5 கால்கள் மூன்று கைகள் இருப்பதைப்போன்ற விசித்திரமான - அரசமைப்புச் சட்டம் தெரியாதவர் தமிழ்நாடு ஆளுநர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 5, 2023

5 கால்கள் மூன்று கைகள் இருப்பதைப்போன்ற விசித்திரமான - அரசமைப்புச் சட்டம் தெரியாதவர் தமிழ்நாடு ஆளுநர்!

சுயமாக வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைப்பதில்லை; வெற்றி பெற்ற எதிர்க்கட்சியினரை விலைக்கு வாங்குவதுதான் அதன் ‘‘தொழில்!'' 

வரும் தேர்தலில் பி.ஜே.பி. தோல்வி அடைவது உறுதி; நமது பிரச்சாரம் தீவிரமாக நாடெங்கும் சுழன்றடிக்கும்!

மதுரையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

மதுரை, ஜூலை 5 2024 இல் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ஒன்றிய பாசிச பி.ஜே.பி. ஆட்சியை வீழ்த்தியாகவேண்டும்; எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு ஆளும் பி.ஜே.பி.யிடம் பீதியை ஏற்படுத்திவிட்டது. அனைவரும் ஒன்றுபட்டு இந்த எதேச்சதிகார - மதவாத ஆட்சியை வீழ்த்தவேண்டும்; திராவிடர் கழகம் நாடு தழுவிய அளவில் தனது பிரச்சாரத்தை மேற்கொள்ளும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கடந்த 2 ஆம் தேதி மதுரைக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மதுரை செய்தியாளர் அரங்கத்தில், செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவரது பேட்டி வருமாறு:

தென்மாவட்ட சுற்றுப்பயணத்தையொட்டி, குற்றா லத்தில் பெரியாரியல் பயிற்சி முகாம் 44 ஆவது ஆண்டாகத் தொடர்ந்து நடைபெறுவதையொட்டி, தென்மாவட்டங்களில் இருக்கக்கூடிய திராவிடர் கழ கத்தினுடைய அமைப்புகள் 11 மாவட்டங்கள் இணைந்து செயற்குழு உறுப்பினர்கள், 11 மாவட்டத்தினுடைய அமைப்பாளர்களை அழைத்து இந்தக் கூட்டம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

காங்கிரசில் இருந்தபொழுதே, ஒரு பெரிய புரட்சியை உருவாக்கினார் தந்தை பெரியார்!

இக்கூட்டத்தில் குறிப்பாக இந்த ஆண்டினுடைய இறுதியில், ஜாதி ஒழிப்பிற்கு முதன்முறையாக தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் இருந்தபொழுதே, ஒரு பெரிய புரட்சியை உருவாக்கி, காங்கிரசிலிருந்தே அவர் வெளியேறுவதற்கு ஓர் அடிப்படைக் காரணமாக இருந்த ஓர் அம்சம் சேரன்மாதேவி குருகுலம். அந்தக் குருகுலத்திலேதான் மிக முக்கியமாக வ.வே.சு.அய்யர் அவர்கள், பார்ப்பனர் பிள்ளைகளுக்கு உள்ளே உணவருந்தவும், பார்ப்பனரல்லாத பிள்ளைகளுக்கு வெளியில் திண்ணையில் உணவருந்தவும், அவர் களுக்குப் புதிய உணவு, இவர்களுக்குப் பழைய உணவு என்றெல்லாம் பேதப்படுத்திய காரணத்தினால், டாக்டர் வரதராஜூலு நாயுடு, தந்தை பெரியார், திரு.வி.க. போன்றவர்கள் எல்லாம் அதற்கு மிகப்பெரிய அளவில் எதிர்ப்பைக் காட்டினார்கள்.

இந்தப் பிரச்சினையில், காந்தியார் வரை  சமரசம் போயிற்று. அதற்குப் பிறகு அந்த குருகுலமே இல்லாமல் போயிற்று. 

