‘‘90 இல் 80 அவர்தான் வீரமணி'' என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரின் ஏற்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 5, 2023

‘‘90 இல் 80 அவர்தான் வீரமணி'' என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரின் ஏற்புரை

 நம்முடைய கொள்கைகள் வெற்றி பெறக்கூடிய கொள்கைகள்; இந்தக் கொள்கைகள் ஒருபோதும் தோற்காதவை!

‘‘நாம் எவ்வளவு காலம் இருக்கவேண்டும் என்பதை நாம் முடிவு செய்வதைவிட, நம்முடைய கொள்கை எதிரிகள்தான் முடிவு செய்கிறார்கள்!’’

சென்னை, ஜூலை 5 நம்முடைய கொள்கைகள் வெற்றி பெறக்கூடிய கொள்கைகள்; இந்தக் கொள்கைகள் ஒருபோதும் தோற்காதவை!  ‘‘நாம் எவ்வளவு காலம் இருக்கவேண்டும் என்பதை நாம் முடிவு செய்வதைவிட, நம்முடைய கொள்கை எதிரிகள்தான் முடிவு செய் கிறார்கள்.’’ வாழ்வோம்! வளர்வோம்!! வெற்றி பெறு வோம்!! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கடந்த 27.6.2023 மாலை சென்னை தியாகராயர் நகரில் உள்ள  சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில் ‘‘90 இல் 80 அவர்தான் வீரமணி’’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரை யாற்றினார்.

அவரது ஏற்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

அண்ணாவும்- அய்யாவும் 

18 ஆண்டுகளுக்குப் பிறகு...

அப்பொழுது தோழர் க.இராசாராம் போன்றவர்கள் சொன்னார்கள், அண்ணாவும்- அய்யாவும் 18 ஆண்டு களுக்குப் பிறகு ஒரே மேடையில் அமர்ந்திருப்பது எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய மகிழ்ச்சி என்று சொன்னார்கள்.

அய்யா, அண்ணாவிற்குப் பொன்னாடை போர்த்தி னார். அப்பொழுது அண்ணா மிகவும் மகிழ்ச்சி யடைந்தார்.

இதுதான் எனக்குப் போர்த்தப்பட்ட பொன்னாடை; மற்ற பொன்னாடைகள் எல்லாம் என் பதவிக்குப் போர்த்தப்பட்ட பொன்னாடைகள்!

அண்ணா உரையாற்றும்பொழுது சொன்னார், ‘‘நான் பதவிக்கு வந்த பிறகு, இதுவரையில் 300, 400 பொன்னாடைகள் போர்த்தப்பட்டு இருக் கின்றன; ஆனால், இங்கே போர்த்தப்பட்ட பொன் னாடை - என்னுடைய அறிவு ஆசான், என்னு டைய தலைவர் தந்தை பெரியார் எனக்குப் போர்த்தியிருக்கிறார் என்று சொன்னால், இதுதான் எனக்கெனப் போர்த்தப்பட்ட பொன்னாடை; மற்ற பொன்னாடைகள் எல்லாம் என் பதவிக்குப் போர்த்தப்பட்ட பொன்னாடைகள்'' என்று குறிப்பிட்டார்!

தப்புக் கணக்குப் போடுபவர்களுக்கு 

இந்தப் பாடம் போய்ச் சேரவேண்டும்!

இன்றைய இளைஞர்கள் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும்; திராவிடத்தினுடைய அரசியலை மிகச் சுலபமாகத் தட்டிவிடலாம்; சுலபமாக டில்லி அதிகாரத்தை வைத்துக் கொண்டு மிரட்டிவிடலாம் - இந்த ஆட்சி தானே - இது சாதாரணமானது என்று நினைத்துக் கொண்டு தப்புக் கணக்குப் போடுபவர்கள் இருக் கிறார்களே, அவர்களுக்கு இந்தப் பாடம் மிகத் தெளிவாகப் போய்ச் சேரவேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.

அண்ணா பேசுகிறார்!

அண்ணா பேசுகிறார், ‘‘தலைவர் பெரியார் அவர் களே, நீங்கள் எந்தக் கருத்தை நிறைவேற்றவேண்டும் என்று நினைத்தீர்களோ, அதை ஆட்சிக்குச் சென்று நிறைவேற்றவேண்டும் என்பதற்காகத்தான் நான் உங்களைவிட்டுப் போனேன். ஆட்சிக்கு வந்திருக் கின்றோம்; ஆனால், நான் ஆட்சிக்கு வந்த பிறகுதான் உணருகிறேன்; நாம் நினைத்த அளவிற்கு இதிலே வேகமாகச் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை எனக்குக் குறைகிறது. காரணம், நம்முடைய அதிகாரங்கள் பறிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த ஆட்சிக்கு உரிய அதிகாரங்கள் போதிய அளவில் இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன்.

இப்பொழுது எனக்கு ஓர் உணர்வு தோன்றியிருக்கிறது; எனவேதான், என்னுடைய தலைவரான உங்களிடத்தில் ஒன்றைக் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பொழுது ஆட்சிக்கு வந்திருக்கிறோம்; அதிகார அளவு குறைவாக இருந்தாலும், இந்தப் பணியையே தொடர்ந்து செய்யவேண்டுமா? அல்லது இதை விட்டுவிட்டு பழையபடி உங்களிடத்திலே நான் வந்து அந்தப் பழைய பணியையே செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்; அதைச் செய்யவேண்டுமா? நீங்கள் எதற்கு உத்தரவு இடுகிறீர்களோ அதன்படி நடப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்'' என்று அண்ணா அவர்கள் பேசினார்.

அவருடைய உரையைக் கேட்டபொழுது, எங்களுக் கெல்லாம் மயிர்க்கூச்செறியும் அளவிற்கு இருந்தது. அய்யாவும் அண்ணாவின் உரையை அமைதியாகக் கேட்டுவிட்டு, அய்யா உரையாற்றும்பொழுது சொன் னார்,

5 ஆண்டுகளில் ஒரு நாள், ஒரு மணிநேரம், 

ஒரு நிமிடம்கூட குறையாத அளவிற்கு...

‘‘முதலமைச்சர் அண்ணா அவர்கள் சொன்னார், அதிகாரம் அதிகமில்லை; ஆகவே, இந்தப் பணியில் இருக்கவா? அல்லது உங்கள் பின்னால் வரவா? என்று என்னைப் பார்த்துக் கேட்டார். நான் இப்பொழுது அவருக்குச் சொல்கிறேன்; சாதாரணமாகச் சொல்லு கிறேன் என்று சொல்லவில்லை. ஒரு கட்டளையிடுவது போன்று சொல்லுகிறேன். நீங்கள் இந்த ஆட்சியிலே இருக்கவேண்டும்; 5 ஆண்டுகளுக்காக உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் மக்கள் என்று சொன்னால், அந்த 5 ஆண்டுகளில் ஒரு நாள், ஒரு மணிநேரம், ஒரு நிமிடம்கூட குறையாத அளவிற்கு நீங்கள் அந்தப் பொறுப்பிலே இருந்து எதை எதை செய்யவேண்டுமோ, அதையெல்லாம் செய்யுங்கள். மற்ற பணிகளைச் செய் வதற்கு நாங்கள் வெளியில் இருக்கிறோம்; நாங்கள் அந்தப் பணியை செய்வோம். ஆகவே, இந்த இரண்டும் செய்தால்தான், நம் மக்களுக்குப் பயன்படும்'' என்றார் தந்தை பெரியார் அவர்கள்.

தி.மு.க. தனியாக ஓர் அரசியல் அமைப்பாக வந்ததற்கு அங்கீகாரம் கொடுத்தார் அய்யா!

ஒரு புதிய அரசியல் தத்துவத்தை, திராவிட முன் னேற்றக் கழகம் தனியாக ஓர் அரசியல் அமைப்பாக வந்ததை தந்தை பெரியார் அவர்கள் ஒரு முத்திரையைக் கொடுத்து அங்கீகாரமாக்கினார்.

அது ஒரு பெரிய திருப்பம் அன்றைக்குத் தொடங் கியது. அதற்குப் பிறகு கலைஞர். கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தந்தை பெரியார் சொன்னார், ‘‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்காகப் போராட்டங்களை நான் நடத்துவேன்; என்னை கைது செய்யுங்கள்'' என்று சொல்லுகிறார்.

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கட்டிலில் அமர்ந்துகொண்டு, பொலபொலவென்று கண்ணீர் விட்டார்.

நான் என்னுடைய வேலையை செய்கிறேன்; நீங்கள் உங்கள் வேலையை செய்யவேண்டும்!

உடனே கலைஞரைப் பார்த்து அய்யா சொல்கிறார், ‘‘உங்களை ரொம்ப தைரியசாலி என்று நினைத்தேன்; இவ்வளவு சாதாரணமாக இருக்கீங்க. உங்கள் வேலை முதலமைச்சர் வேலை; நான் போராட்டக்காரன்; போராட்டக் களத்திற்கு வந்தால், என்னை கைது செய்யவேண்டியதுதானே உங்கள் வேலை. நான் என்னுடைய வேலையை செய்கிறேன்; நீங்கள் உங்கள் வேலையை செய்ய வேண்டும்; அப்பொழுதுதானே அவரவர்கள் வேலை சரியாக இருக்க முடியும்'' என்றார்.

உடனே முதலமைச்சர் கலைஞர், ‘‘அய்யா உங் களைக் கைது செய்வதற்காகவா நான் முதலமைச்சர் ஆனேன்? அதை என் அரசாங்கம் செய்யாது; அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டிய சட்டத்தைக் கொண்டு வருவேன்'' என்றார்.

இன்றைக்கு அதே பாரம்பரியம் வந்தவுடன், என்னு டைய வாழ்நாளில் இன்றைக்கு 90 வயதில் 80 என்று சொல்கிறீர்களே, ஒரே ஒரு செய்தியை சொல்கிறேன்.

‘‘உங்களையெல்லாம் சூத்திரர்களாக, இழிஜாதியினராக விட்டுவிட்டுச் சாகின்றேனே?''

தந்தை பெரியார் அவர்கள் தியாகராயர் நகர், பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கூட் டத்தில் உரையாற்றும்பொழுது சிறுநீர் பிரிவதற்காக பொருத்தப்பட்ட குழாய் நகர்ந்து, ‘‘அய்யோ, அம்மா'' என்று முனகல் வலியோடு பேசுகிறார். அந்த ஒலிநாடா பதிவு இன்னமும் இருக்கிறது. பிறகு பெரியார் பேசுகிறார்,  ‘‘எனக்கு வயதாகி விட்டது; சாவதைப்பற்றி நான் கவலைப்பட வில்லை. ஆனால், ‘‘உங்களையெல்லாம் ‘‘சூத்திரர் களாக'', ‘‘இழிஜாதியினராக'' விட்டுவிட்டுச் சாகின் றேனே?'' அதற்காகத்தான் அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராக வேண்டும்; தீண்டாமை ஒழிய வேண்டும் என்பதற்காகத்தான் என்னுடைய போராட்டம்'' என்று சொன்னார்.

தொடர்ந்து அன்னை மணியம்மையார் பொறுப்புக்கு வந்து, அவர்களின் மறைவிற்குப் பிறகு நான் பொறுப் பேற்றேன்.

பெரியாருக்கு அரசு மரியாதைதான் கொடுக்க முடிந்தது; அவர் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்க முடிந்ததா?

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் பெரியார் மறைந்த பொழுது சொன்னார், ‘‘நான் பெரியாருக்கு அரசு மரியாதைதான் கொடுக்க முடிந்தது; ஆனால், அவர் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்க முடிந்ததா? அதுதான் எனக்குக் கவலையாக இருக்கிறது'' என்று சொன்னார்.

ஆனால்,  பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்த பெருமை, இன்றைய ஒப்பற்ற முதலமைச்சர் நம்முடைய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உண்டு.

என்னுடைய வாழ்நாளில் 

மறக்க முடியாதது!

மே மாதம் அவர் ஆட்சிப் பொறுப்பேற்றார். ஆகஸ்ட் 14 ஆம் தேதி, இதுவரையில் இல்லாத அர்ச்சகர் நியமனங்களை பண்டார சன்னதிகளை அழைத்து, பெண் ஓதுவார் உள்பட அந்த நியமனங் களைச் செய்தபொழுது, நான் தொலைக்காட்சியில் பார்த்து, என்னை அறியாமல் உணர்ச்சிவயப்பட்ட தருணம் அதுதான்; என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாதது.

எது என்னை 90 வயது வரையில் வாழ வைத் திருக்கிறது? நீங்கள் எல்லாம் விரும்பியபடி 100 ஆனால், ஒன்றும் அதிசயமில்லை. 

என்னவாக இருந்தாலும், இதுபோன்ற பணி செய்யக்கூடிய உற்சாகத்தோடு இருக்கவேண்டும்; நாம் அடுத்தவர்களுக்குச் சுமையாக இருக்கக்கூடாது; சுகமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

அதற்காகத்தான் உடல்நலம் பேணவேண்டும் என்று சொல்கிறோம். ஆனால், நான் வீட்டில் இருந்தால், உடல்நலம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும்; பொதுக்கூட்டங்களுக்கு வந்தால், அது நிவர்த்தியாகி விடும். மக்களைப் பார்த்தால் தெம்பு தானாக வந்துவிடும்.

