90 இல் 80 ஆண்டு பொதுவாழ்வு காணும் தமிழர் தலைவருக்கு வாழ்த்துகள் - பாராட்டுகள்!
ஈரோடு திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பின் கழகப் பணிகளில் தீவிரமாக ஈடுபடும் கழகத் தோழர்களுக்குப் பாராட்டு!
எல்லோருக்கும் பொதுவாக ஒரே யுனிபார்ம் சட்டம் கொண்டுவரும் ஒன்றிய பி.ஜே.பி. அரசு
அனைவரும் ஒரே ஜாதி என்று சட்டம் இயற்றவேண்டும் - இயற்றுமா?
வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்புப் பறிப்பைக் கண்டித்து
ஜூலை 14 இல் தமிழ்நாடெங்கும் திராவிடர் கழக இளைஞரணி ஆர்ப்பாட்டம்!
பயிற்சி பெற்ற அனைவரையும் அர்ச்சகராக நியமனம் செய்க!
சென்னை, ஜூலை 6 எல்லோருக்கும் ஒரே வகையான பொது சட்டம் என்று கூறி, யுனிபார்ம் சிவில் கோட் சட்டத்தைக் கொண்டுவரத் துடிக்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசு, அதன் பிரதமர் - பிறப்பின் அடிப்படையில் ஜாதி காரணமாக ஏற்றத் தாழ்வு கூடாது என்ற அடிப்படையில் அனைவரும் சமம் என்ற வகையில், அனைவரும் ஒரே ஜாதி என்று சட்டம் இயற்றவேண்டும்; வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்புப் பறிப்பைக் கண்டித்து ஜூலை 14 இல் தமிழ்நாடெங்கும் திராவிடர் கழக இளைஞரணி ஆர்ப்பாட்டம் உள்பட சென்னையில் இன்று (6.7.2023) நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இன்று (6.7.2023) சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் எண் 1:
இரங்கல் தீர்மானம்
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கோவை வசந்தம் கு.இராமச்சந்திரன் (வயது 98, மறைவு 24.6.2023), காவேரிப்பட்டணம் கிருட்டிணகிரி அரசு தலைமை மருத்துவமனை ஆர்.எம்.ஓ. (ஓய்வு) மக்கள் மருத்துவர் தி.வள்ளல் (வயது 65, 19.5.2023), புகழ் புத்தகாலயம் பதிப்பாளர் செ.து.சஞ்சீவி (வயது 94, 20.5.2023), நீடாமங்கலம் நகர கழகத் தலைவர் இர.அமிர்தராஜ் (வயது 82, 21.5.2023), விருத்தாசலம் நகர கழகத் தலைவர் நா.சுப்பிரமணியன் (வயது 73, 25.5.2023), ஜாதி ஒழிப்பு வீரர் - 6 மாத சிறைத் தண்டனை பெற்றவர் தத்தனூர் துரைக்கண்ணு (வயது 91, ஜூன், 2023), சோழங்கநல்லூர் வடகுடி கிளைக் கழகத் தலைவர் த.காமராஜ் (ஜூன், 2023), சென்னை தியாகராயர் நகர் மூத்த பெரியார் பெருந்தொண்டர் ஏழுமலை (வயது 92, 15.6.2023) ஆகியோரின் மறைவிற்கு திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவர்களின் அளப்பரிய இயக்கத் தொண்டுக்கு வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
இவர்களின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், இயக்கத் தினருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் எண் 2:
தமிழர் தலைவருக்குப் பாராட்டு - வாழ்த்து!
90 வயதில் 80 ஆண்டு பொதுத் தொண்டு, இயக்கத் தொண்டு ஆற்றிவருபவரும், 89 ஆண்டு ‘விடுதலை' ஏட்டுக்கு 61 ஆண்டுகாலமாக ஆசிரியராக இருந்து பணியாற்றி வருபவருமான நமது தலைவர் ஆசிரியர் அவர்களுக்குத் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் எண் 3:
ஆளுநர் பதவி விலகுக அல்லது
ஒன்றிய அரசு அவரைத் திரும்பப் பெறுக!
அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கொள்கை யான மதச்சார்பின்மைக்கு விரோதமாகவும், மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படி நடந்துகொள்வ தற்கு மாறாக, மாநில அரசை விமர்சிப்பது, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன் வரைவுகளுக்கு ஒப்புதல் தராமல் காலங்கடத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் அல்லது ஒன்றிய அரசு அவரைத் திரும்பப் பெறவேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் 4:
‘நீட்’ மற்றும் ‘நெக்ஸ்ட்’ தேர்வை
நிரந்தரமாக நீக்குக
மருத்துவ பட்டப் படிப்புகளில் சேருவதற்கு ஒன்றிய அரசு கட்டாயமாக்கி இருக்கும் ‘நீட்' தேர்வு முறையில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு முறை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து ஆளுநர் முதலில் தாமதம் செய்த நிலையில், தற்போது ஒன்றிய அரசும் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்துவது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான செயலாகும். மேலும் மாநில உரிமையை பறிக்கும் செயலாகும். இது குறித்து தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து ‘நீட்' தேர்வு மற்றும் மருத்துவ மேற்படிப்புக்கான ‘நெக்ஸ்ட்' தேர்வையும் ஒழித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் எண் 5:
பயிற்சி பெற்றவர்களையே
அர்ச்சகர்களாக நியமிக்கவேண்டும்!
ஆகம பயிற்சி பெற்றவர் எந்த ஜாதியினராக இருந்தாலும், அவரை அர்ச்சகராக நியமிக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இத்தீர்ப்பின் படி, ஜாதி அடிப்படையிலோ, பரம்பரை உரிமை (Hereditary) என்ற முறையிலோ அர்ச்சகர்களை கோவில் களில் நியமனம் செய்ய முடியாது. ஆகமத் தகுதி - கல்வி கற்றிருப்பவர் எந்த ஜாதியினராக இருந் தாலும், அர்ச்சகராக சட்டப்படி தடை ஏதும் கிடையாது. முந்தைய தீர்ப்பு ஒன்றின்படி, தமிழ்நாட்டுக் கோவில் களில் ஆகம முறைப்படி அமைந்து பூஜை நடைபெறும் கோயில்கள், அல்லாத கோவில்கள் என்று பிரித்து, அதன்படியே தான் அர்ச்சகர் நியமனம் நடைபெற வேண்டும். அதை ஒரு குழு போட்டு கண்டறிய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்தக் குழு அறிக்கை வருகிறவரை எந்தக் கோவிலிலும் அர்ச்சகர் நியமனம் செய்யப்படக் கூடாது என்று அறிவிக்கப்பட்ட நிலையை ஏற்காது, இந்தக் குழு அறிக்கை வரும் வரை காத்திருக்காமல், ஆகம பயிற்சி தகுதி ஒருவருக்கு இருந்தால், பூஜைக்கு அர்ச்சகராக அவரை நியமிக்கலாம் என்று அண்மையில் வந்துள்ள தீர்ப்பு திட்டவட்டமாகக் கூறியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதுடன், தமிழ்நாடு அரசு பயிற்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என திராவிடர் கழக தலைமைச் செயற்குழு தமிழ்நாடு அரசை வற்புறுத்துகிறது.
தீர்மானம் எண் 6:
ஒன்றிய அரசு வங்கி கிளார்க் பதவி நியமனங்களில் தகுதி படைத்த தமிழ்நாடு இளைஞர்களுக்குப் பறிபோகும் வேலை வாய்ப்புகள்!
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் கிளார்க் பணிகளுக்கு, அந்தந்த மாநில மொழிகளைப் படிக்க, எழுத, பேச வேண்டும் என்பது கட்டாயமாகவும் இருந்தது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில், அரசு வங்கிகளில் கிளார்க் பணிகளில் தமிழ்நாட்டவர்க்கே இதுவரை வாய்ப்புகள் இருந்து வந்துள்ளன.
இந்நிலையில், வங்கித் தேர்வு நடத்தும் வங்கிப் பணியாளர் தேர்வு கழகம் (IBPS) கடந்த சில ஆண்டு களாக வெளியிடப்படும் விளம்பரத்தில், மாநில மொழிகளில் தேர்ச்சி என்பது கட்டாயம் இல்லை; அது ஒரு முன்னுரிமை மட்டுமே (Not Mandatory; it is preferable) என்று விளம்பரப்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக வேறு மாநிலங்களில் உள்ளோர் தமிழ்நாட்டில் தேர்வு எழுதி, கிளார்க் பணிகளிலும் சேரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெளிமாநிலத்தவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போது 2022-2023 ஆம் ஆண்டுக்கான கிளார்க் பதவி நியமனங்களுக்குத் தேர்வுகள் நடைபெற்று, 288 பேர் கிளார்க் பதவிகளில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:
1. யூனியன் பாங்க் ஆப் இந்தியா - 87
2. கனரா வங்கி - 100
3. பாங்க் ஆஃப் இந்தியா - 17
4. சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா - 66
5. யூகோ வங்கி - 16
6. பஞ்சாப் & சிந்த் வங்கி - 2
மொத்தம் - 288
ஆறு அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் 288 பேர் கிளார்க்குகளாக பணி நியமனம் செய்யப்பட் டுள்ளனர். இதில் இந்த ஆண்டும் வெளிமாநிலத்தவர்கள், தமிழ் மொழி தெரியாதவர்கள் பணியில் சேர உள்ளனர் என்பதாகத் தகவல்கள் வருகின்றன.
தொடர்ந்து 2017 முதல் இதேபோன்று வெளிமாநிலத் தவர், கிளார்க் பதவிகளுக்கு விண்ணப்பித்து, தமிழ் தெரியாமல் வேலை பார்க்கின்றனர். சென்ற ஆண்டு ஏறத்தாழ 400 வெளிமாநிலத்தவர் இவ்வாறு வங்கிகளில் பணியில் சேர்ந்துள்ளனர்.
வங்கிகளில் கிளார்க் பணி புரிவோர் வாடிக்கையாள ரிடம் நேரடி தொடர்புடையவர்கள். குறிப்பாக கிரா மங்கள் மற்றும் சிறு நகரங்களில் இவர்களின் சேவை மாநில மொழியில் இருப்பது அவசியம்.
ஆனால், வங்கிப் பணியாளர் தேர்வு கழகம் (தனியார் நிறுவனம்) நடத்தும் தேர்வுமூலமாக தமிழ் தெரியாதவர்கள், பெரும்பாலும் ஒடிசா, கேரளம் ஆகிய மாநிலங்களிலிருந்து கிளார்க் பணியில் சேரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் தமிழ் மொழி பேச, எழுத, படிக்கத் தெரியாது.
ஒன்றிய அரசின் நிதித் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி, மாநில மொழி கட்டாயம் என வலியுறுத்துகிறது. ஆனால், பொதுத் துறை வங்கிகள், அதற்கு நேர்மாறாக செயல்படுகின்றன. ஒன்றிய அரசின் நிதித் துறையில் ஓர் அங்கமாக இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் நேஷனல் இன்ஸூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்ஸூரன்ஸ், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் போன்ற அரசு காப்பீட்டு நிறுவனங்களில், கிளார்க் பணிகளில் சேருவதற்கு, அந்தந்த மாநில மொழிகளில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்ற விதிமுறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆனால், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் மட்டும் குறிப்பாக கிளார்க் பணிகளுக்கு, இந்த விதி தளர்த்தப்பட்டதால், மொழி தெரியாதவர்களும், கிளார்க் பணிக்கு சேரும் நிலை ஏற்பட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
வங்கி தேர்வு நடத்தும் நிறுவனம் கிளார்க் பணிக்கு, மாநில மொழி அறிவு கட்டாயம் என ஏற்கெனவே இருந்த விதியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதே நிரந்தரத் தீர்வாக அமையும்.
இப்பிரச்சினை குறித்து, ஒன்றிய அரசின் நிதிய மைச்சர் மற்றும் வங்கித் துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசும் இதனை வலியுறுத்தவேண்டும் என்றும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் கிளார்க் பணிகளில் தகுதி படைத்த தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்புப் பறிக்கப்படுவதைக் கண்டித்தும், மாநில மொழி அறிவு கட்டாயம் என்ற விதியை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், திராவிடர் கழக இளைஞரணி சார்பில், மாநில அளவில் மாவட்டத் தலைநகரங்களிலும், முக்கிய நகரங்களிலும் 2023, ஜூலை 14 (வெள்ளிக்கிழமை) அன்று மாபெரும் ஆர்ப் பாட்டங்களை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் எண் 7:
மேகதாது அணை கட்டும் முயற்சிகள் வேண்டாம்!
(அ) மேகதாது தடுப்பணைத் திட்டம், கருநாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டம், கொள்ளேகாலிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில், காவிரி ஆற்றின் குறுக்கே, சிவசமுத்திரம் அருவியின் அருகே, மேகதாது எனும் இடத்தில் இரு தடுப்பணைகள் கட்டி, நீர்மின் நிலையம் தொடங்க கருநாடக அரசு திட்டமிட்டு, நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது. மேகதாது அணைத் திட்டம் ஒகேனக்கல்லில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும், மேட்டூரிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவிலும் செயல்பட உள்ளது.
