கடந்த 29.6.2023 அன்று செஞ்சியில் நான் காவது தலைமுறை சுயமரியாதை திருமணத்தை நடத்திவைக்கச் சென்றிருந்தபோது, பல நண்பர்கள் பல புத்தகங்களை எனக்குத் தந்தார்கள்.
அதில் ப.க. பொறுப்பாளர் செஞ்சி தா. நந்தகுமார் அவர்கள் ஜூலியஸ் எழுதிய 'ஊருக்கு ஒரு குடி' என்ற ஒரு உண்மை வாழ்க்கை அனுப வங்களை - சலவைத் தொழிலாளர் குடும்பத்தைச் சார்ந்த அந்த பிஞ்சு பெண்ணின் உள்ளத்தில் ஜாதிக் கொடுமைகள், ஏற்படுத்திய ரணங்களையும், காயங்களையும், ஒரு 'ஸ்கேன் ரிப்போர்ட்டை'ப் போல அப்பெண், ஒப்பனை சிறிதும் இல்லாது ஆற்றொழுக்காகச் சொல்லிக் கொண்டே சென்றது, கிராமங்களில் - (எல்லாம் அச்சரப்பாக்கம், திண்டிவனம், விக்ரவாண்டி இதுபோன்ற ஊர் களுக்கு பக்கத்தில் உள்ள கிராமங்களில்) வீட்டுக்கு வீடு சோறு வாங்கி, இந்த மேல் ஜாதியினருக்கு கீழ் ஜாதியாய் இருக்கின்ற இவர்களுக்கு கீழே - இவர்கள் ஆதிக்கம் செலுத்தும் கிராமங்களில் ஊருக்கு ஒரு குடி' இரு குடி குலத் தொழில் - ஜாதியை இவர்கள் நடத்திடும் ஜாதி வன்மமும், சடங்கு சம்பிரதாயங்களிலும் அவர்களது குலத்தொழிலை - வேலை வாங்கி, உரிய கூலிகூட தராமல் - உடையில் இந்த சலவையாளர்களின் சலியாத உழைப்புக் காரணமாக பெற்ற சலவை வெள்ளை - உயர் ஜாதி அழுக்கு மனங்களை அப்படியே வெளுக்காமல் வைத்து வரும் கொடுமைகளை - ரத்தக் கண்ணீருடன் விளக்கி - அதிலிருந்து வெளியே வந்து தன்மானம், தன்னம்பிக்கை, தன்னிறைவு பெற்றதும், அதற்கு கிறிஸ்துவமும் அதில் உள்ள சில நண்பர்களும் எப்படி ஈர மனதுடன் இவர்களை உயரச் செய்து - சொந்தக் காலில் நின்று, சுயமரியாதை கொள் தோழா என்ற பெரியாரின் தத்துவத்தை நடை முறைப்படுத்தியே, தனது சுயமுயற்சியினாலும் பகுத்தறிவு, பட்டறிவு அவமானங்களையே எதிர் கொண்டு - அதிலிருந்தே வாழ்க்கைப் பாடங் களைக் கற்று - குலத் தொழிலை கை விட்டு குடும்பத்திற்கே விடுதலை பெற்றுத் தந்த இந்த அடித்தட்டு வீரப் பெண் மணியின் விவேக வாழ்க்கை பல நூறு பாடங்களைப் படிப்பதற்குச் சமம்!
அனுபவங்கள் - விழுப்புண்களாகி, விடுதலைக்கான விடியலைத் தர, தன் விவேகத்தை இந்த 'டோபி' மகள் சமூகத்திற்கே புத்தொளி பாய்ச்சியுள்ளார்.
பல கிறிஸ்துவ பங்குத் தந்தையர்களின் உதவியும் பெற்று, தான் மட்டும் முன்னேறியது போதாது - தனது சமூகம் சார்ந்த மக்களின் பிறவி இழிவிலிருந்து அவர்களை மீட்டெடுக்க கல்விக் கண் திறந்து புதிய தொழில் வாய்ப்பினை எப்படிச் செய்து முன்னேறுகிறார்கள் என்பதை எண்ணுகையில் வியப்பு ஏற்படுகிறது.
பல வெளிநாடுகளுக்குச் சென்று தான் உயர்ந்த நிலையில் - அதை தனக்கு மட்டும் ஒரு உயர் வசதி மேடையாக அமைக்காமல் - மற்றவர் களுக்கும் கை கொடுத்து ஜாதி பள்ளத்தில் இருந்து குலத் தொழில் கொடுமையிலிருந்து வெளியேறி மான வாழ்வு, சமத்துவ வாழ்வு வாழ வழி காட்டுகிறார்.