மருந்து என்பது உங்களிடத்தில் இருக்கிறது; உழைப்பு என்பது எங்களிடத்தில் இருக்கிறது!

மருந்து என்பது உங்களிடத்தில் இருக்கிறது; உழைப்பு என்பது எங்களிடத்தில் இருக்கிறது. வரும்பொழுது, கொஞ்சம் ‘டல்லாக' வருவோம். இது என்னிடத்தில் மட்டுமல்ல - பெரியாருக்கு, கலைஞருக்கு, திராவிட இயக்கத்திற்கு - வீட்டில் இருப்பதைவிட, போராட்டக் களத்திற்கு வரும்பொழுது எவ்வளவு உற்சாகமாக இருப்போம் என்பதைப் பாருங்கள்.

திருச்சி சிவா அவர்கள், எத்தனையோ முறை நாடாளுமன்றத்தில் பேசி நான் பார்த்திருக்கிறேன். ஆனால், 103 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் வந்தபொழுது, மாநிலங்களவையில் துணைத் தலைவர் அமர்ந்துகொண்டு பேசுகிறார்; அப்பொழுது அவர் பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறார். உடனே திருச்சி சிவா அவர்கள், வேக வேகமாக ஆத்திரப்பட்டு, கோபப்பட்டு அந்த நகலைக் கிழித்துப் போடுகிறார். 

நான் இதுவரையில் சிவா அவர்களை அந்த அள விற்குக் கோபப்பட்டு பார்த்ததில்லை. அந்த மசோதா நிறைவேறுவதற்காக வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

ஓர் அரசமைப்புச் சட்டத் திருத்தம் காலங்காலமாக சமூகநீதிக்கு விரோதமாக அது நடைபெறுகிறது. அதற் காக ஆத்திரம், கோபம் எல்லாம் தானாக வந்துவிடும்.

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமனம்!

அய்யாவிற்குப் பிறகு இந்த இயக்கம் இருக்கிறது; ஜாதி, தீண்டாமையை ஒழிப்பதற்காகத்தானே பெரியார் அவர்கள் பாடுபட்டார்; நம்முடைய காலத்தில் இதைப் பார்க்க முடியாவிட்டால், இந்த இயக்கம் நடத்தி என்ன பயன்? என்று நினைத்த நேரத்தில்தான், மிகப்பெரிய அளவிற்கு, நம்முடைய கூட்டணியை ஆட்சிப் பொறுப்பில் அமர வைத்தோம் - தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சரானவுடன், அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகர் என்று சொல்லி, அவர்களுக்குப் பதவி ஆணையைக் கொடுத்தார்.

பெரியாருடைய நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 

காலையில் இந்தக் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தோம். இதை பெரியார் திடலே கொண்டாடுகிறது மகிழ்ச்சியில். காரணம் என்னவென்றால், பெரியாருடைய நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற முடியவில்லையே என்று வருத்தப்பட்டவர் கலைஞர் அவர்கள். அகற்றி யவர் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பணி நியமன ஆணையைக் கொடுக்கும் நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் நண்பர் களோடு பிற்பகலில் பெரியார் திடலுக்கு வந்து என்னை சந்தித்தார்.

‘‘நாளைக்கே நான் 

செத்துப் போனாலும் பரவாயில்லை!’’

அந்தத் தருணத்தில், முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு,  அவரைப் பாராட்ட வார்த்தை களே இல்லை. பொலபொலவென்று கண்ணீர் வந்தது; ‘‘நாளைக்கே நான் செத்துப் போனாலும் பரவாயில்லை'' என்றேன்.

‘‘என்னங்க, இப்படி சொல்கிறீர்கள்?'' என்றார்.

பெரியாருடைய நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்கவேண்டும்; அதை எடுத்தவர் நீங்கள்; உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை'' என்றேன்.

நம்முடைய கொள்கைகள் 

வெற்றி பெறக்கூடிய கொள்கைகள்!

ஆகவே, நம்முடைய கொள்கைகள் வெற்றி பெறக் கூடிய கொள்கைகள்; இந்தக் கொள்கைகள் ஒருபோதும் தோற்காதவை!

இந்த ஆட்சியை மிரட்டலாம் என்று நினைக்காதீர்கள்; உள்துறை அமைச்சராக இருந்த மறைந்த சபாநாயகம் அவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினோம் இன்று.

அன்றைக்கு சபாநாயகம் அவர்கள்தான் சொன்னார், ‘‘பெரியாருக்கு அரசு மரியாதை கொடுத்தால், உங்கள் ஆட்சி போய்விடும்'' என்று.

கலைஞர் சொன்னார், ‘‘அப்படியா? அதனால் என் ஆட்சி போகும் என்றால், அதைவிட எனக்குப் பெருமை வேறு கிடையாது'' என்று.

வெறும் ஆட்சிக்காக அல்ல - காட்சிக்காக அல்ல - இனத்தின் மீட்சிக்காக...

எனவேதான், ஆட்சிகள் வரும், போகும்.  ஆனால், ‘திராவிட மாடல்' ஆட்சி - இது வெறும் ஆட்சிக்காக அல்ல - காட்சிக்காக அல்ல - இனத்தின் மீட்சிக்காக இருக்கக்கூடிய ஒரு கருவி.

ஆகவேதான், நாங்கள் யார் ஆட்சிக்கு வரவேண்டும்; யார் வரக்கூடாது என்று சொல்கிறோம் என்றால், எங் களுக்குப் பதவி துச்சமானது; அங்கே போகமாட்டோம்; நாங்கள் எப்பொழுதும் காவலர்களாக இருப்போம்.

90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில், முதலமைச்சரை வைத்துக்கொண்டு சொன்னதையே மீண்டும் இப்பொழுது உறுதிப்படுத்தி சொல்லுகிறேன்.

முதலமைச்சர் உள்ளே என்ட்ரி கேட்டில் போக வேண்டும்;  திருமாவளவன் அவர்களானாலும், கூட்டணித் தோழர்களானாலும் உள்ளே போவது என்ட்ரி கேட்டில். எங்கள் வேலை சென்ட்ரி டூயூட்டி.

சென்ட்ரி ஒருபோதும் என்ட்ரி கேட்டில் போகமாட்டார்

வெளியில் நிற்பதுதான் எங்கள் வேலை. சென்ட்ரி ஒருபோதும் என்ட்ரி கேட்டில் போகமாட்டார்; சென்ட்ரி எப்பொழுதும் சென்ட்ரியாகவே இருப்பார்.

அண்ணா அவர்கள், Sappers & Miners படை என்று உதாரணம் சொல்வார். பின்னால் படை போராட்டத்திற்கு வந்தால், முன்னால் சென்று ‘தூசிப்'படைகள் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்வார்கள்; உடைக்க வேண்டிய பாலத்தை உடைப்பார்கள்; கட்டவேண்டிய பாதையை சரியாகப் போடுவார்கள். படை முன்னேறி வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள்.

எனவேதான் இந்தப் படை என்பது இருக்கிறதே - அது உங்களைப் பாதுகாக்கும் படை - அரசியல் உங்கள் படை - அதைக் காப்பது எங்கள் வேலை.

Sappers & Miners  படையாக நாங்கள் இருப்போம். அதிலும் இப்பொழுது அதிகமாக இந்தப் படைக்கு வேலை இருக்கிறது. ஒவ்வொரு நாளும் வேலை வருகிறது; வேலை கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்; எனவே, அவர்களுக்கும் நன்றி!

என்னை உற்சாகப்படுத்தினீர்கள்; இன்னும் நீண்ட நாள் வாழவேண்டும், வாழவேண்டும் என்று சொன் னீர்கள் - அதற்கு என்ன செய்யவேண்டும்? எதிரிகளை நாம் சமாளிக்கவேண்டி இருக்கிறது; எதிரிகளுடைய ஆயுதங்கள் வெளியில் வர வர, நீண்ட நாள் வாழ வேண்டும் என்கிற இந்தக் காரணம் இருக்கும்.

நம்முடைய கொள்கை எதிரிகள் 

முடிவு செய்கிறார்கள்

கடைசியாக ஒன்றைச் சொல்லுகிறேன், மாவோ சொன்னதை இந்த நேரத்தில் நினைவூட்டவேண்டும் - ‘‘நாம் எந்த ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்பதை நாம் தீர்மானிப்பதில்லை; நம் எதிரிகள் தீர்மானிக் கிறார்கள்'' என்று அவர் அன்றைக்குச் சொன்னதை இன்றைக்குப் பலரும் சொல்வார்கள். நான் அதை மாற்றிச் சொல்லுகிறேன் - ‘‘நாம் எவ்வளவு காலம் இருக்கவேண்டும் என்பதை நாம் முடிவு செய்வதைவிட, நம்முடைய கொள்கை எதிரிகள்தான் முடிவு செய்கிறார்கள்.''

எனவே, வாழ்வோம்! வளர்வோம்!! வெற்றி பெறுவோம்!!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

No comments:

Post a Comment