‘90 இல் 80 அவர்தான் வீரமணி' சிறப்புக் கூட்டத்தில் - தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., எழுச்சியுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 2, 2023

‘90 இல் 80 அவர்தான் வீரமணி' சிறப்புக் கூட்டத்தில் - தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., எழுச்சியுரை

‘‘நீங்கள் பெரியாரையும், கலைஞரையும் வெல்லப் போகிறீர்கள்''  

அவர்கள் இருவருமே சரித்திரம் படைத்தவர்கள்; 94 ஆண்டுகள் வாழ்ந்தார் பெரியார்; 95 வயது வாழ்ந்தார் தலைவர் கலைஞர் - நீங்கள் நூறையும் கடந்து வாழ்வீர்கள்!  நீங்கள் வாழ்ந்தால், இந்த இயக்கம் வாழும்!

இந்த இயக்கம் வாழ்ந்தால், தமிழினம் வீறுகொண்டு எழும்! 

தமிழினம் வீறுகொண்டு எழுந்தால், பகைக் கூட்டம் பதுங்கி ஓடும்!  

சென்னை, ஜூலை 2 ‘‘நீங்கள் பெரியாரையும், கலை ஞரையும் வெல்லப் போகிறீர்கள்''  அவர்கள் இருவருமே சரித்திரம் படைத்தவர்கள். 94 ஆண்டுகள் வாழ்ந்தார் பெரியார்; 95 வயது வாழ்ந்தார் தலைவர் கலைஞர். நீங்கள் நூறையும் கடந்து வாழ்வீர்கள்! நாங்கள் அனைவரும் அப்பொழுதும் வந்து வாழ்த்துவோம்! நீங்கள் வாழ்ந்தால், இந்த இயக்கம் வாழும்! இந்த இயக்கம் வாழ்ந்தால், தமிழினம் வீறுகொண்டு எழும்! தமிழினம் வீறுகொண்டு எழுந்தால், பகைக் கூட்டம் பதுங்கி ஓடும்! என்றார் தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளரும் - மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா அவர்கள்.

 ‘‘90 இல் 80 அவர்தான் வீரமணி’’

கடந்த 27.6.2023 அன்று மாலை சென்னை தியாக ராயர் நகரில் உள்ள  சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில் ‘‘90 இல் 80 அவர்தான் வீரமணி'' என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் வாழ்த்துரை வழங்கி னார் தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளரும் - மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா  அவர்கள்.

அவரது வாழ்த்துரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

ஜூன் 25, 1975 ஆம் நாள் - அவசர நிலை பிரகடனம் பிரகடனப்படுத்தப்பட்ட நாள். ஆண்டுதோறும் அந்த நாளினை எண்ணிப் பார்த்து, அது பிரகடனப்படுத்தப்பட்ட நாள் - இன்றைக்குப் பிரகடனப்படுத்தாமலே அவசர நிலை நிலவுகிற ஒரு சூழலில் வாழுகிறோமே என்பதை நினைவுப்படுத்திக் கொண்டிருக்கின்ற ஓர் அரசியல் சூழல்.

அவர் அன்று மேடை ஏறி, 80 ஆண்டுகள் நிறை வுற்றதை இன்றைக்கு இந்த மேடை கொண்டாடிக் கொண்டிருக்கின்றது.

மூன்று நாள்களாகப் படித்துக் கொண்டிருந்தேன்...

அவரைப்பற்றி இங்கே நிறைய பேசினார்கள். நாங் களும் அவரைப் பற்றிப் படித்திருக்கின்றோம்; ஆனால், நம்பவே முடியவில்லை. அவரைப்பற்றி தெரியும்; ஆனால், எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும், இன்னும் புதிதாக ஏதாவது தெரிந்துகொள்ளவேண்டும் என்று முனைவோம் அல்லவா! அதனால், பெரியாரின் அடிச் சுவட்டில் அவர் எழுதியவை - இவரைப்பற்றி மற்றவர் கள் எழுதியதையெல்லாம் மூன்று நாள்களாகப் படித்துக் கொண்டிருந்தேன். நிறைய ஆச்சரியப்படக் கூடிய தகவல்கள் - 

10 வயதில் ஒரு சிறுவன் மேடை ஏறிப் பேசுகிறார். 

11 வயதில், திருமண விழாவிற்குச் சென்று வாழ்த்துரை ஆற்றுகிறார். 

12 வயதிலே பொதுக்கூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார்.

13 வயதில் ஒரு மாநாட்டில் கொடியேற்றி வைக்கிறார்!

27 வயதில், அதே கட்சிக்குப் பொதுச்செயலாளர் ஆகிறார்.

பெரியார் தன்னுடைய மிகப்பெரிய படைக்கலனாக வைத்திருந்த ‘விடுதலை' ஏட்டினுடைய ஆசிரியராக 29 வயதில் பொறுப்பேற்கிறார்.

45 வயதில் திராவிடர் கழகத்தின் தலைவராகிறார்.

ஓர் அரசியல் இயக்கத்திற்குத் தொடர்ந்து 50 ஆண்டுகாலம் தலைவராக இருந்து சரித்திர சாதனை செய்தது தலைவர் கலைஞர் மட்டும்தான்.

சமுதாய சீர்திருத்த இயக்கத்திற்கு 

45 ஆண்டுகாலம் தொடர்ந்து தலைவர்!

அதேபோல, ஒரு சமுதாய சீர்திருத்த இயக்கத்திற்கு 45 ஆண்டுகாலம் தொடர்ந்து தலைவராக இருந்த பெருமை ஆசிரியர் அய்யா அவர்களை மட்டும்தான் சாரும்.

எனக்கு ஓர் ஆச்சரியம் என்னவென்றால், அண்ணா சொன்னதைப்போல, ‘‘குண்டலம் அணிந்து, ருத்தி ராட்சமும் அணிந்திருந்தால், இந்தச் சிறுவனை ஞானசம் பந்தர் என்று கொண்டாடி இருப்பார்கள். இவர் ஞானப் பாலை அருந்தவில்லை, பெரியாரின் பகுத்தறிவுப்பாலை அருந்தியவர்'' என்று அண்ணா பேசினார்.

இவர் 10 வயதில் பேசினார் என்பது ஆச்சரியம் ஒரு பக்கம். 11 வயதில் திருமணத்தில் வாழ்த்துரை ஆற்றியிருக் கிறார்.

நான் மிசாவில் கைது செய்யப்பட்டு, 21 வயதில் சிறைச்சாலைக்குச் சென்று, 22 வயதில் வெளியே வந்தேன்.

வரதகோபாலகிருஷ்ணன்தான் முதன்முதலாக ஒரு திருமண நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கச் சொன்னார்.

நானா? இந்த வயதிலா? என்றேன்.

இதெல்லாம் இந்தக் கட்சியில் பழக்கம், வாருங்கள் என்று முதன்முதலாக 22 வயதில் எனக்கு அந்த வாய்ப்பு கொடுத்தபொழுது ஆச்சரியமாக இருந்தது.

பின்னர் தளபதியும், நாங்களும் சுற்றுப்பயணம் செய் கிற நாள்களில், அதுபோல, பல நிகழ்ச்சிகளில் பங்கேற் றோம்.

ஆனால், ஆசிரியர் அவர்கள் 11 வயதில் திருமணத் திற்குச் சென்று வாழ்த்துரை ஆற்றுகிறார்.

இவரை அங்கீகரித்த 

இந்த இயக்கம்தான் பெரிது!

12 ஆம் வயதில் பொதுக்கூட்டத்திற்குத் தலைமை. 13 ஆம் வயதில் மாநாட்டில் கொடியேற்றுகிறார் என்றால், இவருடைய திறமைகளைவிட, அந்த வயதில் இவரை அங்கீகரித்த இந்த இயக்கம்தான் பெரிது.

வேறு எங்காவது காட்டுங்களேன்; இதுபோன்று  திறமையுள்ள ஒரு சிறுவனை, எந்தக் கட்சியாவது இந்த அளவிற்கு உயர்த்தியிருக்குமா?

போய்ப் படி என்று சொல்லியிருப்பார்கள்; தட்டிக் கொடுத்து அனுப்பியிருப்பார்கள்; இந்த வேலை வேண்டாம் என்று சொல்லியிருப்பார்கள்.

ஆசிரியர் அவர்கள் கல்வியிலும் தளர்ச்சியுறவில்லை!

14 வயதிலே பெரியாரின் பக்கத்தில் உட்கார்ந்திருக் கிறார் என்பதைப் பார்க்கின்றபொழுது மிகவும் ஆச் சரியம். நான் படிக்கின்றபொழுது அதைத்தான் எண்ணி னேன். பின்னர் எல்லோரும் இங்கே சொன்னபொழுது, அது உண்மைதான் என்று உறுதிப்படுத்திக் கொண்டேன். அது பொய்யாக இருக்க முடியாது என்பது வேறு; ஆனால், ஆச்சரியம். அந்த வயதிலே கல்வியிலும் அவர் தளர்ச்சியுறவில்லை என்பதுதான் மிகவும் முக்கியம்.

சில பேர் பொதுவாழ்க்கையில் ஈடுபாடு என்று வந்துவிட்டால், அத்தோடு கல்வியினுடைய ஈடுபாடு முடிந்துபோய்விடும். தலைவர் கலைஞர் அவர்கள், பள்ளி இறுதியாண்டுவரைதான் படித்தவர். அவருடைய தீவிரத்தன்மை, அரசியலிலும், திரைப்படத்திலும் கொண்டுவந்து அவரை முன்னிறுத்தியது.

தொடர்ந்து படிக்க முடியாது என்ற அவருடைய எண்ணத்தை, அண்ணன் மறைந்த திருவாரூர் தென்னன் அவர்களின்மூலமாக அவர் எப்படி சாமர்த்தியமாக, அவருடைய பெற்றோரிடம் கொண்டு போய்ச் சேர்த்தார் என்பதைப்பற்றியெல்லாம் அவர் சிறைச்சாலையில் இருக்கும்பொழுது கதை கதையாகச் சொல்வார்.

மேற்கொண்டு படிக்க விருப்பம் இல்லை என்றுகூட அல்ல - செய்யவேண்டிய பணிகள் அதிகம் என்று தலைவர் கலைஞர் அவர்கள் அன்றைக்குப் பாதை மாறினார். முழுமையான அரசியலுக்கு வந்து சேர்ந்தார்.

எல்லாவற்றிற்கும் ஆதாரமும் அவர்தான்; எல்லாவற்றிற்கும் விளக்கமும் அவர்தான்!

ஆனால், இவர் எம்.ஏ., படிக்கிறார்; அதற்குப் பிறகு சட்டம் படிக்கிறார். இன்னமும்கூட ஒரு பொது நிகழ்ச்சிக்கோ, முக்கியமான நிகழ்ச்சிக்கோ வந்தால் - ஆளுநர் போன்றவர்கள் அதிகத்தனமாக எதையாவது செய்தால், அவர்கள் செய்வது தவறு என்று சொல்வதற்கு, இவ்வளவு நூல்களை எடுத்து வந்து ஆதாரத்துடன் சொற்பொழிவு ஆற்றக்கூடியவர் ஆசிரியர். எல்லாவற் றிற்கும் ஆதாரமும் அவர்தான்; எல்லாவற்றிற்கும் விளக்கமும் அவர்தான்.

‘விடுதலை'யில் ஆசிரியராக அவர் பொறுப்பேற் கின்றபொழுது, ‘அய்யா' அவர்கள் கொடுத்த அறிக்கை ‘‘வரவேற்கிறேன்'' என்று.

தந்தை பெரியாரின் அறிக்கை

‘‘வரவேற்கிறேன்!''

29 வயதிலே அவர் பொறுப்பேற்கின்றபொழுது ‘‘வரவேற்கிறேன்'' என்று ‘அய்யா' அவர்கள் ஓர் அறிக்கை தருகிறார்.

எனக்கு அதேபோன்று நினைவு வந்தது 1956 இல், திருச்சி மாநில மாநாட்டிற்கு, அன்றைக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் நாவலர் நெடுஞ்செழியனை, ‘‘தம்பி வா! தலைமையேற்க வா! உன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறோம் வா!'' என்று அழைத்த அறிஞர் அண்ணாவின் கடிதம்தான்.

தன்னைவிட இளையவர்களை, ஒரு பெரிய பொறுப் பில் அமர்த்தி, அதை ஏற்று நடத்துகிற அழகைப் பார்க் கிறேன்; உன்னை வரவேற்கிறேன் என்கிற அந்தப் பாங்கு பெரியாருக்கு இருந்ததைப்போல, அண்ணா விற்கும் இருந்தது, கலைஞருக்கும் இருந்தது, உங் களுக்கும் இருக்கிறது.

உங்களோடு பயணம் செய்கின்ற வாய்ப்பும், பெரு மையும் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அவையெல் லாம் சாதாரணமானவையல்ல.

‘‘எங்கள் பயணம், என்றும் தொடரும்!’’ என்று எழுதினீர்கள்!

அன்னை மணியம்மையார் மறைந்து, அவருக்குப் பின், திராவிடர் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற பொழுது, அவர் எழுதிய தலையங்கம், விடுத்த அறிக்கையின் தலைப்பு - ‘‘எங்கள் பயணம், என்றும் தொடரும்!'' என்பதுதான்.

அவசர நிலைக் காலகட்டத்தில் கலைஞர் அவர்கள் எழுதிய கடிதம் இன்னமும் நன்றாக நினைவில் இருக் கிறது - ‘‘வீரர்கள் தொடரட்டும்; கோழைகள் விலகட்டும்!'' என்பதுதான் அது.

‘‘வீரர்கள் தொடரட்டும்; 

கோழைகள் விலகட்டும்!’’ 

எல்லோரும் ஓடிக்கொண்டிருந்த நேரத்தில், தனித்து விடப்பட்ட நேரத்தில், கண்ணுக்குத் தெரியாமல் படை வீரர்கள் ஆங்காங்கே இருந்த நேரத்தில்தான் கலைஞர் எழுதினார், ‘‘வீரர்கள் தொடரட்டும்; கோழைகள் விலகட்டும்!’’ - வீரன் ஒருமுறைதான் சாகிறான்; கோழை வாழ்வதே இல்லை என்ற வார்த்தைகளுக்கேற்ப. வீரமிக்கத் தலைவர்களாக நீங்கள் எல்லாம் இருந்தீர்கள்; இருக்கிறீர்கள். அதனால்தான் நாங்கள் எல்லாம் இன்னும் வீரத்தோடு இருக்கிறோம்.

நேருக்குநேர் கொஞ்சம் கூட சிந்தாமல், சிதறாமல், உணர்ச்சிவசப்படாமல்...

முச்சந்தியிலே ஆளில்லாத இடத்திலே பேசுவ தில்லை. நம்முடைய கொள்கைக்கு முற்றிலும் மாறு பாடான, முரட்டுவாதம் செய்கிற ‘துக்ளக்' ஆசிரியர் ‘சோ' வினுடைய அலுவலகத்தில் போய் உட்கார்ந்து, அவரு டன் நேருக்குநேர் கொஞ்சம் கூட சிந்தாமல், சிதறாமல், உணர்ச்சிவசப்படாமல் ஒரு நீண்ட நெடிய பேட்டியளித்து விட்டு வந்த பெருமையும் உங்களுக்கு உண்டு.

அதையெல்லாம் பார்த்து இன்றைய இளைஞர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.

அதுகுறித்து ‘சோ' அவர்களே பாராட்டுகிறார். ‘‘நான் ரொம்பவும் அவரை சீண்டுகிற மாதிரியெல்லாம் கேள்வி கேட்டேன். என்னுடைய கருத்துகளையெல்லாம் வேகமாக எடுத்து வைத்தேன். ஆனால், எந்த இடத்திலும் அவர் பதற்றப்படவில்லை; உணர்ச்சிவசப்படவில்லை. தன் கருத்தை வலியுறுத்துவதிலேயே கவனமாக நின்றார். அதற்குக் காரணம், கொள்கையிலே தெளிவு'' என்று பாராட்டினார்.

தந்தை பெரியார் சொல்கிறார்!

பெரியார்தான் சொல்வார், ‘‘இரகசிய வேலை என்பது நம்முடைய முயற்சிக்குத் துணை நிற்காது. ஊறுதான் விளைவிக்கும்.

பலாத்கார முயற்சி என்பது நமக்குத் தோல்வியைத் தான் தரும். தீவிரப் பிரச்சாரத்தின்மூலம்தான் வெற்றி யடைய முடியும்'' என்று சொன்ன பெரியாரின் வழி, உங்கள் வழி!

நாம் நிறைய பேரை பலி கொடுத்திருக்கின்றோம்; யாரையும் பழிவாங்கியதும் இல்லை; பலி வாங்கியதும் இல்லை.

நம்மைப் பொறுத்தவரையில் தியாகச் சீலர்கள் நம்மோடு இருந்திருக்கிறார்கள். பலரை தத்தம் செய்து இந்த இயக்கத்தை வளர்த்திருக்கின்றோம். இங்கே அருள்மொழி சொன்னதைப்போல, எதெல்லாம் அசிங்க மானது என்றார்களோ, அதெல்லாம் மேலே விழுந் திருக்கிறது.

எத்தனைக் குப்பை மேடுகளை, சாக்கடைகளைத் தேடி அலைந்திருப்பான் தெரியுமா?

பெரியார் கூட்டத்திற்குச் செல்கிறபொழுது, வழியெல் லாம் செருப்புத் தோரணங்கள். தோழர்கள் அதற்காகக் கோபப்பட்டபொழுது, பெரியார் சொன்னாராம், ‘‘உன்னை விட அவன்தான் என்மீது அன்பு கொண்ட வன்'' என்று.

‘‘என்ன அய்யா, இப்படி சொல்கிறீர்களே?'' என்று கேட்டார்களாம்.

‘‘நீ தருகிற கைத்தறி ஆடை எட்டணா; நீ வாங்கி வருகிற மாலை நாலணா - அந்தப் பழைய பிய்ந்து போன செருப்புகளுக்காக எத்தனைக் குப்பை மேடு களை, சாக்கடைகளைத் தேடி அலைந்திருப்பான் தெரியுமா? அதையெல்லாம் சேர்த்துக் கொண்டு வந்து தோரணமாகக் கட்டி வைத்திருக்கிறான் என்றால், அதை நீங்கள் எல்லாம் செய்யமாட்டீர்கள்'' என்று சொன்னாராம்.

அதையேதான் நீங்களும் சந்தித்திருக்கிறீர்கள்.

நாங்கள் பக்குவப்பட்டதற்குக் 

காரணம் நீங்கள்!

