'திருத்தவே முடியாது!'
'இப்படிப்பட்டவர்களை அமைச்சராக வைத்திருந்தால், யோகி ஆதித்யநாத்துக்கு தான் கெட்ட பெயர் ஏற்படும்...' என கோபப்படுகின்றனர், உத்தர பிரதேச மாநில பா.ஜ.,வினர்.
இங்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இவரது அமைச்சரவையில் சிறிய கட்சிகளைச் சேர்ந்த சிலருக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
நிஷாத் என்ற கட்சியின் தலைவரான சஞ்சய் நிஷாத் என்பவர், மாநில மீன்வளத் துறை அமைச்சராக உள்ளார். இவரது சமீபத்திய செயல்பாடுகள் தான், பா.ஜ.,வினரிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளன. இவர், வாரத்தில் மூன்று நாட்கள், சில மணி நேரங்களுக்கு தன் கட்சி அலுவலகத்தில் தியான நிலையில் அமர்ந்து விடுவார்.
அப்போது, அவரது கட்சி தொண்டர்கள், அவருக்கு ஆரத்தி எடுத்து வழிபடுவதுடன், அவரைப் போற்றி பஜனை பாடல்களையும் பாடுவர்; ஒவ்வொருவராக வந்து ஆசி வாங்குவர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, பெரும் சர்ச்சையாகி விட்டது. 'பொறுப்பான அமைச்சர் பதவியில் இருக்கும் ஒருவர், தன்னைத் தானே கடவுளாக சித்தரிக்கலாமா...' என, பலரும் விமர்சித்து வருகின்றனர்.
சஞ்சய் நிஷாத்தோ, 'என்னை வழிபடும்படி யாரையும் நான் கட்டாயப்படுத்துவது இல்லை. என்னை குருவாக நினைப்பவர்கள் வழிபடுகின்றனர். இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்னை...' என, சீறுகிறார்.
உ.பி., மக்களோ, 'ம்கூம்; இவரை திருத்தவே முடியாது...' என, புலம்புகின்றனர். (5.7.2023)
No comments:
Post a Comment