கிராமங்களில் பிற்படுத்தப்பட்டவர்களாக இருப்பவர்கள் - தாழ்த்தப்பட்டவர்களை அவ ருக்கு மேலே யார் அமுக்குகிறார்கள் என்பதை மறந்து, தனக்குக் கீழே உள்ளவரை அழுத்தி அடிமைகளாக அதனை எஜமானத்தனம் என்று எண்ணி ஏமாறுகின்றனர் என்பதற்கு இந்த நூல் ஒரு கசையடி நூலாகும்.
கிராமங்களில் வீடு வீடாகச் சென்று சோறு வாங்கி தினசரி வாழ்க்கை, வாத்து மேய்த்து, அந்த சோற்றைக்கூட அன்போடு தராமல், ஆணவத் தோடு வழங்குவதில்கூட சடங்காச்சாரமாக தருகிறபோது ஒரு கிராமத்தில் எப்படிப்பட்ட இழிவை, அவமான நஞ்சை அந்த பிஞ்சு உள்ளத்தில் பெற்று - அதை அப்படியே அடக்கி, வாழ்ந்து காட்டும் வைர நெஞ்சமாக்கிய இந்த வாழ்க்கைக் கதை ஜாதியை ஒழிக்க பெரியார் சொன்னபடி குல தர்மம், குலத் தொழிலைக் கைவிட்டு உங்கள் பிள்ளைகளை நன்கு படிக்க வையுங்கள் என்கிறார்.
இது எவ்வளவு உண்மை என்பது இந்த ஜூலியஸ் எழுதிய 'தன் வாழ்க்கை வரலாறு' கூறுகிறது.
அவர் எத்தனையோ கசப்பான அனுபவங் களை அதில் குறிப்பிடுகிறார். அதில் ஒரே பகுதியை அப்படியே தருகிறேன்.
ஜாதியை அழிக்கத் துணிய வேண்டாமா என்பதை அது உங்களுக்குச் சொல்லும்!
இரவில் சோறு எடுப்பு
"அம்மாவும் அப்பாவும் வெளியூருக்குப் போறதால என்னை “இரவு ஒரு மூனுவீட்டுல மட்டும் சோறு எடுத்துச் சாப்பிட்டு படுத்துக்கம்மா. நாங்க காலையில வந்து விடுகிறோம்" என்றார்கள். இரவு நேரம், மழைக்காலம், குண்டானை எடுத்துக் கிட்டு, குழம்பு வாங்குற வாளியையும் எடுத்துக் கிட்டு, லாந்தர் விளக்கையும் எடுத்துக்கிட்டு, செருப்பு இல்லாத காலோடு எங்க வீட்டுக்கும் சோறு எடுக்கப்போற தெருவுக்கும் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றேன்.
நான் சோறு எடுக்கும் முதல் வீடே என்னோடு படிக்கிற பெரியநாயகி வீடு என்பதால் எனக்கு அப்படி சொல்வதற்கு மனசு வரல. பள்ளியில் நான் வகுப்பு லீடர், பெரியநாயகியை மிரட்டிக் கொண்டிருப்பேன். அப்படி இருக்கையில் பெரிய நாயகியின் வீட்டின் வாசலில் நின்று கொண்டு சோத்துக்கு வந்திருக்கிறேன் என்று சொல்வதற்கு எனக்கு வெட்கமாக இருந்தது.
அம்மா சோறு எடுக்கப் போகும்போது நானும் கூடவே போயிருக்கேன். இதே பெரியநாயகி வீட்டுல அம்மா, சோறு என்பாங்க - அவங்களும் கொண்டுவந்து போடுவாங்க.
நாங்களும் வாங்கிட்டு வந்து இருக்கிறோம். அப்போது எல்லாம் அது பெருசா தெரியல்ல. நான் சோறு எடுக்கப் போகும் போதுதான் அந்த வலியை என்னால் உணர முடிந்தது. அவுங்க என்னன்னு கேட்டாங்க நான் சோத்துக்கு வந்து இருக்கிறேன் என்று சொல்லக்கூட முடியாமல் நின்னேன்.
"அம்மா சோறு” என்றேன். அப்போது அவர்கள் டி.வி.யில் ஆர்வமாக நாடகம் பார்த்துக் கொண்டிருந்தார்கள், விளம்பரம் போட்டதும் தான் திரும்பிப் பார்த்தார்கள். நான் லாந்தர் விளக்கோடு நின்று கொண்டிருந்தேன். அப்போது சோறு எடுத்துக் கிட்டு வந்தாங்க. சோறு போடுற என் குண்டானைப் பாத்தாங்க. அது வெறும் குண்டானா இருந்துச்சு. “என்னடி வெறும் குண்டானைக் கொண்டு வந்துருக்க?, உங்க அம்மா இதை எல்லாம் சொல்லலயா? ஒரு பிடி சோறுபோட்டுல கொண்டுவரனும்” “எங்க வீட்டுல சோறு இல்லையே" என்று சொன்னேன். “வெறும் குண்டானில் சோறு போட்டுட்டு எங்க வீடு வெறும் வீடாக போறதுக்கு வந்தியா என்று கேட்டு "நீ போய் வேற வீட்டுல வாங்கிவிட்டு வா! பிறகு நான் போடுறேன்' என்று சொல்லிட்டாங்க, நான் பக்கத்து வீட்டுக்குப் போனேன்.
அவுங்களும் அதே மாதிரி சொல்லி விடுவாங்களோ என்று நினைத்துக் கொண்டே போனேன். “அக்கா” என்று கூப்பிட்டேன். கிண்ணத்தில் சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்தாங்க. "எங்க அம்மா இல்லையா?” என்று கேட்டுக் கொண்டே, கிண்ணத்திலிருந்த சோற்றைப் போடப்போகும் போது “அய்யோ அய்யோ என்னாடி வெறும் குண்டானைக் கொண்டு வந்துருக்க, என் வீட்ட வெறும் வீடாக்க எத்தனை நாள் காத்திருந்த?” என்று சத்தம் போட்டாங்க. எனக்குப் பயமாபோயிருச்சு. "நீ வீட்டுல போயிசோறு போட்டு எடுத்துக்கிட்டு வாடி. இல்லைன்னா வேறயாரு வீட்டுலயாவது வாங்கிட்டுவாடி" என்று சொன்னாங்க.
"நான் வேற வீட்டுக்கெல்லாம் போகலக்கா. மூனுவீட்டுல மட்டும் எடுத்துக்கிட்டு போயிடலாம்” என்று வந்தேன். “போடுங்கக்கா” என்று கெஞ்சினேன். கெஞ்சியும் அவுங்க போடாமல் போய்ட்டாங்க. எனக்கு அழுகை வந்துருச்சு. மூன்றாவது வீட்டுக்குச் போகலாமா வேண்டமா என்று தயக்கமும் வந்து விட்டது.
மூணாவது வீட்டுக்கும் போனேன். போயிகேட்டதும் கரண்டியில் அவுங்கசோறு கொண்டு வந்ததால குண்டானைப் பார்த்துக் கொண்டே சோத்தைப் போட்டுட்டாங்க. போட்ட பிறகு அவுங்க திட்டுன திட்டு கொஞ்சம் நஞ்சமல்ல. அவுங்க சத்தம் போட்டதுல பக்கத்து வீட்டுக்காரர்களும் வந்துட்டாங்க, வந்தவங்களும் என்னைத்தான் திட்டுனாங்க. நான் இரண்டு மூன்று வீடுகளில் சோறு வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்."
ஒ மனிதர்களே, மாட்டுக்கு அன்பபோடு தடவி தீனி தருகிறார்கள் - எங்கள் உழைக்கும் மனிதர் களை இப்படி அவமானத்திற்கு அடி ஆழத்தில் தள்ளுகிறார்கள் - இது தான் ஜாதி தந்த உங்கள் மன அழுக்கு.
இப்போது இந்த பெண்களே அதை வெளுத்துக் கட்டி வெளிவர - உங்களுக்கு மூளைச் சலவை செய்ய முந்துகிறார்கள் என்பது பற்றியே இந்நூல்.
ஆயிரம் பாராட்டுகள் அவருக்கும், அவரை ஆதரித்த பெரு உள்ள மனிதர்களுக்கும். ஜாதி இருட்டறையில் இருந்து இப்படி ஒரு வெளிச்சம் - மற்றவர்களுக்கு புத்தி வந்தால் சரி!
நமக்கு அவர் மதம் முக்கியமல்ல! அவர் மனமும் அதன் திண்மையுமே முக்கியம்.
எனவே பாராட்டி மகிழ்கிறோம் - படித்து மகிழுங்கள்.
No comments:
Post a Comment