1982, மம்சாபுரம் அருகே உங்கள்மீது கொலை வெறித் தாக்குதல் நடந்தபொழுது, நான் இளைஞரணியில், அதே பகுதியில் சுற்றுப்பயணத்தில் இருந்தேன். அந்த நேரத்தில் எங்களோடு இருந்த சில தோழர்கள் உணர்ச்சிவசப்பட்டார்கள். எதிர்வினை ஆற்றவேண்டும் என்று சொன்னார்கள்.

அப்பொழுது நான் அவர்களுக்கு சொன்னது, நம் தலைவர்கள் காட்டிய பாதை இதுவல்ல. அவர்களை நம்முடைய கொள்கையின் தீவிரப் பயணத்தால், பிரச் சாரத்தால்தான் வெற்றி கொள்ள முடியும் என்று சொன்ன தற்கு, அந்தப் பக்குவத்தைத் தந்தவர் நீங்கள்தான்.

தளபதியும், நானும் முதன்முதலாக இளைஞரணியின் சார்பில் சுற்றுப்பயணம் செய்தபொழுது, நாங்கள் கொண்டு போய் விற்ற நூலின் பெயர், ‘‘தொடங்கினோம், தொடர்வோம்!'' என்பதுதான்.

அப்பொழுது நாங்கள் சென்று கண்டுபிடித்து பின்னர் நியமித்த மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவர்தான் எதிரே இருக்கும் உமாபதி. பொய்யாமொழி போன்ற வர்களையும் அப்பொழுதுதான் கண்டுபிடித்தோம்.

நல்ல நூல்களைக் கொண்டுபோய் இளைஞர்களிடம் சேருங்கள்!

அப்பொழுதுதான் நீங்கள் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தது ‘‘நல்ல நூல்களைக் கொண்டுபோய் இளை ஞர்களிடம் சேருங்கள்; அதுபற்றி பேசுங்கள். மாலை, மரியாதை இவையெல்லாம் இரண்டாம்பட்சம்'' என்று சொல்லிக் கொடுத்தீர்கள் - அதன்படியே நாங்களும் தொடங்கினோம்.

நீங்களும் வன்முறைத் தாக்குதலை சந்தித்திருக் கிறீர்கள்; அவமானத்தைத் தாங்கியிருக்கிறீர்கள். உங்கள்மீது சுமத்தப்பட்ட பழிகள் கொஞ்சநஞ்சமல்ல. இன்றும் தொடருகிறது.

ஆனால், எனக்கு உங்களுடைய நடை ரொம்பப் பிடிக்கும். நடிகர் திலகம் சிவாஜியைச் சொல்வார்கள், அதுபோன்று ஒரு நடை.

‘‘அப்பா, இவரைப் போன்று நீங்கள் இருக்கவேண்டும்'' என்பாள் என் மகள்!

ஒவ்வொருவருக்கும் ஒரு நடை உண்டு. வீரபாண்டி ஆறுமுகம் ஒரு மாதிரி நடப்பார்; அண்ணன் முரசொலி மாறன் ஒரு மாதிரி நடப்பார். கலைஞருடைய நடை மெதுவாக இருக்கும்; ஆனால், பார்த்தால், ரசிக்கிற மாதிரி இருக்கும்.

உங்கள் நடை, நடக்கிறீர்களா? ஓடுகிறீர்களா? என்று தெரியாது.

என் மகள் தொலைக்காட்சியைப் பார்க்கின்றபொழு தெல்லாம், ‘‘அப்பா, இவரைப் போன்று நீங்கள் இருக்கவேண்டும்'' என்பார்.

‘‘எப்படிம்மா, கருப்புச் சட்டை போட்டுக்கொண்டா?''

‘‘இல்லை. அவருடைய சுறுசுறுப்பை பாருங்கள்'' என்பார்.

பெருங்கவிக்கோவிற்கு 89 வயது என்றார், கொஞ்சம் தளர்ந்திருக்கின்றார்.

ஆனால், உங்களுக்கு 90 வயது என்று நாங்கள் சொல் வதால் தெரிகிறது; ஆனால், சொல்லித்தான் தீரவேண்டும்.

90 வயதிலும் நீங்கள் இன்னமும் அதே சுறுசுறுப்போடு இருக்கிறீர்கள். கலைஞர் அவர்கள் காலையில் பத்திரி கைகளைப் பார்ப்பார்; முதலமைச்சர் பணியை செய்வார்; கட்சிப் பணிகளைப் பார்ப்பார்; இலக்கியப் பணிகளைப் பார்ப்பார்; திரைத் துறை பணிகளை பார்ப்பார். எல்லா பணிகளையும் செய்வார்; அதேபோன்றவர்தான் நீங்களும்.

அண்ணாவின் ‘‘அந்த வசந்தம்!''

அண்ணா முதலமைச்சரானதற்குப் பின்னால், பெரியாருடைய பிறந்த நாள் மலருக்கு, ‘விடுதலை' ஆசிரியரான நம்முடைய ஆசிரியர், அண்ணாவுடைய பல வேலைகளுக்கிடையில், கட்டுரையை தந்தாக வேண்டும் என்று நீங்கள் விரட்டியபொழுது, அண்ணா சொன்னார், ‘‘நீ தான் பார்த்துக் கொண்டிருக்கிறாயே, ஆட்சிப் பணி புதிதாக வந்தது - அதிக சுமையாக இருக்கிறது. கட்சிப் பணி தவிர்க்க முடியாத ஒன்று. இதற்கிடையில், என் உடல்நிலை வேறு -  ஆனாலும், கட்டுரை தருகிறேன்'' என்று சொல்லி, பார்க்கின்ற இடத்திலெல்லாம் இவர்தான் தெரிகிறார்.

பிறகு, அண்ணா அவர்கள் ஒரு நிகழ்ச்சிக்குச் செல்லுகிறபொழுது, கொஞ்சநேரம் இருங்கள் என்று சொல்லிவிட்டு, பயணியர் விடுதிக்குச் செல்லாமல், ஆதித்தனாருடைய இல்லத்திற்கு மதுரைக்குச் சென்று, வேகமாக கைப்பட எழுதி அவரிடம் கொடுத்த கட்டுரையின் பெயர் ‘‘அந்த வசந்தம்!''

அதில் அண்ணா சொல்கிறார், ‘‘நான் முதலமைச்சராக இருக்கின்ற இந்தக் காலம் அல்ல; பெரியாரோடு கடின மான நாள்களை நான் கழித்ததுதான் என் வாழ்க்கையில் வசந்தம்'' என்கிறார்.

அந்தத் தலைவரிடம் கற்றுக்கொண்டதுதான், அண்ணாவிடம், கலைஞரிடம், உங்களிடம் இருக்கின்ற உழைப்பு.

எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஆச்சரியப்படுவது, எங்களிடம் இல்லாதது - இப்பொழுது வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று முயற்சி எடுத்துக்கொள்வது எதுவென்றால், ஆவணப்படுத்துவது. எந்த நாளில், என்ன நடந்தது என்பதை நினைவில் வைத்திருக்கின்ற இந்தத் திறமையை நான் கலைஞரிடம் பார்த்திருக்கிறேன்; அடுத்து உங்களிடம்தான் பார்க்கிறேன்.

உங்களை வரலாற்றில் 

நிரந்தரமாக வைக்கப் போகின்றது!

1943 ஆம் ஆண்டு எப்பொழுது கூட்டம் நடந்தது என்று தொடங்கி, எந்த நாளில்? எந்த ஊரில்? எந்தக் கூட்டம்? எந்தக் கழகம்? எந்த மாநாடு? என்பதை அப்படியே நினைவில் வைத்திருக்கின்ற அந்த மிகப் பெரிய திறமைதான் உங்களை வரலாற்றில் நிரந்தரமாக வைக்கப் போகின்றது.

இது மிகமிக முக்கியம். அதுதான் வருங்காலத் தலைமுறைக்கு மிகப்பெரிய வழிகாட்டுதலாக இருக்கும்; மிகப்பெரிய ஊக்கச் சக்தியாக இருக்கும்.

பதவிகளைக் கடந்து இயக்கத்தில் இருப்பதுதான் எங்களுக்கெல்லாம் பெருமிதம் - கம்பீரம்!

ஏதோ அரசியல் கட்சியில் இருக்கிறோம், ஏதோ ஒரு பதவி அதனால் அடையாளம் என்பதல்ல - இந்தப் பதவியையெல்லாம் கடந்து இந்த இயக்கத்தில் இருப்பது தான் எங்களுக்கெல்லாம் பெருமிதம், கம்பீரம் என்று நாங்கள் நடக்கின்றோம்.

இவையெல்லாம் நீங்கள் ஊட்டிய உணர்வு; நீங்கள் பேசிய பேச்சு; நீங்கள் எழுதுகிற எழுத்துகள். இன்னமும் ஏதாவது பகை என்று வந்தால், உங்களுடைய வேகமான அறிக்கைகள்மூலம்  சாட்டையடிகளாக ஒவ்வொரு வார்த்தைகளாக வந்து விழுகிறது அல்லவா! அது எங்களுக்கு உணர்ச்சி!

நாங்கள் துணிவைப் பெற்றிருப்பது உங்களால்தான்!

நீங்கள் இங்கிருந்து இயக்குகிறீர்கள்; நானும், திரு மாவும் எதிரிகளின் தலைமையிடமாக அங்கேயே சென்று, இரண்டு பேரும் மிகப்பெரியவர்கள் என்று சொல்கிறார்களே, அவர்களின் நேருக்கு நேர் நின்று பேசுகின்ற அந்தத் துணிவை நாங்கள் பெற்றிருப்பது உங்களால்தான்.