காங்கிரசிலேயே இந்தப் போராட்டத்தை தந்தை பெரியார் தொடங்கினார். அதனுடைய தொடர்ச்சியாகத் தான் அதே காலகட்டத்தில்தான் வைக்கம் போராட்டம் - அங்கே ஈழவ சமுதாயத்தினர் தெருக்களில் நடப்பதற்கான போராட்டம் எல்லாம் நடந்தது.

ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, 

பகுத்தறிவு வளர்ப்பு

அடுத்த ஆண்டு, சுயமரியாதை இயக்கம் தொடங்கிய நூறாவது ஆண்டாகும். ஆகவே, இவற்றையெல்லாம்யொட்டி ஒரு பிரச்சார இயக்கம் சிறப்பாக நடைபெறுவதற்காக ஏற்பாடு செய்து, தென்மாவட்டங்களில் தீவிரப் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதைவிட முக்கியமாக வருகின்ற நாடா ளுமன்றத் தேர்தல், சாதாரணமான ஓர் அரசியல் தேர்தல் அல்ல. மாறாக, லட்சியவாதிகளுக்கும், சமூகநீதியாளர்களுக்கும், மனிதநேயத்தோடு ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, பகுத்தறிவு வளர்ப்பு, மாநில உரிமைகள் பாதுகாப்பு, கல்வி பாதுகாப்பு, உத்தியோகப் பாதுகாப்பு போன்றவற்றிற்காக இருக்கக்கூடிய திராவிடர் இயக்கம், 'திராவிட மாடல்' ஆட்சியை சிறப்பாக அமைத்துக் கொண்டு, கடந்த மூன்று தேர்தல்களிலும் - நாடாளுமன்றத் தேர்தல் - சட்டமன்றத் தேர்தல் - உள்ளாட்சித் தேர்தல் எல்லாவற்றிலும் 'திராவிட மாடல்', திராவிட இயக்கம் வெற்றி பெற்றிருக்கிறது.

பிரச்சாரம், தேவையான போராட்டக் களம் இவற்றை முடிவு செய்வதற்காகவே!

தொடர்ந்து, மீண்டும் இந்த இயக்கத்திற்குச் சோதனைகளை உருவாக்கவேண்டும் என்பதற்காக, ஒன்றியத்தில் இருக்கக்கூடிய காவி ஆட்சி - ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவான பா.ஜ.க. ஆட்சி - எப்படியாவது, குறுக்கு வழியைக் கையாண்டாவது தமிழ்நாட்டை காவி மண்ணாக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கு இடந்தராத அளவிற்கு நம்முடைய செயல்பாடுகள் இருக்கவேண்டும் என்ப தைப்பற்றி யோசிக்கக் கூடிய அளவிலும், குறிப்பாக தென்மாவட்டங்களில் சிலர் ஜாதிக்கலவரங்களை நடத்தி, அதன்மூலமாக வருகின்ற தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று குறுக்கு வழிகளையெல்லாம் கையாளக்கூடிய நிலையில் இருப்பதைப்பற்றியும் எங்கள் தோழர்கள் ஆய்வு செய்து, தீவிரப் பிரச்சாரம், தேவையான மக்கள் நலப் போராட்டக் களம் இவற்றைப்பற்றி முடிவு செய்வதே  இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும்.

தமிழ்நாடு ஆளுநர் ஒரு விசித்திரமான ஆளுநர்!

செய்தியாளர்: தமிழ்நாடு ஆட்சியில் ஆளுநரின் தலையீடு அதிகமாக இருக்கிறதே!

தமிழர் தலைவர்: ஆளுநர் தலையிடவில்லை; அவரே ஆட்சி நடத்துகிறார். தலையீடு என்பது எப் பொழுதாவது தலையை நீட்டுவதாகும். தலையை நீட்டவில்லை, உடம்பு முழுவதையும் நீட்டுகிறார்.

ஒரு போட்டி அரசாங்கம் நடத்தச் சொல்லி, மேலே யிருந்து சொல்லியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதனாலே, அவருடைய மூக்கை, அவரே வெட்டிக் கொண்டார்.

விசித்திர காட்சிகள் என்று அய்ந்து கால்கள், மூன்று கைகள் இருப்பதைப் போல, இவர் ஒரு விசித்திரமான ஆளுநர். 

ஆகவே, தன்னுடைய அதிகாரம் என்னவென்று தெரியாமலே, அரசமைப்புச் சட்டத்தையே படிக்காமல், பதவிப் பிராமணம் எடுத்துக்கொண்டிருக்கின்ற ஓர் ஆளுநர் இவர்.

அரசமைப்புச் சட்டத்தில், குடியரசுத் தலைவர், அமைச்சர்கள், பிரதமர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் பதவிப் பிரமாணக் காப்பு என்பது வேறு.

ஆனால், ஆளுநர்களுக்கு 159 என்ற அரசமைப்புச் சட்டப்பிரிவின்படி பார்த்தீர்களேயானால், ''பொதுமக்களுடைய நலனுக்கு நான் மிகவும் பாடுபடுவேன்'' என்ற உறுதிமொழியை சேர்த்திருக்கிறார்கள்.

ஆனால், அதற்கு நேர் விரோதமாகத்தான் இவர் நடந்துகொண்டிருக்கின்றார். ஆளுநருக்கென்று சொந்த அதிகாரம் ஒரு சில இடங்களில்தான் இருக்கிறது. அதைத் தவிர வேறு எதையுமே இவர் சுயேச்சையாக நடத்துவதற்கு அதிகாரமே கிடையாது.

ஆளுநர் வரம்புமீறி நடந்துகொண்டிருக்கிறார்

அவர், அரசாங்கத்திடம் சம்பளம் வாங்கக்கூடிய எல்லா ஊழியர்களும் எப்படி இருக்கிறார்களோ, அதேபோன்று ஓர் ஊழியர். ஆனால், அவர் வரம்புமீறி நடந்துகொண்டிருக்கிறார்.

அவருக்கு, அவருடைய உள்துறையே அவருடைய தலையில் குட்டியதுபோன்று, ''ஏன் ஆலோசனையில்லாமல் செயல்படுகிறீர்கள்?'' என்று கேட்டிருப்பதே, மிகப்பெரிய அளவிற்கு தன்னுடைய கடமையிலிருந்து வழுவியவர்; அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானவர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

திராவிடர் கழகம் பிரச்சார இயக்கமாக - போராடுவதற்குத் தயாராகிறது!

எனவேதான், நாங்கள் நாடு தழுவிய அளவிற்கு ஓர் இயக்கத்தை நடத்துகிறோம். ஆளுநர், பதவி விலகவில்லையானால்,  அவரை டிஸ்மிஸ் செய்யவேண்டும். ஏனென்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சிக்கு விரோதமாக செயல்படுகிறார் என்பதற்காகத்தான் இந்த இயக்கம் பெரிய பிரச்சார இயக்கமாக - போராடுவதற்குத் தயாராகிறது!

நாங்கள் யாரும் பிரிந்துவிட மாட்டோம்!

செய்தியாளர்: காவிரி நதிநீர் பிரச்சினையில், கருநாடகத் துணை முதலமைச்சர் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு எதிராகவே பேசி வருகிறார்; இங்கே முதலமைச்சரிடமிருந்தோ, அமைச்சர்களிடமிருந்தோ எந்தவிதமான பதிலும் வரவில்லையே?

தமிழர் தலைவர்: எதற்காக இதுபோன்ற கேள்வியைக் கேட்கிறீர்கள் என்று தெளிவாக தெரியும். இந்த நேரத்தில், இதுபோன்ற ஒரு கரடியை விட்டால், உடனே இந்தக் கூட்டணி பிரிந்துவிடும் என்று நினைக்கிறீர்கள். நாங்கள் யாரும் பிரிந்துவிட மாட்டோம்.

அண்ணன் - தம்பி உறவு இருக்கிறது; வாயும், வயிறும் வேறு. அவரவர்களுடைய வாய், அவரவர்களுடைய வயிறைப்பற்றிப் பேசுவதற்கு அவரவர்களுக்கு அக்கறை இருக்கிறது.

தாயும், பிள்ளையும் ஒன்றானாலும், வாயும், வயிறும் வேறு. 

ஆகவே, அவர்களுடைய உரிமையை அவர்கள் பேசினால், சட்டப்படி நாங்கள் வெற்றி பெற்றிருக்கின்றோம்.

தவறான ஒரு கருத்து பரப்பப்படுகிறது, பா.ஜ.க. தரப்பினர் உள்பட - கருநாடகாவிலிருந்து தண்ணீர் கொடுக்கமாட்டேன் என்கிறார்கள்; அவரைக் கண்டிக்கவில்லையே, இவர் போய்ப் பேசவில்லையே என்றெல்லாம் நாடகமாடுகிறார்கள்.

காவிரி நதிநீர் ஆணையம் இருக்கிறது!

தண்ணீரை அவர் கொடுக்கவேண்டிய அவசியமே இல்லை. தண்ணீர் கொடுப்பதற்குத்தான் காவிரி நதிநீர் ஆணையம் இருக்கிறது. இத்தனை டி.எம்.சி. தண்ணீர் கொடுக்கவேண்டும் என்று சொல்வது அந்த ஆணையம்தான். 

எனவே, அவருக்குத் தண்ணீர் கொடுக்க முடியாது என்று கூறும் அதிகாரமும் கிடையாது; அதை வைத்து மக்களை ஏமாற்றவும் கூடாது.

எதிர்க்கட்சிகளின் கூட்டத்தைக் கண்டு நிலைகுலைந்து போயிருக்கிறார்; 

அரண்டு போயிருக்கிறார் பிரதமர் மோடி!

செய்தியாளர்: பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தியதையொட்டி பிரதமர் மோடி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்; குடும்ப அரசியல் நடத்துகிறவர்கள்தான் மாநிலங்களில் இருக்கிறார்கள்; அவர்கள் ஒன்று சேர்வதால், எங்களுக்கொன்றும் பாதிப்பு இல்லை என்று சொல்லியிருக்கிறாரே?

தமிழர் தலைவர்: எவ்வளவு பயந்து போயிருக்கிறார்கள் என்பதற்கு இதுதான் அடையாளம்.

பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம், அது வெறும் படக்காட்சிதான் என்று சொன்னார்கள்.

படக்காட்சி என்றால், அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பிரதமர் இப்படி பேசவேண்டிய அவசியமில்லையே! தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவர்மீதும் வழக்குப் போடுவேன் என்று சொல்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசுகிறார்.

பா.ஜ.க. வெற்றி பெற முடியாது என்பதை 

உளவுத் துறையின்மூலம் தெரிந்துகொண்டார்!

அதற்குக் காரணம் என்னவென்றால், எதிர்க்கட்சிகளின் கூட்டத்தைக் கண்டு நிலைகுலைந்து போயிருக்கிறார்; அரண்டு போயிருக்கிறார். பா.ஜ.க. வெற்றி பெற முடியாது என்பதை உளவுத் துறையின்மூலம் தெரிந்துகொண்டார் அவர்.

அதைவிட இன்னும் ஒரு செய்தி வெளிவந்துகொண்டிருக்கிறது, அது எந்த அளவிற்கு உண்மையானது என்றால், பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, அது சுதந்திரமான அரசியல் கட்சியல்ல. மற்ற கட்சிகள் எல்லாம் சுதந்திரமான அரசியல் கட்சிகள். அவரவர்கள் முடிவை, அவரவர்கள் கமிட்டி எடுக்கும்.

ஆனால், பா.ஜ.க.வைப் பொறுத்தவரையில், சுதந்திரமான அரசியல் கட்சி அல்ல என்பதால், அதனுடைய முடிவை ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் எடுக்கும். யாரை பிரதமர் வேட்பாளராக போடவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். சொல்கிறதோ, அவர்தான் பிரதமர் வேட்பாளர்.

ஆர்.எஸ்.எஸ். யாரை அமைச்சராக நியமிக்கவேண்டும்; யாருக்கு என்ன துறை கொடுக்கவேண்டும் என்று சொல்கிறதோ, அதன்படிதான் பா.ஜ.க. நியமிக்கும்.

மீண்டும், மோடியினால் வாக்கு வங்கி கிடைக்கும் என்று எதிர்பார்த்தது இந்த முறை தேய்மானம் ஆகியிருக்கிறது. ஆகவேதான், அவருடைய போக்கு மிக வித்தியாசமாக இருக்கிறது.

மிகப்பெரிய அளவிற்கு வடபுலத்தில் இருக்கக்கூடியவர்கள் கூட வந்திருக்கிறார்கள். நிர்வாகத்தைப் பொறுத்தவரையில், மணிப்பூரே அதற்கு ஒரு பெரிய சான்று.

மீண்டும் பிரதமராக மோடியை 

நியமிக்கப் போவதில்லையாம்!

எப்படியாவது வெற்றி பெற்றால்கூட, மீண்டும் பிரதமராக மோடியை நியமிப்பதில்லை என்ற ஒரு பேச்சு அங்கே நடந்துகொண்டிருக்கிறது. உள்போராட்டம், பனிப்போர் நடந்துகொண்டிருக்கிறது என்றெல்லாம் சில ஏடுகளில், சில செய்திகள் வருகின்றன.

இந்தச் செய்திகளே அவருக்குப் பாதிப்பையும், தாக்கத்தையும் அதிகமாக ஏற்படுத்தியிருக்கலாம்; அதனால்தான் அவர் நிலைகுலைந்து பேசி வருகிறார். அவர் இப்படிப் பேச, பேச, எதிர்க்கட்சிகளின் வெற்றி உறுதியாகிறது; இணைப்பு இன்னமும் பலமாகிறது.

வெற்றி பெற்றவர்களை விலைக்கு வாங்கி, அதன்மூலம் ஆட்சியைப் பிடிக்கிறது பா.ஜ.க.!

செய்தியாளர்: மகாராட்டிராவில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அஜித்பவார், பா.ஜ.க.வின் ஆளுங்கட்சியில் சேர்ந்து துணை முதலமைச்சராகி இருக்கிறார், இதை எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: பா.ஜ.க. மக்களிடம் வாக்குகள் பெற்று ஆட்சி அமைத்ததாக வரலாறு கிடையாது. இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில், மக்கள் வாக்களித்து, அதற்குப் பிறகு அவர்கள் ஆட்சிக்கு வந்தது என்பது மிகமிகக் குறைவு.

ஆனால், வெற்றி பெற்றவர்களை விலைக்கு வாங்கி, அதன்மூலம் ஆட்சியைப் பிடிப்போம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, முதலில் சிவசேனா கட்சியை உடைத்தார்கள்; அடுத்தபடியாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்திருக்கிறார்கள்.

இந்த வித்தைகளைத் தமிழ்நாட்டில் செய்ய முடியவில்லையே என்றுதான் அவர்களுக்குக் கோபம். அதனால்தான், மு.க.ஸ்டாலின்மீது பாய்கிறார்.

தமிழ்நாடு பெரியார் பூமி - பகுத்தறிவு பூமி - இங்கே சந்தைக் கடையில் வாங்குவதுபோன்று, ஆட்களை விலைக்கு வாங்க முடியாது.

தோல்வியினுடைய அச்சத்தினால்தான், கட்சிகளை உடைக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

கருநாடகத்தில் பூக்களைப் பொழிந்தனர்; 

ஆனால், வாக்குகள் விழவில்லை!

கருநாடகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எத்தனை நாள் பிரச்சாரம் செய்தனர் பிரதமர் மோடியும், உள்துறை அமித்ஷாவும். பூக்களைப் பொழிந்தனர்; ஆனால், வாக்குகள் விழவில்லை.

தென் மாநிலங்களுடைய கதவுகள் சாத்தப்பட்டுவிட்டன. இப்பொழுது வடபுலத்திலும் அதுபோன்ற சூழல்கள் ஏற்பட்டு வருகின்றன.

அதுமட்டுமல்ல, விலைவாசி ஏற்றம், இளைஞர்களுடைய விரக்தியும் சேர்ந்துகொண்டுள்ளன.

2014 ஆம் ஆண்டில், 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம் என்றும், வளர்ச்சி, வளர்ச்சி என்றும், 'சப்கா சாத், சப்கா விகாஸ்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்.

அவர்களுடைய வித்தைகளை இன்றைக்குப் மக்கள் புரிந்துகொண்டனர். 

ஜோசியரின் ஆலோசனைப்படி நடக்கலாமா? என்று நினைக்கிறார்கள்!

நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தலாமா? என்று திட்டமிடுகிறார்கள். இன்னொரு பக்கம் ஜோசியரின் ஆலோசனைப்படி நடக்கலாமா? என்றும் திட்டமிட்டு வருகிறார்கள் என்கிற செய்தியும் அடிபடுகிறது.

ஆகவேதான், எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும், எதிர்க்கட்சிகள் அதைச் சந்திப்பதற்கு ஆயத்தமாக இருக்கின்றன.

எனவேதான், பிரதமர் மோடிக்கு இருக்கின்ற கோபத்தினால், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.

திசை திருப்புவதற்கான திட்டம்தான்!

செய்தியாளர்: நாடாளுமன்றத் தேர்தலுக்குள் பொதுசிவில் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்துவிடவேண்டும் என்று பா.ஜ.க. முயற்சிக்கிறதே?

தமிழர் தலைவர்: அதற்கு இரண்டு காரணம். ஒரு பக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிர்ப்பந்தம். இன்னொரு பக்கத்தில் விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், அவர்களுக்கு ஏற்பட்ட தோல்விகளை மறைப்பதற்காக - பிரச்சினைகளைத் திசை திருப்புவதுதான் அவர்களுடைய வாடிக்கை.

மாநிலங்களவையில் அவர்களுக்குப் பெரும்பான்மை இல்லை!

தேசியவாத காங்கிரசை உடைத்ததின் மிக முக்கிய காரணம் என்னவென்றால், 103 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை எப்படி வேக வேகமாகக் கொண்டு வந்து நிறைவேற்றினார்களோ, அதுபோல பொதுசிவில் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப் போகிறார்கள்; மக்களவையில் அவர்களுக்குப் பெரும்பான்மை இருக்கிறது; ஆனால், மாநிலங்களவையில் அவர்களுக்குப் பெரும்பான்மை இல்லை என்பதினால்தான் மாநில கட்சிகளை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் என்ன சொல்வார்கள் என்றால், ''கடந்த தேர்தலில் மூன்று உறுதிமொழிகளைச் சொன்னோம்; இராமர் கோவிலைக் கட்டுவோம்; காஷ்மீருக்கு இருந்த தனி அந்தஸ்தை ரத்து செய்வோம்; பொதுசிவில் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று சொன்னோம். ஏற்கெனவே இரண்டை செய்துவிட்டோம்; மூன்றாவதாக பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்திவிட்டோம் என்று சொல்வார்கள்.

மேற்கண்ட மூன்றும் கட்சி சேர்ந்த பிரச்சினைகளே தவிர, மக்கள் நலன்சார்ந்த விஷயங்கள் அல்ல.

திசை திருப்புவதற்கான திட்டம்தான் அது, வேறல்ல!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  செய்தி யாளர்களிடம் கூறினார்

No comments:

Post a Comment