ஓமந்தூர் திரு.இராமசாமி ரெட்டியார் அவர்கள் தமிழக முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது சிறிதளவு தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டு காரியம் ஆற்ற முற்பட்டார். கோயில்கள், மடங்கள் முதலியவைகளின் சொத்துகள் பற்றிச் சில சட்டத் திட்டங்கள் ஏற்படுத்தி அவற்றைக் கொண்டு வர முயற்சி செய்தார். அவரை இந்த நாட்டுப் பார்ப்பனர்களும், பத்திரிகைகளும் எல்லாரும் எதிர்த்துக் கூப்பாடு போட்டனர். அவர் (ரெட்டியார்) எங்களை மலையாளப் போலீசாரை (காவல் துறையினரை) விட்டுக் கால் ஒடிய, கை ஒடிய அடிக்கச் செய்திருந்தும் அவரை வலிய ஆதரித்து எதிர்ப்பாளர்களின் கூற்றுக்குப் பதில் கூறிக் கொண்டு இருந்தோம். இந்த நாட்டுப் பத்திரிகைகள் “இராமசாமி ரெட்டியார் அவர்களை” “தாடியில்லாத இராமசாமி நாயக்கர்” என்று கூட எழுதின!
இராமசாமி ரெட்டியார் அவர்களே, திரு.வி.கலியாண சுந்தர முதலியாரிடம், “பெரியார் என்னை இப்படிப் புகழ்ந்து பேசுவதனாலேயே இந்த நாட்டுப் பத்திரிகைகளும், இந்த நாட்டுப் பார்ப்பனர்களும் என்னை எதிர்க்கின்றார்கள். தயவு செய்து அவரைக் கொஞ்ச நாள் என்னைப் பற்றிப் பேசாமல் இருக்கும்படி நான் கேட்டுக் கொண்டதாகச் சொல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பினார். நான் அவரை ஆதரித்தது அவருக்காக அல்லவே! அவர் செய்த காரியத்திற்காகவே ஆகும். அப்படி இருந்தும் (பார்ப்பனர்கள்) அவரைத் தொல்லைப்படுத்தி விலகும்படிச் செய்துவிட்டார்கள்!
- 29.12.1960 அன்று சோழவந்தானில் தந்தை பெரியார் சொற்பொழிவு -
(‘விடுதலை’ - 15.1.1961)
No comments:
Post a Comment