"இந்தியா"வுக்கு வாழ்த்துகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 21, 2023

"இந்தியா"வுக்கு வாழ்த்துகள்!

இந்தியத் துணைக் கண்டத்தின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பிஜேபி தலைமையிலான ஆட்சி - இந்திய மக்களிடத்தில் மத வாதத்தைத் திணித்தும், ஜாதி அமைப்புகளை உற்சாகப்படுத்தியும், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு மரணக் குழி வெட்டியும் சின்னாபின்னப்படுத்தும் போக்கை கடந்த ஒன்பது ஆண்டு காலமாக திட்டமிட்டுச் செய்து வருவதால், இனிப் பொறுப்பதற்கில்லை; இந்திய மக்களின் ஒற்றுமைக்கும் நல்வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் உத்தரவாதம் கொடுக்கும், வகையில் "இந்தியா" உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள வெவ்வேறு 26 அரசியல்கட்சிகள், தங்களுக்கிடையே உள்ள சிறுசிறு வேற்றுமைகளை எல்லாம் மூட்டைக் கட்டி வைத்து விட்டு, இனியும் பிஜேபியை ஆளவிட்டால் "நாடு தாங்காது; இந்தியா சிதறுண்டு போகும்; சமூக நீதிக்கு சவக்குழி வெட்டப்பட்டு விடும், ஜனநாயகத்தின் ஆணிவேர் அறுத்து எறியப்பட்டு விடும்" என்ற உண்மையை உணர்ந்து 26 அரசியல் கட்சிகள்  ஒருங்கிணைந்து கைகளை இணைத்து நிற்பது - இந்தியத் துணைக் கண்ட வரலாற்றிலேயே ஒரு திருப்புமுனை அத்தியாய மாகும்.

இப்படி ஓர் அமைப்பு உருவாகி இருக்கிறது என்ற நிலை ஏற்பட்டவுடன் பாசிச பா.ஜ.க. பெரும் பதற்றத்திற்கும், அச்சத்திற்கும் ஆளாகி, உதிரிக் கட்சிகளையெல்லாம் தம் பக்கம் சேர்த்துக் கொண்டு (ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர்கூட இல்லாத கட்சிகளையெல்லாம்) எண்ணிக்கைப் பலத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.)யில் 36 கட்சிகள் இணைந்துள்ளோம் என்று காட்ட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறது.

இந்த என்.டி.ஏ. என்பது இந்த ஒன்பது ஆண்டுகளாக எங்கே போனது? எந்தப் பிரச்சினைக்காகவாவது கூடி ஆலோசனை, நடத்தியதுண்டா? ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைந்ததற்குப் பிறகு - இதற்குக் குறைந்தபட்சம்  ஓர் ஒருங்கிணைப்பாளராவது உண்டா?

இந்த என்.டி.ஏ.வில் அங்கம் வகித்த கட்சிகளை உடைத்துச் சிதறடித்த 'கைங்கரியத்தை'த் தவிர வேறு எதையாவது, இதற்குத் தலைமை வகிக்கும் பா.ஜ.க. செய்தது உண்டா?

அண்ணாவின் பெயரையும், 'திராவிட' சித்தாந்த பெயரையும் கட்சியிலும், கொடியிலும் வைத்துள்ள அண்ணா தி.மு.க. கிஞ்சிற்றேனும் சிந்தித்துப் பார்த்ததுண்டா?

அதிமுகவின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா மரணப் படுக்கையில் இருந்தபோதே அ.இ.அ.தி.மு.க.வை உடைக்கும் வேலையில் உயர் மட்ட பிஜேபி தலைவர்கள் இறங்கிடவில்லையா?

பட்ட பின்பும் புத்தி வரவில்லையே அண்ணா திமுகவுக்கு  - கட்டுச் சோற்றில் பெருச்சாளியை  கட்டிய கதைதான் இது.

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இந்த ஒன்பது ஆண்டுகளில் மக்களுக்குச் செய்த வளர்ச்சித் திட்டங்கள் எத்தனை? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்று முழங்கினாரே மோடி - அது என்னாயிற்று?

வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்ட கருப்புப் பணத்தை எல்லாம் பறிமுதல் செய்து ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 இலட்சம் போடப்படும் என்றாரே - போட்டாரா? போட்டதெல்லாம் பட்டை நாமம்தானே!

கேட்டால் அதெல்லாம் வெறும் 'ஜும்லா' - அதாவது ஏமாற்று வேலை என்று சொல்லுகிறார்கள் என்றால், இந்தப் பிஜேபியைத் தவிர மக்களைக் காலில் போட்டு மிதிக்கும் ஜனநாயக விரோதிகளை வேறு எங்கே காண முடியும்?

இந்த நிலையில் சரியான தருணத்தில் "இந்தியா" தோன்றி விட்டது. இதற்காக இந்திய மக்கள் 130 கோடி பேரும் தலை தாழ்ந்த நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

பெங்களூருவில் ஏதோ கூடினோம் - கலைந்தோம் என்று இல்லாமல் உருப்படியான தங்கள் கொள்கைகளை, திட்டங்களைத், தீர்மானங்களாக வடித்துத் தந்துள்ளனர்.

அவை வருமாறு:

* சிறுபான்மையினருக்கு எதிராக உருவாக்கப்படும் வெறுப்பு மற்றும் வன்முறையைத் தோற்கடிக்க ஒன்றிணைந் துள்ளோம். 

* பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் காஷ்மீர் பண்டிட்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்களைத் தடுக்க ஒன்றிணைந்துள்ளோம்

* ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை அமல் படுத்த வேண்டும் 

* அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தூண்களான மத சார்பற்ற ஜனநாயகம், பொருளாதார இறையாண்மை, சமூக நீதி, கூட்டாட்சி ஆகியவை, ஒன்றிய பா.ஜ.க. அரசால் சீர்குலைக்கப் பட்டுள்ளன. 

* மணிப்பூர் கலவரம், மனிதாபிமானமற்ற சோகமான நிகழ்வு. அங்கு மீண்டும் அமைதியான சூழல் ஏற்பட வேண் டும். 

* ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் உரிமைகள் மீதான தொடர்ச்சியான தாக்குதலை எதிர்த்துப் போராடவும், எதிர்கொள்ளவும் தீர்மானித்துள்ளோம். 

*முக்கிய எதிர்க்கட்சிகளுக்கு எதிராக, பழிவாங்கும் நோக்கில், ஒன்றிய விசாரணை அமைப்புகளை பா.ஜ.க. தவறாகப் பயன் படுத்துவது, வெட்கக்கேடானது. 

*அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், வேலை யில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. 

* பா.ஜ.க. ஆட்சி நடக்காத மாநிலங்களில், ஆளுநர்கள் அரச மைப்பு சட்டத்தை மீறி செயல்படுவதோடு மட்டுமல்லாமல், மக்கள் நலத் திட்டங்களுக்கு முட்டுக் கட்டையாக உள்ளனர்.

2024இல் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் இந்தத் தீர்மானங்களை எல்லாம் உள்வாங்கி, பிஜேபியையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும், வீழ்த்தியே தீருவது என்று தீர்மானிக்க வேண்டியது ஒவ்வொரு வாக்காளரின் கடமை! கடமை!! கடமை!!! என்று நினைவூட்டுகிறோம் - வலியுறுத்துகிறோம்.

இதில் தவறு இழைத்தால் ஜனநாயகம் இருக்காது - பாசிசம் தான் 'பட்டாக் கத்தியுடன்' பல்லிளித்து நிற்கும் - எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!


No comments:

Post a Comment