சென்னை, ஜூலை 23 சென்னையில் 3 கட்டங்களாக மிஷன் இந்திர தனுஷ் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மேயர் பிரியா தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் நடை பெற உள்ள மிஷன் இந்திர தனுஷ் 5.0 தடுப்பூசி முகாம் தொடர்பான மாவட்ட பணிக்குழுக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தீவிர மிஷன் இந்திர தனுஷ் 5.0 தடுப்பூசி செயல்பாட்டு வழிமுறை கையேட்டினை மேயர் ஆர்.பிரியா வெளியிட்டு பேசும்போது, "இந்தியாவில் முதன்முறையாக 2014-ஆம் ஆண்டு இந்திர தனுஷ் தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டது. சென்னை மாநகராட்சியில் முதல் இந்திர தனுஷ் தடுப்பூசி முகாம் 22.06.2015 முதல் 30.06.2015 வரை நடைபெற்றது. இதுவரை சென்னை மாநகராட்சியில் 2015ம் ஆண்டில் 5 முறை, 2016-ம் ஆண்டில் 2 முறை மற்றும் 2022-ம் ஆண்டில் ஒரு முறை என மொத்தம் 8 முறை நடைபெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சிக் குட்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மய்யங்கள் ஆகிய இடங்களில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டம் 07.08.2023 முதல் 12.08.2023 வரையிலும், இரண்டாம் கட்டம் 11.09.2023 முதல் 16.09.2023 வரையிலும், மூன்றாம் கட்டம் 09.10..2023 முதல் 14.10.2023 வரையிலும் நடைபெறுகிறது.சென்னை மாநகரில் இந்திர தனுஷ் தடுப்பூசி முகாம்கள் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மய்யங்கள் ஆகிய இடங்களில் நடத்தப்பட தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது. இந்தத் தடுப்பூசி முகாம்களில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் பணிபுரிவர். இந்த முகாம்கள் நடைபெறுவதற்கு முன்னதாக விடுபட்ட குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அந்த நாட்களில் தடுப்பூசிக்கு தகுதியான குழந்தைகள் ஆகியோரை கணக்கிடும் பணி 18.07.2023 முதல் நடைபெற்று வருகிறது.இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அனைத்து 0-2 வயதிற்குட்பட்ட விடுபட்ட குழந்தைகள், 2-5 வயதுள்ள விடுபட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோருக்கு தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி முகாம் நாட்களில் தடுப்பூசி மருந்து கொடுக்கப்படும். மேலும், இடம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நடைபெறும் நாட்களில் அவரவர்கள் வசிக்கும் இடத்திலேயே தடுப்பூசி போடப்படும்" என்று மேயர் ஆர்.பிரியா கூறினார்.
No comments:
Post a Comment