“பேய்களும்” “பிசாசுகளும்” ஏன் எல்லாருக்கும் தெரிவதில்லை? - நன்மாறன் திருநாவுக்கரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 8, 2023

“பேய்களும்” “பிசாசுகளும்” ஏன் எல்லாருக்கும் தெரிவதில்லை? - நன்மாறன் திருநாவுக்கரசு

இரவில் இருட்டான அறைக்குள் உங்களால் தனியாகச் செல்ல முடியுமா? முடியாது என்பதுதான் பலரது பதிலாக இருக்கும். காரணம், இருட்டில் பேய், பிசாசு உலாவும் என்று பயமுறுத்தி வைத்திருப்பார்கள்.

சிலருக்கு வளர்ந்தவுடன் பேய் பயம் போய்விடும். சிலருக்கு வளர்ந்த பின்னும் பயம் இருக்கும். சிலர் விநோதமான உருவங்களைப் பார்த்ததாகவும், சத்தங்களைக் கேட்டதாகவும் சொல்கின்றனர். இதில் எது உண்மை?

பேய், பிசாசு குறித்த ஆய்வுகள் உலகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இதுவரை எதுவும் உண்மை நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் மனிதர்கள் விநோதமாய் உணர்வதற்குக் காரணம் நம் மூளைதான்.

நாம் கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய அய்ம்புலன்கள் மூலம் வெளியுலகைப் புரிந்துகொள்கிறோம். இந்த அய்ந்து புலன்களில் இருந்தும் பெறப்படும் தகவல்களுக்கு மூளைதான் அர்த்தம் கொடுக்கிறது. சில நேரம் மூளைக்குக் கிடைக்கும் அர்த்தமில்லாத தகவல்களுக்கு அது அர்த்தம் உருவாக்க முயலும்போது, அது யதார்த்தத்துக்குப் புறம்பானதாக இருப்பதால் அவற்றை, அமானுஷ்யமாக நாம் உணர்கிறோம். உதாரணமாக வானில் நாம் மேகங்களைப் பார்க்கும்போது அவை யானை, முயல் போன்ற உருவங்களில் தோன்றும் இல்லையா? இதை விஞ்ஞானிகள் பரேடோலியா (Pareidolia) என்கின்றனர். அதாவது நம் மூளை, தான் காணும் புதிய விடயங்களைத் தனக்குத் தெரிந்த விடயங்களைக் கொண்டே விளக்க முயற்சி செய்கிறது. அந்த வகையில் நாம் சுற்றுப்புறத்தில் காணும் விடயங்களை மூளை தவறாக அர்த்தப்படுத்திக் கொள்ளும்போது, உருவம் இருப்பதைப்போல கற்பனை செய்துகொள்கிறோம். பொதுவாக இருளில்தான் நாம் பேயைப் பார்க்கிறோம். இருள் என்பது காட்சிகள் அற்ற நிலை. அந்தச் சூழலை விளக்குவதற்கு மூளை ஏற்கெனவே மனதில் பதிந்து வைத்திருக்கும் காட்சிகளை நினைவுப்படுத்துகிறது. அதனால் நீங்கள் ஏற்கெனவே பார்த்து வைத்திருக்கும் உருவங்கள் நினைவுகூரப்பட்டு, பயமுறுத்துகின்றன.

சிலருக்கு விநோதமான உருவம் கண்ணுக்குத் தெரிவது மட்டுமல்லாமல், அவற்றைப் பார்க்கும்போது மூச்சு முட்டுவது போலவும், நெஞ்சு கனமாக இருப்பது போலவும் தோன்றும். இதற்குக் காரணம் கார்பன் மோனாக்ஸைடு வாயு. நாம் பயன்படுத்தும் எரிபொருள்களில் இருந்து வெளியாகும் கார்பன் மோனாக்ஸைடு அதிக அளவில் சுற்றுப்புறத்தில் கலக்கிறது. இந்த வாயுவுக்கு மணமோ சுவையோ நிறமோ கிடையாது. அதனால், அதன் இருப்பைக்கூட நம்மால் உணர முடியாது. இந்த வாயுவை நாம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் முகர நேர்ந்தால் நமக்குப் பிரமை ஏற்படும். அப்போது மூளை உருவங்களைக் கற்பனை செய்யும். அத்துடன் மூச்சு விடுவதில் சிரமம், குழப்பம், நெஞ்சடைப்பு ஆகியவையும் ஏற்படும். இதையும் நாம் பேய் என்கிறோம். சரி, நாம் காதில் கேட்கும் விநோத சத்தங்களுக்கு என்ன அர்த்தம்? இதுவும் நம் புலன்களில் ஏற்படும் தடுமாற்றம்தான். ஒலியை நாம் அலைவரிசையால் அளக்கிறோம். மனிதர்களின் காது 20kHஷ் - 20kHz அளவிலான அலைவரிசைகளையே கேட்கும் தன்மை கொண்டது. 20kHzஷ்க்கு அதிகமான அலைவரிசைச் சத்தத்தை நாம் மீயொலி என்கிறோம். அதை நம்மால் கேட்க முடியாது. ஆனால், நாய், வவ்வால் போன்றவை கேட்கும். அதேபோல 20பிக்ஷ்க்கு குறைவான சத்தத்தை அகவொலி என்கிறோம். இதை யானைகள், திமிங்கிலங்கள் உள்ளிட்டவை கேட்கும்.

இந்த அகவொலியை மனிதர்கள் கேட்க முடியாவிட்டாலும் அவற்றால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. பூமியில் நில அதிர்வு ஏற்படும்போதோ, பருவநிலை மாறும்போதோ அகவொலி உருவாகி, அது மனிதர்களைப் பாதிக்கும். அப்போது மனக்குழப்பமோ, பயமோ, சித்தப்பிரமையோ ஏற்படலாம். அதேபோல பூமியின் புவிகாந்தப் புலத்தில் ஏற்படும் மாற்றம் மனிதர்களின் மூளையில் உள்ள தற்காலிக மடலைத் (Temporal Lobe) தூண்டுகிறது. தற்காலிக மடல் என்பது நம் உணர்வுகள், நினைவுகள், உருவங்களை அடையாளம் காணுதல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் பகுதி. அந்தப் பகுதி தூண்டப்படுவதால் குழப்பம் ஏற்பட்டு நமக்கு விநோதமான உணர்வுகள் தோன்றலாம். இந்தப் பாதிப்பு ஒரு சிலருக்கு மட்டும் இருப்பதால்தான் அனைவராலும் விநோதமான விடயங்களை உணர முடிவதில்லை.

சில நேரம் நாம் இரவு தூங்கும்போது, யாரோ மேலே ஏறி அழுத்துவதுபோல் இருக்கும். நம்மால் கண்களைத் திறக்க முடியாது. கத்தலாம் என்றால் குரல் வெளியே வராது. திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும் முடியாது. சில நிமிடங்கள் கழித்துத்தான் எதுவும் செய்ய முடியும். இதை அமுக்குவான் பேய் என்று சொல்வார்கள்.

உண்மையில் மேற்சொன்ன நிலை தூக்கத்தில் ஏற்படும் இடையூறால் உருவாகிறது. நாம் உறக்கத்தில் நான்கு நிலைகளுக்குச் செல்வோம். இதில் விரைவான கண் அசைவுத் தூக்கம் என்கிற நிலைக்குச் செல்லும்போது கனவுகள் தோன்றும். நாம் கனவு காணும்போது உறக்கத்திலேயே உடலை அசைத்தால் காயம் ஏற்படலாம் என்பதால், தசைகளை மூளை முடக்கிவிடும். இந்த நிலையில் நாம் விழித்து எழுந்தால், மூளை தசைகளை மீண்டும் இயக்க ஒருசில நிமிடங்கள் ஆகும். அப்போது நாம் செய்ய நினைப்பதை உடல் செய்யாது. இதைத்தான் நாம் பேய் என அஞ்சுகிறோம்.

அதேபோல் இன்று இணையத்தில் காணக் கிடைக்கும் விநோதமான காட்சிப் பதிவுகள் அனைத்தும் ஒளிப்பதிவுக் கருவி, ஒலிவாங்கி ஆகிய சாதனங்களின் குறைப்பாட்டால் ஏற்படுபவை. அல்லது பயமுறுத்துவதற்கு என்றே போலியாக உருவாக்கப்பட்டவை. அதனால் இனி பேய், ஆவி போன்ற இல்லாத ஒன்றை நினைத்துப் பயப்படாதீர்கள். அடுத்த முறை நீங்கள் இருளில் செல்லும்போது விநோதமான உணர்வு ஏற்பட்டால், அது உங்கள் புலன்களால் ஏற்படும் குழப்பம் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்தானே!

நன்றி: இந்து தமிழ்திசை - ஜூலை 5, 2023





No comments:

Post a Comment