(ஆ) கருநாடக அரசு மேகதாது அணைத் திட்டத்தை நிறைவேற்றினால், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம் உள்பட காவிரி வடிநில மாவட் டங்கள் காவிரி ஆற்று நீர்வரத்து இன்றி, தமிழ்நாடு விவசாயிகளின் நலன் பாதிக்கக்கூடும் என்று கருது வதால், மேகதாது அணைத் திட்டத்திற்கு, தமிழ்நாடு அரசும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு காட்டி வருகின் றனர். தமிழ்நாடு சட்டசபை டிசம்பர் 6 அன்று கூடி இத்திட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் இயற்றியுள்ளது.
(இ) 27 மார்ச் 2015 அன்று காவிரி ஆற்றின் குறுக்கில் மேகதாது என்ற இடத்தில் கருநாடக அரசு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கையை எடுக்கவேண்டுமென தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
(ஈ) பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தில், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடன டியாக அமைக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
(உ) மேலும், காவிரி மேலாண்மை வாரியம் செயல் பாட்டிற்கு வரும் வரையில், தமிழ்நாட்டின் அனுமதி யின்றி மேகதாது அணை, நீர்த்தேக்கம் போன்ற எதையும் கட்டக்கூடாது என ஒன்றிய அரசு கருநாடக அரசுக்கு அறிவுரை வழங்கவேண்டும் என்றும் அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
(ஊ) மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கருநாடக அரசு விரிவான அறிக்கை தயாரிப்பதைத் தடுத்து நிறுத்தவேண்டுமென்றும் ஒன்றிய அரசை இந்தத் தீர்மானம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
(எ) மேலும், இது தொடர்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து தற்போதைய தீர்மானத்தில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(ஏ) தீர்மானத்தைத் தொடர்ந்து முழு அடைப்புப் போராட்டம் விவசாயிகளால் அறிவிக்கப்பட்டது.
(அய்) இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு, பாரதீய ஜனதா கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் ஆதர வளித்தன.
(ஒ) கருநாடகத்தில் பா.ஜ.க. ஆட்சியில் பசவராஜ் பொம்மை முதலமைச்சராக இருந்தபோதுதான் மேக தாது அணை தொடர்பான வரைவுத் திட்டம் ஒன்றை தயாரித்து, ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றனர். ஒன்றியத்திலும், மாநிலத்திலும் பா.ஜ.க. அரசுகள் இருந்ததால், சட்டத்தை மீறி ஒப்புதல் பெற்றுவிட்டனர்.
(ஓ) மேகதாது அணை கட்ட ரூ.9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு என கருநாடகா பட்ஜெட்டில் பா.ஜ.க. அறிவித்தது.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், கருநாடக மாநில அரசு சட்ட விரோதமாக அணை கட்டும் வேலையில் இறங்குவது முறையான தல்ல.
2023 ஜூன் மாதத்திற்கு கருநாடக மாநில அரசு தமிழ்நாட்டிற்கு அளிக்கவேண்டிய தண்ணீரீல் 6.357 டி.எம்.சி. குறைக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை வாரியம் நடுநிலையில் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவேண்டிய தண்ணீர் கிடைக்கச் செய்யத் தலை யிடவேண்டும் என்றும், மேகதாது அணை கட்டப்படு வதைத் தடுக்கவேண்டும் என்றும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் 8:
பெயர் மாற்றம் செய்க!
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு ‘கலப்புத் திருமண’ உதவித் திட்டம் என்ற பெயரை டாக்டர் முத்துலட்சுமி நினைவு ‘ஜாதி மறுப்பு’ திருமண உதவி திட்டம் என்று பெயர் மாற்றம் செய்திடுவது பொருத்தமாக இருக்கும் என்று தமிழ்நாடு அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் எண் 9(அ):
கழகப் பொதுக்குழுவிற்குப்பின்
கழக செயல்பாடுகள் சிறப்பு!
கடந்த 13.5.2023 அன்று ஈரோட்டில் நடந்தேறிய திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பின் கழகத்தின் செயற்பாடுகள் சிறப்பாக நடைபெறுவது கண்டு இக்கூட்டம் மகிழ்ச்சி கலந்த பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
கழகப் பொறுப்பாளர்களும், அனைத்து அணியின ரும் தங்களுக்கென்று ஒப்படைக்கப்பட்ட பணிகளைக் கடமை உணர்வோடும், ஆர்வத்தோடும் தீவிரமாகப் பணியாற்றி வருவது கண்டு இச்செயற்குழு பெருமிதத் துடன் தனது பாராட்டுகளை மேலும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் எண் 9 (ஆ):
சந்தாக்களைப் புதுப்பிக்கும்
பணியில் ஈடுபடுக!
ஆசிரியர் அவர்களின் 60 ஆண்டு ‘விடுதலை'ப் பணியைப் பாராட்டும் வகையில், கழகத் தோழர்கள் தீவிரமாகப் பணியாற்றி 60 ஆயிரம் ‘விடுதலை' சந்தாக்களைத் திரட்டித் தந்த சாதனையை முடித்துக் காட்டினர். அந்த சந்தாக்களின் காலம் முடியும் நிலை இருப்பதால், அந்தச் சந்தாக்களைப் புதுப்பிக்கும் ஆக்க ரீதியான பணியில் ஈடுபடுமாறு கழகத் தோழர்களை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் எண் 9 (இ):
மாதமொருமுறை மாவட்டக் கலந்துரையாடல்
மாதம் ஒரு முறை கழக மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களை நடத்துமாறு கழகப் பொறுப்பாளர்களை இத் தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது. மூன்று மாதத்திற்கொரு முறை தலைமைச் செயற்குழுவும், ஆண்டுக்கு இரு முறை பொதுக்குழுவும் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் எண் 9 (ஈ):
உரிய வழிகாட்டுலைப் பெறுக!
கழகக் கொள்கைக்கு எதிரான, மனித சமத்துவத்திற்கு எதிரான செயல்பாடுகளைக் கழகத் தோழர்கள் உடனுக்குடன் தலைமைக் கழகத்துக்குத் தெரிவித்து, உரிய வழிகாட்டுதல்களைப் பெற்றுச் செயல்படுமாறு கழகப் பொறுப்பாளர்களை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் எண் 10:
பா.ஜ.க. ஆட்சியை முற்றிலும் ஒழிக்கவேண்டியது நம் கடமை!
இந்திய அரசமைப்புச் சட்ட அடிப்படைக் கோட் பாடுகளுக்கு எதிராகவும், மதச்சார்பின்மை, ஜனநாயகம், சமத்துவக் கொள்கைகளின் ஆணிவேரை வெட்டும் வகையிலும், மாநில உரிமைகளை நசுக்கும் வகையிலும், ஜாதி - மதக் கலவரங்களைத் தூண்டும் வகையிலும் ஆட்சியே தலைமை தாங்கி, அடிமட்ட பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களும் வெளிப் படையாகப் பேசுவதும், நடந்துகொள்வதும் இந்திய மக்களின் அமைதிக்கும், உரிமைகளுக்கும், சகோதரத்து வத்திற்கும், சமத்துவத்திற்கும் எதிரான செயல்களிலும், வன்முறைகளை நடத்துவதிலும் தீவிரம் காட்டி வருவதால் 2024 இல் நடைபெறவிருக்கும் மக்கள வையில் பாசிச பி.ஜே.பி. ஆட்சியை முற்றிலுமாக ஒழிக்கவேண்டியது ஒவ்வொரு குடிமக்களின் முக்கியக் கடமை என்பதை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க் கட்சிகளின் கூட்டமைப்பு இந்த வகையில் மிகவும் பயனுள்ளதாகும். இன்னும் இந்தக் கூட்டமைப்புக்குள் வராத கட்சிகளையும் ஒன்றிணைக்க ஆவன செய்யு மாறு இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் 11:
யுனிபார்ம் சிவில் கோட் சட்டத்தை
நிறைவேற்றத் துடிக்கும் ஒன்றிய அரசு
ஆர்.எஸ்.எஸின் அடிப்படைக் கொள்கைகளான யுனிபார்ம் சிவில் கோட் சட்டம் கொண்டுவருதல், அயோத்தியில் ராமன் கோவில் கட்டுதல், ஜம்மு காஷ்மீருக்கு அரசமைப்புச் சட்டம் 370-இன்படி அளிக்கப்பட்டுள்ள தனிச் சிறப்பு சலுகைகளை ரத்து செய்தல் ஆகியவற்றில் இரண்டு அம்சங்களை செய்து முடித்த பி.ஜே.பி. தலைமையிலான ஒன்றிய அரசு, எஞ்சியுள்ள யுனிபார்ம் சிவில் கோட் சட்டம் என்பதையும் வரும் மக்களவைத் தேர்தலுக்குள் அவசர அவசரமாக நிறைவேற்றத் துடிக்கிறது.
இதன் நோக்கம் பரந்த மனப்பான்மையல்ல; மாறாக ஹிந்து மதத்தைத் தவிர்த்த மற்ற மதங்களை குறிப்பாக முஸ்லிம் மக்களைக் குறி வைத்துத் தாக்குவதேயாகும்.
எல்லோருக்கும் பொதுவானது ஒரே மாதிரியான சட்டம் என்று கூறும் ஒன்றிய அரசு, பிரதமர் மக்களிடத்தில் பிறப்பின் அடிப்படையில் பேதம் விளைவிக்கும் ஜாதியை ஒழித்து அனைவரும் ஒரே ஜாதி என்ற வகையில் சட்டம் இயற்றவேண்டும் என்று இச்செயற்குழு பிரதமரையும், ஒன்றிய அரசையும் வலியுறுத்துகிறது.
ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி.யின் இந்த உள்நோக் கத்தைப் புரிந்துகொண்டு, மற்ற கட்சிகளும், பொதுமக் களும் யுனிபார்ம் சிவில் கோட் சட்டம் நிறைவேற்றப் படாமல் தடுப்பதற்கு முழு முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும் என்று இச்செயற்குழு வற்புறுத்துகிறது.
தீர்மானம் எண் 12:
காவல்துறையில் ஒரு தனிப் பிரிவை ஏற்படுத்துக!
தமிழ்நாட்டில் தந்தை பெரியார், திராவிட இயக் கங்கள் தொடர்ச்சியாக செய்துவரும் பணியின் காரணமாக ஜாதி - தீண்டாமை ஒழிப்பில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. எனினும், மத, ஜாதீய வாத, பிற்போக்குச் சக்திகளின் தூண்டுதல் காரணமாக, ஆங்காங்கே ஜாதி - தீண்டாமைப் பிரச்சினைகள் தலைதூக்குகின்றன. அவை சமூக அமைதியையும், சட்டம் ஒழுங்கையும் தமிழ்நாட்டின் சமூகநீதி - சமத்துவச் சூழலையும் சீர்குலைத்து வருகின்றன.
ஆணவக் கொலைகளுக்கு எதிராக பாராட்டத்தக்க வகையில் தீர்ப்புகள் வந்திருப்பினும், ஓரிரு இடங்களில் மனிதத்தன்மையற்ற ஆணவக் கொலைகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆணவக் கொலைகளுக்கு எதிரான கடுமையான சட்டம் வரவேண்டும் என்றும், ஜாதி - தீண்டாமைப் பிரச்சினைகள் தலைதூக்க வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை செய்ய, காவல்துறையில் ஒரு தனிப் பிரிவை ஏற்படுத்தவேண்டும் என்றும், ஜாதி - தீண்டாமை - ஆணவக் கொலைகள் தொடர்பான பிரச்சினைகளைக் கவனித்து, உரிய நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுத்திடவும், ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்வோருக்குப் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் திராவிடர் கழகம் தொடர்ந்து கோரி வருகிறது. ‘திராவிட மாடல்' அரசு முன்னுதாரணமாக இதனைச் செயல்படுத்திட வேண்டும் என்றும் இக்கூட்டம் மீண்டும் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 13:
அனைத்து மாநகராட்சிகளிலும் பகுதிக் கழகங்கள் அமைப்பு!
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளில் பகுதிக் கழகங்களை அமைப்பதற்காக கீழ்க்கண்டவாறு மாநகராட்சிகள் பிரித்தளிக்கப்படுகின்றன.
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் அவர்களுக்கு ஒதுக்கப்படும் மாநகராட்சிகள்:
1. ஈரோடு 2. திருப்பூர் 3. திருச்சி 4. திண்டுக்கல் 5. கடலூர் 6.கும்பகோணம் 7.தஞ்சாவூர் 8.சிவகாசி
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் அவர்களுக்கு ஒதுக்கப்படும் மாநகராட்சிகள்:
1. காஞ்சிபுரம் 2. வேலூர் 3.ஒசூர் 4. சேலம் 5. கரூர் 6.தூத்துக்குடி 7. திருநெல்வேலி 8. நாகர்கோவில்.
No comments:
Post a Comment