‘90 இல் 80 அவர்தான் வீரமணி' சிறப்புக் கூட்டத்தில் - தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., நெகிழ்ச்சியுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 1, 2023

‘90 இல் 80 அவர்தான் வீரமணி' சிறப்புக் கூட்டத்தில் - தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., நெகிழ்ச்சியுரை

 உங்களைப் பார்த்து நாங்கள்  வளர்ந்தோம்; உங்கள் அடியொற்றி நடக்கிறோம்

நீங்கள் என்றென்றைக்கும் எங்களுக்குத் தோள் கொடுப்பவராக  மட்டுமல்ல; எங்களைப் பாதுகாக்கிற மிகப்பெரிய காவல் அரணாக நின்று கொண்டிருக்கிறீர்கள்!

சென்னை, ஜூலை 1 உங்களைப் பார்த்து நாங்கள்  வளர்ந்தோம்; உங்கள் அடியொற்றி நடக்கிறோம். முதல மைச்சர், அவருடைய வாழ்த்து அறிக்கையில் சொல்லியிருப்பதைப்போல, ‘‘நீங்கள் என்றென்றைக்கும் எங் களுக்குத் தோள் கொடுப்பவராக  மட்டுமல்ல; எங்களைப் பாதுகாக்கிற மிகப்பெரிய காவல் அரணாக நின்று கொண்டிருக்கிறீர்கள்.''  என்றார் தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளரும் - மாநிலங்களவை உறுப்பினரு மான திருச்சி சிவா அவர்கள்.

 ‘‘90 இல் 80 அவர்தான் வீரமணி’’

கடந்த 27.6.2023 அன்று மாலை சென்னை தியாக ராயர் நகரில் உள்ள  சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில் ‘‘90 இல் 80 அவர்தான் வீரமணி'' என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் வாழ்த்துரை வழங்கி னார் தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளரும் - மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா  அவர்கள்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

தனித்ததோர் முத்திரையைப் பதித்திருக்கின்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்!

90 ஆண்டுகளில் 80 ஆண்டுகள் பொதுவாழ்க்கைப் பயணத்தில் தனித்ததோர் முத்திரையைப் பதித்திருக் கின்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் - தமிழ் இனப் பகைவர்களின் கூற்றுவனாக விளங்கிக் கொண்டிருக்கின்ற தந்தை பெரியார் அவர்களுடைய வடிவத்தில் நான் காணுகின்ற அய்யா ஆசிரியர் அவர்களுடைய இந்த சீரிய விழாவிற்குத் தலைமைப் பொறுப்பேற்று இருக்கின்ற திராவிடர் கழகத் துணைத் தலைவர் மரியாதைக்குரிய கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

வரவேற்புரையாற்றி இருக்கின்ற திராவிடர் கழகப் பொருளாளர் அன்பிற்கினிய குமரேசன் அவர்களே,

எழுச்சியோடும், உணர்ச்சியோடும் எப்பொழுதும் இளைஞர்களின் முன்னால் உரையாற்றி, அவர்களை ஈர்த்துத் தன்னகத்தே வைத்திருக்கின்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான என்னுடைய ஆருயிர் இளவல் தொல்.திருமா அவர்களே,

உரையாற்றி விடைபெற்றுச் சென்றிருக்கின்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்களே,

அயல்நாட்டு மண்ணில் திராவிட இயக்க உணர்வுகளை அயராது எடுத்துப் பரப்புகிறார்!

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செய லாளர் வலைதளங்களில், பொதுத் தளங்களில், தொலைக் காட்சிகளில், அயல்நாட்டு மண்ணில் திராவிட இயக்க உணர்வுகளை அயராது எடுத்துப் பரப்பி வருகின்ற மரியாதைக்குரிய பேராசிரியர் சுப.வீ. அவர்களே,

அன்னை மணியம்மையார் அவர்கள் உரையாற்று வதைப்போல மேடையில் அடக்கமாக, ஆனால், அழுத்தமாக எதிரிகளை லாவகமாகக் கையாளுகின்ற பேச்சாற்றல் பொருந்திய என் ஆருயிர் தங்கை வழக் குரைஞர் அருள்மொழி அவர்களே, நன்றியுரையாற்ற விருக்கின்ற தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்  தலைவர் இரா.வில்வநாதன் அவர்களே,