கலைஞரிடம் பெற்றோம்; உங்களிடம் பெற்றோம்; இன்றைக்குத் தளபதியால் நாங்கள் ஊக்கப்படுத்தப் படுகிறோம்.

ஆக, இந்த இயக்கத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரும் ஒரு  படை வீரன். நாங்கள் தொண்டர்கள் அல்ல. தலைவன் - தொண்டன் என்பதை மாற்றி, அவர்களை அண்ணன் - தம்பி என்று மாற்றிய இயக்கத்தில் இருப்பவர்கள் நாங்கள்.

ஒன்றுமட்டும் சொல்கிறேன், பொதுப் பெயரை, தனி மனிதனுக்கு உள்ள பெயராக மாற்றிய சரித்திரம் இந்தத் திராவிட இயக்கத்திற்கு மட்டும்தான் உண்டு.

இந்த இனத்தின் தந்தை என்றால், 

தந்தை பெரியார் ஒருவர் மட்டும்தான்!

பிள்ளை பெற்ற எல்லோருக்கும் பெயர் தந்தை. ஆனால், இந்த இனத்தின் தந்தை என்றால், தந்தை பெரியார் ஒருவர் மட்டும்தான்.

உடன்பிறந்த தம்பி இருக்கின்ற யாரும், அண்ணன் என்று அழைக்கப்படுவார்கள்; அது கோடிக்கணக்கில் இருக்கும். ஆனால், அண்ணா என்றால், அரசியலில் அண்ணா ஒருவர்தான்.

நாடகக் கலைஞர், நாட்டியக் கலைஞர், பல்வேறு கலைஞர்கள் இருப்பார்கள்; அரசியலில் கலைஞர் என்றால், என்றைக்கும் ஒரே ஒருவர்தான்.

கல்லூரியில் பணியாற்றுகின்ற எல்லோரும் பேராசிரி யர்தான்; ஆனால், பேராசிரியர் என்றால், நம்முடைய பேராசிரியர் அய்யா க.அன்பழகன் அவர்கள்தான்.

அதுபோன்று, பள்ளியில் பணியாற்றுபவர்கள் ஆசிரியர்களாக இருக்கலாம்; ஆனால், எங்களுக்கு ஆசிரியர் நீங்கள்தான்.

இது ஒரு பொதுச் சொல். தனி மனிதனுக்கு உரிய அடையாளமாக. 

அன்பில் என்பது ஒரு கிராமம்; ஆனால், அமெரிக் காவில் அன்பில் என்றால், அது அன்பில் தர்மலிங்கம்.

மன்னை என்பது ஓர் ஊர். ஆனால், மன்னை என்று சொன்னால், பெரியாரின் பெருந்தொண்டராக இருந்த அண்ணன் மன்னை நாராயணசாமி அவர்கள்தான்.

சரித்திரம் படைத்த தலைவர்களின் 

வரிசையில் நீங்கள்!

இப்படியாக, ஊர்ப் பெயரை தனதாக்கி, பொதுப் பெயரை தனதாக்கி சரித்திரம் படைத்த தலைவர்களின் வரிசையில் இன்றைக்கு இவர்களுடைய வடிவத்திலே, தேர்தல் எனக்குத் தேவையில்லை; ஆனால், உங் களுக்குத் தேவை என்று சொல்லி, இதில் யார் வெற்றி பெறவேண்டும் என்று சொல்வது மட்டுமல்ல; இவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று எங்களைக் கொண்டு போய் நிறுத்தி, அதன்மூலமாக உங்கள் எண்ணங்களை யெல்லாம் நீங்கள் சாதிக்கின்ற வல்லமையைப் பெற்றிருக்கிறீர்கள்.

சுயமரியாதைத் திருமணத்தை 

சட்ட ரீதியாக நடத்திக் காட்டுவேன்!

அய்யா பெரியார் அவர்கள், ஜீவா அவர்களுடைய பிள்ளையின் திருமணத்தை நடத்திய அந்த விழாவில்தான், திருச்சியில் அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள், ‘‘நான் பெரியாருக்கு நிறைய நன்றி செலுத்தவேண்டும்; நிறைய காணிக்கையெல்லாம் தரவேண்டும்; அதெல்லாம் நான் தர விரும்பவில்லை; நான் அவருக்குத் தரக்கூடிய மிகப்பெரிய மகிழ்ச்சி - என் ஆட்சிக் காலத்தில் சுயமரியாதைத் திருமணத்தை சட்ட ரீதியாக நடத்திக் காட்டுவேன்'' என்றார்.

சிதம்பரம் - ரங்கம்மாள் வழக்கு!

1934 இல் கணவனை இழந்த ஒரு பெண்ணுக்கும், மனைவியை இழந்த ஓர் ஆணுக்கும் - சிதம்பரம் - ரங்கம்மாள் என்கிற இணையருக்குப் பெரியார் புரட்சிகர திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

அந்த இணையர்களது திருமண வழக்கு 1953 ஆம் ஆண்டு நீதிமன்றத்திற்கு வருகிறபொழுது, நீதிமன்றம் அளித்த தீர்ப்பு - சுயமரியாதைத் திருமணம் செல்லு படியாகாது என்று.

இதில் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி - அந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் திருமணத்திற்கும், ஒரு பெரிய தீர்ப்புக்கும் காரணமாக இன்றைக்கும் சட்டப் பாடத்தில் இருக்கின்ற அந்த சிதம்பரம் - ரங்கம்மாள் ஆகியோருடைய அன்பு மகள்தான் நம் ஆசிரியருடைய இணையர்.

மோகனா அம்மையாருக்கு 

அனைவரும் நன்றி சொல்லவேண்டும்!

அன்னையார் மோகனா அவர்கள். அவர் இது போன்ற இடத்திற்கெல்லாம் வருவதில்லை. தன்னை காட்சிப்படுத்திக் கொள்வதில்லை. ஆனால், நம்முடைய ஆசிரியருடைய 90 வயது இளமை,  வேகம் என்றெல்லாம் சொல்லுகிறோமே, அதற்கு முழுமுதற் காரணம் அம்மையார்தான்.

நம்முடைய ஆசிரியர் சொன்னார், ‘‘மோகனா அம்மையாருக்கு நான் ஒரு புடவைகூட வாங்கிக் கொடுத்தில்லை'' என்று சொன்னார். 

ஆசிரியர் அவர்களுக்கு வேண்டியதைக்கூட இவர் வாங்கிக் கொள்வதில்லை. அம்மையார்தான், இவருக்குத் தேவையான ஆடைகளை வாங்கி வைப்பது; உணவு கொடுத்துப் பராமரிப்பது என்றால், இங்கே இருக்கின்ற அத்துணை பேரும் ஆசிரியரைப் பாராட்டுகின்ற அதேநேரத்தில், அந்த அம்மையாருக்கு நன்றி சொல்லவேண்டும்.

தமிழினத்தினுடைய 

மிகப்பெரிய கருவூலம்!

எங்கள் பொக்கிஷத்தின் பாதுகாவலர் அம்மா நீங்கள்!

ஆசிரியர் அய்யா எங்களுடைய பொக்கிஷம்!

தமிழினத்தினுடைய மிகப்பெரிய கருவூலம்!

இவரைக் கொண்டுதான் நாங்கள் தெம்போடு, வேகமாக நடக்கின்றோம். அவரை நீங்கள் பார்த்துக் கொள்கிறீர்களே, இதற்கு நாங்கள் எப்படி நன்றி செலுத்தப் போகிறோம்.

இங்கே இல்லை என்றாலும், அந்த அம்மையாருக்கு, இல்லத்தில் இருக்கின்ற அவர்களுக்கு நம்முடைய நன்றியைக் கொண்டு சேர்ப்போம்.

‘‘நீங்கள் பெரியாரையும், கலைஞரையும் 

வெல்லப் போகிறீர்கள்!’’

நான் இன்று சொல்லுகிறேன், ‘‘நீங்கள் பெரியாரையும், கலைஞரையும் வெல்லப் போகிறீர்கள்.''  அவர்கள் இருவருமே சரித்திரம் படைத்தவர்கள். 94 ஆண்டுகள் வாழ்ந்தார் பெரியார்; 95 வயது வாழ்ந்தார் தலைவர் கலைஞர். நீங்கள் நூறையும் கடந்து வாழ்வீர்கள்!

தம்பி திருமா சொன்னார்; நானும் சொல்கிறேன் - நீங்களும் சேர்ந்து சொல்லுங்கள்!

நாங்கள் அனைவரும் அப்பொழுதும் வந்து வாழ்த்துவோம்!

நீங்கள் வாழ்ந்தால், இந்த இயக்கம் வாழும்!

இந்த இயக்கம் வாழ்ந்தால், தமிழினம் வீறுகொண்டு எழும்!

தமிழினம் வீறுகொண்டு எழுந்தால், பகைக் கூட்டம் பதுங்கி ஓடும்!

உங்கள் லட்சியங்களை 

வென்றெடுத்துத் தருவதற்கு....

நாங்கள் இருக்கிறோம், உங்கள் படை வீரர்கள் - உங்கள் லட்சியங்களை வென்றெடுத்துத் தருவதற்கு முதலமைச்சர் தளபதி அண்ணன் ஸ்டாலின் இருக்கிறார்!

மகிழ்ச்சியுடன் இந்த நாளில், இந்தப் பரிசினைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கேட்டு, விடை பெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment