இதுதான் குஜராத் "மாடலோ!" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 8, 2023

இதுதான் குஜராத் "மாடலோ!"

06.07.2023 அன்று ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பதில் அளிக்கும் போது 'திராவிட மாடலுக்கும்' 'குஜராத் மாடலுக்குமுள்ள' வேறு பாடு குறித்து கருத்து தெரிவித்தார். அங்கு கட்டப்பட்ட பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுகின்றன  'திராவிட மாடல்' என்பது - மோடி சென்னை வரும் போது முதலமைச்சர் 

மு.க. ஸ்டாலின் மேயராக இருக்கும் போது கட்டப்பட்ட பாலங்களின் வழியாக பயணித்து வந்து மேடை ஏறி திராவிட மாடலைக் கிண்டல் அடிக்கிறார் என்று கூறினார்.  அவர் கூறிக் கொண்டு இருக்கும் போதே குஜராத்தில் புதிதாக கட்டப்பட்ட மற்றொரு பாலம் இடிந்து விழுந்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் நெடுஞ்சாலைகள், பாலங்கள், மேம்பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழும் அவலங்கள் தலைப்புச் செய்திகளாகிக் கொண்டிருக்கின்றன.  சூரத் பகுதியில் சில நாட் களுக்கு முன்பு  மாநில முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட புதிய பாலம் இடிந்து விழுந்தது. இதுதான் உண்மையான குஜராத் மாடலா? எனவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ரூ.118 கோடியில் கட்டப்பட்ட சூரத் பாலம் சில மாதங்களிலேயே ஒரு மழைக்கு கூட தாங்காமல் இடிந்து விழுந்தது என்பது குஜராத்தில் நிறுவனமயமாக்கப்பட்டிருக்கும் ஊழலை அப்பட்டமாக அம்பலப்படுத்தி விட்டது.  அரபிக் கடலில் உருவான பிபர்ஜோய் புயல் குஜராத்தை தாக்கிய தருணத்தில் மிண்டோலா ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலங்கள் இடிந்து விழுந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் அகமதாபாத் மாநகராட்சி அஜய் இன்ஜினியரிங் கட்டுமான நிறுவனத்தின் மீது வழக்கும் பதிவு செய்தது. ரூ.44 கோடியில் கட்டப்பட்ட ஹத்கேஸ்வர் பாலம், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உகந்தது அல்ல என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் அந்த பாலத்தையும் மாநகராட்சியே இடித்துத் தள்ளியது. 

2021-ஆம் ஆண்டு அகமதாபாத்தில் இதேபோல ரஞ்சித் பில்ட்கான் நிறுவனம் கட்டிய பாலம், கட்டுமானப் பணிகள் நடந்த போதே இடிந்து விழுந்தது. கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் இதேபோல பல நிகழ்வுகளை பட்டியலிட்டுவிட முடியும் என்கிற நிலைமைதான் குஜராத்தில் இருக்கிறது. அரசாங்க அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் கை கோர்த்துக் கொண்டு, பொது மக்கள் பணத்தை சூறையாடி தரமற்ற பாலங்களைக் கட்டுவது குஜராத்தில் வாடிக்கையாகி விட்டது.

குஜராத் மாநில நிதி நிலை அறிக்கையில் நகர்ப்புற மேம்பாட்டுக்கான நிதி 19% உயர்த்தப்பட்டிருக்கிறது. அதாவது ரூ.12,639 கோடி நிதி நகர்ப்புற மேம்பாட்டு பணிகளுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய மாநில நிதி அமைச்சர், அடுத்த 5 ஆண்டுகளில் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ரூ.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார். மோர்பியில் இடிந்து விழுந்த பாலம் சீரமைப்பு உள்ளிட்டவைகளுக்கு ரூ.550 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. மோர்பி பால விபத்தில் 141 பேர் பலியான கொடுமை நினைவிருக்கலாம். இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும் தரமற்ற பாலங்களைக் கட்டி அரசாங்கப் பணத்தை கொள்ளையடிப்பதுதான் இப்போதைய குஜராத் மாடலா என்பது எதிர்க் கட்சிகளின் - பொது மக்களின் கேள்வியாகும்.

இதுதொடர்பாக குஜராத் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணிஷ் தோஷி கூறுகையில், குஜராத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு ஒப்பந்தப் பணிகளில் 40 விழுக்காடு கமிஷன் பெறு கிறது. இதுதான் இந்த சீரழிவுக்குக் காரணம். இதனைத்தான் "ரியல் குஜராத் மாடல்" என சொல்லலாம் என்கிறார். இத்தகைய பாலங்கள் இடிந்து விழும் நிகழ்வுகளுக்கு ஊழல் தான் மிக முக்கியமான காரணம் என தொழில் நுட்ப வல்லு நர்களும் அடித்துச் சொல்லி வருகின்றனர். அதுவும் அண் மைக்காலமாக உள்ளூர் ஒப்பந்ததாரர்கள், அரசியல் சார்ந்த வர்களாக இருப்பதால் அரசாங்கப் பணத்தை கொள்ளை யடிப்பது அவர்களுக்கு எளிதானதாகவும் மாறிவிட்டது என்பதும் எதிர்க்கட்சிகளின் இன்னொரு குற்றச்சாட்டு.

கருநாடக மாநில பிஜேபி ஆட்சியை 40 சதவிகித கமிஷன் ஆட்சி என்றே பரவலாகப் பேசப்பட்டது.

இப்பொழுது குஜராத்துக்கும் அந்தப் பட்டம் சூட்டப்படும் நிலைமைதான்.

கருநாடக மாநிலத்தின் பிரதிபலிப்பை வருங்கால தேர்தல்களிலும்  நாடு பார்க்கத்தான் போகிறது.

No comments:

Post a Comment