விருதுநகர், ஜூலை 8 - நிலம் வாங்கி கொடுப்பதாக சிவகாசி ஜவுளி கடை அதிபரிடம் ரூ.51 லட்சம் மோசடி செய்ததாக பா.ஜ.க. பிரமுகரை காவல் துறையினர் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ஸ்டேண்டர்டு காலனி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன்(வயது 48). இவர் சிவகாசியில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறார். இவரிடம் திருத்தங்கல் ஆலாவூரணியை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் சத்தியராஜ், அய்யாசாமி, மேலும் ஒருவர் சிவகாசி-விருதுநகர் சாலையில் ஆமத் தூர் அருகில் 5 ஏக்கர் நிலத்தை ரூ.4 கோடியே 5 லட்சத்துக்கு வாங்கி தருவதாக கூறி உள்ளனர். பின்னர் 2 தவணைகளில் ரூ.51 லட்சம் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இடத்தினை பத்திரப் பதிவு செய்து தரும்படி ஈஸ்வரன் கேட்டபோது தான் பணம் வாங்கவில்லை என்று சத்தியராஜ் கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரன் திருத்தங்கல் காவல் துறையில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சத்தியராஜிடம் விசாரணை நடத்த காவல் துறையினர் முடிவு செய்து அவரது வீட்டிற்கு சென்ற போது சத்தியராஜ் அங்கு இல்லை.
இந்த நிலையில் சத்தியராஜியின் நடமாட்டத்தை கண்காணித்து காவல் துறையினர் அவரை நேற்று (7.7.2023) கைது செய்தனர். பின்னர் திருத்தங்கல் காவல் நிலையத்தில் தனி அறையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சத்தியராஜ் ரூ.51 லட்சம் பெற்றதாக ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. பணம் மோசடி வழக்கில் பா.ஜ.க. பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment