பெண்களுடைய வாழ்வாதாரம் என்னவாகியிருக்கும்? என்பதை நினைத்துப் பாருங்கள்.
மற்ற உரிமைகள் - படிக்க உரிமை, சொத்துரிமை எல்லாம் பிறகுதான். முதலில் பெண்களுக்குப் பிறக்கவே உரிமை இல்லாமல் இருந்ததே!
பெரியார்தான் கேட்டார், பிறவி பேதம் கூடாது என்று சொல்லும்பொழுது, ஆண் - பெண் என்பதும் பிறவி பேதம்தான். எப்படி மேல்ஜாதி - கீழ்ஜாதி என்று இருக்கக்கூடாதே, அதுபோன்று.
1829 இல்தான் பெண்கள் உடன்கட்டை ஏற்றுவதை நிறுத்தினார்கள்.
விஜயலட்சுமி பண்டிட்டின் நைய்யாண்டியும்- வெள்ளைக்காரரின்
கெட்டிக்காரத்தனமான பதிலும்!
பண்டித ஜவகர்லால் நேரு அவர்களுடைய தங்கை விஜயலட்சுமி பண்டிட். அந்த அம்மையார் வெளி நாடுகளில் தூதுவராக இருந்தார். இங்கிலாந்தில், சீனா, அய்க்கியநாடு சபைகளில் அசெம்பளிக்குத் தலைவராக இருந்தார்.
இங்கிலாந்தல் அவர் தூதுவராக இருந்தபொழுது, பழகிய நண்பர்கள் அவருக்குத் தேநீர் விருந்து கொடுத் தனர். அப்பொழுது உரையாடிக் கொண்டிருந்தபொழுது இந்த அம்மையார் என்ன சொன்னார்கள் என்றால், ‘‘எங்கள் கலாச்சாரம் மூத்த கலாச்சாரம்; நீங்கள் வந்ததினால்தான் எங்களுடைய கலாச்சாரம் அழிந்து போய்விட்டது'' என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.
அதைக் கேட்டவருக்கு சங்கடம் ஏற்பட்டாலும், கெட்டிக்காரத்தனமாக பதில் சொன்னார், ‘‘ஆமாம், நீங்கள் சொன்னதுபோல நிறைய மாறுதல் வந்திருக் கலாம், நாங்கள் வந்ததினால். ஆனால், ஒன்றை நான் சொல்கிறேன் கேளுங்கள், நாங்கள் வரவில்லையானால், நீங்கள் இந்த தேநீர் விருந்துக்கு வந்திருக்க முடியாது'' என்றார்.
காரணம் என்னவென்றால், அந்த அம்மையார் விதவை. வெள்ளைக்காரர்கள் வரவில்லையானால், அந்த அம்மையாரின் கணவர் இறந்ததும், அந்த அம்மையாரை உடன்கட்டை ஏற்றியிருப்பார்களே!
இந்தத் தகவல் கேரளப் பத்திரிகையில் செய்தியாக வந்தது. தந்தை பெரியார் அவர்கள் பல கூட்டங்களில் இதை விளக்கிச் சொல்லியிருக்கிறார்.
இப்படி எத்தனையோ செய்திகள் உண்டு. இந்த இயக்கம் இல்லாவிட்டால், பெண்களுக்குப் படிப்புரிமை கிடையாது; சொத்துரிமை கிடையாது. பெண்கள் அவர்கள் விரும்பியவர்களையே வாழ்க்கைத் துணை யாக ஏற்றுக்கொள்கிறார்கள்.
பெண்ணுரிமை என்பது மனித உரிமை, சமத்துவம், சமவாய்ப்பு என்று தந்தை பெரியார் சொன்னார்.
இம்மணவிழா என்பது
ஒரு பிரச்சாரத் திருவிழா
அதனுடைய பூத்துக் குலுங்குகின்ற வெற்றியால் கனிந்த கனிகள் இங்கே இருக்கின்றன. எனவே, இந்த மணவிழா என்பது ஒரு பிரச்சாரத் திருவிழாவாகும். மணமக்களுக்கு அறிவுரை சொல்லவேண்டிய அவசிய மில்லை; அவர்கள் மற்றவர்களுக்கு அறிவுரை சொல் வார்கள்.
மணமக்கள் ஒருவரை ஒருவர் புரிந்தவர்கள்; வாழ்க்கை முறையைத் தெரிந்தவர்கள். ‘‘தம்மின் தம் மக்கள் அறிவுடைமை'' என்று சொல்லக்கூடிய வகையில், பெற்றோரை விட, குழந்தைகள் அவர்கள் வழிவழி பாரம்பரியமாக மூன்றாவது தலைமுறை, நான்காவது தலைமுறையாக வளர்ந்திருக்கிறார்கள்.
ஆக, இப்படிப்பட்ட இவர்களின் வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சியினை நடத்தி வைப்பதில், கருத்துகளை உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியோடுதான் நேரத்தை எடுத்துக்கொண்டாலும் கூட, இந்த வாய்ப்பில் கூறியவற்றை நீங்கள் எல்லோரும் சிந்திக்கவேண்டும்.
சுயமரியாதைத் திருமண முறையில் மணம் செய்து கொண்டவர்கள் யாரும் கெட்டுப் போவதில்லை; யாரும் வீழ்ந்து போவதில்லை; வளர்ந்து இருக்கிறார்கள். ஏனென்றால், பகுத்தறிவு அவர்கள் வாழ்க்கையை செம்மைப்படுத்தும்.
சிக்கனத் திருமணம் மட்டுமல்ல -
‘‘சிக், சிக், சிக்''கனத் திருமணம்!
எளிமையான வாழ்க்கை, சிக்கனமான வாழ்க்கை. சிக்கனம் என்பதற்கு எடுத்துக்காட்டாக பசும்பொன் - இசையின்பன் திருமணம் எப்படி நடந்தது என்று சொன்னேன். அது சிக்கனத் திருமணம் மட்டுமல்ல - சிக், சிக், சிக்கனத் திருமணம்.ஒரு செலவும் இல்லாமல், அரசாங்க செலவிலே நடந்த திருமணம்.
சரி, அப்படி சிக்கனமாக திருமணத்தை நடத்தினோம் என்று சொல்லிவிட்டு, இந்தத் திருமணத்தை இவ்வளவு ஆடம்பரமாக நடத்துகிறார்களே என்று நீங்கள் ஒரு கேள்வி கேட்கலாம்.
எதற்காக இந்தத் திருமணத்தை ஆடம்பரமாக நடத்துகிறோம் என்று பதில் சொன்னார்கள்.
வீழ்ந்துவிடவில்லை, தாழ்ந்துவிடவில்லை!
நம்முடைய தோழர்களுடைய பதில் என்னவென் றால், ‘‘கடவுள் மறுப்பாளர்களாகிய நாங்கள், ஜாதி மறுப்பாளர்களாக இருக்கக் கூடிய நாங்கள், பெண் ணடிமை மறுப்பாளர்களாக இருக்கக்கூடிய நாங்கள், மத மறுப்பாளர்களாக இருக்கக்கூடிய நாங்கள் வீழ்ந்துவிட வில்லை, தாழ்ந்துவிடவில்லை - மற்றவர்களைவிட வாழ்க்கையில் உயர்ந்திருக்கின்றோம், எங்கள் அறிவின் மூலம், பகுத்தறிவின்மூலம் என்று காட்டுவதற்கு இது ஒரு பிரச்சார முறை. அதற்குத்தான் இவ்வளவு பெரிய ஆடம்பரமான மணவிழா - விருந்து'' என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, இந்த மண முறையை புகுத்தியவர் அறிவாசான் தந்தை பெரியார்; அதற்குச் சட்ட வடிவம் கொடுத்த பெருமை பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களை சாரும்.
ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி!
ஆகவே, அந்த இருபெரும் தலைவர்களை நினைத்து, அவர்களுடைய தொண்டைப் பாராட்டி, வீர வணக்கம் செலுத்தி, மணமக்களாக இருக்கக்கூடிய அருமை நண்பர்கள் இனநலம் - அட்லின் இருவரும் மாலை மாற்றிக்கொண்டு, உறுதிமொழி கூறுவார்கள்.
இவ்வளவு சிறப்பாக இந்த நிகழ்ச்சியை அமைத்த உங்கள் அனைவருக்கும் நன்றி! ஒத்துழைத்த அனை வருக்கும் நன்றி!!
வாழ்க பெரியார்!
வாழ்க மணமக்கள்!!
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரை யாற்றினார்.
No comments:
Post a Comment