மரியாதைக்குரிய அய்யா பெருங்கவிக்கோ அவர் களே, அண்ணன் பலராமன் அவர்களே, அண்ணன் புலவர் பா.வீரமணி அவர்களே,

திரளாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, தமிழர் தலை வருக்குத் தாங்கள் காட்டவேண்டிய நன்றி உணர்வைக் காட்டிக் கொண்டிருக்கின்ற நன்றி உணர்வுமிக்க தமிழர்களே - உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.

முதலமைச்சரின் வாழ்த்துச் செய்தி!

என் உரையினை நான் தொடங்குவதற்கு முன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட் டின் முதலமைச்சர் மாண்புமிகு அண்ணன் மு.க.ஸ்டா லின் அவர்கள் ஆசிரியர் அய்யா அவர்களுக்குக் கொடுத்தனுப்பி இருக்கின்ற வாழ்த்துச் செய்தியை உங்கள் முன்னால் நான் படிப்பதற்குக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

(முதலமைச்சர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை முழுவதுமாகப் படித்துக் காட்டினார்).

வாழ்வில் மறக்க முடியாது; நினைத்துப் பார்க்கின்ற பொழுது பெருமை கொள்கின்றேன். உள்ளத்திற்கு உவகை தருகின்ற ஓர் இனிய நாள் இந்நாள்!

இதைவிட பெருமைதரக்கூடிய நிகழ்வு 

வேறு இருக்க முடியாது எனக்கு!

திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தம்பி பிரின்சு அவர்களும், தம்பி அரங்க.இராமச் சந்திரனும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவேண்டும் என்று என்னை அழைத்தபொழுது, எனக்கு இதைவிட பெருமைதரக்கூடிய நிகழ்வு வேறு இருக்க முடியாது என்று சொல்லி, நான் இசைவு தெரிவித்தேன்.

தம்பி திருமா உரையாற்றுகின்றபொழுது, கல்லூரியில் படிக்கின்ற நாள்களில் அவரைப் பார்த்ததை, அவருடன் போராட்டங்களில் பங்கேற்றதையெல்லாம் இங்கே உள்ளம் நெகிழ எடுத்துச் சொன்னார்.

அய்யா பெரியார் அவர்களுடைய பணத்தினால், நிலத்தினால்...

நான் திருச்சி பெரியார் கல்லூரியில் படித்தபொழுது, அது ஒரு பொற்காலம். அந்தக் கல்லூரி, அய்யா பெரியார் அவர்களுடைய பணத்தினால், நிலத்தினால் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய பிள்ளைகளுக்காக உருவாக்கப்பட்ட அரசு கல்லூரி.

நான் படித்த அந்த நாள்களில், தந்தை பெரியார் அவர்கள் இருமுறை வந்து அங்கு பேசியிருக்கிறார். ஆசிரியர் அய்யா, இரண்டு முறை வந்து பேசியிருக் கின்றார். தலைவர் கலைஞர் வந்து உரையாற்றியிருக் கின்றார். இலக்கியவாதிகள் என்ற அடிப்படையில், கவிஞர் கண்ணதாசன், எழுத்தாளர் ஜெயகாந்தன் போன்றோர் எல்லாம் வந்து உரையாற்றியிருக்கிறார்கள்.

ஆக, அந்தக் காலகட்டத்தில், இவர்களுடைய உரையைக் கேட்கின்ற அதேநேரத்தில், மாலை நேரத்தில் விடுதியின் மொட்டை மாடியில், இப்பொழுது நம்மோடு இல்லாமல், நம் நினைவில் நிற்கின்ற துரை.சக்ரவர்த்தி அவர்கள் அங்கே படித்துக் கொண்டிருந்த மாணவர்; சேதுபதி அங்கே படித்துக் கொண்டிருந்தவர், எங்களு டைய காலகட்டத்தில். கோவை ராமகிருஷ்ணன் அவர்கள் அப்பொழுதெல்லாம் வந்துவிட்டுச் செல்வார்.

திராவிடர் கழகத்தின் உணர்வு பெற்ற மாணவர்கள் அதிகம்!

இவர்களைப் போன்றவர்களையெல்லாம் கொண்டு, மொட்டை மாடியில் திராவிடர் கழகத்தின் முன்னணி தலைவர்களையெல்லாம் அழைத்து கூட்டம் நடத்தியி ருக்கின்றோம். செல்வேந்திரன் வந்து பேசியிருக்கிறார்; பல்வேறு தலைவர்கள் அன்றைக்குத் திருச்சியில் இருந்த திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் வந்து பேசுகிற பொழுது, மற்ற கல்லூரிகளில் இருந்ததைவிட, திராவிடர் கழகத்தின் உணர்வு பெற்ற மாணவர்கள் அதிகம் இருந்தனர்.

பெரியார் கல்லூரியில் படித்தவர்கள் மட்டும்தான் தி.மு. கழகத்தின் பக்கத்தில் நின்றார்கள்!

சென்னை சட்டக்கல்லூரியைபோல, திருச்சியில் பெரியார் கல்லூரி அரசியல் தளமாக விளங்கியது. அந்தக் காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் கட்சியைத் தொடங்கிய நேரத்தில், பல இடங்களில் மாணவர்கள், அந்த இயக்கம் நோக்கித் திரும்பியபொழுது, பெரியார் கல்லூரியில் படித்தவர்கள் மட்டும்தான் நிலைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கத்தில் நின்றார்கள். அந்த வேகம்தான், பின்னாளில் பல்வேறு போராட்டங் களில் பங்கேற்கச் செய்ததும், மாணவனாக நான் முது கலைப் படிக்கின்றபொழுதே, நெருக்கடி நிலையின் பொழுது மிசா சட்டத்தில் கைதாகி சிறை சென்றதையும் நினைத்துப் பார்க்கின்றபொழுது, இனிமையான நினைவு களாக இப்பொழுது மலர்கின்றது.

எங்களுக்கு இதைவிட வேறு பேறு 

என்னவாக இருக்க முடியும்?

அப்படிப்பட்ட ஆசிரியரை, இன்றைக்கு அவருடைய 90 ஆண்டுகள் வாழ்க்கைப் பயணத்தில், 80 ஆண்டுகள் பொதுவாழ்க்கைப் பயணத்தைப் பாராட்டுகின்ற இந்த விழாவில், நானும், தம்பி திருமாவும், அருள்மொழி போன்றவர்களும் பேசுகிறோம் என்றால், எங்களுக்கு இதைவிட வேறு பேறு என்னவாக இருக்க முடியும்?

நாடாளுமன்ற உறுப்பினர் என்பது எங்களுக்குரிய அடையாளம் அல்ல; அது திறமையும் அல்ல. அது எங்களுக்கு இடப்பட்டு இருக்கின்ற பணி. அது கிடைத்திருக்கிற வாய்ப்பு. நாங்கள் சோர்வு அறியாமல் இந்த திராவிட இயக்கத்தின் சிப்பாய்கள் என்பதுதான் எங்களுக்கெல்லாம் பெருமை.

எங்களைப் பாதுகாக்கிற மிகப்பெரிய காவல் அரணாக நின்று கொண்டிருக்கிறீர்கள்!

உங்களைப் பார்த்து நாங்கள்  வளர்ந்தோம்; உங்கள் அடியொற்றி நடக்கிறோம். முதலமைச்சர், அவருடைய வாழ்த்து அறிக்கையில் சொல்லியிருப்பதைப்போல, ‘‘நீங்கள் என்றென்றைக்கும் எங்களுக்குத் தோள் கொடுப்பவராக  மட்டுமல்ல; எங்களைப் பாதுகாக்கிற மிகப்பெரிய காவல் அரணாக நின்று கொண்டிருக் கிறீர்கள்.''  நெகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

தந்தை பெரியார் அவர்கள் ஓர் இணையற்ற தலைவர். கொள்கைகளால் மட்டுமல்ல, அவருடைய உழைப்பாலும், செயலாலும்.

தந்தை பெரியார்  மறைந்து

50 ஆண்டுகளுக்குப் பின்னாலும், அவரைக் கண்டு இன்னமும் அஞ்சிக் கொண்டிருக்கின்றார்கள்

உலக அளவில் இப்படிப்பட்ட தலைவர்களைக் காண்பது என்பது மிகமிக அரிது. அவர் மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பின்னாலும், அவரைக் கண்டு இன்னமும் அஞ்சிக் கொண்டிருக்கின்றார்கள் என்றால், அதுதான் அவருடைய தாக்கம். அவரிடம் பாடம் பயின்றவர்கள் ஏராளம் உண்டு. அவருடைய உணர்வினைப் பெற்று, பல்வேறு இயக்கங்களுக்குச் சென்றவர்கள் உண்டு.

ஆனால், அவருக்கு நெருக்கமாக, அவர் நம்பிக்கைக்கு உரியவராக, அவர் பெரிதும் நம்பி, அதே அளவிற்கு அவர் எண்ணுவதைப்போலவே வந்தவர்கள் மூன்றே மூன்று பேர்தான்.

அறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் - ஆசிரியர் அய்யா அவர்கள்.

இந்த நாடு உங்களுக்குப் பரிசு தரவேண்டும்!

இவருடைய பொதுப்பணிக்கு ஈடு இணை எதுவு மில்லை. அதுபற்றி நான் சொல்வதற்கு முன்னால், இன்றைக்கு நான் இந்த இடத்தில் சொல்ல விரும்புவது, இந்த நாடு உங்களுக்குப் பரிசு தரவேண்டும். நாங்கள் எல்லாம் இங்கே பிறந்து வந்திருக்கின்றோம். கைத்தறி ஆடை, பட்டாடை, பளபளப்பான ஆடைகள் எல்லாவற் றையும் அணிவித்தோம். அது உங்களுக்கெல்லாம் ஒரு பொருட்டல்ல; நீங்கள் என்றைக்கும் அதை எதிர்பார்ப்பதும் அல்ல.

இன்றைக்கு உங்களுக்கு என்ன பரிசு கொடுத்தால் உள்ளபடியே உங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கும் என்றால், பெரியார் பல்கலைக் கழகத்தில் நேற்றைக்கு வந்த சுற்றறிக்கை - கருப்புச் சட்டை போடக் கூடாது என்று வந்து, இன்றைக்கு அப்படி எந்த அறிக்கையும் தரவில்லை என்று, காவல்துறையும், அதே பல்கலைக் கழகமும் அறிவித்திருக்கிறது அல்லவா - இதுதான் ‘திராவிட மாடல்!'

இதுதான் உங்களுக்குத் தரக்கூடிய பரிசு! இதைவிட உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது எதுவுமே இருக்க முடியாது.

முதலமைச்சர் தளபதி அவர்கள் 

சத்தமே இல்லாமல் பெரிய புரட்சிகளை 

நிறைய செய்திருக்கிறார்!

தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி அவர்கள் சத்தமே இல்லாமல் பெரிய புரட்சிகளை நிறைய செய்தி ருக்கிறார். ஆளுநர் சட்டப்பேரவையில் வந்து, எழுதிக் கொடுத்ததைத் திருத்தி, தமக்கு விருப்பப்பட்டதை யெல்லாம் அதில் சேர்த்து, ஏதோ அவர் வானத்திலிருந்து இறங்கி வந்து, அதிகாரம் பெற்றவர் என்பதைப் போல, நிலை நிறுத்துகின்ற அளவிற்கு, எல்லா வேடிக்கை களையும் காட்டி முடித்து உட்கார்ந்ததிற்குப் பின்னால்,  நம்முடைய முதலமைச்சர் கொஞ்சம்கூட எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல், எழுந்து நின்று, அவர் பேசியது எதுவும் அவைக் குறிப்பில் இடம்பெறாது; பேரவைத் தலைவர் படித்தது மட்டும்தான் இடம்பெறும் என்று சொன்னவுடன், அதைக் கேட்டு அந்தப் பெரிய மனிதர் பாதியிலேயே எழுந்து போகும்பொழுது, ஒரு சிரிப்பு சிரித்தார் பாருங்கள், அது கோடி கொடுத்தாலும் கிடைக்காது.

அது ஏளனமா? வெற்றியா? நான் யார் தெரியுமா? என்பதுபோல அந்த சிரிப்பு இருந்தது.

அதுபோல, சில முக்கியமான நேரங்களில், ஒன்று நடந்து ஒரு பெரிய அதிர்வலை ஏற்படுகின்றபொழுது, அவருடைய அடுத்த நடவடிக்கை என்பது அமைதியாக நடக்கும்.

நேற்றைக்கு ஆளுநருடைய அதிகாரத்தைக் கொண்டு கருப்புச்சட்டை போடக்கூடாது என்கிறார்.

இன்றைக்கு முதலமைச்சர் அதையும் தாண்டி, நான் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் முதல்வன் என்ற அடிப்படையில், அதெல்லாம் கிடையாது என்று அதை அப்படியே இல்லாமல் செய்தார்.

இதைத்தான் ஆசிரியர் அய்யா விரும்புவார்.

உள்ளத்தில் ஏற்படக்கூடிய பூரிப்பும், மகிழ்ச்சியும் அவருடைய முகத்திலே வெளிப்படுகிறது.

அநேகமாக இந்த நிகழ்ச்சி முடிந்து சென்றவுடன், அவர், தமிழ்நாடு முதலமைச்சரை அழைத்துகூட நன்றி சொல்லுவார்; பாராட்டுவார், என்று நமக்குத் தெரியும்.

நீங்கள்தான் எங்களுக்கு எல்லாம்!

இவர் எந்த நேரத்தில் அழைத்தாலும், அவர் பேசு வார்; இவர் எப்பொழுது பார்க்கச் சென்றாலும், அவர் பார்ப்பார். காரணம், நீங்கள்தான் எங்களுக்கு எல்லாம்!

பெரியார் - அண்ணா - கலைஞருடைய கொள்கை களை நடைமுறைப்படுத்துகின்ற ஆட்சி இன்றைக்கு.

எங்களோடு துணையாக நடந்துவருகின்ற தம்பி திருமா - அய்யாவை போலவே இயக்கத்தை நடத்தி, வேறு தளங்களில் அந்தப் பணிகளை மிகச் சிறப்பாக ஆற்றிவருகின்ற நம்முடைய பெருமைக்குரிய அய்யா சுப.வீ. அவர்கள்.

இவர்களெல்லாம் எங்களுக்குக் கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய சக்தி. 

நான் நேற்றைக்கு முன்தினம் டில்லியில், மணிப்பூர்  பிரச்சினை தொடர்பாக  உள்துறை அமைச்சர் கூட்டி யிருந்த கூட்டத்தில் பங்கேற்று, நான் எடுத்து வைத்த கருத்துகளை ஆசிரியர் என்னிடம் இப்பொழுது பாராட்டிக் கொண்டிருந்தார்.

‘‘வலிமையாகச் சொன்னீர்கள்; மென்மையாகச் சொன்னீர்கள்; ஆனால், சுருக்கென்று சொன்னீர்கள்'' என்று சொன்னார்.

அதுதானே, நம்முடைய பாணி. சொல்லவேண்டியதை அப்படித்தான் சொல்வோம் என்ற வகையில், நானும், தம்பி திருமா அவர்களும் நாடாளுமன்றத்திலே பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம்.

திராவிடர் கழகத் 

தோழர்களுக்கு நன்றி!

இன்றைய நாள் ஒரு மிக முக்கியமான நாள் - ஜூன் மாதம் 27, 1943 இல் முதன்முதலாக ஆசிரியர் அவர்கள் மேடை ஏறி பேசிய நாள். சரியாக அந்த நாளின்போது, இந்த விழாவை ஏற்பாடு செய்த திராவிடர் கழகத் தோழர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

ஜூன் மாதம் 25 ஆம் தேதி நம்மைப் போன்றவர் களால் மறக்க முடியாத நாள். இங்கே இருக்கின்ற பல இளைஞர்களுக்குத் தெரியாத நாள் - தெரிய வேண்டிய நாள்!

(தொடரும்)


No comments:

Post a Comment