மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 28, 2023

மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

திருச்சி, ஜூலை 28   தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் "வேளாண் சங்கமம் 2023" என்ற மாநில கண்காட்சி திருச்சியில் நேற்று (27.7.2023) தொடங்கினர்.

கேர்பொறியியல் கல்லூரி வளாகத்தில் இந்த கண்காட்சி 29-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, அங்கு இருந்த அரங்குகளை பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து நடந்த விழாவில் அவர், புதிதாக 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தும், பாரம்பரிய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற்ற 3 விவசாயிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் விருதுகளை வழங்கினார்.

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பேசும்போது கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சி அமைந்தபிறகு அனைத்துத்துறைகளும் ஒருசேர வளர வேண்டும் என்று நாங்கள் உழைத்து வருவதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள். அதில் மிக சிறப்பான வளர்ச்சியை வேளாண்துறையும் பெற்றுள்ளது. 

மற்ற துறைகளைப்போல வேளாண் துறையை நினைத்த உடனே வளர்த்து விட முடியாது. மற்ற துறைகளை வளர்க்க நிதி வளம் இருந்தால் போதும். ஆனால் வேளாண்துறையை வளர்க்க, நிதிவளம் மட்டுமல்ல, நீர்வளமும் வேண்டும். தேவையான இடுபொருட் கள் காலத்தில் கிடைக்க வேண்டும். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் நீர் வளமும் கைகொடுத்தது. பருவமழையும் முறை யாக பெய்து உழவர்களுக்கு உதவியாக இருந்தது. வேளாண்மைத்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் தரும் வகையில் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

நமது அரசு பொறுப்பேற்று செயல்படுத்திய திட்டங்களினால் 6 ஆண்டுகளுக்கு பிறகு 2021-_2022ஆ-ம் ஆண்டு 1 கோடியே 19 லட்சத்து 97 ஆயிரம் டன் அளவில் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டு, சாதனை படைத்திருக்கிறோம். குறுவை சாகுபடியை மேற்கொள்வதற்காக கடந்த 2022-ஆம் ஆண்டில் மேட்டூர் அணையை உரிய தேதிக்கு முன்னரே திறந்த காரணத்தினால், டெல்டா மாவட்டங்களில் 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு 47 ஆண்டுகளில் நிகழாத சாதனையை நாம் எட்டியிருக் கிறோம். நமது அரசு கடந்த 2 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகளை விவசாயிகளுக்கு வழங்கி சாதனை படைத் துள்ளது.

50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள்

அந்த சாதனை பயணத்தின் தொடர்ச்சியாக தான், மேலும் 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் இந்த விழாவில் வழங்கப்படுகிறது. இந்தி யாவிலேயே முதல் மாநிலமாக அரசின் நலத்திட்டங்கள் சரியான பயனாளி களுக்கு சென்றடைவதை உறுதி செய் திட உழவர்களின் அனைத்து விவரங்களை உள்ளடக்கிய ஒற்றை சாளர வலைத்தளமான கிரெய்ன்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட கூடுதலாக சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.100-ம், இதர ரகங்களுக்கு ரூ.75-ம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண் டில், நெல் கொள்முதலில் ஊக்கத் தொகையாக மட்டுமே ரூ.376 கோடியே 63 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது.

கரும்பு விவசாயிகள்

கரும்பு விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு அறிவித்த ஆதார விலையான டன் ஒன்றுக்கு ரூ.2,821-க்கு மேல் ரூ.195 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கி வருகிறது.

கடந்த 10 ஆண்டு காலம் தமிழ் நாட்டை ஒரு கட்சி ஆண்டது. 10 ஆண்டு காலத்தில் மொத்தமே 2 லட்சத்து 20 ஆயிரம் வேளாண் மின் இணைப்புகள் மட்டும்தான் அவர் களால் வழங்கப்பட்டன. ஆனால் நாம் 2 ஆண்டு காலத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் மின் இணைப்புகளை விவசாயிகளுக்கு வழங்கி இருக்கிறோம். சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம், இது தலைவர் கலைஞரின் முழக்கம். சொல்லாததையும் செய் வோம் சொல்லாமலும் செய்வோம், இது எனது முழக்கம்.

உழவர்கள் உற்பத்தியாளர்களாக மட்டும் இருக்கக் கூடாது

உழவர்கள் உற்பத்தியாளர்களாக மட்டும் காலமெல்லாம் இருந்துவிடக் கூடாது. அவர்களே விற்பனையாளர் களாக மாற வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்துடன்தான் உழவர் சந்தைகளை தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அமைத்துக் கொடுத்தார். இதன் அடுத்தக்கட்டமாக உழவர் உற்பத் தியாளர் நிறுவனங்களை நமது ஆட்சிக்காலத்தில் உருவாக்கி இருக்கி றோம். வேளாண்மை என்பது நிலம் இருப்பவர்கள் மட்டும் பார்க்கும் தொழிலாக இல்லாமல் விரும்பிய அனைவரும் பார்க்க முன்வரும் தொழிலாக மாற வேண்டும். இன்றைக்கு நிலத்தைவிட அதிக மதிப்பு கொண்டது ஏதும் இல்லை. அத்தகைய நிலத்தை வைத்திருக்கும் உழவர்களை மகிழ்ச்சிக் குரியவர்களாக மாற்ற வேண்டும். உழவர்களுக்கு தொழில்நுட்பம் தெரிந் திருக்க வேண்டும். அதிகாரிகளுக்கு வேளாண்மை தெரிந்திருக்க வேண்டும்.

இவை இரண்டும் ஒருங்கி ணைக்கப்பட்டால் வேளாண்மை என்பது வர்த்தகத் தொழிலாக மாறும். அதற்கு இதுபோன்ற கண்காட்சிகள் அடித்தளம் அமைக்கும். இந்த ஆண்டு குறுவை சிறப்புத் தொகுப்பு பெறுவதற்கான இறுதி நாளை ஆகஸ்டு 15-ஆம் தேதி வரை நீட்டித்து தர வேண்டும் என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் அரசிடம் கோரிக்கை வைத்திருப்பதாக ஒரு செய்தித்தாளில் பார்த்தேன். இதை உடனடியாக அரசு ஏற்றுக் கொண்டு, ரூ.75 கோடி மதிப் பிலான குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை பெறுவதற்கான இறுதி நாள் ஆகஸ்டு 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment