தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் பணியாற்றும் 50% ஊழியர்களுக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தப் பாதிப்பு - மருத்துவ ஆய்வில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 27, 2023

தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் பணியாற்றும் 50% ஊழியர்களுக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தப் பாதிப்பு - மருத்துவ ஆய்வில் தகவல்

சென்னை,ஜூலை 27 - தொழிற் சாலைகள், அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களில் 50 சதவீதத்தினருக்கு சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தமிழ்நாடு, கேரளம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 11 தொழில் நிறுவனங்களில் மொத்தம் 6 ஆயிரத் துக்கும் மேற்பட்ட பணியாளர்களிடம் மருத்துவப் பரிசோதனை நடத்தப் பட்டது. 

டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் ஆராய்ச்சி மய்யம், திரு வனந்தபுரம் சிறீ சித்ரா திருநாள் மருத்துவ ஆராய்ச்சி நிலையம், அமெரிக்காவின் ஹாவர்டு மற்றும் எமோரி பல்கலைக் கழகங்கள், இந்திய பொது சுகாதார அறக்கட் டளை (பிஎச்எஃப்அய்) ஆகியவை இணைந்து அந்த ஆய்வை நடத்தின.

ரத்த சர்க்கரை அளவு, மூன்று மாத சர்க்கரை அளவு (எச்பிஏ1சி), உடல் பருமன், ரத்த அழுத்தப் பரிசோதனைகள் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டன. அந்த பரி சோதனைகள் மருத்துவ வல்லுநர் களால் ஆய்வு செய்யப்பட்டன. 

அது குறித்த முடிவுகள் சென்னையில் நேற்று (26.7.2023) வெளியிடப்பட்டன. 

டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் மய்யத்தின் தலைவர் மருத்துவர் வி.மோகன், பிஎச்எஃப்அய் அறக்கட்டளை பேராசிரியர் டாக்டர் பிரபாகரன், சித்ரா திருநாள் மருத்துவமனை தொற்று நோயியல் துறை கூடுதல் பேராசிரியர் ஜுமான் உள்ளிட் டோர் அதில் கலந்து கொண்டனர். 

அப்போது அவர்கள் கூறியதாவது: 

பரிசோதனை முடிவுகளின்படி, மூன்றில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப் பட்டது. 

அதேபோன்று பாதிக்கும் மேற்பட்டோருக்கு சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை அல்லது சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இவைதவிர அதீத உடல் பருமன், அது சார்ந்த நோய்கள் இருப்பதும் ஆய்வில் தெரிய வந்தது. உடற்பயிற்சியின்மை, வாழ்க்கை முறை மாற்றம், ஆரோக்கியமற்ற உணவு முறை ஆகியவையே அதற்கு காரணம்.

ஆரம்ப நிலையில் இத்தகைய பாதிப்புகளை கண்டறியும்போதுமருத்துவ சிகிச்சைகளையும், வாழ்க்கை முறை மாற்றத்தையும் கடைப் பிடித்து அதனை கட்டுக்குள் வைக்கலாம்.

-இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment