புதுடில்லி,ஜூலை 28 - கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக அய்அய்டி, அய்அய்எம் எதுவும் திறக்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் பதில் அளித்து உள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் குமார் கேத்கார் எழுப்பிய கேள்வி வருமாறு: கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் திறக்கப்பட்ட அய்அய்டி மற்றும் அய்அய்எம்களின் தகவல் மற்றும் அந்தக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை, எந்த நகரத்தில் திறக்கப்பட்டது என்ற விவரம் வேண்டும். மேலும் புதிதாக திறக்கப்பட்ட அய்அய்டி மற்றும் அய்அய்எம்களில் தேர்ச்சி பெற்று வெளியேறிய மாணவர்கள் எண்ணிக்கை என்ன?. மேலும் கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக திறக்கப்பட்ட பல்கலைக் கழகங்கள் எத்தனை? எந்த நகரங்களில் அவை திறக்கப்பட்டன என்ற விவரம் வேண்டும். இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அவரது கேள்விக்கு ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் அளித்த பதில் வருமாறு: தற்போது நாடு முழுவதும் 23 அய்அய்டி,
20 அய்அய்எம்கள் இயங்கி வருகின்றன.கடந்த
5 ஆண்டுகளில் புதிதாக எந்த ஒரு அய்அய்டி மற்றும் அய்அய்எம்கள் திறக்கப்படவில்லை. நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் மாநில அரசு சார்பில் 90 புதிய பல்கலைக்கழகங்களும், தனியார் சார்பில் 140 பல்கலை யும், 4 திறந்தவெளி பல்கலைக்கழகமும், 8 ஒன்றிய பல்கலைக்கழகமும் என மொத்தம் 242 பல்கலைக் கழகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பதில் அளித்து உள்ளார்.
No comments:
Post a Comment